கார் விலங்கு

நண்பர் ஒருவர் என்னை அலுவலகத்தில் சந்திக்க இன்று வந்திருந்தார். பல வருட நண்பர். பல காலம் கழித்து சந்திக்கிறோம். எனவே நேரம் போனது தெரியாமல் பேசிக்கொண்டிருந்துவிட்டோம். என்னென்னவோ விஷயங்கள். இலக்கியம். சினிமா. அக்கப்போர். மென்பொருள். என் வீடு. அவர் வீடு. என் மாவா. அவரது வெற்றிலை சீவல். எழுத்து. பத்திரிகை. தொடர்கள் இத்தியாதி.

விடைபெற்றுப் புறப்பட்டவருடன் வாசல்வரை போனபோது ஒரு கணம் இரண்டு பேருமே அதிர்ச்சியடைந்தோம். அவரது காரின் வலது முன்பக்க வீலுக்குப் பெரிதாக விலங்கிட்டு, பளபளவென்று ஒரு பூட்டு மாட்டியிருந்தார்கள்.

ஐயய்யோ என்றார் நண்பர். ஆமாம், அது நோ பார்க்கிங் என்றேன் நான்.

கடமை உணர்வுமிக்க காவலர்கள் கர்ம சிரத்தையாக வண்டியை நகரவிடாதபடிக்குப் பூட்டிவிட்டு வைப்பருக்குக் கீழே ஒரு காதல் கடுதாசி எழுதி சொருகிவிட்டுப் போயிருந்தார்கள். இந்தாப்பா, இதான் எங்க நம்பர். வந்து பார்த்து ஷாக் ஆகி முடிச்சதும் ஒரு போன் அடி. திரும்ப வந்து கழட்டி வுடறோம். ஃபைன கட்டிட்டுப் போய்க்கிட்டே இரு.

‘என்ன அக்ரமமா இருக்கு? பாண்டிபஜார்ல நடுரோட்ல பார்க் பண்றான். அங்க கேக்க ஒரு நாதி கிடையாது. நான் ஓரமாத்தானே நிறுத்தியிருக்கேன்?’ என்றார் நண்பர்.

நாலைந்து நல்லவர்கள் கூடிவிட்டார்கள். ‘ஒண்ணும் பயமில்ல சார். போன் பண்ணி சொல்லிடுங்க. வந்து எடுத்து வுட்றுவாங்க. முன்னூறு ரூவா ஃபைன் போடுவான். அவ்ளோதான்’ என்று பேங்க் ஆஃப் திருவாங்கூர்க்காரர் ஒருத்தர் ஆறுதல் சொன்னார்.

‘ஏன் சார் நான் நிறுத்தும்போது நீங்க பாத்திங்கல்ல? அப்பவே இங்க நிறுத்தக்கூடாதுன்னு சொல்லியிருக்கலாம்ல?’

‘எப்பவும் இப்படி ஆறதில்லை சார். மாசக்கடைசின்னா இப்படி நடக்கும்’ என்றார் பேங்க் ஆஃப் திருவாங்கூர்.

‘மாசக்கடைசிக்கு இன்னும் ஒருவாரம் இருக்கில்ல?’

நண்பர் கையிலுள்ள பத்து விரல் நகங்களையும் கடித்துத் துப்பிவிட்டு கால் விரல்களை கவனிக்க ஆரம்பிக்க, எனக்குக் கொஞ்சம் கலவரமாகிப் போனது.

எங்கள் அலுவலகத்தில் பலபேரின் மோட்டார் சைக்கிள்களுக்கு இப்படியாகியிருக்கிறது. பார்க்கிங் வசதியில்லாத சாலை அது. அடித்துப் பிடித்து ப்ளாட்ஃபாரத்தின்மீது ஏற்றிவிட்டால் பிரச்னையில்லை. கொஞ்சம் தாமதமாக அலுவலகம் வருபவர்கள் பாடு பேஜார்தான்.

போலீஸ்காரர்கள் பெரும்பாலும் நல்லவர்கள். சில சமயம் அவர்களுக்கு உலகத்தின்மீது வெறுப்பும் கோபமும் கட்டற்றுப் பெருகிவிடும். அப்போது சட்டப்படி நடந்துகொள்ள ஆரம்பித்துவிடுவார்கள். எல்டாம்ஸ் சாலையில் வரும்போது அவர்களுக்கே ஒரு டீ குடிக்க வேண்டுமென்று தோன்றினாலும் நோ பார்க்கிங்கில்தான் நிறுத்தியாக வேண்டுமென்பது அவர்கள் அறியாததல்ல. என்ன இப்போது? கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாமே.

நண்பருடையது புதிய கார். பழைய சாண்ட்ரோவைப் போட்டுவிட்டு ஐடென்னுக்கு மாறி மூன்று மாதங்கள்கூட ஆகியிருக்கவில்லை என்று சொன்னார். இப்பத்தான் முதல் சர்வீஸ் முடிச்சி எடுத்துட்டு வரேன்.

சேது விக்ரமின் கால் சிலம்பு மாதிரி தன் புதிய ஐடென்னுக்கு ஒரு கார்சிலம்பு அணிவிக்கப்பட்டிருந்த காட்சி அவரை மிகவும் வேதனைப் படுத்திக்கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது.

‘உங்க படமெல்லாம் பாத்திருக்கேன். எனக்கு ரொம்பப் பிடிக்கும். சார், ரோட்ல நிக்கறிங்களே, வேணா பேங்க் உள்ள வந்து உக்காருங்களேன்’ என்றார் திரு. திருவாங்கூர்.

‘இல்ல பரவால்ல. நான் அந்தப் பக்கம் போனதும் அவன் இந்தப் பக்கம் வந்துட்டு இல்லைன்னு திரும்பப் போயிடுவான். எதுக்கு ரிஸ்க்?’

அதற்குள் சாலையில் போகிற வருகிறவர்கள் பார்வையில் பட ஆரம்பித்து ஏழெட்டு பேர் நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். போலீஸ்காரன் வந்து சம்மன் நீட்டும் நேரத்தில் யாராவது ஆட்டோகிராஃப் கேட்கப்போகிறார்களே என்கிற கவலை அவர் முகத்தில் தெரிந்தது.

‘எதுக்கும் இன்னொரு போன் பண்ணிடுங்களேன்’ என்றேன் என் பங்குக்கு.

‘வந்துட்டிருக்கம் சார்! ஒன்வே பாருங்க. சுத்திக்கிட்டுத்தான் வரணும். டிராஃபிக் வேற’ என்றது எதிர்முனை.

‘இந்தப் பக்கம் வருவானா, அந்தப் பக்கம் வருவானா?’ என்று பெண்டுலம் மாதிரி சாலையின் இருபுறமும் திரும்பிக்கொண்டே இருந்தது அவரது சிரம்.

எப்படியும் பதினைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும்.

‘எல்லாரும் பண்ணாத தப்பை நான் பண்ணலை. ஆனாலும் நோ பார்க்கிங் கவனிக்காதது தப்புதான் இல்லே?’

‘ஏன் சார் உங்க தம்பி சௌக்கியமா? எனக்கு அவரை நல்லா தெரியும். கேட்டேன்னு சொல்லுங்க’ என்று ஒருத்தர் தன் பெயரை மட்டும் சொல்லிவிட்டு அவசரமாக எங்கோ போனார்.

‘நான் ஒருவாட்டி அமெரிக்கா போயிருந்தப்ப இதே மாதிரி ஆச்சு சார். ஆனா இப்படி வெயில்ல நிக்கவிடலை. அதிகாரமா மிரட்டலை. ஒரே நிமிஷம். வந்து ஹலோ சொல்லி, கை குலுக்கி சௌக்கியமெல்லாம் விசாரிச்சிட்டு, நூறு டாலர் ஃபைன்னு சீட்டு எழுதிக்குடுத்து வாங்கிட்டு போயிட்டான். இங்க என்னிக்கி அந்த மாதிரி ஒரு சிஸ்டம் வரும்?’

சமூகக் கவலைகள். காவலர்கோமான் சீக்கிரம் வந்துவிட்டால் நல்லது என் இறைவா. என் நண்பர் கஷ்டப்படுவதைப் பார்க்க முடியவில்லை என்னால்.

எப்படியும் இருபத்தி ஐந்து நிமிடங்கள் நின்றிருப்போம். ஒருவழியாகப் பெரியதொரு லாரியில் கடமைவீரர்கள் வந்து சேர்ந்தார்கள்.

தூரத்திலிருந்தே நண்பரைப் பார்த்துவிட்டார் ஒரு சார்ஜெண்ட். அங்கிருந்தே வாயெல்லாம் புன்னகையாக ஒரு சல்யூட். அடடே, ரசிகர் போலிருக்கிறதே!

‘சாரி சார்! சாரி சார்!’ தூரத்திலிருந்தே அவர் உதடு அசைவதற்கு என் உள்மனம் டப்பிங் கொடுத்தது.

கொஞ்சம் குழப்பமாக இருந்தது. டப்பிங் சரியில்லையோ? நண்பரைப் பார்த்தேன். அவர் உதடு அசைந்த மாதிரி தெரியவில்லை.

சார்ஜெண்ட் இறங்கி ஓடிவந்தார். பூட்டைக் கழற்றி, காரை விடுதலை செய்தார். இன்னொரு சல்யூட் வைத்தார். லாரியில் இருந்த பிற கர்மவீரர்களும் நண்பருக்கு சல்யூட் வைத்தார்கள். நண்பர் அனைவருக்கும் பொதுவாக அரை நிமிடம் சிரித்துக்கொண்டே இருக்கவேண்டியதானது.

அதெல்லாம் சரி, ஃபைன்? மூச். பூட்டைக் கழற்றியாச்சு. சல்யூட் வெச்சாச்சு. போகவேண்டியதுதானே?

போயேவிட்டார்கள். நண்பர் பாக்கெட்டில் கைவிட்டதைக்கூட அவர்கள் கவனித்ததாகத் தெரியவில்லை. தரிசனம் போதாதா?

‘இத்தனவருஷம் சினிமாக்காரனா இருக்கறதுக்கு இதான் லாபம்’ என்று சொல்லிவிட்டுத் தலையில் அடித்துக்கொண்டு புறப்பட்டார் நண்பர்.

அமெரிக்காவில் அதிபர் வாரிசுகள் கூட அவ்வப்போது பல ஏடாகூடங்களில் மாட்டிக்கொண்டு ஃபைன் கட்டிய கதைகள் அசந்தர்ப்பமாக நினைவுக்கு வந்தன.

அமெரிக்கா குறித்த நண்பரின் கமெண்ட் நியாயமாக இந்த இடத்தில் வந்திருக்க வேண்டும்.

Share

15 comments

  • ரொம்ப மோசம் சார் நீங்க. மிஸ்டர் மியாவ் பாணியில் அந்த நண்பர் பற்றி ஒரு க்ளூவாவது கொடுத்திருக்கலாம் இல்லையா?

  • ஆக, பிரபலமானவர் என்றால் சட்டம் வளைந்து கொடுக்கும். சாமானியனாக இருந்தால் சட்டம் தன் கடமையைச் செய்யும்.

    நீதி ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

    எல்லோருக்கும் நீதி எப்போது சமமாக கிடைக்கும்?

  • உலகத் தீவிரவாதத்தை எண்ணெயோடு டால்டா கலப்பட நெய்யும் சேர்த்து விட்டு வளர்க்கும் ஒரு கேடு கெட்ட நாட்டில் இப்படி நடக்காமல் இருந்தால்தான் ஆச்சரியப்படவேண்டும்! சட்டம்தன் கடமையை சரியாக செய்யாத போது எழுத்தாளர்களாக தார்மீக ரீதியாக நீங்களும் உங்கள் நண்பரும் அவர்களுக்கு லஞ்சம் கொடுத்தே இருக்க வேண்டும்!

    வருத்தமளிக்கிறது! இந்த சமுதாயம் திருந்தாதா?

    :ப்

  • அப்பாடா! மேல இருந்த அந்த சினிமா போஸ்டர கிழிச்சு எறிஞ்சீங்களா! இப்பத்தான் லட்சணமா இருக்கு. 🙂

    • சுரேஷ், நீங்கள் எத்தனையாவ்து எதிரி என்று சரியாக நினைவில்லை. நான் வேண்டுமென்றே அதைப் போட்டுவைக்கவில்லை. புதிய டெம்ப்ளேட் பரிசோதனைக்காகச் செய்தது. திருப்பி மாற்ற அவகாசம் கிடைக்காதபடியால் அதுவே இருந்தது. கண்டனங்கள் வெகுவாக அதிகரித்தபடியால் சமூக நலன் கருதி இன்று மாற்றிவிட்டேன் 😉

  • Strong clues: Vetrilai seeval(well known), thambi(Maadhu-seenu),
    Crazy has appeared in films, vasanth has not. So, as many others pointed out and as Pa.Ra has hinted, the celebrity friend is Crazy Mohan!

  • பாருங்களேன்.. ஒரு சின்ன சம்பவத்தை சுவாரஸ்யமாய் விவரிக்கையில், அந்த நடை, மொழி எல்லாம் கவனிப்பற்று-அல்லது -முக்கியத்துவமற்று சொல்லாமல் விட்ட ஒரு விஷயம் எல்லார் கவனத்தையும் கவர்வதை!

    என்னை உட்பட.

  • //எத்தனையாவ்து எதிரி என்று சரியாக நினைவில்லை//

    உங்களுக்கு கூடவா? “ரத்தம் ஒரே நிறம்” நினைவுக்கு வருகிறது. ஒருவேளை “நிலமெல்லம் ரத்தம்” என்ற அக்கறையினால் கொடுத்துக்கொண்டுருக்கும் சிந்தனையில் இது போன்ற விஷயங்கள் நினைவில் இருந்து சீக்கிரம் மறைந்து விடும்.

    வளர்க நலமுடன்

    ஜோதிஜி

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி