பொன்னான வாக்கு 01

திங்கள்கிழமை என்றால் ஏழரை ஒன்பது ராகு காலம். வாக்குச் சாவடிகளை ஏழு மணிக்கே திறந்துவிட்டால் உத்தமம். கேலண்டர்க்காரன் அன்றைக்கு என்னமோ சூன்ய திதி என்றுவேறு போட்டிருக்கிறான். சிம்மத்துக்கோ ரிஷபத்துக்கோ சந்திராஷ்டமம் இல்லை என்றாலும் தேர்தல் ஆணையர் ஶ்ரீரங்கம் பஞ்சாங்கத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டுத் தேதி அறிவித்திருக்கலாமோ? ஈஸ்வரோ ரக்ஷது.

இனிமேல் அதிகாரபூர்வமாக அரசாங்கமே கொடுக்கும் கிரைண்டர் மிக்சி வகையறாக்களுக்கு வழியில்லை. சகல பெரிய சிறிய நடுவாந்திர புதிய பழைய திராவிட ஆரிய இந்திக்கார தெலுங்குக்கார மறத்தமிழ மன்னாதி மன்னர்கள் அநியாயபூர்வமாகக் கொடுப்பதுதான். திண்டிவனம் பக்கத்து கிராமங்களில் எல்லாம் இப்போதே வீடு வீடாக ஒரு கவுளி வெற்றிலை எடுத்துப் போய் நீட்டி சத்தியம் வாங்கத் தொடங்கிவிட்டதாகக் கேள்வி. சாதி மாற்றி வோட்டுப் போடாதே. மவனே, கைகால் இழுத்துக்கொண்டு, உதடுகோணி, கயிற்றுக் கட்டிலில் காலம் பூரா கிடக்க நேரிடும்.

சத்தியசந்தர்களை நாம் ஒன்றும் சொல்லுவதற்கில்லை. தேர்தல் என்றால் என்ன தேறும் என்று எதிர்பார்க்கும் டிபிகல் தமிழனுக்கு ஒரு டிப்ஸ் கொடுத்து இந்தத் திருவிழாவை மங்களகரமாகத் தொடங்கி வைக்கலாமா?

சரித்திரத்தை ஓர் அரிசி மூட்டையாக எண்ணிப் புரட்டிப் பார்த்தோமானால், தேர்தலையொட்டி மகா ஜனங்களுக்குக் கட்சிகள் கொடுக்கும் கடைசி நேரக் கிளுகிளுப்புகளுக்கு ஒரு பெரிய இடமுண்டு. உன்னைக்கொண்டு என்னில் வைத்தேன், என்னையும் உன்னில் இட்டேன் என்றார் பெரியாழ்வார். அதெல்லாம் ஆன்மிகம். பன்னுக்குள் மூக்குத்தி வைத்தேன், பிரியாணி பார்சலுக்குள் நோட்டை வைத்தேன் என்று திராவிடம் அதைத் திருத்தி எழுதிப் பலகாலமாயிற்று.

கடந்த பொதுத் தேர்தல் சமயம் சென்னையில் வீடு வீடாக வந்து கலர்க்கலர் பிளாஸ்டிக் குடங்களைக் கொடுத்துவிட்டுப் போனார்கள். எந்தக் கட்சி என்பதெல்லாம் அநாவசியம். தமிழ் நெஞ்சங்களின் தாகம் தணிக்க விரும்பும் ஏதோ ஒரு கட்சி. ஆஹா அவனென்ன குடம் கொடுப்பது என்று இன்னொரு தரப்பு உள்ளங்கை உயர பித்தளைக் குத்து விளக்கு கொடுத்தது. எதுவும் குடத்திலிட்ட விளக்கல்ல. குன்றிலிட்ட நெருப்புதான். எல்லோருக்கும் தெரியும், எல்லாமே தெரியும்.

எச்சில் தொட்டு எண்ணி எண்ணிப் பட்டுவாடா செய்யப்பட்ட நோட்டுகளால் டிவி சானல்கள் நாறின. இவனென்ன டிவிக்காரனுக்குச் சொல்லிவிட்டுத்தான் பணப்பட்டுவாடாவிலேயே இறங்குவானா என்று அப்போது என் நண்பர் ஒருவர் கேட்டார். கட்சிக்கொரு சேனலிருப்பதை நினைவூட்டி வாயடைத்து வைத்தேன். எல்லாம் நடப்பதுதான். எப்போதும் உள்ளதுதான்.

ஆனால் போரடித்திருக்காது பொது மகா ஜனங்களுக்கு? ஒரு மாறுதலுக்கு இம்முறை அவர்கள் கொடுப்பதை வாங்காமல் தமக்கு வேண்டியதைக் கேட்டுப் பெற மக்கள் முடிவு செய்தால் எப்படி இருக்கும்?

உதாரணத்துக்கு, வோட்டுக்கு இத்தனை என்று என்னவாவது கொடுக்க வருபவரிடம், ‘ஐயா, எனக்குக் காசு வேண்டாம். என் ஏரியாவில் எட்டு எம்பிபிஎஸ் வேகம் என்று சொல்லி இந்த ஏர்டெல்க்காரன் நாலு கூடக் கொடுக்காமல் அழிச்சாட்டியம் பண்ணுகிறான். உமக்குத் திராணியிருந்தால் குறைந்தது ஒரு பதினாறு எம்பிபிஎஸ் வேக இணைய இணைப்பை வாங்கிக் கொடுத்துவிட்டுப் போங்கள்; நான் சாவடிக்கு வந்து நல்ல வோட்டோடு சேர்த்து நாலு கள்ள வோட்டும் போட்டுவிட்டுப் போகிறேன்’ என்று சொல்லிப் பார்க்கலாம்.

முன்னெல்லாம் கார்ப்பரேஷன்காரர்கள் நாய் பிடிக்கும் திருவிழா ஒன்று நடத்துவார்கள். இப்போது அதெல்லாம் என்னவாயிற்று என்று தெரியவில்லை. நாட்டில் நாய்த்தொல்லை அதிகரித்துவிட்டது. வீதிக்கு நாற்பது நாய்கள் அநாமத்தாக சுத்திக்கொண்டிருக்கின்றன. தெருவில் இறங்கி நடமாட முடிவதில்லை. நாயகனே! நீ வோட்டுக்கு பக்கெட் தரவேண்டாம்; வந்ததற்கு நாலு நாய்களைப் பிடித்துப் போய் ப்ளூ க்ராசில் விட்டுச் செல் என்று சொல்லலாம்.

வோட்டுப் போட நீ லாரியெடுத்து வந்து அழைத்துச் செல்லவேண்டாம். பதிலுக்கு, அனுப்புவதைத் தண்ணி லாரியாக அனுப்பி வை; நாலு நாளைக்கு ஏரியாவில் குடிநீர்ப் பிரச்னை இல்லாதிருக்கும் என்று கேட்கலாம். சாக்கடை அடைப்பு முதல் சாலை உடைப்பு வரை நமக்குப் பிரச்னைகளா இல்லை?

இதெல்லாம் தப்பு; கூடவே கூடாது என்று பொத்தாம்பொதுவாகக் கருத்துச் சொல்லி நாலு காசுக்குப் பயனில்லை. ஆனால், ஐம்பதாண்டு காலத்துக்கும் மேலாக வாங்கிப் பழகிவிட்ட கரங்கள் இந்தத் தேர்தலை மாற்றத்துக்கொரு தொடக்கமாக வைத்துப் பார்க்கலாம். குனிந்து சலாமிட்டு வாங்கிப் போவதில் என்ன இருக்கிறது? நிமிர்ந்து உத்தரவிடும் கட்டளைத் தம்பிரான்களாகிப் பார்க்கலாம்!

(நன்றி: தினமலர் 06/03/16)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி