சம்சாரம் போல் என்னைத் தாக்குகிறாய்!

நேற்று முன் தினம் முதல் பேட்டையில் திடீர் திடீரென்று மின்சாரம் போய்விடுகிறது. எப்போது போகும், எப்போது திரும்பி வரும் என்றே தெரிவதில்லை. ஒரு மின்மிகை மாநிலத்தில் இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லையே; சென்னையை குஜராத்தோடு இணைத்துவிட்டார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. அங்கேதான் காந்தி நகரை மட்டும் ஜொலிக்கச் செய்துவிட்டு எஞ்சிய பகுதிகளைப் பாகிஸ்தானோடு இணைத்துவிட்டார்கள் என்று கேள்வி.

அது எக்கேடோ கெடட்டும். என் பிரச்னை வேறு. மின்சாரம் போவதால் என் உலகம் இருண்டுபோவதில்லை என்பது உண்மையே. வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் காண்டாமிருக சைஸுக்கு ஜெனரேட்டர் இருக்கிறது. தடையின்றி மின்சாரம் கிட்டும்.

சிக்கல் எங்கே வருகிறதென்றால், இந்த மின்சார வாரியத்தை நம்பி எந்த ஆன்லைன் டிரான்சாக்‌ஷனும் செய்ய முடிவதில்லை. பணப்பரிமாற்றம் நடந்துகொண்டிருக்கும்போது பவர் பரிமாற்றச் சிக்கல் உண்டாகிவிடும். இணையம் தொங்கி, டிரான்சாக்‌ஷன் டிரங்க்கேடட் என்று செய்தி அலறும். சமயத்தில் பணம் போனதா, இல்லையா என்றே தெரியாது. அதுவும் எனது வங்கியான icici, கஸ்டமர் சர்வீஸில் முதுநிலை அயோக்கிய சிகாமணி. நடந்து முடிந்த பரிமாற்றங்களுக்கு ரசீது அனுப்பவே மாட்டான். அல்லது நாலு நாள் கழித்து மெதுவாக அனுப்புவான். இதுவே பாதியில் தொங்கிய பரிமாற்றம் என்றால் பாய்ந்து பாய்ந்து மெயில் வரும். மெசேஜ் வரும். 

பணம் போய்விட்டதாகச் சமயத்தில் சொல்லுவான். ஆனால் சம்மந்தப்பட்ட நபரோ, வரவேயில்லை என்பான். என்ன ஏது என்று விசாரித்து ஒரு பதிலை வாங்க நாலைந்து நாள் ஆகிவிடும். அதன்பின் அக்கவுண்டில் கழிக்கப்பட்ட பணம் திரும்ப வந்து சேர ஒரு பத்து நாள்.

இதில் இன்னொரு அவலம், மொபைல் ஆப்பின் வழியே நேர்வது. பெரும்பாலும் நான் மொபைல் மூலம் பணப்பரிமாற்றம் செய்ய மாட்டேன். ஒரு முறை ஏற்பட்ட அனுபவம்தான் காரணம். ஒரு தொகை. சற்றே பெரிய தொகை என்றும் சொல்லலாம். எங்கோ வெளியே இருந்தபோது அவசரம் கருதி மொபைல் மூலம் fund transfer செய்ய நேர்ந்தது. இரவு வீடு திரும்பி, பிரவுசர் மூலம் தளத்தைத் திறந்து பார்த்தபோது மதியம் செய்த பரிமாற்றம் கணக்கில் வரவேயில்லை. அனுப்பிய மின்னஞ்சலுக்கும் பதில் இல்லை. கஸ்டமர் கேரை அழைக்கலாம் என்றால் ஒவ்வொரு முறையும் பத்திருபது கெட்ட வார்த்தைகளைச் சொல்ல வைக்கிற காரியம் அது.

தமிழ் நாட்டில்தான் இருக்கிறான். இங்கேதான் வேலை செய்கிறான். ஆனால் பஞ்சாப்காரனையும் ஒரியாக்காரனையும் எதற்கு போனில் பேசவைக்கிறான் என்று புரிந்ததே இல்லை. அவனுக்கு ஆங்கிலமும் வராது; தமிழும் தெரியாது. சீதபேதி போல இந்தியில் பொழிந்துகொட்டுவான். கொலைவெறிக் கோபத்தில் பதிலுக்கு நான் இடைவிடாமல் கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு வைத்துவிடுவேன். இந்த மாநிலத்துக்கென்று ஒரு கஸ்டமர் கேர் வைத்தால் இவன் அப்பன் சொத்தா அழிந்துவிடும்?

இன்றைக்கு ஒரு டிரான்சாக்‌ஷன் செய்துகொண்டிருந்தேன். பெரிய தொகை இல்லை. ரூ. 126 மட்டும். அதுவும் மின்சார வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய தொகைதான். சொல்லிவைத்த மாதிரி மின்சாரம் போய், இணையம் படுத்துவிட்டது. ஐயோ மறுபடியுமா என்று அலுப்போடு டிஜி ஓடத்தொடங்கும்வரை காத்திருந்து வங்கியின் தளத்துக்குச் சென்று பார்த்தேன்.

பிழைத்தேன். பணம் போய்விட்டது. என்ன சிக்கல் என்றால் யாருக்கு அனுப்பினேனோ, அந்தப் பிரகஸ்பதியிடம் இருந்து இன்னும் ரசீதுக் கடிதம் வரவில்லை. அவனது தளத்துக்குச் சென்று பார்க்கலாம் என்றால் ஒவ்வொரு முயற்சியிலும் பாஸ்வர்ட் தவறு என்றே சொல்லிக்கொண்டிருந்தான். Saved password பக்கம் சென்று சரியாகத்தான் அடிக்கிறேனா என்று பார்த்தேன். சரிதான். Save ஆன பாஸ்வர்ட் சரிதானா என்று பாஸ்வர்ட் மேனேஜிங் app இலும் பார்த்தேன். சரிதான். ஆனாலும் தளத்துக்குள் போக முடியவில்லை.

Reset password கொடுத்துப் பார்க்கலாம் என்றால் பழைய பாஸ்வர்டை அடி என்கிறது. அடித்தால் அது தப்பு என்கிறது. TNEBக்காரன் தளம் வேறு எப்படி இருக்கும் என்று மனத்தைத் தேற்றிக்கொண்டு போகவேண்டியதுதான்.

டிஜிட்டல் இந்தியாவில் ஒரு கமர்ஷியல் போராளி படுகிற கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல.

ஜெய்ஹிந்த்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி