கதைத் திருட்டு அல்லது அத்தியாயம் மூன்று
பிரபல எழுத்தாளராகப் பின்னாளில் அறியப்படவிருக்கும் ராமு அல்லது சுரேஷின் சமீபத்திய சிறுகதை (ஒருவேளை இது நாவலாக நீளக்கூடும். தலைப்பு கபீஷின் வால்.) இவ்வாறு ஆரம்பமாகிறது:
பூமி அதிர்ந்தது.
கடலில் அலைகள் மதில்கள்போல் எழுந்து, மனிதனின் ஆசைக்கோட்டை போல் இடிந்து விழுந்தன. எங்களை வாரி வாயில் போட்டுக்கொள்ள வேண்டுவது போல் துரத்திக்கொண்டு ஓடிவந்தன. ஏமாற்றமடைந்த அரக்கனின் ஆத்திரம்போல, அவைகளின் கோஷம் காதைச் செவிடு படுத்திற்று. ஒரு அலை அவளைக் கீழே தள்ளிவிட்டது. வெறிக் கொண்டவள் போல் சிரித்தாள். ஜலத்தின் சிலுசிலுப்பு சதையுள் ஏறுகையில் நெருப்பைப் போல் சுறீலெனப் பொரிந்தது. புயலில் எங்கள் அங்கங்களே பிய்ந்துவிடும் போலிருந்தன.
திடீரென்று இடியோடு இடி மோதி ஒரு மின்னல் வானத்தில் வயிற்றைக் கிழித்தது. இன்னமும் என் கண்முன் நிற்கிறது அம்மின்னல். மறைய மனமில்லாமல் தயங்கிய வெளிச்சத்தில் நான் கண்ட காட்சி! குழுமிய கருமேகங்களும், காற்றில் திரைபோல் எழும்பி, குளவியாக கொட்டும் மணலும், கோபக் கண்போல் சமுத்திரத்தின் சிவப்பும், அலைகளில் சுழிப்பும், அடிபட்ட நாய்போல் காற்றின் ஊளையும், பிணத்தண்டை பெண்கள் போல் ஆடி ஆடி அலைந்து அலைந்து மரங்கள் அழும் கோரமும்…
இத்தனைக்கும் மூலகாரணிபோல் அவள் நிமிர்ந்து நின்றாள். அவள் ஆடை உடலிலிருந்து பிய்ந்துவிடும் போல் பின்புறம் விசிறி விரிந்து, காற்றில் தோகை போல் விறைத்து நின்று படபடத்தது. பிதுங்கிய சிற்பமென அங்க அவயவங்கள் நிமிர்ந்துகொண்டு நின்றன. மின்னலின் வழி, விசும்பு நின்றழிந்த விண்ணுலகத்தவள் போலிருந்தாள். ஜலமேறி அடையாய்க் கனத்த கூந்தல், காற்றின் மிகுதியில் நக்ஷத்திர வால்போல் சீறிற்று. இவ்வியற்கையின் இயக்கத்தில் அவளும் சேர்ந்து இழைந்து புயலுடன் நின்றாள்.
ராமு அல்லது சுரேஷுக்கு மேற்படி பத்தியை எழுதி முடிக்கும்போது கைவிரல்கள் நடுங்கின. உடனே ஓடிச் சென்று ஒரு சிகரெட் பிடித்தால் நன்றாயிருக்கும் என்று தோன்றியது. ஆனால் எழுந்து ஓடினால் எழுத்துவேகம் எதிர்மறையாகிவிடும். இதற்குத்தான் எழுதும்போது அருகில் கணக்கிலடங்கா சிகரெட்டுகளையும் தீக்குச்சிகளையும் வைத்துக்கொள்ளவேண்டும் என்பது. மனத்துக்குள் உதயமாகும் உணர்வுகளையும் காட்சிகளையும் புகைபோட்டுப் பழுக்கவைத்த சொற்களாக வார்த்தெடுத்து பேப்பரில் இறக்குவது ஒரு வேள்வி. ஏனோ ராமு அல்லது சுரேஷுக்கு அது வாய்க்கவில்லை.
அவனது தொழில் வில்லனான காபிரியேல் கார்சியாவின் பெண்டாட்டியானவள் புருஷன் எழுதுவதற்காகத் தனது ரிஸ்ட் வாட்சை அடமானம் வைத்து சிகரெட் பாக்கெட்டுகளை வாங்கி வந்து அடுக்கியிருக்கிறாளாம். பரதேசி ஒரு கடிதம் முழுதும் இதனைச் சொல்லிச் சொல்லிப் புளகாங்கிதம் அடைந்திருக்கிறான். என்ன மானங்கெட்ட பிழைப்பு இது? அடியேய், அவன் கேன்சர் வந்து செத்துத் தொலைக்க வேண்டும் என்பதுதான் உன் விருப்பமா? இனிமேல் செய்யாதே. உன் புருஷன் உலக இலக்கியத்துக்கு இல்லாவிட்டாலும் உன் நெற்றிப் பொட்டுக்காவது அவசியம் தேவைப்படுவான் என்று மார்க்குவேசின் பெண்டாட்டிக்கு ஒரு ரகசியக் கடிதம் அனுப்பிவிட்டு, கதவை மூடிக்கொண்டு தனக்கு ஏன் இப்படியொரு பெண்டாட்டி வாய்க்கவில்லை என்பதை எண்ணி கேவிக் கேவி அழத் தொடங்கினான்.
ராமு அல்லது சுரேஷின் பெண்டாட்டி வேறு எப்படியாக வாய்த்தாள் என்று கேட்பீர்களானால் வாசகர்களே, அவன் இன்னும் திருமணமாகாமல்தான் இருக்கிறான் என்பதை இப்போதே தெரிவித்துவிடுகிறேன். ஓர் எழுத்தாளனாகத் தன்னைக் குறைந்தபட்சம் நான்கு தீபாவளி மலர்களில் பதிவு செய்யாமல் திருமணம் செய்துகொள்வதில்லை என்று ராமு அல்லது சுரேஷ் தீர்மானம் செய்திருந்தான். அவனது இலக்கிய முயற்சி அவன் பத்தாங்கிளாசில் கோட்டடித்ததற்கு மறுநாள் ஆரம்பித்ததை நேயர்கள் அறிவார்கள். அன்று தொடங்கி அவனும் பக்கம் பக்கமாக எழுதித் தீர்த்துக்கொண்டுதான் இருக்கிறான். எழுதியதைப் படித்துப் பார்க்கும்போதெல்லாம் காவியமாகத்தான் தெரிகிறது. என்ன காத்திரம், எத்தனை மணிநேரம் அமர்ந்து எழுதி அடக்கி வைத்த மூத்திரம், நெஞ்சகத்தில் மையம் கொண்ட நிர்மூடச் சமூக ஆத்திரம்!
தோல்வியின் சகல ருசிகளையும் அவன் கடந்த பல சில ஆண்டுகளில் ஆண்டு அனுபவித்திருந்தான். சாதனையாளர்களுக்குத் தோல்வி சகஜம்தான் என்பதை ராமு அல்லது சுரேஷ் அறியாதவனல்லன். ஆனால் ஒரு மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்த சனியன்கள் வந்து தொலைத்தால்தான் என்ன?
இதனை ராமு அல்லது சுரேஷ் தனது அம்மாவிடம் சொன்னபோது, ‘முண்டம், நீ என்ன பெரிய சாதன பண்ணிக் கிழிச்சன்னு இப்படிக் கெடந்து குதிக்கற? மொதல்ல ஜட்டிய தோய்ச்சிப் போடுற வழிய பாரு. இனிமே ஒனக்கு ஜாலிம் லோஷன் வாங்கிக் கட்டுப்படியாகாது’ என்றுவிட்டாள்.
சாதனை – சிறு குறிப்பு வரைக.
உண்ணாதிருப்பது. உறங்காதிருப்பது. தலைகீழாக நடப்பது. தண்ணீரில் ஒன்றேமுக்கால் மணிநேரம் மூச்சடைத்து மூழ்கியிருப்பது. பின்னால் ஓடுவது. ஒரு மணி நேரத்தில் ஏழாயிரம் சொற்கள் டைப்படிப்பது. காலால் வரைவது. மயிரைக் கட்டி பல்லவன் பஸ்ஸை இழுப்பது. மார்பில் புல்டோசரை ஓடவிட்டு உயிரோடிருப்பது. அரிசியில் தாஜ்மகால் வரைவது. ஆயிரம் பக்க நாவல் எழுதுவது. அதை ஆறு மாதத்தில் ஆயிரம் காப்பி விற்றுக் காட்டுவது. விற்றதற்கு ராயல்டி வாங்குவது. வந்த செக் பவுன்ஸ் ஆகாதிருப்பது. காபிரியேல் கார்சியாவை நோபல் ஷார்ட் லிஸ்டில் இருந்து தூக்குவது.
வெண்ண. சொந்தமா ஒரு பேரா எழுதுடா மொதல்ல. லீலா லெண்டிங் லைப்ரரிலேருந்து நீ சுட்டுட்டு வந்த ராமாமிருதம் புஸ்தகத்துல நாலு பக்கம் கிழிஞ்சிருந்தப்பவே நெனச்சேன். அவர்தான் அந்தப் பொண்ணுக்கு மொட்டையடிச்சாருன்னா நீ அவருக்கே அடிக்கப் பாக்கறியே தரித்திரம் புடிச்சவனே. தூத்தேறி இதெல்லாம் எங்க உருப்படப் போவுது? எழுதறானாம் பெரிசா.
காபிரியேல் கார்சியாவின் மனைவி அனுப்பிய பதில் கடிதத்தில் மேற்படி வரிகளை ராமு அல்லது சுரேஷ் ஒயிட்னர் வைத்து அவசரமாக மறைத்துக்கொண்டிருந்தபோது அவனது திருத்தாயானவள் கதவோரம் நின்று ரகசியக் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தாள்.
(வெற்றி. அடுத்த அத்தியாயமும் வந்துவிடும்.)