காம்யுவின் வாசனை

என் வீட்டிலிருந்து சுமார் ஆயிரத்தி எழுநூறு கிலோ மீட்டர் தூரம் என்பதே முதலில் பிரமிப்பாக இருந்தது. அத்தனை பெரிய தூரத்துக்கு அதற்குமுன் நான் தனியாகப் போனதே இல்லை. கிளம்புவதற்கு இரண்டு நாள்கள் முன்பிருந்தே எனக்குப் பதற்றம் பிடித்துக்கொண்டது. வழியில் படிப்பதற்கென்று தேடித்தேடிப் புத்தகங்களை எடுத்து வைத்தேன். ஆ, இந்தப் புஸ்தகம் எடுத்து வைப்பது எப்போதுமே சிக்கல் பிடித்த காரியம். சில புத்தகங்களை வீட்டில் மட்டும்தான் படிக்க முடியும். சிலவற்றைப் பேருந்து நிறுத்தங்களில், குட்டிச் சுவர்களின் பக்கம் சாய்ந்தவாறு, பூங்கா சிமெண்டு நாற்காலிகளில் அமர்ந்தவாறு படித்தால்தான் சரியாக வரும். இன்னும் சில புத்தகங்களை – தவறாக நினைக்காதீர்கள். கக்கூசுக்கு எடுத்துச் சென்று படித்தால் மட்டுமே சுகமாக இருக்கும். இதெல்லாம் புத்தகங்களின் பிரச்னையா, அல்லது படிக்கிறவன் கிறுக்குத்தனமா என்று எனக்குத் தெரியாது. வருஷக்கணக்காக இப்படித்தான்.

சொன்னால் நம்புவீர்களா? தாமிரபரணிக் கதைகள் என்றொரு புஸ்தகம். சின்ன புஸ்தகம்தான். வேகமாகப் படித்தால் ஒரு மணிநேரம் காணாது. இதை விட்டுவிட்டு ஏழெட்டு தவணையில் மாடிப்படி வளைவுச் சந்தில் நின்றேதான் வாசித்து முடித்தேன். பார்த்துவிட்டால் யாரோ கபாலென்று பிடித்துக் கொண்டு போய் லாக்கப்பில் போட்டுவிடப் போகிறார்களா என்ன? ஆனாலும், சொன்னேனே கிறுக்குத்தனம். அதுதான் காரணமாயிருக்க வேண்டும். முதல் தடவையோடு முடிந்ததென்று எண்ணாதீர்கள். ஒவ்வொரு முறை அந்த நூலை வாசிக்க எடுக்கும்போதும் மாடிப்படி முட்டுச் சந்துக்குத்தான் போவேன்.

ரொம்ப யோசித்தால் ஒரு காரணம் சொல்லலாம். எந்தப் புஸ்தகத்தையும் பின்னொரு காலம் நினைத்துப் பார்க்கும்போது அதை வாசித்த சூழலையும் சேர்த்து நினைத்துக்கொண்டால் தனியொரு வாசனை அகப்படும். ஆனால் ஆயிரத்தி எழுநூறு கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கும்போது எத்தனையோ பலவித வாசனைகளைத் தாண்டித்தான் போகவேண்டியிருக்கும். ரயிலுக்கென்று ஒரு வாசனை உண்டா என்ன. இரும்பு அல்லது அழுக்கின் வாசனை என்பது தாளிப்பு மாதிரிதான். அடிப்படை வாசனை அது நின்று போகும் ஸ்டேஷன்களில் சத்தமில்லாமல் ஏறிக்கொள்வது. குரோம்பேட்டை ஸ்டேஷன் வாசனை பல்லாவரம் ஸ்டேஷனுக்குக் கிடையாது. சைதாப்பேட்டையின் வாசனை மாம்பலத்தை அடையும் முன்பே கீழே குதித்துவிடும். இந்தப் பக்கம் தெற்கே போகிற ரயில் விழுப்புரத்துக்குள் நுழைந்துவிட்டாலே தனியொரு வினோதமான வாசனை ஓடி வந்து மூச்சை நெறிக்கும். தென்னாற்காடு ஜில்லா தாண்டும் வரைக்கும் அந்த வாசனைதான் அப்புறம். திருச்சி, மதுரைப் பக்கம் போனால் ரயிலில் வேறொரு வாசனை ஏறிவிடும். இதுவே திருநெல்வேலி வரை போனால் முற்றிலும் இன்னொரு வாசனை. நெல்லை ஜங்ஷனில் கூட்டத்தை இறக்கிவிட்டுவிட்டு நாகர்கோயிலை நோக்கி நகரும்போது ரயிலே அலம்பிவிட்ட மாதிரி இருக்கும். கொஞ்சநேரம் வாசனைகளற்ற காற்று பெட்டியை நிரப்பியிருப்பது போலத் தோன்றும். அந்த நேரங்களில் என்னவாவது படித்துக்கொண்டிருந்தால் புத்தியில் ஏறவே ஏறாது. வாசிக்கும்போது ஒரு வாசனை தேவைப்படுகிறது. நல்லதா கெட்டதா என்பதல்ல. ஒரு ஞாபகத்துக்கு. கண்டிப்பாகத் தேவை. குறைந்தபட்சம் எனக்கு.

ஆயிரத்தி எழுநூறு கிலோ மீட்டர்கள். எனவே ரொம்ப கவனமாகப் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்திருந்தேன். எதுவும் இருநூறு பக்கங்களுக்கு மேற்படாதவையாக. ரெண்டு கதைப் புத்தகங்கள், மூன்று கட்டுரைத் தொகுப்பு, அப்புறம் ஒரு நாவல். ஆ, சொல்லாதிருக்கலாமா?! கவிதை நூல்களை, நான் வங்கிக்குப் போகும்போது மட்டுமே வாசிப்பது. பணம் போடுகிறவர்கள் மற்றும் எடுப்பவர்களின் நடமாட்டங்களுக்கு இடையே மிதமான ஏசி குளிர்ச்சியில், பணம் எண்ணும் இயந்திரம் அவ்வப்போது கடகடகடவென்று ஓடும் சத்தம் கேட்கவேண்டும். எப்போது நுழைந்தாலும் ஆபீசருக்கு ஒரு பையன் டீ எடுத்துக்கொண்டு போவான். ஏலக்காய் போட்ட அந்தத் தேநீரின் சுகந்த நறுமணம் திருட்டுத்தனமாக கிளாசை விட்டு இறங்கி மிதந்து வந்து என் நாசிக்கு ஏறும்போதுதான் கவிதையை ரசிக்கத் தோன்றும். காசை மட்டுமே எண்ணும் பிராந்தியத்தில் கவிதையை எண்ணிக்கொண்டிருப்பது ஒரு சொகுசு. எப்போதாவது முயற்சி செய்து பாருங்கள்.

0

ரயிலேறிவிட்டேன். உடனே புஸ்தகத்தை எடுத்துவிடலாமென்று தோன்றியது. ஆனால் புத்தி தோயுமா? சரி, கொஞ்ச நேரம் போகட்டுமே? எதிர் இருக்கைகளை ஒரு குடும்பம் நிரப்பியிருந்தது. அவர்கள் நம் ஊர்க்காரர்கள் அல்லர். ஆயிரத்தி நாநூறுக்கும் எழுநூறுக்கும் இடையே உள்ள கிலோ மீட்டர்களில் எங்கோ இறங்கவேண்டிய குடும்பத்தார். அந்தப் பிராந்தியத்து மொழி பேசுகிறவர்கள். ஒரு சாஸ்திரத்துக்கு ஹலோ சொன்னார் குடும்பத் தலைவர். நானும் சொன்னேன். முடிந்தது கதை. அவரது மனைவியோ இரண்டு மகள்களோ என் பக்கம்கூடத் திரும்பவில்லை. வண்டி ஏறியதுமே அந்த அம்மாள் ஒரு பெரிய சணல் பைக்குள் இருந்து இரண்டு அடுக்குப் பாத்திரங்களை வெளியே எடுத்து வைத்தாள். அப்பப்பா. ஊரே தின்னுமளவுக்கு ஒன்றன்மீது ஒன்றாக எத்தனை சப்பாத்திகள்! இன்னொரு பாத்திரத்தில் காய்கறிகள் போட்ட கூட்டு இருந்தது. அம்மாள் புத்திசாலித்தனத்துடன் ஒரு கரண்டியும் எடுத்து வந்திருந்தாள்.

வண்டி கிளம்பியதுமே மொத்தக் குடும்பமும் கையில் ஆளுக்கொரு காகிதத் தட்டை ஏந்திக்கொள்ள, அந்த அம்மாள் முதல் சுற்றில் தலா நான்கு சப்பாத்திகளும் தாராளமாகக் காய்கறிக் கூட்டையும் போட்டாள். ருசிக் கலைஞர்களுக்கு நான் சொல்லுவது புரியும். சப்பாத்திக் கூட்டில் பருப்பின் வாசனைதான் மேலோங்கியிருக்க வேண்டும். மற்றதல்ல. வேறெதுவுமல்ல. ஆனால் இந்த அம்மாள் பரிமாறிக்கொண்டிருந்த கூட்டில் கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை வாசனைதான் தூக்கலாக இருந்தது. எனக்கு மூச்சை அடைத்தது. அந்தப் பெரிய பாத்திரத்தில் எப்படியும் சுமார் நாற்பது சப்பாத்திகள் இருக்கும் என்று தோன்றியது. இந்த வேளைக்கு அந்தக் குடும்பம் இருபது சப்பாத்திகளைத் தின்று தீர்த்தாலும் அடுத்த இரு வேளைகளுக்கு தாராளமாகக் காணும். அட தெய்வமே. இந்தப் பயணம் முழுவதற்கும் கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை வாசனைதானா! பரிசோதகருக்குப் பத்திருபது கொடுத்து இருக்கையை மாற்றிக்கொள்ள முடியுமா என்று யோசித்தேன். ம்ஹும். எனக்கு பதிலாக கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை வாசனையை விரும்பக்கூடிய வேறு யாராவது இங்கே வரச் சம்மதிக்க வேண்டும். அதெல்லாம் நடக்காத காரியம்.

ரயில் வண்டி திருவள்ளூரைத் தாண்டிக்கொண்டிருந்தது. மேற்படி குடும்பம் முதல் சுற்றுச் சப்பாத்திகளைத் தின்று முடித்துவிட்டு மீண்டும் தட்டுகளை நீட்ட, அந்த அம்மாள் மேலும் தலா இரண்டு சப்பாத்திகளை வைத்து, கூட்டை மேலே விட்டாள். நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். கொஞ்சம் கலவரமாகத்தான் இருந்தது. ஒவ்வொருவர் வயிறின் கொள்ளளவு ஒவ்வொரு மாதிரி இருக்காதா? அதெப்படி குடும்பமே ஆறு சப்பாத்தி தின்னும்? என்னால் மூன்று சப்பாத்திகளுக்கு மேல் எப்போதும் முடிந்ததில்லை. அதிலும் முதல் சப்பாத்திக்கு நான் எதையும் தொட்டுக்கொள்வதில்லை. நெய் விட்டுச் சுட்ட சப்பாத்தியின் நறுமணத்தைப் பருப்புக் கூட்டின் வாசனை கபளீகரம் செய்துவிடும். எனவே முதல் சப்பாத்தி நெய்யை கௌரவிப்பதற்காக. அடுத்ததை கொஞ்சம் போல் கூட்டு சேர்த்து, தொட்டுத் தொட்டுச் சாப்பிட்டுவிட்டு, மூன்றாவதில் சற்று தாராளமாகவே பருப்பைச் சேர்த்து கிட்டத்தட்ட பிசைந்தே சாப்பிடுவேன். ருசியின் பூரணம் என்பது வாசனையின் அரவணைப்பைச் சார்ந்தது. வீடு வரை மனைவி மாதிரி சாப்பிடும் வரைதான் ருசி. இந்த விதத்தில் வாசனையானது வீதி வரை உறவு போன்றது.

வண்டி அரக்கோணத்தில் நின்றபோது வேறொரு புதிய நபர் வந்து சேர்ந்தார். சுமார் நூற்று முப்பத்தியேழு வருடங்களாக என்னை அறிந்தவர் போல, நெருங்கும்போதே ஒரு புன்னகை. ஹலோ என்று கை கொடுத்தார். எனக்கு புருவத்துக்குமேல் அரித்தது. அவருக்குக் கொடுத்த கையை உயர்த்தி அரித்த இடத்தில் சொரிந்துகொள்ளச் சென்றபோது குப்பென்று அத்தர் வாசனை அடித்தது. ஆண்டவனே, இதுவும் கடந்து போகவேண்டிய வாசனையே அல்லவா. எப்படி இருபத்தியாறு மணி நேரம் இதில் நீந்த முடியும்?

என் பதற்றம் வினாடிக்கு வினாடி அதிகரித்துக்கொண்டே இருந்தது. இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட எனக்கிருந்த ஒரே வழி இதனைத் தாற்காலிகமாக மறப்பதுதான். ஆனால் அது எப்படி முடியும்? வண்டி ஜோலார்பேட்டையில் நிற்கும்போதெல்லாம் காற்றில் ஒரு சுகந்தமான மசால் வடை மடித்த பேப்பரின் வாசனை மிதந்து வரும். அது போச்சு. ஆந்திரப் பிரதேசத்துக்குள் நுழைந்து வேகமெடுக்கும் தருணங்களில் – பெரும்பாலும் அது அதிகாலை நேரம் – குப்பென்று நெல் வாசனை அடிக்கும். நெல் வாசனைக்கும் வைக்கோல் வாசனைக்கும் மெல்லிய வித்தியாசம் உண்டு. இரண்டுமே சுகந்தமானவைதான் என்றாலும் நெல் வாசனையில் கொஞ்சம் ஈரம் கலந்திருக்கும். வைக்கோலின் வாசனைக்கு ஒரு முரட்டுத்தனம் மிடுக்கைக் கொடுக்கும். நீங்கள் எப்போதாவது வைக்கோல் போரில் சாய்ந்தபடி சுந்தர ராமசாமியின் கதைகளை வாசித்ததுண்டா? அபாரமாக இருக்கும். இதே ஜானகிராமனைப் படிப்பதற்கு ஏற்ற வாசனை, அழுக்குப் போர்வையில் கிட்டும். உள்ளதிலேயே அழுக்கான, பழைய போர்வை ஒன்றைப் போர்த்திக்கொண்டு, கொட்டும் மழை நாளில் செம்பருத்தி வாசித்தால் சோறு தண்ணி வேண்டியிருக்காது. அச்சிட்ட எழுத்துகள் ஒவ்வொன்றும் போர்வையின் வாசனையை உறிஞ்சி நாசியை நோக்கிப் பீய்ச்சும். கதை புத்திக்குள் இறங்கும்போது போர்வையின் கதகதப்பு உருவாக்கியிருக்கும் வியர்வைப் பிசுபிசுப்பும் வாசனையாக உருப்பெற்று ஒரு நெடியை உருவாக்கும். ஆ, அபாரம். விவரிக்கவே முடியாது அதை.

கிடக்கட்டும். அந்த அரக்கோணத்துக் கனவானின் அத்தர் வாசனையைச் சொல்ல வந்தேன். இது இலவங்கப்பட்டை சேர்த்த காய்கறிக் கூட்டின் வாசனையைக் காட்டிலும் காட்டமானது. இந்தக் காலத்தில் எத்தனையோ நூதனமான வாசனாதி திரவியங்கள் வந்துவிட்டன. மென்மையும் சுகந்தமும் சேர்ந்த வாசனைகள். இவர் ஏன் இன்னும் அத்தரில் இருக்கிறார்? கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. ஒரு காலத்தில் நான்கூட காதி கிராஃப்டில் ஜவ்வாது வாங்கி வந்து பூசிக்கொண்டிருந்தேன். விலை மலிவு, சுதேசிச் சரக்கு என்று சில காரணங்களையும் சொல்லுவேன். ஏனோ சீக்கிரமே எனக்கு அது பிடிக்காமல் போய்விட்டது. வாசனையானது அந்த எதிர் சீட்டு கனவானின் இரண்டாவது பெண்ணின் மோதிர விரல் மாதிரி சன்னமாக இருக்கவேண்டும். விரலைக் காட்டிலும் ஓரிரு மில்லி மீட்டர்கள் பெரிதான மோதிரமொன்றை அவள் அணிந்திருக்கிறாள். அதை மறுகையால் உருட்டிக்கொண்டேவும் இருக்கிறாள்.

நான் வெகுநேரம் அவள் விரலையே பார்த்துக்கொண்டிருந்தேன். சப்பாத்தியை விள்ளும்போது ரொம்ப அழகாக அந்த மோதிர விரல் ஒரு சேவலின் தலைபோல் டொய்ங் என்று முக்கால் சதம் எழுந்து எழுந்து தணிவது பார்க்க ரசமாயிருந்தது. உண்மையில் அந்த இலவங்கப்பட்டை வாசனையை மறக்கடிக்க அந்தக் காட்சிதான் எனக்கு உதவி செய்துகொண்டிருந்தது. ஆனால் அடுத்த வேளையும் அவளது தாயார் அதே சப்பாத்திப் பாத்திரத்தையும் காய்கறிக் கூட்டுப் பாத்திரத்தையும் திறக்கவே செய்வாள்.

0

எங்கே போகிறீர்கள் என்று அரக்கோணத்துக்காரர் கேட்டார். எதிர் இருக்கைக் குடும்பத்தார் வேறு மொழி. என்னால் அவர்களோடு நீண்ட உரையாடல்களை நிகழ்த்த இயலாது. அந்த விதத்தில் நான் அரக்கோணத்துக்காரருக்கு நியாயமாக நன்றி சொல்லவேண்டும். ஆனால் அவர் பேசும்போது அவர் வாய்க்குள் இருந்துவேறு, ஒரு வாசனை வெளிப்பட்டது. மவுத் ஃப்ரெஷ்னர் உபயோகிப்பார் போலிருக்கிறது. இதுவும் எனக்கு இடைஞ்சலே. ஏனென்றால் நான் அப்போது வாசிக்க எடுத்திருந்தது ஒரு ரஷ்யச் சிறுகதைத் தொகுப்பு. பொதுவாகவே பயணங்களுக்கு உகந்தவை சோவியத் காலப் புஸ்தகங்களே. மாறும் நிலக் காட்சிகளும் கணத்துக்குக் கணம் காற்று ஏந்தி எடுத்து வந்து சேர்க்கும் விதவிதமான வாசனைகளும் ரயில் பெட்டியின் இரும்பு வாசனையும் கலந்து கட்டி அந்தப் புத்தகங்களுக்கு ஓர் இறவாத்தன்மை அளித்துவிடும். எத்தனையோ பல வருஷங்களுக்குப் பிறகு தூசு தட்டி மீண்டும் எடுத்து வாசிக்க ஆரம்பித்தாலும் முந்தைய பயண வாசிப்பின்போது உணர்ந்த வாசனைகளை ஒன்று மிச்சமில்லாமல் நினைவுகூர்ந்துவிட இயலும்.

ஆனால் அரக்கோணத்து அத்தர்க்காரருடன் பேச்சுக் கொடுத்தபடி இதை வாசிக்க முடியாது. வாசிப்பும் பாழ். வாசனையும் பாழ். எனவே மூடி வைத்துவிட்டு அவர் என்ன மௌத் ஃப்ரெஷ்னர் உபயோகிக்கிறார் என்று விசாரித்தேன். இப்போது இரண்டாவது வேளை சப்பாத்தி, கூட்டு உண்ணத் தொடங்கியிருந்த எதிர் சீட்டுக் குடும்பமும் இதனைக் கவனிக்க ஆரம்பித்தது. அரக்கோணத்துக்காரர் தமது மவுத் ஃப்ரெஷ்னரின் பிராண்டைச் சொல்லிவிட்டு அதன் அருமை பெருமைகளை விவரிக்க ஆரம்பித்தார். ஒரு முறை கொப்புளித்துத் துப்பிவிட்டால் போதும். பன்னிரண்டு மணி நேரங்களுக்கு வாசனை அப்படியே இருக்கும். அவர் ஒரு விற்பனை அதிகாரி. தினமும் ஏராளமான மக்களைச் சந்தித்து உரையாட வேண்டிய பணியில் இருப்பவர். மடிப்புக் கலையாத சட்டை பேண்ட், பளபளப்புக் குறையாத விலை உயர்ந்த ஷூக்கள், டை போலவே மவுத் ஃப்ரெஷ்னரும் அவரது தொழில்சார் தேவைகளுள் ஒன்று.

ஆனால் ஐயா, ரயில் பயணத்திலாவது இதனைத் தவிர்க்கலாமே? இங்கு யார் உங்கள் வாயைப் பிடுங்கி முகரப் போகிறார்கள் என்று கேட்க நினைத்தேன். எதற்கு வம்பு என்று பேசாதிருந்துவிட்டேன். எப்படியும் என் நிம்மதி போய்விட்டது. வண்டி ஏறியதில் இருந்து ஒரே வாசனைதான். இல்லையில்லை. இரண்டு வாசனைகள். ஒருவேளை அதுவுமில்லையோ? ஆம். மூன்று. இலவங்கப்பட்டை போட்ட காய்கறிக் கூட்டின் வாசனை எதிர்ப்புறத்தில் இருந்து. காட்டமான அத்தரின் வாசனை இடப்பக்கமிருந்து. தப்பித்தவறி அந்த உத்தமர் வாய் திறந்தால் அந்த விலை உயர்ந்த மவுத் ஃப்ரெஷ்னரின் வாசனை.

சரி, விதித்தது இதுதான். சகித்துக்கொள்ள வேண்டியதுதான். படிக்கும் இச்சையை மூட்டை கட்டிவிட்டு ஏறிப் படுத்துவிட்டேன். மேல் தளத்துக்குப் போனாலும் இதே வாசனைதான். பெட்டியில் கொஞ்ச நேரம் நடந்துவிட்டு வரலாம் என்று தோன்றியது. பயமாக இருந்தது. இன்னும் காட்டமாக, இன்னும் மோசமாகச் சில வாசனைகளை நுகர வேண்டி வந்துவிட்டால் இந்தப் பயணமே நரகமாகிவிடும். சாகும்வரை மறக்க முடியாத நினைவுகளுக்குச் சேமித்து வைக்க முடியாது போய்விடும். ஆயிரத்தி எழுநூறு கிலோ மீட்டர்கள். அதில் சரி பாதி தூரத்துக்குமேல் கடந்தாகிவிட்டது. இன்னும் சப்பாத்திப் பாத்திரம் காலியானபாடில்லை. இடையே எழுந்து ஒருதரம் கழிப்பறைக்குப் போய்வந்த அரக்கோணத்துக்காரர் இன்னொரு தரம் அந்த மவுத் ஃப்ரெஷ்னரைப் போட்டுக் கொப்பளித்துத் துப்பிவிட்டு வந்திருந்தார். நெருங்கும்போதே தெரிந்துவிட்டது. என்ன துணிச்சல் இருந்தால் உங்களுக்கு வேண்டுமா என்று என்னை வேறு கேட்பார்? ரொம்பக் கஷ்டப்பட்டு என் கோபத்தை அடக்கிக்கொண்டேன்.

எதிர் சீட்டுக் கனவானும் அவரது மனைவியும் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களது இரண்டு பெண்பிள்ளைகளும் எதிரெதிரே அமர்ந்து இடையில் துண்டு விரித்து சீட்டாடிக்கொண்டிருந்தார்கள். குடும்ப விளையாட்டு போலிருக்கிறது. வெறுமனே சாப்பாத்தி தின்று சீட்டாடி வாழ்க்கையை ஓட்டிவிடும் உத்தேசமோ என்னமோ. ஒருத்திக்குப் பதினாறு வயதிருக்கும். அடுத்தவளுக்கு இரண்டு அல்லது மூன்று குறைச்சல். ஏறியதில் இருந்து ஒரு முறைகூட அவர்கள் என்னை நேருக்கு நேர் பார்க்கவேயில்லை என்று தோன்றியது. அப்படியொன்றும் பேரழகன் இல்லை என்றாலும் பார்க்கவே முடியாத சொரூபமல்ல. பத்துப் பன்னிரண்டு மணி நேரங்களாகக் குத்துக்கல் மாதிரி எதிரே உட்கார்ந்திருப்பவனுக்கு ஒரு பார்வை தரக் கூடாதாமா! என்ன பிறப்போ, என்ன வளர்ப்போ.

0

இரண்டாம் நாள் பிற்பகல் கடந்து மாலை நேரத்தை நெருங்கிக்கொண்டிருந்தது ரயில். ஆந்திரத்தையெல்லாம் தாண்டியாகிவிட்டது. மூச்சைப் பிடித்துக்கொண்டு இன்றொரு இரவை ஒரே தாவாகத் தாவிவிட்டால் விடியும் நேரம் இறங்கிவிடலாம். அதுவரை இந்த அத்தர், மவுத் ஃப்ரெஷ்னர் மற்றும் இலவங்கப்பட்டை வாசனையைச் சகித்துக்கொண்டுதான் தீரவேண்டும். மதிய உணவோடு அந்த சப்பாத்திப் பாத்திரம் காலியாகிவிடும் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் என் நினைப்பை அந்தப் பெண்மணி தவிடுபொடியாக்கியிருந்தாள். நான் அதுவரை பார்த்திராத அவர்களது இன்னொரு பையில் – இது சீட்டுக்கு அடியில் உள்ளடங்கி ஒளித்து வைக்கப்பட்டிருந்தது – வேறொரு சப்பாத்தி மூட்டை இருந்தது. அதே காய்கறிக் கூட்டு. மாலை நேரச் சிறுபசிக்கும் அந்த அம்மாள் அதைத்தான் தன் மகள்களுக்குக் கொடுத்தாள். பாவம் பிள்ளைகள். வாழ்நாளில் எத்தனை லட்சம் சப்பாத்திகளை உண்டு தீர்க்க வேண்டுமென்று விதித்திருக்கிறதோ! அது கூடப் பிரச்னையில்லை. சப்பாத்திகளாலான வாழ்க்கையை இலவங்கப்பட்டை வாசனையுடனேயே வாழ்ந்து தீர்ப்பது எத்தனை பெரிய சாபம்!

எனக்காவது இந்த ஒரு பயணத்துடன் தண்டனை முடிந்துவிடும். அந்தப் பெண்பிள்ளைகளின் நிலைமையை யோசித்துப் பார்த்தேன். எப்படியாவது இவர்களிடம் ராமாமிருதத்தின் தரங்கிணியைக் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொல்லவேண்டும் என்று தோன்றியது. படிக்கக்கூட வேண்டாம். முகர்ந்தாலேகூடப் போதும். வயல்வெளிகளின் நடுவே பம்ப் செட்டில் குளிக்கும்போது நாசி நுகரும் வாசனை அந்தக் கதைக்குள் இருந்து வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். உடம்பெல்லாம் சில்லிட்டுப் போய்விடும். அபாரமான அனுபவம். ஒவ்வொரு முறை அந்தக் கதையை வாசித்ததும் எனக்கு ஓடிப் போய்க் குளிக்கத் தோன்றும். மணிக்கணக்கில் தண்ணீருக்கடியில் நின்றுகொண்டே இருப்பேன். முதல் தும்மல் வரும்வரை கணக்கு. அதன்பின் தலை துவட்டிவிட்டு வந்து சூடாக ஒரு காப்பி சாப்பிட்டால்தான் (சர்க்கரை கம்மி) கதை ஜீரணமாகும்.

பாழ். எல்லாமே பாழ். ஒரு பெரும் பயணம் இப்படி சர்வநாசமாகும் என்று நான் எண்ணியிருக்கவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தேன். பேசாதிருப்பதைத் தாண்டி வேறு வழி தோன்றவில்லை. எடுத்து வெளியே வைத்திருந்த என் புத்தகங்களையெல்லாம் மீண்டும் பெட்டிக்குள் போட்டு பூட்டினேன். பெட்டியை சீட்டுக்கடியில் காலால் எக்கித் தள்ளி என் கோபத்தை வெளிப்படுத்தினேன். ரொம்ப நேரம் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்.

வண்டி ஏதோ ஒரு ஸ்டேஷனில் நின்றது. சுமார் நாற்பது லட்சம் சொற்கள் ஜன்னல் கம்பிகளை உடைத்துக்கொண்டு உள்ளே பாயத் தொடங்கின. யாரோ படபடவென்று கதவைத் தட்டினார்கள். எனக்குப் புரியவில்லை. அது ரிசர்வ் செய்தவர்களுக்கான பெட்டி. இனிமேல் யாரும் ஏறி அமர இயலாது. இருப்பினும் வெளியே ஓயாமல் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தார்கள். ஜன்னல்களில் பலப்பல ஆண்கள் மற்றும் பெண்களின் முகங்கள் முட்டி மோதித் தோன்றி ஏதேதோ கூறின. அவசரமும் வெறியும் வேகமும் சொற்களில் தெறித்துச் சிதறின.

வேண்டாம், யாரும் திறக்காதீர்கள் என்று யாரோ கத்தினார்கள். பதிலுக்கு வெளியில் இருந்து எதிர்ப்புக் குரல் பலமாக வந்தது. அவர்கள் ரயிலின் பக்கவாட்டுத் தகரத்தை இடிக்கும் வேகத்தில் பெட்டியே நொறுங்கிவிடும் என்று தோன்றியது. ஒரு டிக்கெட் பரிசோதகர் எங்கள் இடத்தைக் கடந்து போகும்போது அரக்கோணத்துக்காரர், என்ன சார் இதெல்லாம்? என்று கேட்டார். அவர் பதில் சொல்லவில்லை. வருஷக்கணக்கில் அவர் தினசரி சந்திக்கும் காட்சிதான் போலிருக்கிறது. எனக்குத்தான் வெளியே ஏதோ கலவரம், கொலை, தீ வைப்பு நிகழ்ந்திருக்கிறது என்று தோன்றியதோ? பெட்டியில் வேறு யாரும் அலட்டிக்கொண்டதாகவே தெரியவில்லை. தொண்டை கிழியக் கத்திக்கொண்டிருந்த அந்தக் கூட்டத்தைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருத்தன் என்னைப் பார்த்து மிரட்டும் தொனியில் கத்தினான். வந்து கதவைத் திற. சீக்கிரம் திற.

கொஞ்சம் பயமாகக் கூட இருந்தது. அதற்குள் வண்டி கிளம்புவதற்கான சிக்னல் விழுந்துவிட்டது. தப்பித்தோம் என்று உள்ளே இருந்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். எதிர் சீட்டுக்காரரும் அவரது மனைவி மக்களும் மட்டும் ஒன்றுமே நடவாதது போல இருந்தார்கள். இரவுச் சப்பாத்திகளின் எண்ணிக்கை சற்றுக் குறைவாக இருப்பதாகவும், போதவில்லை என்றால் கொஞ்சம் பழங்கள் வாங்கிக்கொள்ளலாம் என்றும் அந்த அம்மாள் சொல்லிக்கொண்டிருந்தாள்.

வண்டி கிளம்பிவிட்டது. வெளியே கத்திக்கொண்டிருந்த கூட்டம் விடாமல் பக்கவாட்டில் இடித்தபடியே வண்டியோடு ஓடி வந்துகொண்டிருந்தது. அரக்கோணத்துக்காரர் தன் பெட்டியைத் திறந்து காற்றுத் தலையணையை எடுத்து ஊதத் தொடங்கினார். நான் வண்டியோடு கூட ஓடி வந்துகொண்டிருந்த கூட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

எந்தக் கணத்தில் அது நிகழ்ந்தது என்று தெரியவில்லை. கூட்டத்தில் ஒருவன் ஜன்னல் வழியே கைவிட்டு வண்டியின் கதவைத் திறக்க முயற்சி செய்து கொண்டிருந்திருக்கிறான். வண்டி கிளம்பியபோதும் அவன் தன் முயற்சியைக் கைவிடாமல் இன்னும் ஆவேசமாக முயன்றபடியே ஓடி வர, வண்டி வேகம் பிடிக்கத் தொடங்கிய நேரம் கதவும் திறந்துகொண்டது.

அவ்வளவுதான். ஒரு பத்திருபது பேராவது பாய்ந்து வந்து ஏறிவிட்டார்கள். காச்சுமூச்சென்று ஒரே சத்தம். கதவு திறக்காத களவாணிப் பசங்களா. இதென்ன உன் அப்பன் வீட்டு ரயிலா? இங்கே ஏறி அங்கே குதித்தார்கள். காலில் பட்ட பெட்டிகளையெல்லாம் எட்டி உதைத்தார்கள். இதோ பாருங்கள், நீங்கள் செய்வது சரியில்லை. இது ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட். நீங்கள் ஏறியது சட்டப்படி தவறு. யார் யாரோ பேசினார்கள். டிடிஆரைக் கூப்பிடுங்கள். யாரோ கத்தினார்கள்.

மனிதர் பெரிய கில்லாடியாக இருப்பார் என்று நினைக்கிறேன். வண்டி கிளம்பும்வரை காவல் தெய்வம் மாதிரி பெட்டிக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருந்துவிட்டு, தாழ்ப்பாளை உடைத்துக்கொண்டு அவர்கள் ஏறிய நேரம் அவர் நைசாகக் கம்பி நீட்டிவிட்டார். பாதகமில்லை. இதுவும் ஒரு அனுபவம். வெறுமனே சப்பாத்தி தின்பதைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் காட்டிலும் ரசமாகத்தான் இருக்கிறது.

வண்டி வேகமெடுக்கத் தொடங்கிவிட்டது. ஏறிய புதியவர்கள் நடைபாதையை அப்படியே ஆக்கிரமித்து உட்கார்ந்துவிட்டார்கள். எனக்குப் புரியாத மொழியில் அவர்களுடைய அறப்போராட்டம் வெற்றி கண்ட பரவசத்தைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். விஷயம் அதுவல்ல. எதிர் சீட்டுக் குடும்பத்தினருக்கும் அரக்கோணத்துக்காரருக்கும் இந்த அத்துமீறல் மிகுந்த கோபத்தையும் வெறுப்பையும் அளித்திருந்தது. இருவரும் வாய்க்கு வந்தபடியெல்லாம் அவர்களைத் திட்ட ஆரம்பித்தார்கள். காட்டு மிராண்டிகள். நாகரிகம் அறியாதவர்கள். வெறும் முரடர்கள். இவர்களையெல்லாம் கேட்பாரில்லை. டிடிஆர் கடங்காரர்களுக்கும் இவர்களுக்கும் எப்போதும் ரகசியக் கொடுக்கல் வாங்கல் தொடர்பு இருக்கும். வேண்டுமென்றேதான் வண்டி கிளம்பும் நேரம் இவர்களை அவர் உள்ளே அனுமதித்திருக்கிறார். வெளியில் இருந்தெல்லாம் கதவைத் திறக்கவே முடியாது. அவர்தான் திருட்டுத்தனமாகத் திறந்து விட்டிருக்க வேண்டும்.

ஏறிய புதியவர்கள் இதையெல்லாம் கண்டுகொள்ளவேயில்லை. அவர்கள் சிறு வியாபாரிகள் போலிருக்கிறது. ஏதோ கிராமத்தில் இருந்து சரக்கெடுத்துக்கொண்டு பக்கத்தில் எங்கோ டவுனுக்குப் போகிறவர்கள். ஏழெட்டுக் கூடைகளை அவர்கள் எடுத்து வந்திருந்தார்கள். ஓடும் ரயிலில் கூடைகளுடன் எப்படித்தான் ஏறினார்களோ. எல்லாமே அழுக்குக் கூடைகள். மேலே சிவப்பு நிறத்தில் துணி சுற்றி மூடியிருந்தது. ஒருத்தன் அதில் ஒரு கையை ஊன்றிக்கொண்டு கூடைக்கு அப்பால் பொச்சென்று ஒருதரம் துப்பினான். அரக்கோணத்துக்காரர் அலறிவிட்டார். என்ன இது சுத்த நான்சென்ஸாக இருக்கிறதே. ஏய், எழுந்திரு. இது என்ன உன் வீட்டு வாஷ் பேசினா? போய் கக்கூசில் துப்பிவிட்டு வா. கருமம். கருமம்.

போடா சர்தான் என்று அவன் ஒரு பார்வை பார்த்தான். கூட்டத்தில் ஒருவன் உரக்கக் குரல் எடுத்துப் பாட வேறு ஆரம்பித்துவிட்டான். முதல் நாள் மாலை ரயில் ஏறியதில் இருந்து ஒரு அசையாப்படத்தை பார்த்துக்கொண்டிருப்பது போலவே உணர்ந்த எனக்கு இது பெரிய ஆசுவாசமாக இருந்தது. என் இடத்தை விட்டு எழுந்து அரக்கோணத்துக்காரரை நகர்ந்து கொள்ளச் சொல்லிவிட்டு அவர் இடத்தில் நான் அமர்ந்துகொண்டேன். பாடிக்கொண்டிருந்தவனைப் பார்த்துப் புன்னகை செய்தேன். அவன் பாடியது ஏதோ ஒரு ஒரிய சினிமாப் பாட்டாயிருக்க வேண்டும். எனக்கு அந்தப் பாட்டு பிடிக்கவில்லை என்றாலும் அந்த உற்சாகம் பிடித்திருந்தது. ஒரு பார்வையாளன் அகப்பட்டுவிட்டான். அவனை ஏன் ரசிகனாகவும் ஆக்கிவிடக் கூடாது? அவன் மேலும் உற்சாகமாகப் பாடத் தொடங்கினான். இரண்டு பேர் பிரம்புக் கூடைகளில் தாளம் போடத் தொடங்கினார்கள்.

சப்பாத்திக் குடும்பத்தினர் பொறுமை இழக்கும் எல்லையைத் தொட்டிருந்தார்கள். நான்கு பேரின் முகமும் தணல் மாதிரி ஜொலித்துக்கொண்டிருந்தது. வடக்கத்திக்காரர்களுக்கு இந்த மாதிரி ரயில் பயண அனுபவம் ஏற்கெனவே இருந்திருக்கவேண்டும். இருப்பினும் தமிழ் நாட்டுக்கு வந்து திரும்புகிறார்கள் அல்லவா? அந்த பாதிப்போ என்னமோ. நான்கு பேரும் அந்த அத்துமீறல்வாதிகளைக் கண்டபடி திட்டிக்கொண்டே இருந்தார்கள். அவ்வப்போது அரக்கோணத்துக்காரரும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார். எனக்கு இதுவும் சுவாரசியமாக இருந்தது. என்றால் மேலும் சுவாரசியம் கூட்டலாமே?

என் பங்குக்கு நானும் அந்தப் பாட்டுக்குத் தாளம் போட ஆரம்பித்தேன். அவ்வளவுதான். ஒருவன் பாடிக்கொண்டிருந்தான் அல்லவா? அவனோடு இன்னும் இரண்டு பேர் சேர்ந்து பாடத் தொடங்கிவிட்டார்கள். இப்போது பிரம்புக் கூடைத் தாளம் மறைந்து அவர்கள் சீட்டுகளிலேயே தாளம் போட ஆரம்பித்தார்கள். சத்தம் பலமாக இருந்தது. ஆரவாரமாக இருந்தது. சட்டென்று ஒருவன் எழுந்து ஆட ஆரம்பித்தான். நான் எழுந்து நின்று கைதட்டத் தொடங்கினேன். உடனே அவனுக்குக் குதூகலம் பீறிட்டுவிட்டது. சரேலென்று என்னை இழுத்து, என் கைகளைப் பிடித்துக்கொண்டு ஆட்டம் போடத் தொடங்கிவிட்டான்.

என் பார்வை அந்த எதிர் சீட்டுக்காரரின் பதினாறு வயது மகளின்மீதுதான் முதலில் சென்றது. அவள் என்னைப் பார்க்கிறாளா? நிறுத்தி நிதானமாகக் கவனிக்க முடியவில்லை. ஏனென்றால் எதிர் சீட்டுக்காரர் என்னையேதான் பார்த்துக்கொண்டிருந்தார். இவ்வளவு நேரம் ஒரு வார்த்தையும் பேசாமல் உம்மணாமூஞ்சி மாதிரி உட்கார்ந்திருந்தவனுக்குள் இப்படி ஒரு கிறுக்குப்பயல் இருப்பான் என்று அவர் எண்ணியிருக்க மாட்டார். சுத்த நான்சென்ஸ்.

என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும். எனக்கு அந்தப் பாட்டும் ஆட்டமும் ரொம்பப் பிடித்துவிட்டது. என்னை அறிந்தவர்கள் யாருமில்லாத ரயில் பெட்டி. ஆடினால் என்ன? பாடினால் என்ன? பத்து நிமிஷம் அந்த கிராமத்தான் கையைப் பிடித்துக்கொண்டு ஆடித் தீர்த்திருப்பேன். மூச்சு வாங்க உட்கார்ந்தபோது அந்தக் கூட்டமே என்னைப் பார்த்து சினேகமாகச் சிரித்தது. ஒருத்தன் சட்டென்று சிவப்புத் துணி போட்டுக் கட்டியிருந்த தன் பிரம்புக் கூடையின் கட்டைப் பிரித்தான்.

குப்பென்று புகையிலை வாசனை. வயல் வெளியில் இருந்து பறித்துக் காயவைத்து எடுத்து வந்திருக்கிறார்கள். எங்கோ கொண்டு விற்கப் போகிறார்கள் போலிருக்கிறது. நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஒரு புகையிலைக் கட்டையை அதற்குமுன் நான் கண்டதில்லை. நீள நீளமாக பாம்புத்தோல் மாதிரி இருந்தது. கறுத்தும் கனத்தும் சுருண்டும் கிடந்த புகையிலைக் கட்டைகள். அவன் அதிலொன்றை உருவி என்னிடம் நீட்டினான். கடித்துத் தின்னச் சொல்கிறானா, பொடித்து மெல்லச் சொல்கிறானா என்று புரியவில்லை. இருப்பினும் அதை வாங்கிக்கொண்டேன். மூக்கருகே வைத்து முகர்ந்து பார்த்தது பேரனுபவமாக இருந்தது. ஒரு விள்ளல் கிள்ளியெடுத்து உள்ளங்கையில் வைத்துக் கசக்கி வாயில் போட்டுக்கொண்டேன். கசக்கிய உள்ளங்கையை மீண்டும் முகர்ந்து பார்த்தேன். அவனைப் பார்த்துச் சிரித்தேன்.

அப்படியே காம்யுவின் வாசனை .

O

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி