மழையும் மற்றதும்

கடந்த சில வாரங்களில் சென்னை நகரில் நான் இதற்குமுன் பார்த்திராத பல பகுதிகளுக்கு, படப்பிடிப்பு நிமித்தம் செல்ல வேண்டியிருந்தது. ஒரு சில இடங்கள் சென்னைக்குச் சற்று வெளியேயும் இருந்தன. எப்படி ஆனாலும் அதிகபட்சம் அரை மணி, முக்கால் மணி நேரத் தொலைவுக்குள் இருந்த இடங்கள்.

ஒரு சுமாரான மழைக்கு நகரம் எத்தனை நாசமாகிவிடுகிறது என்பதை இந்தப் பயணங்களின்போது கண்கூடாகப் பார்த்தேன். குறிப்பாக, போரூர், கெருகம்பாக்கம், முகப்பேர், விருகம்பாக்கம், ஆலப்பாக்கம், திருமங்கலம், கோயம்பேடு, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், பெரம்பூர் போன்ற இடங்கள் மனிதர்கள் வசிப்பதற்கே தகுதியற்ற பிராந்தியங்களாக இருக்கின்றன. எந்தச் சாலையிலும் வடிகால் வசதி கிடையாது. எல்லா சாலைகளும் தார் இல்லாமலேயேதான் இருக்கின்றன. பெரிய பெரிய பள்ளங்களும் திடீர் மேடுகளும் நான்கடிக்கு ஒருமுறையாவது அவசியம் எதிர்ப்படுகின்றன. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை நீர் தேங்கி ஏரி போல் இருக்கும் சாலைகளில், பள்ளம் மேடு பார்த்து வண்டி ஓட்டவே முடிவதில்லை. இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் விழுந்து விழுந்து நகர்ந்த காட்சிகளைத் திரும்பத் திரும்பக் காண நேரிட்டது. கோயம்பேடு என்ற பிராந்தியம் ஒரு நல்ல மழை நாளில் திருப்பாற்கடல் போல் காட்சியளித்ததைக் கண்டேன்.

இதில் பல இடங்களில் டிராஃபிக் சிக்னல்கள் பழுதாகி, போக்குவரத்து நெரிசல் வேறு. ஒரு நாள் போரூர் சிக்னல் தாண்டி மதனந்தபுரத்தை அடைவதற்கு எனக்கு ஒன்றே முக்கால் மணி நேரம் பிடித்தது. மிஞ்சிப்போனால் மூன்று கிலோ மீட்டர்!

இதனை இன்று எழுதக் காரணம், முந்தைய மழை முடிந்து ஒரு வாரத்துக்கு மேலாகி, இன்று அடுத்த மழை ஆரம்பித்திருக்கிறது. நேற்று மாலை வரைகூட நான் முன்னர் குறிப்பிட்ட இடங்களுள் சிலவற்றில் பழைய நீர்த்தேக்கம் அப்படியேதான் உள்ளது. ஏற்கெனவே மோசமான நிலையில் உள்ள சாலைகள், இம்மழைக்குப் பிறகு மேலும் மோசமாகி, நடக்கக்கூட முடியாத அளவுக்கு இருக்கின்றன. அவலம் பழகிய மக்கள் சகித்துக்கொண்டு போய்வந்தபடிதான் இருக்கிறார்கள்.

புதிய ஆட்சி, புதிய உள்ளாட்சி எது வந்தாலும் நகரின் இந்தக் கேடுகெட்ட சாலைகள் ஒருபோதும் மாறாது என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. ஆட்சியில் இருப்பவர்கள் தாம் ஆபீசுக்குப் போய்வரும் சாலைகளை மட்டும் அவ்வப்போது செப்பனிட்டு வைத்துக்கொள்வது வடிகட்டிய அயோக்கியத்தனம்.

இந்த ஒரு மாத காலம் விடாமல் ஊர் சுற்றியதில், ஓர் உண்மை தெரிந்தது. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு மக்கள் தொகையோ வாகனங்களோ அல்ல;  வாகனங்கள் நகரவே முடியாதபடிக்கு அடிக்கொருதரம் பிரேக் போடவைக்கும் மட்டரகமான சாலைகளே முக்கியமான காரணம்.

உடனே புதிய சாலைகள், எத்தனையோ கோடி ஒதுக்கீடு என்று சென்ற மழையின்போதே அறிவிப்புகள் வந்தன. ஆனால் எங்கும் வேலை நடப்பதாகத் தெரியவில்லை. இந்தப் புயல் கரை கடந்து அடுத்தது வருவதற்குள்ளாகவாவது ஏதாவது செய்தால் தேவலை.

Share

13 comments

  • வழக்கம் போல நகைச்சுவை பதிவு என எதிர்பார்த்தேன்.

    சீரியல் ஆரம்பித்ததில் இருந்து
    சீரியஸ் ஆகிவிட்டீர்களோ?

    இன்னும் எவ்வளவோ பார்க்கவேண்டியதுள்ளது.
    போட்டும் ரைட்……….

  • சரியான வழிதடம் இல்லாமை ஆக்கிரமிப்பு ஒழுங்காக திட்டமிடாத குடியிருப்பு paguthi அங்கே கட்டிடம் எழுப்ப லஞ்சம் என்று நம் மக்கள் மீது 75 % தவறு இருக்கிறது para சார்

  • மழை படுத்திய பாட்டிற்காக ஆட்சியில் இருப்பவர்களை எல்லாம் வாய்க்கு வந்த மாதிரி திட்டக்கூடாது…மூழையை கசக்கிப் பிழிந்து பல முயற்சிகளுக்குப் பின் அதிகமாக முதலிட்டு ஆட்சிக்கு வந்தது,ரோடு போடுவதற்குத்தான் என்று நினைத்தால் உங்களை கடவுள் தான் பொறுப்பேற்க வேண்டும்…

  • //வழக்கம் போல நகைச்சுவை பதிவு என எதிர்பார்த்தேன்.//
    //இந்தப் புயல் கரை கடந்து அடுத்தது வருவதற்குள்ளாகவாவது ஏதாவது செய்தால் தேவலை.//
    இது நகைச்சுவைப் பதிவுதான்.

  • நாம் கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை சார். ஒரு நகரத்தின் முதுகெலும்பே நல்ல சாலைகள் என்பதை அரசியலில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் உணர வேண்டும். இது நடக்கிற காரியமா ? தார் ரோடு மழையில் காணாமல் போகிறதென்றால் சாலையின் தரம் எப்படி உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். பாவம் சென்னை வாசிகள். எவ்வளவு இம்சைகளையும் சங்கடத்தையும் இடையூறையும் தாங்கிக்கொள்கிறார்கள். அவுங்க ரொம்ப நல்லவங்க.

  • //கோயிஞ்சாமி எண் 408

    வழக்கம் போல நகைச்சுவை பதிவு என எதிர்பார்த்தேன்.//
    இது நகைச்சுவைப் பதிவுதான்.
    இது நகைச்சுவைப் பதிவுதான். (நன்றி மாயன்)

  • வாருங்கள் ராகவன்,நீங்கள் சிட்னியிலிருந்து பல வருஷங்கள் கழித்து விடுமுறைக்காக சென்னை வந்துள்ளதாக கேள்விபட்டேன்.
    இங்கு உங்கள பதிவையும் படித்தேன்.பல வருடங்கள் வெளிநாட்டில் இருந்தவருக்கு இது விநோதமாக இருக்கலாம் ஆனால் இங்கேயே இருக்கும் எங்களுக்கு இது பழகிவிட்டது.மேலும் சென்னையில் சாலைகள் மிக மோசம என்பதையும் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.காரணம் சென்னையில் உள்ளவைகள் சாலைகளே அல்ல!மேடு பள்ளம உள்ள தரைகள்!!

  • சாலைகைள் பற்றிய உங்கள் ஆதங்கம் நியாயமானதே. அன்றாடம் இந்தச் சாலைகளில் பயணித்து அவதிப்படுபவர்களில் நானும் இருப்பதால் உங்களின் எழுத்தை மிக ரசிக்க முடிந்தது. மிக லேட்டாக இப்போதுதான் உங்களின் சென்ற பதிவைப் பார்த்தேன். இடைவிடாத புராஜக்ட்களின் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்… (திரைப்படமாவது உங்களின் ‘ரெண்டு’ நாவலா?)

  • //பார்த்தசாரதி ராகவன் என்னும் பாஸ்போர்ட் பெயர் கொண்ட நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, வாழ்வது அனைத்தும் சென்னை நகரில். சென்னை தவிர இன்னோர் இடத்தில் என்னால் ஒரு சில தினங்களுக்குமேல் இருக்க முடியுமா என்று எப்போது வெளியூர் போனாலும் சந்தேகம் வரும். இந்நகரின் சத்தம் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. இதன் அசுத்தமும் ஒழுங்கீனங்களும் அவசரமும் என் இயல்புக்குப் பெரிதும் பொருந்துகிறது. நான் சென்னையை விரும்புபவன். சென்னைக்காரன்.//
    உங்கள் அறிமுகம் பகுதியிலிருந்து…..எப்புடி…!!!! என்ன ஒரு டைமிங்… இல்ல…

  • மா நரக வாழ்க்கையில் மேடும் பள்ளமும் இருக்கத்தான் செய்யும் . நமக்கு எதுக்கு ஐயா சாக்கடை ஆராட்ச்சி (அரசியல் ) ! சீரியலில் சுண்டங்காய் பிரச்சனைகளுக்கு ஐந்தாறு பெண்கள் அழுது சிரித்து அலைந்து கொண்டிருப்பதை போடுங்க பார்ப்பது இன்றைய குடும்பக்கடமை .

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!