பாயசத்தில் அப்பளம், சாம்பார் சாதத்துக்கு வெல்லம், காப்பியில் ஓமப்பொடி என்று மாறுபட்ட ருசி விரும்பும் நண்பர்கள் பலர் எனக்குண்டு. எனக்குத் தெரிந்த பெண் ஒருத்தி தயிர் சாதத்துக்கு நல்லெண்ணெய் ஊற்றிக்கொண்டு சாப்பிடுவாள். எனக்கே இம்மாதிரியான சில ஏடாகூடப் பழக்கங்கள் உண்டு. அது இருக்கட்டும். தோசைக்கு ஊறுகாய் தொட்டுச் சாப்பிடுவோர் யாரையாவது தெரியுமா?
பாரதியார் அப்படித்தான் சாப்பிடுவார் என்று அவரது மனைவி சொல்கிறார்.
//காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின்மேல் பெய்து தின்பார்.//
(1951ம் ஆண்டு செல்லம்மா பாரதி திருச்சி வானொலியில் ஆற்றிய உரை. அவரது ‘பாரதியார் சரித்திரம்’ நூலின் தொடக்கத்தில் இது இடம்பெற்றிருக்கிறது.)
புது ஊறுகாய் என்றால் மாங்காயை நறுக்கி உப்பு-காரம் போட்டுக் குலுக்கி வைக்கும் ஊறுகாயாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் தினம் தினம் இதர ஊறுகாய் வகைகளைத் தயார் செய்துகொண்டிருக்க முடியாது.
தயிர், நெய் பெய்து என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எனக்கே அப்படிச் சாப்பிடப் பிடிக்கும். ஆனால் ஊறுகாயைப் ‘பெய்தால்’ எப்படி இருக்கும்?
என். சொக்கன் தோசை அல்லது இட்லி சாப்பிடும் அழகைப் பார்த்திருக்கிறேன். இரண்டு தோசைகளுக்குக் குறைந்தது கால் கிலோ மிளகாய்ப்பொடி போட்டுக்கொண்டு சாப்பிடுவான். அதுதான் நிஜமான ‘பெய்து’. அதைப் போல ஊறுகாயைப் பெய்து தோசை உண்ண முடியுமா? அனுபவஸ்தர்கள் யாராவது இருந்தால் வந்து கருத்து சொல்க.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.