பொலிக! பொலிக! 30

வைணவத்தில் மந்திரோபதேசம் என்பது மூன்று உபதேசங்களை உள்ளடக்கியது. அதாவது மூன்று முக்கியமான மந்திரங்களும் அவற்றின் பொருள்களும்.

முதலாவது எட்டெழுத்து மூல மந்திரமான ஓம் நமோ நாராயணாய.

அடுத்தது, ஸ்ரீமன் நாராயண சரனௌ சரணம் பிரப்த்யே – ஸ்ரீமதே நாராயணாய நம: என்கிற த்வய மந்திரம்.

மூன்றாவது மந்திரம் சரம சுலோகம் என்று சொல்லப்படும். இது கீதையில் ஜகத்குரு கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்குச் சொன்னது. மோட்ச சன்னியாச யோகத்தில் அறுபத்தி ஆறாவது சுலோகமாக வருவது.

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச:

இந்த மூன்றில் முதலிரண்டின் பொருளும் உட்பொருளும் ராமானுஜருக்கு திருக்கோட்டியூர் நம்பி மற்றும் பெரிய நம்பி மூலம் உபதேசிக்கப்பட்டிருந்தது. மூன்றாவதான சரம சுலோகம் மிச்சம் இருந்தது. அதற்கொரு நாள் வரும்; அதற்கொரு ஆசாரியர் அமைவார் என்று ராமானுஜர் காத்திருந்த கணத்தில் திருக்கோட்டியூர் நம்பியே திருவாய் மலர்ந்தார்.

‘அடடா, இதிலேயே திருப்தியடைந்துவிட்டீரே ராமானுஜரே! உமக்கு சரமத்தின் ரகஸ்யார்த்தத்தையும் சொல்லிவைக்கலாம் என்று இருந்தேனே!’

ஒரு கணம் யோசித்த ராமானுஜர் சட்டென்று பதில் சொன்னார், ‘சுவாமி! நீங்கள் இன்று எனக்குச் சொன்ன அர்த்தத்துக்கு மேல் இன்னொன்று இருக்கமுடியும் என்று நான் எப்படி நினைப்பேன்? முழுமையை தரிசித்துவிட்டதாகவே எனக்குத் தோன்றிவிட்டது.’

குருகைப் பிரான் புன்னகை செய்தார். ‘சரி பரவாயில்லை. சரம சுலோகத்தை அதன் ரகஸ்யார்த்தங்களுடன் நீர் அறியவேண்டியது முக்கியம். ஆனால் இப்போது வேண்டாம். திருவரங்கத்துக்குச் சென்று சில காலம் கழித்துத் திரும்பி வாருங்கள். ஆனால் கண்டிப்பாக இம்முறை தனியாகத்தான் வரவேண்டும். உமது தண்டுக்கும் பவித்திரத்துக்கும் சேர்த்து போதிப்பதாயில்லை.’

குருகைப் பிரான் சிரித்தபடி சொன்னார். ராமானுஜருக்கும் புன்னகை வந்தது.

விடைபெற்று, திருவரங்கம் திரும்பியவர், பெரிய நம்பியிடமும் பிறரிடமும் நடந்ததை விளக்க, அத்தனை பேரும் புல்லரித்துப் போனார்கள். உண்மையில், ராமானுஜர் திருவரங்கம் வந்து சேர்வதற்கு முன்னதாகவே திருக்கோட்டியூரில் நடைபெற்ற சம்பவம் திருவரங்கத்தின் செவிகளை வந்து சேர்ந்திருந்தது. குருகைப் பிரானே ராமானுஜரை ‘எம்பெருமானார்’ என்று அழைத்ததைச் சொல்லிச் சொல்லி வியந்துகொண்டிருந்தது பக்தர் சமூகம்.

‘ஆனால் ராமானுஜரின் அணுகுமுறை புதிராக உள்ளதே. புனிதங்களைப் பொதுமைப்படுத்துவது ஆபத்தில் முடியுமல்லவா? அவற்றின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் உணராதவர்களுக்கு அவற்றைத் தெரியப்படுத்துவது வீணான செயல் அல்லவா?’

‘மந்திரங்கள் விஷயத்தில் மட்டுமா அவர் புரட்சி செய்கிறார்? கோயில் நிர்வாகத்தை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறார் என்று பாரும் ஓய். திருக்கோயில் கைங்கர்யத்தில் மெல்ல மெல்ல எல்லா சாதிக்காரர்களும் நுழைய ஆரம்பித்துவிட்டார்கள். கேட்டால் வைணவனுக்கு சாதி கிடையாது. வைணவன் என்கிற அடையாளம் மட்டுமே உண்டு என்கிறாராம்.’

‘இதுவும் புனிதங்களைப் புறந்தள்ளும் காரியம்தான். இதெல்லாம் எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லை.’

‘ஆளவந்தாரின் சீடர்கள் எப்படி இதையெல்லாம் பொறுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லையே ஐயா. ஒரு எதிர்ப்புக்குரலும் வரவில்லையே இன்னும்?’

‘எப்படி வரும்? அந்த மனிதரிடம் என்னவோ மாய சக்தி இருக்கிறது. எதிரே வருகிற அத்தனை பேரையும் எப்படியோ மயக்கி உட்காரவைத்துவிடுகிறார். விவாதங்களுக்கோ, விசாரணைகளுக்கோ இடமே இருப்பதில்லை.’

‘எல்லாம் பேச்சு ஜாலம். காலட்சேபம் கேட்கப் போகிறவர்கள் திரும்பி வருகிறபோது கவனியும் ஓய். கள்ளுக்கடைக்குப் போய் வருகிறவர்களைப் போல் தள்ளாடிக்கொண்டு வருகிறார்கள். இதெல்லாம் நல்லதுக்கே இல்லை.’

‘அதுசரி, ஆனானப்பட்ட திருக்கோட்டியூர் நம்பியையே தன் வலையில் வீழ்த்திவிட்டாரே. வெறும் மக்கள் எம்மாத்திரம்?’

அது மெல்ல மெல்லத் திரண்டு எழுந்துகொண்டிருந்தது. பொறாமைப் புயல். சில மனங்களுக்குள் மட்டும் தகித்துக்கொண்டிருந்த விரோதக் கங்கு. என்னவாவது செய்து ராமானுஜரின் பிடியில் இருந்து திருக்கோயில் நிர்வாகத்தைப் பிடுங்கிவிட முடியாதா என்று ஒரு கூட்டம் யோசிக்கத் தொடங்கியிருந்தது. காலகாலமாக நடைமுறையில் இருந்து வந்த வைதிகமான முறைப்படி கோயில் சடங்கு சம்பிரதாயங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள் அவர்கள்.

ஆகமம் என்பார்கள். திருவரங்கத்தில் மட்டுமல்ல. ராமானுஜர் வருவதற்கு முன்னர் அனைத்து வைணவ ஆலயங்களிலுமே அதுதான் நடைமுறை. வைகானசம் என்று பேர். விகனச முனிவரால் உருவாக்கப்பட்ட வழிபாட்டு நெறி அது. ஆழ்வார்களின் காலத்துக்கு முன்பிருந்து நடைமுறையில் இருந்து வந்த நெறி. அந்த வழியில் பஞ்ச சம்ஸ்காரம் என்கிற ஐந்து விதமான தூய்மைச் சடங்குகள் அவசியமில்லை. என்னை வைணவன் என்று இன்னொருவர் முத்திரை குத்த என்ன அவசியம்? தாயின் கருவிலேயே நான் வைணவன்தான். அதற்காக ஒரு சடங்கு அவசியமில்லை.

ராமானுஜர் அடிப்படையிலேயே அதனை மறுத்தார்.

‘பிறப்பில் ஒருவருக்கு எந்த அடையாளமும் கிடையாது. அனைத்து உயிர்களும் சமம். உயர்வும் தாழ்வும் நடத்தையில் இருக்கிறது. வாழும் விதத்தில் இருக்கிறது. பரம பாகவதரான திருக்கச்சி நம்பி அந்தணர் அல்லர். திருப்பாணாழ்வார் அந்தணரா? வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார் தொடங்கி எத்தனை ஆழ்வார்கள் அந்தண குலத்தில் பிறந்தவர்கள்? குலப்பெருமையாலா அவர்கள் நிலைத்திருக்கிறார்கள்? பக்தியும் மானுடத் தொண்டுமல்லவா அவர்கள் புகழ் தழைக்கச் செய்திருக்கிறது? இது ஏன் உங்களுக்குப் புரிவதில்லை?’ என்று கேட்டார்.

சனாதனவாதிகளால் இதைத் தாங்க முடியாமல் போனது.

‘அவர் எக்கேடோ கெட்டுப் போகட்டும். திருக்கோயில் கைங்கர்யத்தை மாசு படுத்தாதிருந்தால் போதும்’ என்றார்கள். மாசென்று அவர்கள் கருதியது, மறுமலர்ச்சியை. மகத்தான சீர்திருத்தங்களை. சமஸ்கிருதம் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்த சன்னிதிகளில் ஆழ்வார்களின் தமிழ்ப் பாசுரங்களை ராமானுஜர் ஒலிக்கச் செய்தது அவர்களுக்குப் பெரிய இம்சையாக இருந்தது. பரமாத்மாவின் அர்ச்சாவதார சொரூபத்தை (சிலை ரூபம்) மட்டுமே வணங்கினால் போதும் என்பது அவர்கள் நிலைபாடு. ராமானுஜரோ, பரத்துவம் (வைகுண்டத்தில் உள்ள நிலை), வியூகம் (பாற்கடலில் சயன கோலத்தில் உள்ள நிலை), விபவம் (அவதார நிலை), அந்தர்யாமி (உள்ளுக்குள் உணரும் நிலை) என எந்த நிலையிலும் பரமனைக் கருதலாம், வணங்கலாம் என்று சொன்னார்.

‘ம்ஹும். இவரோடு ஒத்துப் போக முடியாது. வெகு விரைவில் திருவரங்கத்தையே இவர் சர்வநாசமாக்கிவிடுவார். உடனடியாக ஏதாவது செய்தாகவேண்டும்!’

என்ன செய்யலாம் என்று அவர்கள் தீவிரமாக ஆலோசித்துக்கொண்டிருந்தபோது ராமானுஜர் மீண்டும் திருக்கோட்டியூருக்குப் புறப்பட்டார். சரம சுலோகத்தின் உட்பொருளை போதிக்கிறேன் என்று குருகைப் பிரான் சொல்லியிருக்கிறாரே.

‘சுவாமி… அடியேன் தங்களுடன்…’

கூரத்தாழ்வான் தயங்கினான்.

‘வேண்டாம்!’ என்று சொல்லிவிட்டுத் தனியே புறப்பட்டார்.

(தொடரும்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter