கிண்டில் குறித்தும் அதில் மின் நூல்களை வாங்கிப் படிப்பது குறித்தும் நான் எப்போது எழுதினாலும் குறைந்தது பத்து சந்தேகங்கள் நண்பர்களிடம் இருந்து வருகின்றன. என்னால் முடிந்தவரை அவற்றை இங்கு தீர்க்கப் பார்க்கிறேன்.
1. கிண்டில் என்பது என்ன? காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டுமா? தனிக் கருவிதானா?
கிண்டில் என்பது ஒரு படிப்பான் (Reader). அமேசான் தளத்தில் இக்கருவியை நீங்கள் வாங்கலாம். 6000 ரூபாய், 11000 ரூபாய், 16000+ எனப் பல ரகங்களில் கிடைக்கிறது. அல்லது, நீங்கள் உங்கள் மொபைல் அல்லது கணினியில் கிண்டில் appஐ இலவசமாகத் தரவிரக்கம் செய்துகொண்டும் அதன்மூலம் நூல்களை வாங்கிப் படிக்கலாம். கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் போன்ற இடங்களில் கிண்டில் ஆப் இலவசமாகக் கிடைக்கும்.
2. கிண்டிலில் புத்தகம் வாங்குவது எப்படி?
உங்களுக்கு அமேசானில் ஒரு அக்கவுண்ட் இருந்தால் போதும். பிரவுசர் வழியாகவோ, உங்கள் கிண்டில் கருவி மூலமோ, அல்லது கிண்டில் app மூலமாகவோ குறிப்பிட்ட புத்தகத்தை வாங்கலாம். க்ரெடிட் / டெபிட் கார்ட் வழியாகவோ, இண்டர்நெட் பேங்கிங் மூலமோ பணம் செலுத்தலாம். பணம் அவர்களுக்கு க்ரெடிட் ஆனதும் புத்தகம் உங்கள் கணக்கில் வந்து உட்காரும். உங்களிடம் உள்ள எந்தக் கருவியிலும் / எத்தனைக் கருவியிலும் அப்புத்தகத்தை நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
3. இடத்தை அடைக்குமா?
அடைக்காது. அமேசானில் வாங்கும் நூல்கள் அனைத்தும் க்ளவுடில் சேகரமாகும். நீங்கள் விரும்பும்போது டவுன்லோட் செய்து படித்துவிட்டு, கருவியில் டெலீட் செய்துவிடலாம். மீண்டும் தேவைப்பட்டால் க்ளவுடில் இருந்து இறக்கிக்கொள்ளலாம். எத்தனைக் கருவி மாற்றினாலும் புத்தகம் அப்படியே இருக்கும்.
4. ஆஃபர் எப்போது வரும்?
அது தெரியாது. எப்படியும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கிண்டில் கருவிகளுக்கு ஆஃபர் போடுகிறார்கள். கவனித்துக்கொண்டே இருந்தால் வரும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.
5. பயன்பாடு எப்படி?
அருமையாக உள்ளது. வாசிப்பை அடுத்தத் தளத்துக்கு நகர்த்த இதுவே சரியான வழி.
6. புத்தகக் கழிவு ஆஃபர் என்று தகவல் வருகிறது. ஆனால் ஆஃபரைப் பயன்படுத்த வழி இல்லையே?
இல்லை. உங்களுக்கு ஆஃபர் என்று கடிதம் வந்துவிட்டால் போதும். எத்தனை சதக் கழிவோ, அந்தத் தொகையை உங்கள் கணக்கில் ஏற்றி விடுவார்கள். நீங்கள் எப்போதும் வாங்குவது போலப் புத்தகம் வாங்கலாம். உங்கள் வங்கிக் கணக்கில் எடுக்கப்படும் தொகை ஆஃபர் தொகையாக மட்டுமே இருக்கும்.
உதாரணமாக நான் இப்போது மதிலுகள் வாங்கினேன். ஐம்பது ரூபாய் விலை. அமேசானின் பக்கத்தில் கடைசிவரை இந்த 50 ரூபாயைத்தான் காட்டும். ஆனால் உங்கள் வங்கியைத் தொடர்புகொண்டு பணத்தை டெபிட் செய்துகொள்ளும்போது அதில் உரிய ஆஃபர் தொகையைச் சேர்த்துக் கழித்துவிட்டே கழிப்பார்கள். எனக்கு மேற்படி நூலுக்கு ரூ 10 மட்டுமே வங்கியில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
7. ஏமாற்றிவிட்டார்கள் என்றால்?
மாட்டார்கள். அப்படி ஏதேனும் பிரச்னை வந்தால் கஸ்டமர் சர்வீஸை சாட்டில் தொடர்புகொள்ளலாம். உடனடியாக உதவுகிறார்கள். சாட்டில் அவர்களை அழைக்க https://www.amazon.in/…/customer/c…/ref=hp_ss_qs_v3_dv_cu_t1 இங்கு செலவும். (அமேசான் டாட்காம் என்றால் வேறு லிங்க். இது டாட் இன்னுக்கு மட்டும்)
8. கிண்டில் அன்லிமிடெட் என்றால் என்ன?
அது லெண்டிங் லைப்ரரி மாடல். மாதத்துக்கு / வருடத்துக்கு என்று மொத்தமாகப் பணம் கட்டிவிட்டால் போதும். எத்தனை புத்தகங்களை வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம். தனித்தனியே பணம் தரவேண்டாம். ஒரு சமயத்தில் 10 புத்தகங்களை நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம். இன்னொன்று வேண்டுமென்றால் பத்தில் ஒன்றைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அடுத்ததை எடுக்க வேண்டும்.
9. கிண்டிலில் படிப்பதில் என்ன லாபம்? புத்தகம் படிக்கிற சுகம் இதில் வருமா?
அச்சு நூல்களைவிட கிண்டிலில் படிக்கும் மின்னூல்களுக்கு விலை குறைவு. அச்சுப் புத்தகங்கள் அப்படி அப்படியேதான் கிண்டிலுக்கு ஏற்றப்படுகின்றன என்பதால் லுக் & ஃபீல் மாறாது. Page press, page turnபோன்ற தொழில்நுட்பங்கள் உள்ளதால் புத்தகத்தைப் புரட்டும் ஃபீல் அப்படியே கிடைக்கிறது.
10. இலவச பிடிஎஃப் கிடைக்குமா?
அதுவும் கிடைக்கும். கிண்டிலில் ஏராளமான புத்தகங்கள் இலவசமாகவும் உள்ளன. சில புத்தகங்களுக்கு தினமும் திடீர் திடீரென 0 விலை அறிவிப்பும் நடக்கிறது. ஒரு நாள்தான் அப்படி. காத்திருந்து கவர்ந்துகொள்ள வேண்டும். நான் இம்மாதிரி சுமார் 100 புத்தகங்களை விலையில்லாமல் டவுன்லோட் செய்திருக்கிறேன்.
11. நான் டவுன்லோட் செய்து இன்னொருத்தருக்கு தரும சேவை செய்ய முடியுமா?
முடியாது. உங்களிடம் உள்ள கருவியில் / மொபைலில் / கம்ப்யூட்டரில் மட்டுமே படிக்க முடியும். அப்படி தரும சேவை செய்தேதான் தீருவேன் என்றால் நண்பருக்குப் புத்தகத்துடன் உங்கள் போனையும் சேர்த்து அன்பளிப்பாகத் தந்துவிடவும்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.