வாழ்வார்கள்

விக்கிரகத்தில்தான் கடவுள் இருக்கிறார் என்றெல்லாம் நம்பி, கைகூப்பித் தொழும் பருவம் கடந்தபின்னும் சில பாலிய வழக்கங்கள் இன்னும் தொடர்கின்றன. கிருஷ்ண ஜெயந்தி அதிலொன்று.

எங்கள் வீட்டு கிருஷ்ண ஜெயந்தி மிகவும் விசேஷமானது. அன்றைக்கு அம்மா சாப்பிடமாட்டாள். காலை முதல் கிருஷ்ண ஸ்மரணை. கிருஷ்ணரை நினைத்தபடி கைமுறுக்கு, வெல்லச் சீடை, உப்புச் சீடை, தட்டை, வாழைப்பழம் போட்ட அப்பம் என்று ஆரம்பித்து ஒரு மெனு கார்ட் நிறையக்கூடிய அளவுக்குத் தின்பண்டங்களைச் செய்துகொண்டே இருப்பது அம்மாவின் தியானம். பிற்பகல் மூன்று அல்லது நான்கு மணிவரை இந்தப் பண்டவேள்வி நடைபெறும். சமையலறையின் வெப்பம் ததும்பித் ததும்பி வெளியே வந்து வீட்டை நிறைக்கும்போது அம்மா கேஸ் அடுப்பை அணைத்துவிட்டு பூஜைக்கான ஏற்பாடுகளைத் தொடங்குவது வழக்கம்.

முன்னதாக பூக்களும் பழங்களுமாக வாங்கிக் குவிக்கப்பட்டிருக்கும். எங்கிருந்தாவது மாவிலைகள் வந்து சேர்ந்திருக்கும். வீட்டிலிருக்கும் அனைத்துக் கடவுளர்களும் அன்று புளி போட்டுக் குளிப்பார்கள். தேய்த்துத் தேய்த்துப் பளபளவென்று மினுங்கச் செய்து எடுத்து வைத்து அழகு பார்ப்பதில் அம்மாவுக்கு ஒரு சந்தோஷம்.

அப்புறம் அலங்காரம். சாம்பிராணிப் புகையும் திருவிளக்கும் ஊதுவத்திகளும் ஒரு கனவுக்காட்சித் தன்மையை பூஜை மாடத்துக்குக் கொடுக்கும்.

எல்லாம் தயார். இனியென்ன? அம்மா குளித்துவிட்டு வருவாள். புராதன மடிசார்க்கட்டில் ஓர் உபதேவதையாக உட்கார்ந்து ஹரி ஓம் என்று ஆரம்பித்தால் அடுத்த இரண்டு மணிநேரங்களில் பெரியாழ்வாரும் நம்மாழ்வாரும் ஆண்டாளும் அம்மாவின் நாவில் மோட்டார் சைக்கிள் ஓட்டுவார்கள்.

எல்லாம் முடித்து சோர்வில் விழும் தருணம் பிரசாதங்கள் தட்டிவைத்துத் தரப்படும். சாப்பிடத்தான் தோன்றாது. படுத்துத் தூங்கினால் போதும் என்று இருக்கும். பொதுவில் கிருஷ்ணர் நிரம்பவே காக்கவைக்கும் சுபாவம் கொண்டவர். தவிரவும் இரவில்தான் அவருக்குக் கொண்டாட்டங்கள் பிடிக்கும். ராமர் அப்படியில்லை. மற்ற கடவுளர்கள் யாரும்கூட அங்ஙனமில்லை. இவர் ஒருத்தர்தான் ராக்கூத்து விரும்பி.

கிருஷ்ண ஜெயந்தி பட்சணங்களை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில்தான் எப்போதும் எனக்கு சாப்பிட வாய்க்கும். தவறாமல் அம்மா எடுத்து வைத்திருப்பாள். நான்கைந்து தினங்கள் காய்ந்த அப்பத்தைக் கடிக்கமாட்டாமல் கடித்து ருசிப்பதில் ஒரு சுவையுண்டு. ஸ்ரீரங்கம் கோயில் தோசை மாதிரி காய்ந்திருக்கும் அது. ஊற ஊற ருசி.

இருபது வயது வரையிலும்கூட இந்தப் பண்டிகைக் கொண்டாட்டங்களில் நான் தவறாமல் கலந்துகொண்டிருக்கிறேன். பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, உட்கார்ந்து நாலாயிரம் படிக்கவேண்டும். நாலாயிரமும் முடியாதுதான். நாநூறாவது போகும். தலையெழுத்தே என்று படித்துத் தொலைப்பேன்.  இடையிடையே ஆழ்வாருக்குத் தெரியாமல் ஒன்றிரண்டு பத்துகளை ஓட்டிவிடுவதுண்டு. வாய்விட்டு உரக்கச் சொல்லவேண்டும். பிரபந்த கோஷ்டி பாணியில் நாலுவரி தம்பி படிப்பான். நாலு வரி நான் படிப்பேன். அம்மா ஒரு கட்சி. அப்பா ஒரு கட்சி.

அப்பாவுக்குப் பெரிய பக்தியெல்லாம் கிடையாது. ஆனால் பயமுண்டு. பழக்கவழக்கங்கள் எதையும் விட்டுவிடக்கூடாது என்பதில் ஆழ்ந்த அக்கறையுண்டு. நமக்கு மேலே ஒருவன் இருக்கிறான் என்பதில் கிரவுண்ட் ஃப்ளோர்க்காரனுக்கு இருக்கிற தீர்மானம் உண்டு. அம்மா நேரெதிர். கடவுளர்கள் அவளுக்கு எப்போதும் காய்கறிக்கடைக்காரர்கள் மாதிரி. மிரட்டுவாள். பேரம் பேசுவாள். கெஞ்சுவாள். கொஞ்சுவாள். அவ்வப்போது பிசினஸ் டீல்கள் அவசியம் உண்டு. நீ எனக்கு இதைச் செய். நான் உனக்கு அதைச் செய்கிறேன்.

கல்லூரிக் காலங்களில் நான் பண்டிகைகளை – குறிப்பாக, கிருஷ்ண ஜெயந்தியை கவனமாகத் தவிர்த்திருக்கிறேன். என்ன காரணமோ அப்போது அதெல்லாம் போரடித்தது. குறிப்பாக, உட்கார்ந்து பிரபந்தம் படிப்பது மிகவும் எரிச்சலூட்டியது. திருமங்கையாழ்வார் பல்லை உடைப்பார். ரொம்பக் கஷ்டம். நம்மாழ்வார் வாயிலேயே நுழையமாட்டார். சனியன், ஏண்டா வருகிறது என்று இருக்கும்.

உத்தியோகம் என்று ஒன்று அமைந்து, மேற்கொண்டு நல்ல நிலைமைக்குப் போராடத் தொடங்கியபோது இந்தக் கடவுளர்களை எதற்கும் இருக்கட்டும் என்று கொஞ்சம் தாஜா செய்ய ஆரம்பித்தேன். பெரியாழ்வார் வரைக்கும் தம் கட்டிப் படித்துவிடுவேன். அதற்குமேல் பொருந்தாது. எல்லாம் முடிந்து தனியே உட்கார்ந்து முறுக்கு சாப்பிடும்போது இதெல்லாம் எதற்கு அர்த்தமில்லாமல் என்று என்னவோ தோன்றும். சரி ஒழியட்டும், அம்மாவுக்கு சந்தோஷம் அல்லவா? அது போதும் என்று சமாதானம் அடைந்துவிடுவேன்.

ஐந்து வயதிலேயே முதலாயிரம் முழுதும் மனப்பாடமாக எனக்குத் தெரியும். காஞ்சீபுரத்தில் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் இருந்த காலத்தில் ஒரு சந்தை வகுப்பு நடக்கும். கிருஷ்ணா ஸ்கூலில் ஒண்ணாங்கிளாஸ் படித்துக்கொண்டிருந்தேன் அப்போது. தினமும் சந்தை க்ளாஸுக்குப் போவது வழக்கம். அப்போது உருப்போட்டது. பிற்பாடு கவனமாக அனைத்தையும் மறந்து போனேன். ஆங்காங்கே ஒன்றிரண்டு வரிகள் மட்டுமே நினைவில் உண்டு.

நினைவில் இருந்த அந்த ஒன்றிரண்டு வரிகள்தான் என்னுடைய இருபத்தி ஏழாவது வயதில் ஒரு திடுக்கிடும் மாற்றத்தை விளைவித்தன. அப்போதும் ஒரு கிருஷ்ண ஜெயந்திதான். விருப்பமில்லாமல்தான் அம்மாவுக்காக உட்கார்ந்து சொல்லிக்கொண்டிருந்தேன். தற்செயலாக நினைவில் இருந்த வரிகள் சில அவற்றின் பொருளுடன் புத்தியில் உறைக்க, ஐயோ என்ன கவித்துவம் என்று தோயத் தொடங்கி, கிருஷ்ண ஜெயந்திக்குப் பின்னும் அவ்வப்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம் பிரபந்தத்தை எடுத்து வைத்துக்கொண்டு இங்கொன்றும் அங்கொன்றுமாகப் படிக்கத் தொடங்கினேன்.

டிக்‌ஷனரி வேண்டியிருக்கவில்லை. புரிந்தது. எளிமையாகவே இருந்தது. முன்னர் பல்லை உடைத்த திருமங்கையாழ்வார் இப்போது என்ன சந்தம், என்ன சந்தம் என்று வியப்பூட்டினார். பெரியாழ்வாரின் எளிமை என்னை வெட்கம் கொள்ளச் செய்தது. நானும் தமிழ்தான் எழுதுகிறேன். கால் தூசு பெறுமா என்று தோன்றியது. மொழிபெயர்ப்பில் முழுதும் படித்திருந்த ரிக் வேதமும் சுக்ல யஜுர்வேதமும் ஆயிரமாயிரம் பக்கங்களில் பேசிய விஷயத்தை நம்மாழ்வார் ஒன்றிரண்டு வரிகளில் சொல்லிச் செல்வதைக் கண்டு பிரமிப்பு ஏற்பட்டது.

சமீப வருடங்களாக நான் கிருஷ்ண ஜெயந்தியைத் தவற விடுவதே இல்லை. இப்போது என் தம்பிகள் உட்கார்ந்து பாராயணம் செய்வதைத் தவிர்த்துக்கொண்டிருக்கிறார்கள். நாலு திருப்பாவை சொல்லிவிட்டு எழுந்தோடிவிடுகிறார்கள். அதுவும்கூட அம்மாவுக்காக.  அப்பாவுக்கு வயதாகிவிட்டது. வெறுமனே பக்கங்களைப் புரட்டுகிறார். சீக்கிரம் முடிச்சிடுடா, குழந்தைகளுக்குப் பசிக்கும் என்று என்னவோ காரணம் சொல்கிறார். அம்மாவுக்கும் மூச்சு வாங்குகிறது. நாநூறு போரும்டா. பெரியாழ்வாரோட நிறுத்திக்கோ என்று சொல்லிவிடுகிறாள்.

எனக்கு ஏனோ நிறுத்தத் தோன்றுவதில்லை. வாய்விட்டு நிறுத்தி நிதானமாகப் படிக்கிறேன். அதிர்ஷ்டவசமாக என் மனைவி அமைதியாக நான் முடிக்கக் காத்திருக்கிறாள். முன்னதாக, அம்மாவைப்போலவே அவளும் சிரத்தையுடன் பூஜைக்கு, திருமஞ்சனத்துக்கு ஏற்பாடுகள் செய்து வைத்திருக்கிறாள். விக்கிரகங்களைப் புளிபோட்டுத் தேய்த்து அம்மாவைப் போலவே அலங்காரம் செய்திருக்கிறாள். குளித்துவிட்டு வந்து சம்மணமிட்டு அமர்ந்து நான் படிக்கத் தொடங்குகிறேன். ரசனைக்குரிய பேராக்களை இரண்டு முறை, மூன்று முறையும்கூடப் படிக்கிறேன். என்ன தமிழ், என்ன அழகு. நம்மையறியாமல் இந்த பொக்கிஷங்களிடமிருந்து நாம் பிரிந்து வெகுதூரம் போய்க்கொண்டே இருக்கிறோம். பண்டிகைகள் சடங்குகளல்ல. ஒரு சந்தர்ப்பம். அவசர வாழ்வில் நமது கைவிட்டு விலகியோடுகிறவற்றைச் சற்றே இழுத்து நிறுத்தி அனுபவித்துப் பார்க்க ஒரு தருணம். இது மிகத் தாமதமாகவே புரிகிறது.

பிரபந்தம் படிப்பதற்கு பக்திமானாக இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆத்திக மனோபாவம் கொண்டிருக்கவேண்டுமென்கிற கட்டாயம் கூட இல்லை. குறைந்தபட்சக் கடவுள் நம்பிக்கைகூடத் தேவையில்லை. வனப்பும் வாளிப்பும் மிக்கதொரு பக்கத்து வீட்டுப் பெண்ணைத் திருட்டுக் காதல் புரியக் கிடைக்கும் சந்தர்ப்பம்போல் அந்த மொழியை அனுபவிக்கலாம். பன்னிரண்டு பேரையும்கூடப் படிக்கவேண்டாம். பெரியாழ்வார் ஒருத்தர்போதும். அந்த எளிமைக்கு ஒப்புவமையே சொல்ல முடியாது. என் குருவும் ஆசிரியருமான இளங்கோவன் ஒரு பரம நாத்திகர். பெரியார் – அம்பேத்கரில் தோய்ந்தவர். ஆனால் அவரளவுக்கு பக்தி இலக்கியங்களில் ஊறி, அவற்றில் உள்ள தமிழை அனுபவிக்கத் தெரிந்தவர்கள் குறைவு. நான் கவனமுடன் பிரபந்தத்தைப் படிக்கத் தொடங்கியது என் ஆசிரியரைச் சந்தித்தபிறகுதான்.

நேற்று இரவெல்லாம் என் தமிழின் மூளித்தனம் குறித்த துக்கம் கவிந்த ஏக்கம் என்னை ஆட்கொண்டிருந்தது. எனக்கு மாவா மாதிரி பெரியாழ்வாருக்கு கிருஷ்ணன் இருந்திருக்கிறான். ரசித்து ரசித்து ருசிப்பது ஒரு தியானம். மொழியின் சகல சாத்தியங்களையும் பயன்படுத்தி அணு அணுவாக அதனைக்கொண்டு ருசித்திருக்கிறார். என்ன கவித்துவம்! என்ன அழகு! என்ன ருசி. என் அம்மா செய்யும் வாழைப்பழம் போட்ட அப்பம் மாதிரி.

அடுத்த வருடம் முதல் என் குழந்தைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லித்தரத் தொடங்கவேண்டுமென்று நேற்று நினைத்துக்கொண்டேன். சீக்கிரம் கற்றுக்கொண்டு விடுவாள். சந்தேகமில்லை. சிரத்தையாகவும் கொண்டாடத் தொடங்குவாள். பின்னால், இதெல்லாம் என்ன அபத்தம் என்று என்னைப் போலவே அவளும் பண்டிகைகளை நிராகரிக்கும் நாள் வரும். அவளும் பிறகு கனிவாள். ஆழ்வார்கள் அப்போது மீண்டும் பிறப்பார்கள். மீண்டும் வாழ்வார்கள்.

Share

4 comments

 • “மொழியின் சகல சாத்தியங்களையும் பயன்படுத்தி அணு அணுவாக அதனைக்கொண்டு ருசித்திருக்கிறார். என்ன கவித்துவம்! என்ன அழகு! என்ன ருசி…”

  ஒரு சிறிய யோசனை: தங்கள் தீவிர ரசனையை வாசகர்கள் விளங்கிக்கொள்வதற்கு ஏதுவாக பேயாழ்வாரின் நான்கு (அ) எட்டு வரிகளை மேற்கோள் காட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது. அன்றி, இது ஏதோ தேவதூதர் அறிவிப்பு போல இருக்கிறது.

 • ராகவன்! உங்க தமிழையே நொந்துகிட்டா, அப்புறம் நாங்கல்லாம் மூஞ்சியை எங்கே கொண்டு போய் வெச்சுக்க?! எல்லாம் அப்படித்தான்! அனுபவம் நல்லா இருந்தது!

  அன்புடன்
  வெங்கட்ரமணன்

 • நான் கிருஷ்ண ஜெயந்தியை கிருஷ்ணனுக்காகவும் என் மகனுக்காகவும் கொண்டாடினேன். 🙂

  எனக்கு நம்மாழ்வாரும் மற்றெந்த ஆழ்வார்களும் கடவுளின் பயன்களே.

  அன்புடன்
  பிரசன்னா

 • வீட்டில் எளிமையாக கடைபிடிக்கப்படுகிற சம்பிரதாயங்கள் அடுத்த தலைமுறைக்கு சலனமற்ற ஆற்று நீரைப்போல வழிந்தோடுவதை மிகவும் அழகாகவும் அழுத்தத்தோடும் சொல்லியிருக்கிறீர்கள்.

  அடுத்த தலைமுறையினரும் தொடர்வார்கள்!

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter