நண்பர்களுக்கு வணக்கம்.
யதி வெளியானபோது அதற்கு மதிப்புரை எழுதிய இருபது வாசகர்களின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு மின்நூலாக வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தேன். விலையற்ற மின்நூலாக வெளியிட வழியுண்டா என்று போராடிப் பார்த்ததிலேயே நாள்கள் ஓடிவிட்டன. இன்றுவரை அதற்கான வாய்ப்பு டைரக்ட் பப்ளிஷிங் முறையில் வெளியிடுவதில் இல்லை. இப்படி வெளியிடுவதைத் தவிர எழுத்தாளர்களுக்கு இங்கு வேறு வழியும் இல்லை, குறைந்தபட்சம் இப்போதைக்கு.
எனவே யதி: இருபது பார்வைகள் மின்நூலை kdp-இன் குறைந்தபட்ச கட்டாய விலையான ரூ. 49 நிர்ணயித்து வெளியிட முடிவு செய்தேன்.
இன்று பின் இரவு அல்லது நாளை இம்மின்நூல் வெளியாகும். வெளியாகும்போதே ஐந்து நாள்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்படிச் செய்திருக்கிறேன். அதன்பின் 49 ரூபாய் காட்டும். அதற்குள் தரவிறக்கம் செய்துகொள்ளவும்.
ஆனால்,
- இம்மின்நூல் என்றும் கிண்டில் அன்லிமிடெடில் இருக்கும். அன்லிமிடெட் சந்தாதாரர்களுக்கு இலவசமாகப் படிக்கக் கிடைக்கும்.
- கிண்டில் மேட்ச் புக் ஆப்ஷன் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நீங்கள் அமேசான் வழியே அச்சுப் புத்தகம் வாங்கினால் இம்மின்னூலை இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ள இயலும்.
- Lending Option உள்ளது. நீங்கள் தரவிறக்கம் செய்து படித்தபின் உங்கள் நண்பர்களுக்கு 14 நாள்களுக்கு இதனை இலவசமாகத் தரலாம். (அதென்ன பதினான்கு நாள் என்று கேட்காதீர்கள். எனக்குத் தெரியாது.)
ஒரு நாவல் வெளியானதும் இத்தனைப் பேர் அக்கறையுடன் வாசித்து மதிப்புரை எழுதியது தமிழில் அநேகமாக இது முதல்முறை என்று நினைக்கிறேன். யதி பரவலான வாசக கவனம் பெற இம்மதிப்புரைகள் மிகவும் உதவி செய்தன. எழுதிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எழுத்தாளனே நிறுவனமாகவும் செயல்பட வேண்டிய காலக்கட்டத்தில் இத்தகைய வாசக ஆதரவு ஒன்றே தொடர்ந்து செயல்பட மானசீக பலம் அளிக்கிறது.
உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றி.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.