அளவுக்கதிகமான வேலைகளால் படிப்பு குறைந்துபோன வருடம் இது. ஒவ்வொரு வருடமும் தொழில் தாண்டி, சொந்த விருப்பத்தில் குறைந்தது நூறு புத்தகங்களாவது படித்துவிடுவேன். இந்த வருடம் முடியாமல் போய்விட்டது. எண்ணிப் பார்த்தால் முப்பதுகூடத் தேறவில்லை. அதில் மறக்கமுடியாதவை இரண்டு. ராமச்சந்திர குஹாவின் India after Gandhi மற்றும் பல்லவி ஐயரின் சீனா: விலகும் திரை. [சீனா, ஒரிஜினல் படிக்கவில்லை. மொழிபெயர்ப்புதான்.]
இரண்டு புத்தகங்களுமே நிறைய வரலாற்றுத் தெளிவையும் புதிய அதிர்ச்சிகளையும் தந்தன. பல்லவியின் புத்தகத்தில் அவர் விவரித்திருந்த ‘ஊ’ என்கிற ஒரு மனிதர் இந்த வினாடி வரை நினைவை விட்டு அகல மறுக்கிறார். ஊ ஒரு பண்ணையார். நல்ல வசதியாக, சௌக்கியமாக வாழ்ந்த மனிதர். மாவோவின் கலாசாரப் புரட்சியின்போது அவரது நிலபுலன்கள், வீடுகள் எல்லாம் அரசால் அபகரிக்கப்பட்டுவிட்டன. ஊ, கூலி வேலை பார்க்கத் துரத்தப்பட்டார்.
ஆனாலும் சோராமல் அந்த உத்தியோகத்தையும் ஒழுங்காகச் செய்து பல்லாண்டுகளுக்குப் பிறகு ஓய்வுபெற்று தலைநகருக்குத் திரும்பினார். சொத்து ஏதும் இப்போது இல்லை. சுமாரான வாழ்க்கைத் தரம்தான். ஆனாலும் நம்பிக்கை இருந்தது அவருக்கு. ஒரு வீடாவது வாங்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். புதிய ஆட்சியாளர்கள் கம்யூனிசத்தில் கொஞ்சம் கொஞ்சம் ஆல்டர் செய்து, தனி நபர் உரிமைகளுக்கு ஆங்காங்கே அளித்த சிறு வசதிகளைப் பயன்படுத்தி ஒரு பழைய வீட்டை வாங்கினார். வாடகைக்கு விட்டுச் சம்பாதித்து இன்னொரு வீடு. அப்படியே நாலு வீடு வாங்கிவிட்டார்.
தன் நடுத்தர வயதுகளைப் பண்ணைக்கூலியாகக் கழித்துவிட்டு வயதான காலத்தில் திரும்பவும் வசதி மிக்கவராகத் தன்னைப் புனரமைத்துக்கொண்ட அந்த மனிதரின் விடாமுயற்சியை எண்ணி எண்ணி பிரமிக்கிறேன். கம்யூனிசம், சீனாவில் பணக்காரர்களை ஏழையாக்கியது. ஏழைகள், ஏழைகளாகவேதான் இருந்தார்கள். தன்னம்பிக்கை உள்ள தனிநபர்கள் மட்டும் மீறி மேலெழுந்து சாதித்ததற்கும் கம்யூனிசத்துக்கும் தொடர்பு ஏதுமில்லை.
ஊ ஒரு சிறு உதாரணம். இந்தப் புத்தகம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது. இதிலிருந்து நிறைய தெரிந்துகொண்டிருக்கிறேன், சீனாவுக்கு அப்பாலும்.
*
நிறைய படங்கள் பார்த்தேன். முன்னரே பார்த்திருக்க வேண்டிய, விடுபட்டுப் போன பல தமிழ்ப் படங்களை டிவிடி வாங்கிப் பார்த்தேன். ஆனால், சென்ற வருடம் சுப்ரமணியபுரம் தாக்கிய அளவுக்கு இந்த ஆண்டு எந்தப் படமும் பெரிதாக பாதிக்கவில்லை. மிகவும் எதிர்பார்த்த அமீரின் யோகி ஒரு நல்ல திராபையாக அமைந்திருப்பது கண்டு வருந்தினேன். இந்தப் படத்தைத் திரைப்பட விழாக்களுக்கெல்லாம் அனுப்புகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். மயக்கங்கள்!
டிசம்பரில் கண்டிப்பாக வெளிவந்துவிடும் என்று [நான்] எதிர்பார்த்த கனகவேல் காக்க, வேட்டைக்காரன், அவதார் காரணங்களால் தள்ளிப்போய்விட்டது. தமிழில், பட்ஜெட் படங்கள் வெளியாவதற்குப் படுகிற பாடுகள் பற்றித் தனியே ஒரு சமயம் எழுதுகிறேன். சினிமாக்களின் திரைக்குப் பின்னால் உள்ள கதைகள் சீரியல் கதைகளைக் காட்டிலும் உணர்ச்சிகரமானவை.
*
ஆண்டு முழுதும் நிறைய எழுதினேன். ஒரு நாளும் எழுதாமலில்லை. அடுத்த ஆண்டு எழுதி முடிக்கத் திட்டமிட்டிருக்கும் முஹம்மத் வாழ்க்கை வரலாற்றுக்காக எழுதிய குறிப்புகள் மட்டுமே நாநூறு பக்கங்களுக்குமேல் வருகிறது. இது தவிர காஷ்மீர் குறித்த ஒரு நூலுக்காகத் துண்டு துண்டாக எழுதிய பகுதிகள் முன்னூறு பக்கங்கள் வந்திருக்கின்றன. இரண்டையும் இனிதான் புத்தக வடிவத்துக்குக் கொண்டுவரவேண்டும். புதிதாக இரண்டு திரைக்கதைகள் எழுதினேன். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு சிறுகதை. வருடக் கடைசியில் ஒரு சிறு புத்தகம்.
*
நிறைய ஊர் சுற்றவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் முடியவில்லை. ஒரே ஒருநாள் பெங்களூர் போய் வந்ததுதவிர வருடம் முழுதும் வேறு பயணங்களே இல்லை. அடுத்த வருடம் சேர்த்துவைத்து சுற்றிவிடத் தீர்மானித்திருக்கிறேன்.
*
சென்ற ஆண்டு, இனி ட்விட்டர் கூடாது என்று நினைத்தேன். முடியவில்லை. அது மாவாவைப் போன்றது. ராஜேஷ் இலவசம், டைனோ மற்றும் சுரேஷுடன் வண்டி வண்டியாக வெண்பாம் போட்டு விளையாடியது நல்ல ரிலாக்ஸேஷன். சமீபத்தில் அங்கே முளைத்த பேயோன் ரசிக்கத் தக்க பல வரிகளைத் தொடர்ந்து தந்தார்.
சென்ற ஆண்டு இணையத்தில் யுவ கிருஷ்ணா ஒரு நல்ல எழுத்துக்கரமாக அகப்பட்டதுபோல் இந்த ஆண்டு யாரும் என் கண்ணில் படவில்லை. வலைப்பதிவுகள் மிகவும் போரடித்தன. வாழ்க்கை அத்தனை போரடிக்கிறதா என்ன.
வாசகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்.
விடுங்க, அடுத்த ஆண்டில் நல்ல எழுத்துக்கரம் கிடைக்காமலா போய்டுவாங்க.
//பட்ஜெட் படங்கள் வெளியாவதற்குப் படுகிற பாடுகள் பற்றித் தனியே ஒரு சமயம் எழுதுகிறேன்//
waiting
//சென்ற ஆண்டு, இனி ட்விட்டர் கூடாது என்று நினைத்தேன். முடியவில்லை. அது மாவாவைப் போன்றது.//
எனக்கு ட்விட்டர் மூலம்தான் நீங்கள்,பிரகாஷ், பாலா, சொக்கன், லக்கி மற்றும் பலரின் தொடர்பு கிடைத்து அதன் மூலம் ஏறக்குறைய 10 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழில் வாசிக்க, எழுத ஆரம்பித்திரிக்கிறேன்..
அந்த வகையில் 2009 எனக்கு மறக்க முடியாத ஒரு லாண்ட்மார்க் வருடம் 🙂
புத்தாண்டு வாழ்த்துகள்!!
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
1)அளவுக்கதிகமான வேலைகளால் படிப்பு குறைந்துபோன வருடம் இது
2)ஆண்டு முழுதும் நிறைய எழுதினேன். ஒரு நாளும் எழுதாமலில்லை.
குறைவாக படித்து, -நிறைய எழுத அதையும் நிறைவாக எழுத திறமையும் சரஸ்வதியின் அருளும் வேண்டும்.அது இரண்டும் உங்களுக்கு இருக்கிறது.
ரமணன்.
ஊ’ என்கிற ஒரு மனிதர்//
அது ஹு இல்லை? சீனர்களுக்கு நாண்கு வகையான ஏற்ற இறக்கங்கள் இருக்கிறது போல , உபயம் சீன தோழிகள்.அந்த புத்த்கம் வந்து சில நாட்களிலேயே படித்து விட்டேன்.
// இது தவிர காஷ்மீர் குறித்த ஒரு நூலுக்காகத் துண்டு துண்டாக எழுதிய பகுதிகள் முன்னூறு பக்கங்கள் வந்திருக்கின்றன//
அப்பாடா 🙂 எம்புட்டு நாள் !
ரிலேக்சேஷன் வெண்பாமால் பலசமயம் எந்நேரம்
அலேக்காகி போவதும் உண்மை!
:))