ஒரு வீடு ஒரு மனிதன் சில உயிர்கள்

நான் குடியிருக்கும் வளாகத்தில் வசிக்கும் புறாக்களைக் குறித்துப் பலமுறை எழுதியிருக்கிறேன். இங்கே வசிக்கும் மனிதர்களைவிட இவை எனக்கு மிகவும் பரிச்சயமானவை. எந்தளவுக்கு என்றால், அவை தரையில் நிற்கும்போது அருகே சென்றால்கூடப் பறந்து செல்லாத அளவுக்கு. எப்படி என்னைப் போன்ற ஒரு நல்லவனை அவை பார்த்திருக்க முடியாதோ, அதே போலத்தான் அவற்றை என் அளவுக்கு இன்னொருவர் கவனித்திருக்க முடியாது என்பதும்.

புறாக்களுக்கு ஒரு குணம் உண்டு. அவை பறக்கத் தொடங்கும்போது காகத்தைப் போலவோ, பிற பறவைகளைப் போலவோ அப்படியே மேலெழும்பிப் பறக்காது. சொய்யாவென்று தரையை நோக்கி வந்து, ஒரு பத்தடி தாழப் பறந்து அப்புறம்தான் மேலெழும்பும். தரையில் இருந்து பறப்பதென்றாலும் இரண்டடி மேலே எழுந்து மீண்டும் சர்ரென்று தரையைக் குத்த வருவது போலக் கீழே இறங்கி வந்து திரும்பவும் மேலே எழுந்து பறக்கும்.

இங்கே குடியிருக்கும் பூனைகளுக்கு இதுதான் இலக்கு. புறாக்கள் தாழப் பறந்து வரும்போது அப்படியே பாய்ந்து கவ்விக்கொண்டு ஓடிவிடும். இதற்காகவே காலை நேரம் புறாக்கள் தத்தமது இருப்பிடங்களில் இருந்து புறப்படும்போது குடியிருப்பு வளாகத்துப் பூனைகள் பிசாசு போலக் கண்ணை விரித்துக்கொண்டும் வாயைத் திறந்துகொண்டும் காத்திருக்கும்.

அருகே உள்ள புகைப்படத்தைப் பாருங்கள். இதை இன்று காலை நடையின்போது எடுத்தேன். இரண்டு புறாக்கள் புறப்படத் தயாராக மேலே உட்கார்ந்திருக்கின்றன. அவை எப்போது கீழே வரும் என்று எதிர்பார்த்து ஒரு பூனை தயாராக நிற்கிறது. புறாக்களுக்குத் தெரியும்; பூனை தங்களுக்காகத்தான் காத்திருக்கிறது என்பது. ஆனாலும் அவற்றால் அப்படியே மேலே பறக்க இயலாது. பறக்கத் தொடங்கினாலே முதலில் கீழே வந்து அங்கிருந்து மேலேறிச் செல்வதுதான் அவற்றின் இயல்பு. வேண்டுமானால் ஒன்று செய்யும். பூனை சலித்துப் போய் வேறிடம் செல்லும் வரை இடத்தை விட்டு அசையாமல் அமர்ந்திருக்கும். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும். இதையும் பலமுறை கண்டிருக்கிறேன்.

இன்று காலை இக்காட்சி கண்ணில் பட்டபோது படம் எடுப்பதற்காக சரியான கோணம் தேடி இரண்டு மூன்று நிமிடங்கள் நான் அதே இடத்தில் நிற்க வேண்டியதானது. இப்படியும் அப்படியும் மொபைலை அசைத்து, ஆட்டி முழுக் காட்சியும் அதன் முழு உயரத்துடன் பதிவாக மிகவும் சிரமப்பட்டேன். பூனையை நெருங்கியும் விலகியும் சரியான தூரத்தை நிர்ணயித்து நின்றுகொண்டு அதன் பிறகுதான் படம் எடுத்தேன்.

புறாக்களைப் போலவே பூனைக்கும் என்னைத் தெரிந்திருக்கிறது. உட்கார்ந்து வக்கணையாக இதை எழுதுவானே தவிர, இவனால் நமக்கு ஆபத்தில்லை; அடித்துத் துரத்துகிற ஆள் இல்லை என்பது. புறாக்களும் உயிர் பிழைக்க வேண்டும். பூனைக்கும் பசி தீர வேண்டும் என்று நினைப்பவன் பாடு எப்போதும் சிக்கல்தான்.

வாழ்வில் பெரிய தவறு செய்துவிட்டேன். நான் வள்ளலாரைப் படித்திருக்கவே கூடாது.

Share