பலான கதை – 02

கெமிங்வே கையசைத்த செம ஃபிகர் அல்லது அத்தியாயம் இரண்டு

ஆங்கிலம் மட்டும் தெரிந்த எர்னஸ்ட் ஹெமிங்வே, ஆங்கிலேயர்கள் அதிகமில்லாத பிரான்சு தேசத்தின் தலைநகரான பாரிஸில் நடந்துகொண்டிருந்தபோது யாரோ மொட்டை மாடியில் இருந்து உப்பு மூட்டையை அவிழ்த்துக் கொட்டினாற்போல பனி பெய்துகொண்டிருந்ததை ரசிகக் கண்மணியொருவர் புகைப்படமெடுத்துப் போட்டார். புகைப்படமானது பல்வேறு பிரபவ, விபவ வருடங்களுக்குப் பிறகு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுப் பிரசுரமானபோது ராமு அல்லது சுரேஷ் உள்ளிட்ட தமிழ்ச் சமூகமானது புளகாங்கிதமடைந்து அதைப் பலமணி நேரம் பார்த்துக்கொண்டே இருந்தது.

ஆ! எர்னஸ்ட் கெமிங்வே! எப்பேர்ப்பட்ட எழுத்தாளர். படித்த பிறகு நிச்சயமாக அப்படித்தான் தோன்றும். ஆனால் ஓர் எழுத்தாளனைப் படிப்பதற்கு அவன் எழுதியதைப் படிக்கவேண்டுமென்பதே இல்லை. ஒரு புகைப்படம் போதாதா? அதுவும் பிரான்சு நகர வீதியொன்றில் பனி மழையைப் பொருட்படுத்தாது நடந்து செல்லும் எழுத்தாளன். என்னவொரு கம்பீரம். எப்பேர்ப்பட்ட ஆளுமை. உதட்டில் ஒரு சிகரெட்டும் தொங்கிவிட்டால் தீர்ந்தது கதை.

பின்னொரு நாளில் அதே புகைப்படப் படைப்பை வேறொரு பெரிய சைஸ் சிறு பத்திரிகையானது மிம்மீள் பிரசுரம் செய்து ஹெமிங்வேயை காபிரியேல் கார்சியா மார்க்குவேஸ் எவ்வாறு சந்தித்தார் என்றொரு கட்டுரை வெளியிட்டிருந்ததை ராமு அல்லது சுரேஷின் அப்பா புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தபோது ராமு அல்லது சுரேஷ் அங்கு இல்லை.

அங்கே இல்லாமல் அவன் எங்கே போனான் என்றுதானே அறிய விரும்புகிறீர்கள்? அதில்தான் இருக்கிறது சஸ்பென்ஸ். (ராமு அல்லது சுரேஷின் அப்பா சிறு பத்திரிகை வாசகரா என்று துணைக்கேள்வி எழுப்பினால் இந்தக் கதைக்கு ஒரு பைபாஸ் சாலை போடவேண்டி வரும். அது வாசிப்பு வேகத்தை மட்டுப்படுத்தும். எனவே அவர் சிறு பத்திரிகை வாசகர் இல்லை என்பதை மட்டும் சொல்லிவிட்டு நாம் ராமு அல்லது சுரேஷைத் தொடர்வதே நல்லது.)

எங்கு விட்டோம்? ஆ. பனிமழை. எர்னஸ்ட் கெமிங்வே பனிமழையில் நனைந்தபடி சாலையில் நடந்துகொண்டிருந்தார். அப்போது அந்தப் பாரிசு நகர வீதியில் அவரைப் போலவே நடந்து போய்க்கொண்டிருந்த மக்கள் கூட்டமானது ‘மேஸ்ட்ரோ.. மேஸ்ட்ரோ..’ என்று கத்திக் கூப்பாடு போடத் தொடங்கியது. ஒரு மாபெரும் மக்கள் கூட்டமே ஒரு எழுத்தாளனை அடையாளம் கண்டு ஆர்ப்பரிக்கவல்லதாயிருந்தது பிரான்சு செய்த புண்ணியம். இதுவே நம்மூர் என்றால் எழுத்தாளனை எவன் மதிப்பான்? பரதேசி. பிச்சக்காரப் பய. பேமானி. சோமாறி. இதெல்லாம் எங்க உருப்படப் போவுது? தரித்திரம் புடிச்ச மூதேவி.

கெமிங்வே தனது முந்தைய ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் பலனாகத்தான் பாரிசு நகருக்குச் சென்றிருந்தார். மேற்படி அற்புத சுகமளிக்கும் ரசிகக் கூட்டத்தையும் அதனாலேயே அவர் காண நேரிட்டது. அனைவருக்குமாக அவர் தனது மெல்லிய உதடுகளுக்குள் இருந்து ஒரு புன்னகையை எடுத்து வெளியில் பறக்கவிட்டார். பனித்துளிகள் அதனைச் சுமந்து சென்று சம பங்கு பிரித்து அனைத்து மக்களுக்கும் வினியோகம் செய்தபோது இந்தக் கதையின் கதாநாயகனான ராமு அல்லது சுரேஷின் பிரதம வில்லனான காபிரியேல் கார்சியா மார்க்குவேசுக்கும் அந்தப் பிரசாதம் கிடைத்தது.

காபிரியேல் கார்சியா மார்க்குவேஸ் என்பவன் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவனாவான். ஒரு பத்திரிகையாளனாக அங்கே குப்பை கொட்டியது பத்தாமல் பிரான்சுக்கும் வந்து கொட்ட நினைத்திருந்தான். குப்பை கொட்ட வேண்டுமானால் குப்பை சேரவேண்டுமல்லவா? துரதிருஷ்டம் பிடித்த அந்தக் கொலம்பியனிடம் அப்போது அத்தனை குப்பை சேர்ந்திருக்கவில்லை. ஏன், குப்பை சேர்க்க அவனுக்கு அங்கே சொந்தமாகவோ வாடகைக்கோ ஓர் இருப்பிடம் கூட இருக்கவில்லை. எனவே அவன் ஒரு சாலையோர பெஞ்சியில் (பெஞ்சியின் பின்புறம் ஒரு டுலிப் மரம் இருந்திருக்கக்கூடும். அதில் இருந்து பிங்க் நிறத்தில் அழகழகான பூக்கள் கொத்துக் கொத்தாக சாலையெங்கும் அவசியம் உதிர்ந்திருக்கும். அவற்றில் ஒன்றிரண்டு அந்தக் கொலம்பியன் மீதும் விழுந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.) படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான்.

அடேய் பரதேசி! மாபெரும் படைப்பு வித்தகரான கெமிங்வேவே நடந்து போய்க்கொண்டிருக்கிறார்! உனக்கென்னடா தூக்கம்? எந்திரிடா பேமானி! என்றொரு அமானுஷ்யக் குரல் அவன் செவியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த வினாடி அவன் திடுக்கிட்டுத் துள்ளி எழுந்தான். அந்த இடத்தின் பேரலல் கட்டாகத்தான் “மேஸ்டிரோ.. மேஸ்டிரோ..” என்று பாரிசு நகர ரசிக மக்கள் உரத்த குரல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

காபிரியேல் கார்சியாவுக்கு உடனே உடலெங்கும் (இந்த இடத்தில் ‘ஒருவித’ என்னும் சொல் அவசியம் என்று உங்களுக்குத் தோன்றினால் அதற்கு காபிரியேலோ அவன் எழக் காரணமாயிருந்த கெமிங்வேவோ பொறுப்பாகமாட்டார்கள்.) மின்சாரம் பாய்ந்த உணர்வு ஏற்பட்டது. பரவச மேலீட்டில் அவனும் “மேஸ்ட்ரோ…” என்று குரலுயர்த்திக் கத்திய கணம் அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது.

பல்லாயிரம் குரல்களில் தனித்துக் கேட்கும் இந்தக் குரல் யாருடையது? குரலிலேயே ஒரு எதிர்கால எழுத்து மேதை தெரிகிறானே என்று வியந்து போன எர்னஸ்ட் கெமிங்வே, தனது நடைவேகத்தை மட்டுப்படுத்தி திரும்பிப் பார்த்தார். அதே வினாடி காபிரியேல் கார்சியாவை முந்திக்கொண்டு முன்னால் பாய்ந்த ராமு என்கிற சுரேஷ், ‘கிழக்கில் உங்கள் கிளை திறக்கப் பிறந்தவன் நான். என்னை வாழ்த்துங்கள்!’ என்று முகலாய பாணியில் சலாமிட்டு நின்றான்.

கெமிங்வேவுக்கு மிகுந்த சந்தோஷமாகிவிட்டது. தனது இடது கையை உயர்த்தினார். ராமு என்கிற சுரேஷுக்கு அவர் சங்கராசாரியாரைப் போல் ஆசி வழங்கவிருப்பதாகத் தோன்றியது. ஆனால் இல்லை. கெமிங்வே உயர்த்திய இடது கையை மர்லின் மன்றோவைப் போல் இரு அசைப்பு அசைத்தார். போயே விட்டார்.

ராமு என்கிற சுரேஷுக்கு நடந்ததை நம்பவே முடியவில்லை. வெகு நேரம் திகைப்பில் அப்படியே ஆணியடித்தாற்போல் நின்றுவிட்டான். எத்தனை நேரம் நின்றான் என்றால், பனி மழை நின்று வெயிலடிக்கத் தொடங்கும்வரை நின்றான். அவன் சுய உணர்வுக்கு வரவிருந்த சமயத்தில் யாரோ ஒரு மனிதன் அவன் தோளில் கைவைத்தான். ராமு என்கிற சுரேஷ் திரும்பிப் பார்த்தபோது அங்கே அவனது எதிர்கால வில்லனான காபிரியேல் கார்சியா மார்க்குவேஸ் நின்றுகொண்டிருந்தான். அந்தோ, அவனும் ராமு என்கிற சுரேஷுக்காக அத்தனை நேரம் அங்கேயே நின்றிருக்கிறான்! சரி, வில்லன் என்றால் காத்திருக்கும் கொக்காகத்தான் இருந்தாக வேண்டும். வேறு வழியில்லை.

“என்ன வேண்டும்?” என்று ராமு என்கிற சுரேஷ் கேட்டான்.

“நீ எனக்கான ஆசியைப் பறித்தவன். நீ என் எதிரி!” என்று காபிரியேல் கார்சியா குற்றம் சாட்டினான்.

ராமு என்கிற சுரேஷ் அவசரமாக ஒரு கணம் யோசித்தான். (ஒரு கணம் என்பதே குறுகிய நேரம். அதிலும் அவசரமாக யோசிப்பது எப்படி என்று ஒரு கணம் யோசிக்கவேண்டியது வாசகர்களாகிய உங்கள் கடமை.) “போடா முட்டாள். மேஸ்டிரோ கையாட்டியது எனக்குமல்ல உனக்குமல்ல.. நம்மிருவருக்கும் பின்னால் ஒரு செம ஃபிகர் நடந்து போனதை நீ பார்க்கவில்லையா? நான் பார்த்தேன்” என்று சொல்லிவிட்டு ஓடியேவிட்டான்.

காபிரியேல் கார்சியா மார்க்குவேஸுக்குக் கடுங்கோபம் உண்டாகிப் போனது. “மவன டேய்.. செத்தடா.. செத்தடா நீ. ஒன்ன தோக்கடிக்கலன்னா நான் ஒரு அப்பனுக்குப் பொறக்கலடா!” என்று தொண்டை கிழியக் கத்தினான்.

கெமிங்வே நடந்து சென்ற சுவடோ, பனி மழை பொழிந்த சுவடோ அப்போது அங்கே அறவே இல்லை. காபிரியேல் கார்சியாவும் அவன் படுத்திருந்த பெஞ்சும் மட்டும்தான். உதிர்ந்திருந்த டுலிப் பூக்களும் வாடத் தொடங்கியிருந்தன.

(அநேகமாக மூன்றாவது அத்தியாயமும் வரும்)

Share

Add comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter