புவியிலோரிடம் வாசிப்பனுபவம் [பார்த்தசாரதி தென்னரசு]

எதேச்சையாக இன்று என்ன செய்யலாம் என்று நினைத்தவாறே ராசிபலனில் “அடுத்தவருக்காக பொறுப்பேற்காதே” என்ற எச்சரிக்கையை வாசித்துவிட்டு, நம்மால் ஆகவேண்டிய காரியம் ஒன்றும் இல்லை போல அலுவலகத்தில் என்ற தெளிவுடன்… கணிணியில் கிண்டில் ஆப்-பை திறந்து புத்தக வரிசையை துழாவி ஒரு வழியாக ‘புவியிலோரிடம்’ வாசிக்க தொடங்கினேன். ஏற்கனவே ஓரு நாள் முன்னுரையில் ஒரு பக்கம் வாசித்திருந்ததால், ஒரு யூகத்துடனேயே தொடங்கினேன்.

வாசுவின் குடும்பத்தினர் அனைவரும் எனக்கு பழக்கமாவதற்கு முன்பேயே அந்த குடும்பமும், அந்த சமூகமும் நான் இதுநாள் வரையில் நினைத்திருந்ததைக் காட்டிலும் என்னை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. எனக்கு இது போன்றதொரு துக்கம் வீடு திரைப்படம் பார்த்தபோது பாகவதரை திரையில் காணும் போதெல்லாம் வரும். இந்த குடும்பமும், இதேபோல எத்தனையோ குடும்பங்கள் இன்றும் சமூகத்தின் இருட்டேறிய மூலைமுடுக்குகளில் யாருக்கும் தெரியாமலேயே ஒடிங்கிப்போய்விடுகின்றன என்றுணர்ந்த மாத்திரம் என் தொண்டைக்குழிக்குள் ஏற்பட்ட அடைப்பு நான் மொத்த நூலையும் வாசித்து முடித்து வீடு வந்தும் என்னால் என் குடும்பத்தாரோடு சகஜமாக சில மணிநேரங்கள் ஆனது என்று நானே என்னை ஏமாற்றிக்கொண்டு இதனை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

நேற்று வரை பாராவை ஒரு ஜாலியான மனிதராகவும், மத்திய கிழக்கின் மேற்கத்திய அரசியலை தமிழக பாமரனும் எளிதில் விளங்கிக் கொள்ள பிறந்த ஓர் படைப்பாளி என்று தான் நினைத்திருந்தேன்.
ஆனால் வாசுதேவனும் அவருடைய குடும்பமும் என்னை என்னவோ செய்துவிட்டார்கள். ஒடுக்கபட்டவர்களின் வலியும் வேதனையும் எப்படிப்பட்டவை என்பதை நானும் அவர்களில் ஒருவனாய் வரதன் வீட்டிற்கு வந்த இரவில் அனைவரும் சேர்ந்து உணவருந்திய போது அருகில் இருந்தவாறே அவர்கள் உணவுண்ணுதைப் பார்த்தே பசியாறினேன்.
அண்ணன் வடக்கே சென்ற தருணம் என் தொண்டைக்குழிக்குள் இருந்த இறுக்கத்தை என் ஆன்மாவின் அடி ஆழத்திற்கே கொண்டு சேர்த்தது.
தான் கல்லூரியில் சேர்வதற்கு எடுத்த வழியினை தன் மன்னிக்கு எழுதிய இறுதிக் கடிதத்தில் , அது தன்னை எப்படி துரத்திச் சென்று தன்னுடைய அடையாளத்தை நிலைநிறுத்த செய்தது என்ற போது நானே வாசுதேவனாகிப் போனேன்.
இந்தியா ஒரு மிகப்பெரிய திறந்த லாட்ஜ் என்பது எத்தனை பெரிய உண்மை.
பிறந்த எல்லா மனிதனுக்கும் இப்புவியிலோரிடம் கண்டிப்பாய் ஒண்டிக்கொள்ள நிச்சயமுண்டு என்பதனை நான் உணர்ந்த தருணம், நிரந்தரமாக துக்கம் தொண்டையை அடைத்தேவிட்டது.

அத்துணைக்கும் நடுவே அந்த குடும்பத்தின் ஒற்றுமை நமக்கு உணர்த்தும் விஷயங்கள் எண்ணிலடங்கா.

பாராவை அவரின் எழுத்துக்களை இனிமேல் நான் அணுகும் பாங்கிலேயே ஓர் விவரிக்க முடியாத மரியாதையும் போற்றுதலும் என்றென்றும் நிலைத்திருக்கும்.
வாசுவின் அவர் குடும்பத்தின் மிச்சகாலமேனும் சந்தோஷமாக அமைந்திருக்காதா என்று ஏங்கி என்னுள்ளேயே இரண்டு சொட்டு கண்ணீர் விட்டிருந்தேன் தன்னிலையில்லாது.

-பார்த்தசாரதி தென்னரசு

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி