பொறுக்கிகள்

அந்தப் பயலுக்குப் பதினாறு அல்லது பதினேழு வயது இருக்குமா? இந்த வயதில் காதலிக்காமல் வேறு எப்போது செய்யப் போகிறான் அதையெல்லாம்? பார்ப்பதற்கு நல்ல கருப்பாக, துறுதுறுவென்று இருந்தான். கண்ணில் அப்படியொரு துடிப்புமிக்க கள்ளத்தனம். சுற்றுமுற்றும் பார்த்தபடியே காம்பவுண்டு சுவருக்கு உட்புறம் இருந்த பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தான்.

உடன் படிக்கிற பெண்ணாக இருக்கலாம். என்னவாவது வகுப்புக்குப் போகிற வழியில் ஏற்பட்ட பழக்கமாக இருக்கலாம். எப்படியானாலும் அவளுக்கும் அவனோடு பேசுவது பிடித்துத்தான் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பின்னால் தன் தாய் வந்து நிற்பதைக்கூட கவனிக்காமல் அப்படி லயித்துப் போயிருக்க மாட்டாள்.

பத்து வினாடி அவகாசம். அந்தப் பெண்ணின் தாயானவள் கேட்டைத் திறந்துகொண்டு யாரோ போல வெளியே வந்தாள். ஒரே தாவில் அந்தப் பையனைப் பாய்ந்து பிடித்தாள். பின்னந்தலையில் ஓங்கி ஒரு அடி. உடனே ஊரைக் கூட்டும் விதமாக ஒரு பெரும் ஓல ஒப்பாரி.  

பொறுக்கி பொறுக்கி பொறுக்கி பொறுக்கி பொறுக்கி பொறுக்கி பொறுக்கி பொறுக்கி பொறுக்கி பொறுக்கி பொறுக்கி பொறுக்கி பொறுக்கி பொறுக்கி பொறுக்கி.

ஒரு இருபது பொறுக்கிப் பிரயோகம். ஒவ்வொரு பொறுக்கிக்கு முன்னும் ஓர் அடைமொழி. எச்சக்கலைப் பொறுக்கி. தெருப் பொறுக்கி இந்த மாதிரி. ஒவ்வொரு பிரயோகத்துக்கும் பின்னங்கழுத்தில் ஓர் அடி.

இது நடந்துகொண்டிருக்கும்போது அந்தப் பெண் உள்ளே போய்விட்டது. சாலையில் போய்க்கொண்டிருந்தவர்கள், அக்கம்பக்கத்து வீட்டார் என்று ஒரு ஐம்பது பேர் கூடிவிட்டார்கள்.  என்னம்மா செஞ்சான் என்று சாஸ்திரத்துக்கு விசாரித்துவிட்டு, பதில் கிடைப்பதற்கு முன்னால் அவனைப் போட்டு ஆளாளுக்கு அடிக்கத் தொடங்கினார்கள்.

தினசரி வருகிறான். என் பெண்ணிடம் வம்பு செய்கிறான். இன்று கையும் களவுமாகப் பிடிபட்டுவிட்டான் என்று அந்தப் பெண்மணி சொன்னார். உடனே கூட்டம் உக்கிரமடைந்துவிட்டது. பிராந்தியம் கெட்டுப் போய்விட்டது; இம்மாதிரி பொறுக்கிகளின் நடமாட்டம் அதிகரித்துவிட்டது; வீட்டில் பெண் பிள்ளைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவே முடியவில்லை என்று ஒவ்வொருவரும் கருத்து சொன்னார்கள்.

சும்மா விடாதீர்கள் என்று ஒரு பெரியவர் எடுத்துக் கொடுக்க, அப்போது அது நிகழ்ந்தது.

அந்தப் பெண்ணின் தாயானவளும் இதர சிலரும் சேர்ந்து அவனை அடித்து இழுத்துச் செல்ல ஆரம்பித்தார்கள். ‘என்னை விடுங்க, நான் எந்தத் தப்பும் செய்யல’ என்று அவன் சொன்னது காதில் விழுந்தது. அவர்கள் விடுகிற மனநிலையில் இல்லை. சைக்கிளில் போய்க்கொண்டிருந்த ஒருவன் வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு குறுக்கே வந்து விவரம் கேட்டான். அந்தப் பெண்மணி அதையே சொன்னார். என் பெண்ணிடம் தினமும் வம்பு செய்கிறான்.

அந்தப் புதிய நபர் உடனே ஒரு காரியம் செய்தான். ‘செருப்ப கழட்டுடா!’ என்று அந்தப் பையனுக்கு உத்தரவிட்டான். காரணம் கேட்காமல் பையன் செருப்பைக் கழட்டியதும் குனிந்து அதை எடுத்தான். நடுச் சாலையில் குறைந்தது நூறு பேர் பார்த்துக்கொண்டிருக்கும்போது அவன் முகத்தில் அவனது செருப்பால் ஓங்கி அடித்தான்.

இந்தத் தண்டனை அந்தப் பெண்ணின் தாய்க்குப் பிடித்திருக்க வேண்டும். அவர் குனிந்து இன்னொரு செருப்பை எடுத்துத் தானும் தன் பங்குக்கு நாலைந்து முறை அவனை அடித்தார். அவன் முகத்தைப் பொத்திக்கொண்டான். மீண்டும் அவனைத் தள்ளிக்கொண்டு போகத் தொடங்கியது கூட்டம்.

அவர்கள் போலிஸ் ஸ்டேஷனுக்குப் போவார்கள் என்று நினைக்கிறேன். அங்கும் அந்தப் பையனை அடிப்பார்கள். இன்னும் பலமாகவே அடி விழும். எனக்குத் தெரிந்து கேஸ் எழுத மாட்டார் இன்ஸ்பெக்டர். வேண்டுமானால் ஓரிரவு லாக்கப்பில் வைத்திருந்து மிரட்டி அனுப்பலாம். அவனது பெற்றோர் யாரென்று விசாரித்து ஸ்டேஷனுக்கு வரவழைத்து அவர்களைத் திட்டலாம். மகனை ஒழுங்காக வளர்க்கச் சொல்லி வகுப்பெடுக்கலாம்.

வீட்டுக்குப் போனதும் அவனது பெற்றோர் தம் பங்குக்கு அவனை மேலும் கொஞ்சம் அடிக்கலாம். அவன் அப்போதும் அதைத்தான் சொல்லுவான் என்று நினைக்கிறேன். ‘என்னை விட்டுடுங்க. நான் எந்தத் தப்பும் செய்யல.’

காம்பவுண்டு சுவருக்கு உட்புறம் நின்றபடி அவனோடு சிரித்துப் பேசிக்கொண்டிருந்த பெண்ணின் முகத்தைத் திரும்பத் திரும்ப நினைவில் கொண்டு வர முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். இல்லை. முடியவில்லை.

இரண்டொரு நாளில் அவன் மீண்டும் அவளைச் சந்திப்பான். பேசத்தான் செய்வான். அவளும் பேசத் தயங்கப் போவதில்லை. ரொம்ப வலிச்சிதா, என்னாலதானே இதெல்லாம்? சாரிடா என்று சொல்லுவாள். அவனுக்கு அது போதுமானதாக இருக்கும்.

காலங்காலமாக நடப்பதே அல்லவா? பெரியவர்களும் மாறுவதில்லை. பிள்ளைகளும் மாறுவதில்லை.

O

சற்றுமுன் என் மகளை ஹிந்தி வகுப்பில் விட்டுத் திரும்பிக்கொண்டிருந்தபோது வழியில் நிகழ்ந்த சம்பவம் இது. ஒரு சிறுகதை ஆக்குவதற்கு வாகான கதையம்சமும் உணர்வெழுச்சியும் உச்சமும் உள்ளதுதான். ஆனாலும் செய்ய மாட்டேன். அந்தப் பையன் பக்கத்தில் மானசீகமாகவேனும் நிற்க விரும்புகிறேன். மொத்த மந்தைக்கூட்டத்தில் ஒருத்தருக்கேனும் அந்தப் பெண்ணைக் கூப்பிடு, விசாரிக்க வேண்டும் என்று ஏன் சொல்லத் தோன்றவில்லை? பொது வெளியில் ஒரு ஆண் அவமானப்பட்டால் தவறில்லை; பெண்ணுக்கு அது கூடாது என்று எல்லோருமே நினைக்கிறார்களா? அத்தனை நல்லவர்களாலானதா இச்சமூகம்?

அந்தப் பையனின் செருப்பைக் கழட்டச் சொல்லி, அதனைக் கொண்டே அவன் முகத்தில் அடித்தவனுடைய பெண் நிச்சயம் ஓடிப் போய்த்தான் கல்யாணம் செய்துகொள்வாள் என்று உறுதியாகத் தோன்றியது.

Share

Add comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter