பாட்டு புஸ்தகம்

அடுத்த சனிக்கிழமை மாலை நிகழவிருக்கும் தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையோடு சேர்த்து பாட்டு புஸ்தகம் கிடைக்கும் என்று இன்று தெரியவந்தது.

இந்த பாட்டு புஸ்தக கான்செப்ட் இப்போது பெரிதாகப் புழக்கத்தில் இல்லை. முன்னொரு காலத்தில் என்னிடமே ஏராளமான பாட்டு புஸ்தகங்கள் இருந்தன. அட்டை என்று தனியாக இருக்காது. மட்டரக க்ரீமோ பேப்பரில் நடுவில் பின் அடித்து பிளாட்பாரத்தில் விற்பார்கள். இருபது காசு, நாலணா, ஐம்பது காசுகள் வரை விலை ஏறியது நினைவிருக்கிறது. கேளம்பாக்கம் ராஜலட்சுமி திரையரங்க வாசலில் நிறைய பார்த்திருக்கிறேன்.

டேப்ரெக்கார்டர் புழக்கத்தில் இருந்தாலும், வெகுஜன சாதனம் இல்லை அது. பாடல்களுக்கு ஆல் இந்தியா ரேடியோவை மட்டுமே அண்டியிருந்த காலம். ஞாயிற்றுக்கிழமை மாலை நாலு மணி சுமாருக்கு ஆரம்பித்து ஒரு மணி நேரம் சினிமா பாட்டாகப் போட்டுத்தள்ளுவார்கள். கையில் உள்ள பாட்டு புஸ்தகங்களை எடுத்து ரெடியாக வைத்துக்கொண்டு காத்திருப்பேன். என்னிடமுள்ள புத்தகங்களில் உள்ள பாடல் ஏதாவது ஒலிபரப்பானால் அது வரம். ரொம்ப சந்தோஷமாகிவிடும். ராத்திரி ஒன்பது மணிக்கப்புறமும் பாட்டு இருக்கும். ஆனால் கேட்கும் வாய்ப்பில்லை. நேரத்தில் படுத்து சீக்கிரம் எழுந்து படிக்கத் தொடங்குவதுதான் உத்தமம் என்பது சான்றோர் வாக்கு. நான் படிக்கிற பையனாக இல்லாது போனாலும் படுக்கிற விஷயத்தில் நேரம் கடைப்பிடிப்பவனாக இருந்தேன்.

மன்னாதி மன்னன், மதுரை மீட்ட சுந்தரபாண்டியன், வசந்த மாளிகைக் காலங்களின் பாட்டுப் புத்தகங்களைப் படித்து முடித்து, புவனா ஒரு கேள்விக்குறி, சிம்லா ஸ்பெஷல், துடிக்கும் கரங்கள் என்று அன்றைய என் சமகாலப் புத்தகங்கள் பலவற்றைக் கரைத்துக் குடித்திருந்தேன். கட்டக் கடைசியாகக் காளி படத்துப் பாட்டுப் புத்தகம் வாங்கினேன் என்று ஞாபகம். ஆனால் பாடல்கள் பிடிக்கவில்லை. பாட்டுப் புத்தகங்கள் வழக்கொழிந்து போனதற்கே அதுதான் காரணம். பாடல் வரிகளைவிட இசையே முக்கியம் என்னும் கருத்தாக்கம் உருப்பெற்று, வலுப்பெற்று, அலுப்புற்றுப் போகும்வரை பாட்டு புஸ்தகங்கள் புழக்கத்தில் இருந்தன. அப்புறம் ஒரு நன்னாளில் காணாமல் போய்விட்டன.

நான் சம்பந்தப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் இசைத் தட்டுடன் எனக்குப் பிடித்த பாட்டு புஸ்தக கான்செப்ட் சொருகப்பட்டிருப்பது, பார்த்தவுடன் சந்தோஷத்தைக் கொடுத்தது. நல்ல மொழுமொழுவென்ற காகிதத்தில் கலர் கலராக போட்டோவெல்லாம் போட்டு, புஸ்தகத்தை ஜோராக அச்சடித்திருக்கிறார்கள். பார்த்த கணத்திலேயே கண்ணில் பட்ட எழுத்துப் பிழைகளை அப்போதே மன்னித்து, மறந்துவிட்டேன். வைரமுத்து பார்த்துவிட்டு டோஸ் விட்டால் டைரக்டர் வாங்கிக் கொள்வார். எனக்கென்ன போச்சு?

Share

7 comments

  • நானும் பாட்டுப் புத்தகங்கள் தொகுத்திருக்கிறேன். 1980-களில் எம்ஜிஆர் நடிக்காததினால் சிவாஜி, ரஜினி படங்கள்தான் என் கலெக்‌ஷனில் இருந்தது. வெள்ளை ரோஜா (’வாடி, என் பொண்டாட்டி நீதானே’ என்ற நோபலுக்குப் போகவேண்டிய பாடல் இதிலிருந்து மனப்பாடம் செய்திருக்கிறேன் :)), பாயும் புலி, ராம் லஷ்மண் என்று பல ரகத்தில்.

    ஒரு முறை என் வகுப்பு ஆசிரியையும், இன்னொரு ஆசிரியையும் எங்களை ஏதோ கட்டுரை எழுத சொல்லிவிட்டு தாங்கள் ராகம் போட்டு ‘உண்டாயின் உண்டென்று மணம் கொள்ளுவோம்’ (இதுவும் சிவாஜி படம் என்று நினைக்கிறேன்) என்று பாடியது இன்னும் நினைவிருக்கிறது.

  • //இந்த பாட்டு புஸ்தக கான்செப்ட் இப்போது பெரிதாகப் புழக்கத்தில் இல்லை.//

    காளிக்கு பின்னர் நீங்கள், கேசட்டையோ சி.டியையோ பார்க்கவில்லை என்று தோன்றுகிறது.

    கேசட்டில் ரகுமான் காலத்திலேயே பாட்டு புஸ்தகம் வந்துவிட்டது.
    இப்போ
    சி.டியில் எந்திரனுக்கு கூட பாட்டு புஸ்தகம் இருந்தது.

    போகட்டும்,

    எஸ்ரா, நாஞ்சில் எல்லாம் திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதுவதாக கேள்வி….

    “பாட்டரசு” பாராவையும் விரைவில் எதிர்பார்க்கலாமா?

  • சார் நீங்க சினிமாவுக்கு பாட்டெழுதுங்க. உங்க பாடல் வரிகளில் வரலாறு கேட்கணும் சார்.

  • tell oviam solution to convert tamilpaper.net into a fluid width template…it is now in fixed width…also tell them to place tags in that site outwardly…people will not immediately see tags which are hiding within a tab…(people who dont know anything about templates only use fixed width templates)

    • ஈஸ்வர், அடுத்த டெம்ப்ளேட் கவரும்வரை இது நிச்சயம் நிரந்தரம்.

  • வேளச்சேரி ராஜலட்சுமி திரையரங்கை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    அங்கு இன்றும் மாலைக்காட்சி நேரங்களில் பாட்டு புத்தக நடைபாதைக் கடை செயல்படுகிறது

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter