சில சந்தேகங்கள், சில விளக்கங்கள்

[1]

கடந்த சில தினங்களாக என்னுடைய தளத்துக்குள்ளே வருகிற சிலர் ‘காமக் கதைகள்’ என்றும் சித்ரா மாமி என்றும் சரோஜா தேவி என்றும் சிலுக்கு என்றும் குறிச்சொற்கள் இட்டுத் தேடுகிறார்கள். எங்கோ தவறு நடந்திருக்கிறது. பா. ராகவன் பலான எழுத்தாளர் என்று யாரோ நல்லவர்கள் இவர்களுக்குச் சொல்லியிருக்கலாம். எம்பெருமான் அவர்களை மன்னிப்பாராக. கூகுளில் காமக்கதைகள் என்று தேடியும் என்னுடைய தளத்துக்குச் சிலர் வந்திருக்கிறார்கள். எப்படி என்று புரியவில்லை. என்ன வில்லங்கம் இருக்கக்கூடும்?  தெரிந்தவர்கள் எனக்கு எழுதி உதவுங்கள்.

<hr>

[2]

நீங்கள் ஏன் இங்கே ரெகுலராக எழுதுவதில்லை என்று திரும்பத் திரும்பக் கேட்கும் நண்பர்கள் பெருகிவருகிறார்கள். இணையத்திலும் எழுதலாம் என்பதுதான் இம்முறை என் திட்டம். தினசரி எழுதியே தீர்வது என்கிற விரதம் இல்லை. உண்மையில் எனக்கு அது சாத்தியமும் இல்லை. நேரம், நான் தினசரி துரத்தும் பிசாசாக உள்ளது. அலுவலகப் பணிகள் போக மிச்சமிருக்கும் பொழுதுகளைத் திரைப்படமும் தொலைக்காட்சித் தொடரும் ரிப்போர்ட்டர் – கல்கி தொடர்களும் எடுத்துக்கொண்டுவிடுகின்றன. படிப்பதேகூடக் குறைந்துவிட்டது இந்நாட்களில். இந்த கமிட்மெண்ட்கள் போக எழுத நேரமும் சொல்ல விஷயமும் எழுதும் உத்வேகமும் கூடிவருமானால் எழுதலாம். இங்கு எழுதுவதைக் கடமையாகச் செய்ய இயலாத சூழல்.

[3]

நீங்கள் இட்லி வடையா? இக்கேள்வியும் அடிக்கடி வருகிறது. நிச்சயமாக இல்லை. இட்லிவடை என் நண்பர். அவருடன் அடிக்கடி மெசஞ்சரில் பேசுவதுண்டு. பலரும் பேசுவது போலவே. அதற்குமேல் ஒன்றுமில்லை. இணையத்தில், இந்த என்னுடைய தளம் தவிர நான் வேறெங்கும் எழுதுவதில்லை. பின்னூட்டங்கள் இடுவதில்லை. புனைபெயரில் நீண்டகாலம் வலம்வருவதற்கான விருப்பமோ, நேரமோ, யோக்கியதையோ எனக்கில்லை. ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் ராயர் காப்பி க்ளப்பில் ஒரே ஒருவாரகாலத்துக்கு பரமசிவம் பிள்ளை என்கிற பெயரில் எழுதியிருக்கிறேன். அந்நாளைய இணைய ஜேம்ஸ் பாண்ட் அதனை உடனுக்குடன் கண்டுபிடித்துச் சொல்லிவிட, அனைவரும் சிரித்துவிட்டு ஆட்டத்தை முடித்துக்கொண்டோம். அதன்பின் அப்படியொரு எண்ணமும் தேவையும் ஏற்படவில்லை. அதற்கெல்லாம் அவசியமும் இல்லாமல் போய்விட்டது. கண்ணில் தென்படுபவர்களையெல்லாம் ‘நீங்கள்தான் இட்லிவடையா?’ என்று கேட்பது இன்றைக்கு ஒரு வியாதியாகிவிட்டது. எனக்கும் அது கொஞ்சகாலத்துக்கு இருந்தது. இப்போது இல்லை. இட்லிவடை யாராக இருந்தாலும் எனக்குப் பிரச்னையில்லை. அவர் என் நண்பர். எனக்குக் கெடுதல் ஏதும் செய்யாத ஒரு நல்ல முகமூடி. என்றைக்காவது நேரில் சந்திக்க வந்தாரென்றால் மாமி மெஸ்ஸுக்கு அழைத்துச் சென்று ஒரு மதிய உணவு வழங்கத் தயார். கூடுதல் அப்பளம் கேட்டாரென்றால் அதற்குமட்டும் அவர்தான் காசு கொடுக்கவேண்டும்.

[4]

ரிப்போர்ட்டரில் நான் எழுதும் தொடர்களை கர்ம சிரத்தையாகச் சேகரித்து சில நண்பர்கள் பிடிஎஃப் ஆக்கி இணையத்தில் வினியோகிக்கிறார்கள். இது கூடாது, வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒவ்வொருமுறையும் கடிதம் எழுதுகிறேன். என் ஒவ்வொரு கடிதத்துக்கும் தொடர்ச்சியாகக் கூடுதலாக ஒரு சிலர் இந்தத் திருப்பணியைத் தொடங்குகிறார்கள். ஏனென்று புரியவில்லை. சட்டப்படி இது தவறு. தவிரவும் குமுதத்துக்கும் சரி, என் புத்தகங்களைப் பதிப்பிக்கும் கிழக்குக்கும் சரி. தர்மசங்கடமான ஒரு செயல். தயவுசெய்து வேண்டாம். தவிரவும் ஐம்பது பக்கங்களைத் தாண்டும் பிடிஎஃப் பைல்கள் முழுவதுமாகப் படிக்கப்படுவதில்லை என்பது என் கண்டுபிடிப்பு. உங்கள் அபார முயற்சி அநியாயத்துக்கு வீணாகிறதே என்கிற அக்கறையும் ஒரு காரணம். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். கிழக்கே விரைவில் மின் புத்தகங்களை அளிக்கும். அதிகாரபூர்வமாக அவற்றை நீங்கள் டவுன்லோட் செய்து ஆனந்தமாகப் படிக்கலாம். போலிப் புத்தகங்களைப் படித்து பாவம் தேடிக்கொள்ளாதீர்:-)

[5]

எனது எடைக்குறைப்பு நடவடிக்கைகள் பற்றிய கட்டுரைகளைப் படித்து சிலர் என்னை ஒரு பார்ட் டைம் டயட்டீஷியனாகக் கருதத் தொடங்கியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நிச்சயமாக இல்லை. என் கட்டுரைகளில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களுக்கு அப்பால் எனக்கு ஏதும் தெரியாது. ஒவ்வொருவர் உடல் அமைப்பும் செயல்பாடும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒரே டயட் முறை அனைவருக்கும் உதவாது. அப்படிப் பரீட்சை செய்து பார்ப்பதும் விபரீதம். எடை குறைக்க விரும்பும் ஒவ்வொருவரும் அவரவர் மருத்துவர்களைக் கலந்து ஆலோசித்த பிறகே காரியத்தில் இறங்கவேண்டும். என்னை மாதிரி யார் என்ன சொன்னாலும் அப்படியே கேட்டுச் செயல்படுவது அபாயகரமானது.

[பி.கு: உங்களில் எத்தனை பேர் கண் வைத்தீர்களோ தெரியவில்லை. கடந்த மாதம் வேலை நெருக்கடிகளால் சரியாக டயட் கடைபிடிக்க முடியாமல் போய், நீச்சலும் நடைப்பயிற்சியும்கூட ஆட்டம் கண்டு, எடை சற்றுக் கூடிவிட்டது. என் இப்போதைய கண்டுபிடிப்பு – எடைக்குறைப்பு என்பது ஒரு வேலை. மற்ற வேலைகள் அதிகரிக்குமானால் இந்த வேலை கண்டிப்பாக பாதிக்கப்படும்.]
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter