சிம்பிள் டெக்ஸ்ட் – செயலிக் குறிப்பு

இங்கே என்னைத் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு, ஒரு நல்ல டெக்ஸ்ட் எடிட்டருக்காக பன்னெடுங்காலமாக நான் நடத்தி வரும் துவந்த யுத்தம் பற்றித் தெரிந்திருக்கும். சும்மா நான்கு ஃபேஸ்புக் போஸ்ட் எழுதுகிறவர்களுக்கோ, ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் சிறுகதை எழுதுகிறவர்களுக்கோ இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. என்னைப் போல தினமும் ஆயிரம் சொற்களை நியமமாக வைத்திருப்பவர்களின் பிரத்தியேக இம்சை இது.

மைக்ரோசாஃப்ட் வேர்ட் என்கிற திராபையை நான் விவாகரத்து செய்து பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. டாக் கோப்பாக அனுப்புவதென்றால் லிப்ரே ஆபீஸில் போட்டு .docx ஆகச் சேமித்து அனுப்பிவிடுவதுதான் வழக்கம். ஆனால் எழுதுவதற்கு எனக்கு லிப்ரே ஆபீசும் உதவாது. ஒரு சுத்த சன்மார்க்க ப்ளைன் டெக்ஸ்ட் எடிட்டரை மட்டுமே எப்போதும் விரும்புவேன். கனமின்றி இருக்க வேண்டும். தொட்ட கணத்தில் திறக்க வேண்டும். அக்கம்பக்கம் எந்த ஆப்பும் தெரியக்கூடாது. மெனு பார் வரக்கூடாது. ஸ்கிரால் பார் கூடாது. அலங்கார களேபரங்கள் கூடாது. ரிச் டெக்ஸ்டுக்கான ஆப்ஷன்களே இருக்கக்கூடாது. அனைத்திலும் முக்கியம், திரை கறுப்பாகவும் எழுத்து வெண்மையாகவும் வர வேண்டும்.

மேக்கில் உள்ள டெக்ஸ்ட் எடிட் என்கிற மென்பொருள் எனக்கு ஒவ்வாது. நண்பர் கோகுல் சுட்டிக் காட்டிய writeroom என்கிற மென்பொருளைத்தான் மேக் பயன்படுத்தத் தொடங்கிய காலம் முதல் எழுதுவதற்குப் பயன்படுத்தி வந்தேன். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்தச் செயலியின் டெவலப்பன் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே அதைத் தலை முழுகிவிட்டான். (வெறும் ₹ 50க்கு வாங்கியது!) ஆண்டுக்கொரு தரம் ஆப்பரேடிங் சிஸ்டம் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த அப்டேஷன் இல்லாத செயலியோ பொதி சுமக்க முடியாத கழுதை போல நொண்டுகிறது. குறிப்பாக, எழுதிய முந்தைய வரிகளுக்குத் திரும்பச் சென்று ஏதேனும் ஒரு சொல்லுக்குள் திருத்தம் செய்யப் பார்த்தால் யுனிகோட் களேபரமாகிவிடும். குறிப்பாக கொ-ணோ-லௌ வகையறாக்களில் கந்தர கோளம்.

சந்தையில் உள்ள அனைத்து டெக்ஸ்ட் எடிட்டர்களையும் சில ஆண்டுகளாகத் தீவிரமாகப் பரிசோதனை செய்து பார்த்து, இறுதியாக இன்று என் எதிர்பார்ப்புக்கு ஏற்ற ஒரு எடிட்டரைப் பிடித்துவிட்டேன்.

இதன் பெயர் Simpletext. 369 KB கனம். இதன் டெவலப்பரான Yeow Jin என்னைப் போலவே மினிமலிச டிசைனிங்கில் ஈடுபாடு கொண்டவர் என்பது அவரது இணையத்தளத்தைப் பார்த்தபோது புரிந்தது. செயலியைப் பரிசோதித்தபோது, கொடுக்கும் பணத்துக்கு (₹ 449) நியாயம் செய்கிறது என்ற திருப்தி வந்துவிட்டது. ஒரு முறை பணம் கட்டினால் போதும். மேக், ஐபேட், ஐபோன் என்று மூன்றிலும் டவுன்லோட் செய்துகொண்டு எழுதலாம். அதனதன் வர்ஷன்கள் அழகாக வந்து உட்கார்ந்துவிடுகின்றன. Dark Mode Option-இல் நம் விருப்பத்துக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது. எனக்கு வெறும் வேர்ட் கவுண்ட் இருந்தால் போதும். இவன் கேரக்டர் கவுண்ட்டும் சேர்த்துத் தருகிறான்.

இந்தக் குறிப்பை இந்தப் புதிய செயலியில்தான் எழுதுகிறேன். மிகவும் சொகுசாக உள்ளது. மேக்கில் வாழ்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிப் பயன்படுத்தலாம்.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!