புனைவு

பலான கதை – 3.0.1

இந்தக் கதையில் வரும் எழுத்தாளனான ராமு என்கிற சுரேஷ் இந்தக் கதையை எழுதுகிற எழுத்தாளனான ராமு என்கிற சுரேஷின் வீட்டுக் கதவைத் தட்டி, ‘உங்களிடம் ஒரு நிமிடம் பேசலாமா?’ என்று கேட்டான்.

ராமு என்கிற சுரேஷ் ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒரு தமிழன் என்பதால், தமிழ் பண்பாட்டுக்கு பங்கம் நேராமல் வாசல் கதவைத் திறந்து, வரு, இரிக்யு என்று உள்ளே அழைத்து உட்கார வைத்து உபசரித்தான். (குடிக்க இன்னும் தண்ணீர் கொடுக்கவில்லை.)

ராமு என்கிற சுரேஷ் வந்ததும் வராததுமாக முகமெங்கும் கோபத்தை நிரப்பிக்கொண்டு, ‘நீங்கள் செய்வது அநியாயம். ஆரம்பித்துவிட்டு மூன்று கந்தாயத்துடன் அப்படியே நிறுத்திவிட்டீர்கள். உங்களுக்கு எப்போதும் இதே வழக்கமாகப் போய்விட்டது. இது என் வாழ்க்கைப் பிரச்னை அல்லவா? அந்தப் பரதேசி கார்சியா மார்க்குவேஸ் ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி எண்பத்தி இரண்டிலேயே அந்த நாசமாய்ப் போன நோபல் பரிசை வாங்கிக்கொண்டு செத்தே போய்த் தொலைந்துவிட்டான். இன்னும் போராடிக்கொண்டிருக்கும் ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு நீங்கள் துரோகம் செய்துவிட்டீர்கள்’ என்று பொறுமலுடன் குற்றம் சாட்டினான்.

சில வினாடிகள் அமைதியாக இருந்த இந்தக் கதாசிரியனான ராமு என்கிற சுரேஷ், ‘இது துரோகம் செய்ய நினைத்துச் செய்யப்பட்ட துரோகம் அல்ல. ஆனால் ஒரு துரோகம் நிகழ்ந்துதான் விட்டது. காரணம், வாணி ராணியில் ஒரு கல்யாண சீக்வன்ஸ் ஓடுகிறது’ என்றான்.

தூக்கி வாரிப்போட்டு எழுந்த கதையில் வரும் ராமு என்கிற சுரேஷ், ‘என்ன பேத்துகிறீர்கள்?அந்தக் கல்யாணம் நடக்கப் போவதில்லை, கதிரை அத்தனை அண்டர் எஸ்டிமேட் செய்யாதீர்கள்; அவசியம் அவன் திருமணத்தை நிறுத்திவிடுவான்’ என்று கத்தத் தொடங்கினான்.

என்ன சொல்லி அவனை சமாதானப்படுத்துவது என்று ராமு அல்லது சுரேஷுக்குப் புரியவில்லை. மீண்டும் சில வினாடிகள் யோசித்தான். ‘சரி, உங்கள் கதையை நான் மீண்டும் எழுதத் தொடங்கவேண்டுமென்றால் நீங்கள் உங்கள் பெயரை ராபர்ட் என்று மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்றான்.

திகைத்துப் போன ராமு அல்லது சுரேஷ், ‘என்னது ராபர்ட்டா?’ என்று மீண்டும் அதையே ஒருமுறை கேட்டான்.

மிகச் சரி. இப்படித்தான் ஒவ்வொரு வரியாக ரிப்பீட் செய்து ஃபுட்டேஜ் சேவை செய்ய வேண்டும். ராபர்ட்டாகப் பெயர் மாற நீங்கள் மிகவும் பொருத்தமானவராகிவிட்டீர்கள் என்றான் ராமு அல்லது சுரேஷ்.

இப்போது ராமு அல்லது சுரேஷ் என்கிற ராபர்ட் வாணி ராணி கல்யாண சீக்வன்ஸில் மும்முரமாகியிருக்கிறான். அது முடிந்த பிறகு கார்சியா மார்க்குவேஸை மண் கவ்வச் செய்ய ஆரம்பிப்பான்.

Share

1 Comment

  • ஆரம்பிக்கும்போதே தெரியும்.. வேலை அதிகமானா இப்படி ஜகா வாங்குவீங்கன்னு.

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி