ஒரு முத்தம்

இது அவனுடைய கதை. அவன் பேரைச் சொல்லி எழுதத்தான் திட்டம் போட்டேன். இரண்டாவது பத்தியை எட்டும்போதே வேண்டாமென்று தோன்றிவிட்டது. காலம் எழுத்தாளனுக்குச் சாதகமாக இல்லை. என்றைக்கும் போலத்தான். குறைந்தபட்சம் பெண்டாட்டி பிள்ளை குட்டியுடன் அவன் சௌக்கியமாக இருக்கவேணுமென்று நினைப்பதில் என்ன தவறு? அவன் என் நண்பன். பார்த்து இருபது வருஷங்களுக்குமேல் ஆகிவிட்டதென்ற போதிலும். தொடர்பே இல்லை என்ற போதிலும். நான் எழுதுகிற மொழி அவனுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை என்றாலுமேகூட. பாதகமில்லை. அவன் வேறு நான் வேறில்லை. ஆன்மாவின் அடியாழத்தில் யாருமேகூட யார் யாரோ இல்லையல்லவா!

கல்கத்தாவில் அப்போது மழை பெய்துகொண்டிருந்தது. சாலையெல்லாம் வாணலியில் வதங்கும் கத்திரிக்காய் போலாகிவிட்டிருந்தது. குப்பை எது மண் எது, குழி எது, தார்ச்சாலை எது என்று தெரியாமல்தான் கால் வைக்க வேண்டும். ரொம்பக் கஷ்டம். ஆனால் ஒரு பெரும் மக்கள் கூட்டம் இதைப் பொருட்படுத்தவே செய்யாமல் எங்கோ போர்க்களம் போய்க்கொண்டிருப்பது போல நகர்ந்துகொண்டே இருந்தது. எத்தனை ஆயிரம் மக்கள். இந்த நகரத்தின் சந்தடி மழை நாளில் கூட அடங்குவதில்லை. காரோட்டிகளும் இழுரிக்‌ஷாக்காரர்களும் பாரபட்சமில்லாமல் நடந்துபோகிறவர்கள் மீது சேறு வாரிப் பூசியபடியே போனார்கள். யாரும் திட்டவில்லை. சேறடிப்பது வாகனங்களின் பிறப்புரிமை போலிருக்கிறது.

‘நாம் ஒரு டாக்சி பிடிப்போமா?’ என்று அவனிடம் கேட்டேன்.

‘இல்லை. நடக்கலாம். எனக்கு ஒன்றும் பிரச்னையில்லை’ என்று அவன் பதில் சொன்னான். இதற்குமேல் நனையவும் ஒன்றுமில்லை, நனையாமல் காக்கவும் ஒன்றுமில்லை. இது ஒரு அனுபவம். மொழி தெரியாத ஊரில் கிடைத்த புதிய நண்பன். அவனுக்கும் வங்காளம் தெரியாதுதான். அவன் பாரதத்தின் மேற்கு மூலையில் இருந்து வந்திருந்தான். நான் தெற்கு மூலை. அவன் கவிஞன். நான் கதை எழுதுபவன். அவனுக்கு அப்போதே திருமணம் ஆகி, ஒரு பெண் குழந்தை இருந்தது. எனக்குப் பெண் பார்த்து நிச்சயம் செய்திருந்தார்கள். அவன் ஒரு கம்யூனிஸ்டு. நானோ கம்யூனிசமும் காலராவும் ஒன்றென நம்புபவன். எப்படிப் பார்த்தாலும் ஒட்டாத ஜந்துக்கள். ஆனாலும் அந்த நகரத்தில் நாங்கள் அன்று காலை சுமார் ஏழே முக்கால் மணியளவில் ரயில்வே ஸ்டேஷனில் வைத்து நண்பர்கள் ஆகியிருந்தோம்.

விருது விழா அழைப்பிதழில் எங்கள் புகைப்படங்கள் பிரசுரமாகியிருந்தன. பெரிய கௌரவமான விருது. தேசத்தின் நான்கு மூலைகளில் இருந்தும் நான்கு பேரைத் தேர்ந்தெடுத்துக் கௌரவிக்க அழைத்திருந்தார்கள். எழுதுபவனுக்கு வேறென்ன வேண்டும்? இது ஒரு கிளுகிளுப்பு. மேடைக் கிளுகிளுப்பு. பரம சுகமாக இருக்கும். ஒரே ஒரு கணமாயினும் உலகமே நமக்காகக் கைதட்டுவது போலத் தோன்றும் சுகம் எல்லோருக்கும் வாய்க்காது. எழுத்தாளன் கொம்பு முளைத்தவந்தான். சந்தேகமில்லை. ஆனால் சொல்லிக்கொள்ளக் கூடாது. பேங்க் லாக்கரில் வைர நெக்லஸ் இருக்கிறது என்று அவ்வப்போது பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் போகிற போக்கில் வெறும் தகவலாக உதிர்த்துச் செல்வது மாதிரிதான் இதையும் பேணவேண்டும். இதெல்லாம் ஒரு கலை. ஒரு சாகசம்.

அவன் கையில் விழா அழைப்பிதழ் இருந்தது. இல்லாவிட்டால் ஸ்டேஷனில் இருந்து வெளியே போக விடமாட்டார்களோ? நான் சென்ற ரயில் நின்று, இறங்கி நடக்கத் தொடங்கியபோது என்னை அழைத்துச் செல்ல வந்திருந்த அமைப்பாளர்களுடன் அவனும் நின்றிருந்தான். பத்து நிமிஷம் முன்னால் வந்த ரயிலில்தான் அவன் வந்திருந்தான். வரவேற்பெல்லாம் கனஜோராக இருந்தது. அமைப்பாளர்களை அறிமுகப்படுத்தியதும் அவனையும் எனக்கு அறிமுகம் செய்துவைத்தார்கள். பெரிய கவிஞன். ஆறு புத்தகங்கள் வந்திருக்கின்றன. இதற்குள் மூன்று வெளி தேசத்து மொழிகளில் அவனது கவிதைகள் வெளியாகியிருக்கின்றன.

நான் ஹலோ என்று கை நீட்டினேன். அவன் கையில் இருந்த அழைப்பிதழை அருகே இருந்த அமைப்பாளரிடம் கொடுத்தான். தோளில் இருந்த பெரிய மூட்டையை இறக்கிக் கீழே வைத்தான். இயேசுநாதர் மாதிரி இரண்டு கைகளையும் உயர்த்தி பிறகு என்னை நோக்கி நீட்டினான். இரண்டே அடிகள். பாய்ந்து வந்து அப்படியே ஆரத் தழுவிக்கொண்டான். எனக்குக் கொஞ்சம் வெட்கமாகப் போய்விட்டது. என் ஹலோவை அவன் செருப்பால் அடித்துவிட்டான். சிநேகபாவமென்றால் இதுவல்லவா. முகம் தெரிவதோ, மொழி தெரிவதோ, முன் தெரிவதோ அத்தனை முக்கியமா? எழுத்து என்கிற ஒரு கண்ணியில் இரண்டு பேரும் இணைந்திருக்கிறோம். அதற்குமேல் வேறென்ன வேண்டும்?

அன்று காலையே சொதசொதவென்று மழை பிடித்துக்கொண்டிருந்தது. எஸ்பிளனேடு பகுதியில் எங்களுக்கு ஒரு ஹோட்டலில் அறை போட்டிருந்தார்கள். போக்குவரத்து நெரிசலில் சிக்கி எங்கள் டாக்சி அந்த ஹோட்டலுக்குப் போய்ச் சேரும்போது ஒன்பது மணிக்குமேல் ஆகிவிட்டது.

‘நீங்கள் குளித்து டிபன் சாப்பிட்டு ஓய்வெடுங்கள். மாலை விழாவுக்கு அழைத்துச் செல்ல ஐந்து மணிக்கு வண்டி வந்துவிடும்’ என்று சொல்லிவிட்டு விழா அமைப்பாளர்கள் போய்விட்டார்கள். கவர்னரும் யாரோ ஒரு மத்திய அமைச்சரும் விழாவுக்கு வருவதாகச் சொன்னார்கள். கவர்னருக்குக் கவிதை கதையெல்லாம் ஒத்துக்கொள்ளுமா என்று அவன் கேட்டான். உரக்கப் பேசாதே, அவர் பங்குக்கு ஒரு தொகுப்பை எடுத்து நீட்டிவிட்டால் நீயும் நானும் காலி என்று அவன் காதோடு சொன்னேன். அவன் சிரித்தான்.

அன்று மதியம் வரை நாங்கள் குளிக்கக்கூட இல்லை. ஒப்புக்கு நாலு பூரி சாப்பிட்டுவிட்டு, அரை மணிக்கொருதரம் தேநீர் குடித்தபடி ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தோம். மழையில் நனைந்தபடியே கொஞ்சம் வெளியே சுற்றினோம். என் ஆங்கிலத்தைவிட அவன் பேசிய ஆங்கிலம் சிறிது சுத்தமாக இருப்பது போலப் பட்டது. இந்த உணர்வு ஒரு பெரும் இம்சை. அசந்தால் தாழ்வு மனப்பான்மையாக உருப்பெற்றுவிடும். அப்புறம் இலக்கியம் பேச முடியாது. எனவே நான் குற்றம் கண்டுபிடிக்க முடியாதபடி ரொம்ப வேகவேகமாகப் பேச ஆரம்பித்தேன்.

நீ ஏன் கவிதை எழுதுவதில்லை என்று அவன் என்னைக் கேட்டான். யோசித்தேன். இதுவும் தாழ்வு மனப்பான்மைதான். எனக்கு அத்தனை உயரம் சாத்தியமில்லை என்று பதில் சொன்னேன். அவனுக்கு ரொம்ப ஆச்சரியமாகப் போய்விட்டது. ‘நீ அப்படியா சொல்கிறாய்?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டான்.

‘ஏன் இத்தனை சந்தேகம்? என் மொழியில் கவிதையின் உச்சம் தொட்ட படைப்பாளிகள் பலர் இருக்கிறார்கள். உலகத்தரம் என்பதை நியாயமாக அவர்களை வைத்துத் தீர்மானிக்க வேண்டும். துரதிருஷ்டம், தமிழ் கடல் தாண்டாது’ என்று பதில் சொன்னேன். ரொம்ப வருத்தப்பட்டான். அவனுக்கு முப்பது வயதிலேயே ஆங்கில மொழிபெயர்ப்பு சாத்தியமாகிவிட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் இருந்து பிரெஞ்சு, இத்தாலி, ஸ்பானிஷ் என்று ஏழெட்டு வருடங்களில் மூன்று மொழி மாற்றங்கள் சித்தித்திருக்கின்றன.

‘ஒரு இத்தாலியப் பத்திரிகையில் என் கவிதையை வெளியிட்டு இந்திய மதிப்புக்கு பத்தாயிரம் ரூபாய் சன்மானம் அனுப்பியிருந்தார்கள்!’ என்றான். அடேயப்பா. பத்தாயிரம் ரூபாய்! நான் உடனே கேட்டேன். அந்தப் பணத்தை என்ன செய்தாய்?

அவன் சில வினாடிகள் யோசித்தான். பிறகு, ‘நாலு நாள் கோவாவுக்குப் போனேன். இரண்டு பெண்களை உடன் அழைத்துப் போயிருந்தேன். குடித்து, கொண்டாடித் தீர்த்தேன். உண்மையில் நான் அந்தக் கவிதையை எழுதியபோதுகூட அத்தனை பெரிய கவிஞனாக உணரவில்லை. கோவாவில்தான் அதை முழுதாக உணர்ந்தேன்’ என்று சொன்னான்.

எனக்கு உள்ளங்காலெல்லாம் சூடாகிவிட்டது. பேச்சு மூச்சில்லை. சொன்னேனே, கிளுகிளுப்பு. இது மேடைக் கிளுகிளுப்பைக் காட்டிலும் பெரிது. எப்படி? எப்படி? அந்த அனுபவத்தைச் சொல்லு என்று அவனை மேலும் தூண்டினேன். அவன் சிரித்தான். ‘இரு. நீ யாரையாவது காதலித்திருக்கிறாயா?’ என்று கேட்டான்.

‘அட எனக்கந்தக் கொடுப்பினை இல்லையப்பா. நீ விஷயத்தைச் சொல்லு.’

‘நான் சுமார் முன்னூறு பெண்களைக் காதலித்திருக்கிறேன். யாரை வட்டம் போடுகிறேனோ அவள் தன்னால் வந்து விழுந்துவிடுவாள். இது என் ராசி’ என்றான்.

ஆள் பார்க்கக் கொஞ்சம் ஷோக்காகத்தான் இருந்தான். முன் நெற்றியில் லேசாக வழுக்கை விழத் தொடங்கியிருந்தாலும் நீளமான முடியால் அதை மறைத்திருந்தான். பேப்பரில் கப்பல் செய்தால் நடுவில் ஒரு முக்கோண நீட்டல் வருமே. அப்படி இருந்தது அவன் மூக்கு. கொஞ்சம் பூனைக் கண்ணோ? கன்னம் ஒட்டித்தான் இருந்தது. ஆனாலும் ஒரு கவர்ச்சி இருந்தது. கவிஞன் என்பதால் வந்த கவர்ச்சியாயிருக்கலாம்.

‘ஆனால் நான் பழகும் பெண்களிடம் கவிதை பற்றிப் பேசுவதேயில்லை’ என்றான். ரொம்ப கெட்டிக்காரன். பெண்டாட்டியிடம் கம்யூனிசம் பேசமாட்டான். கவிதையில் பெண்டாட்டி பிள்ளையைப் பற்றிக் குறிப்பிட மாட்டான். உத்தியோகம் பார்க்கும் இடத்தில் தான் ஒரு கவிஞன் என்பதையேகூடக் காட்டிக்கொள்ள மாட்டான்.

அவனே சொன்னதுதான் இதெல்லாம். ‘ரொம்ப சின்ன வாழ்க்கை நமக்கு. பைபிள் காலத்து மக்கள் மாதிரி தொள்ளாயிரம் வருஷம், எண்ணூறு வருஷமெல்லாமா வாய்ச்சிருக்கு? இருக்கறதுக்குள்ள வாழ்ந்துடணும்.’

நான் யோசிக்க ஆரம்பித்தேன். வாழ்வது என்பதுதான் என்ன? பெண்பிள்ளை சகவாசம் இல்லை என்றால் வாழ்க்கையே அர்த்தமற்றதுதானோ?

‘அப்படியில்லே. ஒவ்வொரு பெண்ணும் ஒரு தொகுப்பு. ஒவ்வொரு தொகுப்பும் ஒரு வாழ்க்கை. நீ கொஞ்சம் கவிஞனாகணும். அப்போ புரியும். வெறும கதை எழுத பொண்டாட்டி போதும். கவிதைக்கு சிநேகிதிகள் அவசியம்’ என்றான்.

சரிதான், ஒருதரம் கவிஞனாகிப் பார்த்தால் போகிறது.

உடனே அவன் பரவசமுடன் எழுந்துகொண்டான். ‘இன்னிக்கே?’ என்று கேட்டான். டேய், இது அசலூர். நாம் விருது பெற வந்திருக்கிறோம். இங்கே என்னவாவது விவகாரத்தில் மாட்டிக்கொண்டு அசிங்கப்பட நான் தயாரில்லை என்று கறாராகச் சொல்லிப் பார்த்தேன். அவன் கேட்பதாயில்லை.

‘நீ வா என்னோடு’ என்று கையைப் பிடித்துத் தரதரவென்று அறையைவிட்டு வெளியே அழைத்து வந்தான். அந்த நீளமான வராண்டாவில் அப்போது நாங்கள் இரண்டு பேர் மட்டுமே நின்றுகொண்டிருந்தோம். வெளியே மழை விட்டபாடில்லை. இப்படி மழை பெய்தால் விழாவுக்குக் கைதட்ட யார் வருவார்கள் என்று எனக்குக் கவலையாக இருந்தது. மறுநாள் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் எல்லாம் எங்கள் பேட்டிகளும் போட்டோக்களும் வரப் போகின்றன. உருப்படாமல் போகப் போகிறேன் என்று தீர்மானமாக நம்பிக்கொண்டிருந்த என் குடும்பத்துக்கு இந்த விருதின் மூலம் கொஞ்சம் நம்பிக்கையளிக்க நான் போட்டிருந்த திட்டத்தையெல்லாம் அவனுக்கு எடுத்துச் சொல்ல நினைத்தேன்.

அவனா கேட்பவன்? ‘நண்பா, ஒன்று இரண்டு மூன்று என்று ஐந்நூறு வரை எண்ணு. எண்ணிக்கொண்டே இரு, இதோ வருகிறேன்’ என்று எனக்குக் கட்டளை இட்டுவிட்டு விறுவிறுவென்று படியிறங்கிப் போய்விட்டான்.

எனக்கு பயம் பிடித்துக்கொண்டது. ஏதாவது இசைகேடாக ஆகிவிட்டால் என்ன செய்வது? ஆனால் அவன் எதற்கும் துணிந்தவன் போலிருக்கிறது. எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். என்னை சாட்சியாக வைத்துக்கொண்டு எதற்கு இப்படியெல்லாம் திருவிளையாடல் நடத்த நினைக்கிறான்? மொழியே புரியாவிட்டாலும் அவனைக் கவிஞனாக ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தவித மனச்சிக்கலும் இல்லை. ஆனால் களியாட்டம்தான் கவிஞனின் கல்யாணகுணம் என்று நிறுவ நானா அகப்பட்டேன்?

கொஞ்சம் படபடப்பாக இருந்தது. சத்தமில்லாமல் அறையைக் காலி செய்துவிட்டு எங்காவது ஓடிவிடலாமா என்று தோன்றியது. அவன் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. சீக்கிரமே அறைக்குத் திரும்பிவிட்டான். நல்லவேளை தனியாக வந்தானே என்று கொஞ்சம் ஆசுவாசப்பட்டேன். ம்ஹும். இப்போது அவன் கையில் ஒரு பை இருந்தது. உள்ளிருந்து நான்கு பீர் பாட்டில்களை எடுத்து வெளியே வைத்தான்.

‘குடிப்பாய் அல்லவா?’

நான் ஒன்றும் சொல்லவில்லை. அவனே ஒன்றைப் பல்லால் கடித்துத் திறந்து என் கையில் கொடுத்தான். ‘நீ ஒரு கவிஞனே இல்லை’ என்று சொல்லிவிட்டு பாட்டிலை நகர்த்தி வைத்தேன்.

‘ஏன்?’

வெளியே மழை பிய்த்துக்கொண்டு ஊற்றுகிறது. இந்த நேரத்தில் ஜில்லென்று பீர் வாங்கி வருவது என்ன ரசனை?’

அவன் சிரித்தான். நடு ராத்திரி ஐஸ் க்ரீம் சாப்பிடும் ரசனைதான் என்று சொன்னான்.

‘இதோ பார், மாலை விழா இருக்கிறது. அமைப்பாளர்கள் ஐந்து மணி என்று சொன்னாலும் கவர்னர் வருவதால் இன்னும் சீக்கிரமே நம்மை அழைத்துப் போக வந்தாலும் வந்துவிடுவார்கள். இதெல்லாம் ரொம்பத் தப்பு.’

அவன் கவனித்ததாகவே தெரியவில்லை. யாரோ ரெடி, ஸ்டெடி, ஒன் டூ த்ரீ, கோ என்று சொன்னது மாதிரி ஒரு பாட்டிலைத் திறந்து ஒரே மூச்சில் கடகடவென்று குடித்து முடித்துவிட்டு பொத்தென்று கீழே வைத்து ஒரு தரம் மூச்சு விட்டான். சிரித்தான். எனக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது.

மீண்டும் ரெடி ஸ்டெடி ஒன் டூ த்ரீ. அடுத்த பாட்டில். அதுவும் ஒரே மூச்சு.

‘டேய் பாவி, போதும்!’ என்று கத்தினேன்.

‘அவ்ளோதான்’ என்றான்.

‘அப்ப எதுக்கு நாலு பாட்டில் வாங்கினே? எனக்கு இதெல்லாம் வேணாம்.’

அவன் ஒரு கணம் என்னை உற்றுப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினான். ‘அவ இப்ப வருவா. அவளுக்கு வேண்டியிருக்கும்.’

தூக்கிவாரிப் போட்டுவிட்டது எனக்கு. சரியான கிறுக்கனாயிருப்பான் போலிருக்கிறதே. எனக்கு பயமும் பதற்றமும் பிடித்துக்கொண்டது. சட்டென்று ரொம்பத் தீவிரமாகிவிட்டேனோ? வெளியே மழை மட்டும் இல்லையென்றால் கண்டிப்பாக வெளியேறியிருப்பேன். இதென்ன ரோதனை!

அதற்குப் பின் அவனோடு பேசவில்லை. ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்துகொண்டேன். மேசை மீது அவனது கவிதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் இருந்தது. பார்க்கக் கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. அவன் யாரை வரச் சொல்லிவிட்டு வந்திருக்கிறான் என்று தெரியவில்லை. ஆனால் அறைக்குள் இன்னொரு நபர் யார் நுழைந்தாலும் நான் கண்ணை மூடிக்கொண்டு வெளியேறிவிடுவது என்று முடிவு செய்தேன்.

‘ஆனால் நண்பா, அதுவரை நீ என் புத்தகத்தைப் புரட்டலாமே? என் கவிதைகள் உன்னை ஏமாற்றாது’ என்று சொன்னான். சட்டென்று எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. காலை ரயில் நிலையத்தில் அவன் ஆனந்தமயமாக என்னைக் கட்டித் தழுவி வரவேற்ற காட்சி நினைவில் வந்தது. சரி, அதற்காகவாவது படிக்கலாம் என்று எடுத்துப் பிரித்தேன்.

அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. இரு, ஓடிவிடாதே என்று சொல்லிவிட்டு அவன் போய்க் கதவைத் திறந்தான். அந்தப் பெண் உள்ளே நுழைந்ததும் உடனே கதவை அடைத்துத் தாழ்ப்பாள் போட்டான்.

இதற்குமேல் நான் எங்கே கவிதை படிப்பது? நடப்பதை நம்பவும் முடியாமல் நிராகரிக்கவும் முடியாமல் அச்சமும் கவலையுமாக இருவரையும் மாறி மாறிப் பார்த்தேன்.

‘உட்கார்’ என்று அவன் சொன்னான். அந்தப் பெண் கட்டில்மீது உட்கார்ந்தாள். குடிக்கிறாயா என்று கேட்டுவிட்டு ஒரு பாட்டிலை எடுத்தான். அவள் வேண்டாம் என்று சொன்னாள். அவன் வற்புறுத்தவில்லை. தானே கொஞ்சம் குடித்துவிட்டு பாட்டிலை வைத்தான். ‘இவன் என் நண்பன். பெரிய எழுத்தாளன்’ என்று என்னை வேறு அறிமுகம் செய்தான். நானாவது அவனது கவிதைத் தொகுப்பைத் தொட்டுப் பார்த்துவிட்டேன். அவனுக்கு என் கதைகளில் ஒன்றைக்கூடத் தெரியாது. புத்தகத் தலைப்புகூடத் தெரியாது. ஆனாலும் பெரிய எழுத்தாளன் என்று சொல்கிறான்! என்ன ஒரு மனசு.

அவள் எனக்குப் பணிவுடன் வணக்கம் சொன்னாள். நான் பதிலுக்குச் சொல்லவில்லை என்று ஞாபகம். மணி பார்த்தேன். மதியம் இரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. சாப்பிட வேண்டும் என்று அவனுக்கு ஞாபகப்படுத்தினேன். ‘சாப்பிடேன்?’ என்று சிரித்தான். பயங்கர எரிச்சலாக இருந்தது. ஒரு முடிவுடன் வேகமாக எழுந்து போய்க் கட்டிலில் இருந்து ஒரு தலையணையை எடுத்துத் தரையில் போட்டேன். ஒரு பெட்ஷீட்டை உருவி விரித்தேன். சுவரைப் பார்க்கத் திரும்பிப் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டேன். மாலை விழா முடிந்து இரவு ரயிலேறிவிட்டால் இவன் யாரோ நான் யாரோ. நெஞ்சார ஒருமுறை கட்டித் தழுவியதற்காக இந்தக் கருமாந்திரங்களையெல்லாம் என்னால் சகித்துக்கொள்ள இயலாது என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

அவன் நாலைந்து முறை என்னைக் கூப்பிட்டான். நான் வம்படியாகக் கண்ணைத் திறக்கவேயில்லை. அப்படியே தூங்கியும் இருக்கிறேன். பொதுவாகப் பசி இருந்தால் தூக்கம் வராது. ஆனால் பயம் இருந்தால் வரும் போலிருக்கிறது. எத்தனை நேரம் தூங்கினேன் என்று தெரியவில்லை. கண் விழித்துப் பார்த்தபோது அவன் கட்டில்மீது தனியே அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தான். அவளைக் காணோம். கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. எழுந்து உட்கார்ந்து அதிகாரமாக, ‘ஒரு காப்பி சொல்லு’ என்றேன்.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. என்ன ஆச்சரியம்? ஏற்கெனவே அவன் காப்பிக்குச் சொல்லியிருக்கிறான். நான் நன்றியுடன் பார்த்தேன். ‘எனக்குத் தூங்கி எழுந்ததும் காப்பி வேண்டும். அதுவும் உடனடியாக.’

‘குடி’ என்றான்.

குடித்து முடித்துவிட்டு, ‘சொல்லு. அவ யாரு? எப்ப போனா?’ என்றேன். நான் எப்பேர்ப்பட்ட எழுத்தாளன், எத்தனை சொற்சிக்கனம் மிக்கவன் என்பது அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

எழுந்து வந்து என் அருகே அமர்ந்தான். ‘ஒண்ணும் நடக்கலே. சும்மா ஒரு முத்தம் மட்டும் கொடுத்தேன். அவ்ளோதான். அனுப்பிட்டேன்’ என்றான்.

என்னால் நம்பமுடியவில்லை. நிஜமாவா நிஜமாவா என்று ஏழெட்டு தரம் கேட்டேன்.

‘ புது ஊர். புது இடம். எதிர்பாராத மழை. நல்லாருக்கும்னு நெனச்சது வாஸ்தவம்தான். ஆனா ஒரு முத்தம் குடுத்ததுமே ஒரு கவிதை வந்துடுச்சி. அதுக்குமேல அவ இடைஞ்சல். அதான் அனுப்பிட்டேன்’ என்றான்.

O

Share

1 comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி