மறந்தும் இருந்துவிடாதீர்கள்!

சாக்கடை அடைப்புகள். தார் காணா வீதியின் மேடு பள்ளங்கள். குவியும் குப்பைகள். நாய்த் தொல்லை. பன்றித் தொல்லை. கொசுத் தொல்லை. பிளாட்பார ஆக்கிரமிப்புகள். மட்டரகமான குடிநீர் வினியோகம். மோசமான மழைநீர் வடிகால்.

அன்றாட வாழ்வின் அசகாயப் பிரச்னைகள் கடந்தவாரம் முழுதும் ஆட்டோ ஏறி வீதிவலம் வந்தன. உண்மையில் இந்த உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் கூம்பு மைக் ஆட்டோக்களில் உட்கார்ந்தபடிக்கு மேற்படி பிரச்னைகளை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டபோது, இவர்களுக்குத்தான் எத்தனை எத்தனை சமூகக் கவலைகள், வீட்டில் நாலு இட்லிகூட நிம்மதியாகச் சாப்பிட்டிருக்க மாட்டார்களே என்று துக்கம் துக்கமாகப் பொங்கிவிட்டது.

காலை கண் விழிக்கும்போதே வாசலில் நாளிதழுடன் நாலைந்து  துண்டுத் தாள்களில் எச்சரிக்கை வந்துவிடுகிறது. இதோ நான் வருகிறேன், வந்துகொண்டிருக்கிறேன், இன்று மாலைக்குள் வந்துவிடுவேன், கபர்தார்.

பகல் பதினொரு மணியளவில் அலுமினியம், பித்தளை, பிளாஸ்டிக் பொருள்களுக்கு சரவணா ஸ்டோர்ஸ் குரலில் அக்கம்பக்கத்துப் பிரச்னைகளைப் பட்டியலிட்டு, அனைத்துக்குமான சர்வரோக நிவாரணியாரின் பெயரைச் சொல்லி அவருக்கு வோட்டுப் போடக் கேட்டு ஆட்டோ போகிறது.

மதியத்துக்குள் இவ்வாறான ஏழெட்டு ஆட்டோக்கள் வந்துவிடுகின்றன. ஒவ்வொரு ஆட்டோவும் ஏனோ என் வீட்டு வாசல்தான் சுங்குவார்சத்திரமாக இருக்கிறது. வந்து வண்டியை நிறுத்திவிட்டுத் தலா பத்து நிமிடங்கள் உரையாற்றாமல் யாரும் புறப்படுவதே இல்லை. பால்கனியில் நின்றபடிக்குத் தப்பித்தவறியும் எட்டிப் பார்த்துவிடக்கூடாது. கீழிருந்தவாக்கில் யார் யாரோ முகம் தெரியாத சமூக சேவகர்கள் உச்சந்தலைக்கு மேலே கைகூப்பிவிடுகிறார்கள். பால்கனியில் நின்றபடி பதிலுக்கு வணக்கம் சொல்வது தமிழ் ஞான மரபில் தவறான செயல். இதற்காக ஒவ்வொரு முறையும் இருபத்தியெட்டு படிகள் இறங்கிச் சென்று வணங்குவதும் சாத்தியமில்லை.

எல்லா வேட்பாளர்களும் எல்லா வேட்பாளர்களின் வாகனாதித் தோழர்களும் ஒரு நேரத்தைக் குறித்துக்கொண்டு மொத்தமாக வந்துவிட்டால் பாதகமில்லை. ஒரே நடையாக இறங்கிப் போய் சாஷ்டாங்கமாகக் கூட விழுந்து சேவித்துவிட்டு வந்துவிடலாம். எப்படி இவர்களுக்குப் புரியவைப்பது?

பிற்பகல் நான்கு மணிக்கு மேலேதான் இந்த வீதியுலா சூடு பிடிக்கிறது. கட்டற்ற சத்தத்துடன் கூம்பு ஸ்பீக்கரில் பழைய திரைப்படப் பாடல்கள் முதலில் வருகின்றன. கொஞ்சம் வால்யூமைக் குறைத்தால் நிச்சயமாக ரசிக்க முடியும். ஆனால் இவர்கள் செய்வதில்லை. ஆட்டோவின் பின் சீட்டில் நான்கு பேர் ஒட்டிப் பிறந்தவர்களைப் போல் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒரு அவசர ஆத்திரத்துக்கு மைக்கை மாற்றிக்கொள்கிறார்கள். முன் சீட்டில் டிரைவருக்குப் பக்கத்தில் கண்டிப்பாக இன்னொரு துணை டிரைவர் இருக்கிறார். அவர் ஏனோ ஆட்டோவின் கூரையைத் தட்டிக்கொண்டே வருகிறார்.

பொதுவில், மனிதர்கள் நடக்கும் வேகத்தில்தான் இந்த ஆட்டோக்கள் வருகின்றன. எனவே அதன்கூடவே ஏழெட்டுப் பேர் நோட்டீஸ்களுடன் சைக்கிளில் வருகிறார்கள். வீடென்றால் இரண்டு. கடையென்றால் பத்து. அடுக்குமாடிக் குடியிருப்பென்றால் ஒரு கொத்து. அள்ளி வீசிவிட்டு இவர்கள் போவதுடன் ஆட்டம் முடிந்துவிடுவதில்லை.

பின்னாலேயே காலாட்படை ஒன்று வருகிறது. படையின் நடு நாயகமாக வேட்பாளராகப்பட்டவர் கைகூப்பிய வண்ணம் வருகிறார். பார்த்ததுமே உங்களுக்கு சொர்ணாக்கா ஞாபகத்துக்கு வந்தால் அது விதியின் பிழையே தவிர, வேட்பாளரின் பிழையல்ல.

ஒரு வேட்பாளர் எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல் தளத்துக்குப் படியேறி வந்துவிட்டார். காலிங் பெல் அடித்துக் கூப்பிட்டவரை மரியாதை கருதி உள்ளே அழைத்தேன்.

இந்தப் பகுதியில் பவர்கட் அதிகம் இருக்கிறது. மின்சார ஒயர்கள் அடிக்கடி அறுந்து விழுகின்றன. எங்குமே தார்ச்சாலை இல்லை. தவிரவும் குப்பை அள்ளுபவர்கள் வழியெங்கும் இறைத்துக்கொண்டே போகிறார்கள். சாலைகளில் போதிய விளக்குகள் இல்லை.  இருக்கும் விளக்குகள் எரிவதில்லை. இரவானால் நடமாட முடியாதபடிக்கு நாய்த் தொல்லையும் வழிப்பறித் தொல்லையும் இருக்கிறது. எல்லாம் எனக்குத் தெரியும். அனைத்துக்குமான ஒரே தீர்வு நான் இங்கே கவுன்சிலர் ஆவதுதான். மறந்துவிடாதீர்கள் என்று சொன்னார்.

நான் யோசிக்க ஆரம்பித்தேன். தண்டத்துக்குக் கடந்த பொதுத்தேர்தலில் நான் வோட்டுப் போட்டிருக்கவே வேண்டாம். புதிய ஆட்சியால் மின்வெட்டுப் பிரச்னை தீர்ந்தபாடில்லை. பொதுப்பணித் துறையால் இன்னும் சாலைகளை ஒழுங்கு செய்ய முடியவில்லை. எல்லாம் அப்படி அப்படியேதான் இருக்கிறது. பாலும் தேனும் ஃப்ரிட்ஜில்தான் பத்திரமாக இருக்கிறதே தவிர, இன்னும் பைபாஸ் சாலைகளில்கூட ஓட ஆரம்பிக்கவில்லை.

இந்த அம்மாளுக்கு ஓட்டுப் போட்டு கவுன்சிலராக்கிவிட்டால் மாநிலத்துக்கு முதல்வரேகூடத் தேவையிருக்காது போலிருக்கிறதே.

எதற்கும் இருக்கட்டும் என்று, ‘வேட்பாளப் பெருந்தகையே, மின்வெட்டு மாநிலம் தழுவிய பிரச்னை அல்லவா? நீங்கள் எப்படித் தீர்ப்பீர்கள் என்று மட்டும் சொல்லிவிடுங்கள். கண்டிப்பாக உங்களுக்காக நான் பிரசாரத்துக்கே வருகிறேன்’ என்று சொன்னேன்.

அவர் பதில் சொல்லவில்லை. ‘இதுல எல்லாம் எழுதியிருக்கு. படிச்சிப் பார்த்துட்டு ஓட்டு போடுங்க சார்’ என்று சொல்லிவிட்டு ஒரு ஏ நான்கு அளவுத் தாளைக் கையில் திணித்துவிட்டு அடுத்த வீட்டு அழைப்பு மணியை அழுத்தப் போய்விட்டார்.

நான் அந்த நோட்டீஸைப் படிக்க ஆரம்பித்தேன். யாரோ பிகாரி அல்லது ஒரியாக்காரர் எழுதிக்கொடுத்த தமிழ் நோட்டீஸ் மாதிரி இருந்தது. ஒருவேளை டப்பிங் சீரியல்களுக்கு வசனம் எழுதுபவராகவும் இருக்கக்கூடும்.

ஏன் நீங்கள் எனக்கு ஓட்டுப் போடவேண்டும்? நான் நல்லவன். வல்லவன். எப்போதும் பிராந்திய சிந்தனையுடன் செயல்படுபவன். கூப்பிட்ட குரலுக்கு வாட்ச்மேன் மாதிரி ஓடி வந்துவிடுவேன். முந்தைய கவுன்சிலரைப் போல ஆழ்வார் திருநகரில் வீடு கட்டிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுபவனல்லன்.

எல்லாம் சரி, மின்வெட்டுக்கு ஏதோ தீர்வு என்றாரே என்று திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தும் பயனில்லை. ஆஹா, தேர்தலுக்கு முன்னாலேயே ஏமாற்றங்களைப் பழக்கிவிட்டுவிட்டால் பிறகு அது கஷ்டமாயிராது என்னும் உயரிய தத்துவத்தைப் புரியவைக்கிறாரோ?

ஒரு விஷயம் கவனித்தேன். உள்ளாட்சி வேட்பாளர்கள் உண்மையிலேயே ரொம்பப் பாவம். ஆட்டோ இருந்தும் மைக் இருந்தும் ஆள்படை இருந்தும் அவர்களால் போதிய அளவுக்கு முந்தைய ஆட்சியின் அவலங்கள் என்று சாடிப் பேச முடிவதில்லை. எதெல்லாம் உள்ளாட்சி வரையறைக்கு உட்பட்டது, எது மாநில எல்லைகளைத் தொடுவது, எது தேசியப் பிரச்னை என்று பகுத்துப் பார்த்துப் பேசுவதில் அவர்களுக்கு அடிக்கடி குழப்பம் வந்துவிடுகிறது.

ஒரு வார்டு அளவிலான பிரச்னைகளை எடுத்து வைத்துக்கொண்டு வாழ்க்கை அளவிலான வார்த்தை வித்தைகள் புரிவது அத்தனை எளிதல்ல. மிகவும் திணறுகிறார்கள். திரும்பத் திரும்பக் குப்பை பிரச்னையைத்தான் எல்லா வேட்பாளர்களுமே பெரிதாகப் பேசினார்கள். ஆண்டுக் கணக்காக எங்கள் பிராந்தியத்தை அராஜக தாதாக்கள் போல் ஆக்கிரமித்து இம்சித்து வரும் சுமார் இரண்டு டஜன் தெரு நாய்களை ஒழிப்பது குறித்து ஒரு சில வேட்பாளர்கள் வாக்குறுதி தந்தார்கள்.

முந்தைய உள்ளாட்சித் தேர்தல் சமயத்திலும் இதையேதானே சொன்னீர்கள் என்று சும்மா போட்டுப் பார்த்தால், அது வேறு வேட்பாளர், அப்போது இருந்தது வேறு தலைமுறை நாய்களும்கூட என்று ஒரே போடாகப் போட்டுவிட்டுப் போனார் ஒருத்தர்.

வந்தவர்களில் சில சுயேச்சைகள் என்னைக் கவர்ந்தார்கள். ஒரு சுயேச்சை வேட்பாளர் ஆள் படை யாருமில்லாமல் சைக்கிளில் வந்து வாக்கு கேட்டார். இன்னொருத்தர், வாக்கு கேட்டுவிட்டுப் புறப்படும்போது சுவாமி பிரசாதம் என்று சொல்லி பாக்கெட்டிலிருந்து விபூதிப் பொட்டலத்தை எடுத்து, பிரித்து நீட்டி எடுத்துக்கொள்ளச் சொன்னது தமாஷாக இருந்தது. ஒரு பெண்மணி, சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றப் பாடுபடுவேன் என்று சொன்னதுதான் அனைத்துக்கும் உச்சம்.

ஏனோ பொதுத் தேர்தல் அளவுக்கு உள்ளாட்சித் தேர்தல்களை மக்கள் சுவாரசியமாக எதிர்கொள்வதில்லை. நியாயமாக இதுதான் நமக்கு மிகவும் நெருக்கமானது. ஒரு நல்ல கவுன்சிலர், பிராந்தியத்தின் சில அடிப்படைப் பிரச்னைகளையாவது முனைந்து தீர்த்துவிட முடியும். யார் அந்த நல்ல கவுன்சிலர் என்பதில்தான் பிரச்னை.

நேற்று மாலை என் நண்பர் ஒருவருடன் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, வேட்பாளர் ஒருவர் கபாலென்று பிடித்துக்கொண்டார். சுமார் பதினைந்து நிமிடங்கள் அவரது வீர உரையைக் கேட்டாக வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. இவர் மிகத் தெளிவாக, பேசவேண்டிய பிரச்னைகளை எழுதி மனப்பாடம் செய்து வந்திருந்தார். கவர்ச்சிகரமாக மேக்கப் எல்லாம் போட்டு, ஆள் பார்க்க ஒரு செகண்ட் ஹீரோ மாதிரி இருந்தார்.

என்னை யாரென்று அவருக்குத் தெரியாது. எப்படி அவரை எனக்குத் தெரியாதோ அப்படி. ஆனாலும் ஏதோ ஓர் அம்சம் அவரை நிறுத்தி என்னோடு வெகுநேரம் பேச வைத்திருக்கிறது.

பேசி முடித்துவிட்டு, புறப்படும்போது, மறந்துவிடாதீர்கள் சார் என்றார்.

நான் நிச்சயமாக அவரை மறக்கமாட்டேன். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் நிற்கும் வார்டில் எனக்கு ஓட்டு கிடையாது!

0

பி.கு: இது உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒருவாரம் முன்பு எழுதிய கட்டுரை. தேர்தல் தினத்தன்று நான் என் தொகுதியைவிட்டுப் பல காதம் தள்ளியிருந்தபடியால் இம்முறை வாக்களிக்க இயலாமல் போய்விட்டது.

Share

14 comments

  • வேட்பாளர்கள் என்னெவெல்லாம் பேசினார்கள் என்பதை விரிவாகவே எழுதியிருக்கிறீர்கள். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நான் டிவி சேனல் ஒன்றில் ஒரு பேச்சாளரின் பேச்சைக் கேட்டேன். தாங்கள் வென்றால் தமிழகத்தை வல்லரசாக மாற்றுவோம் என்று சொன்னாரே பார்க்கலாம்.இது எப்படி?

  • மிகச்சிறப்பு!!!

    ரிசல்ட் வர்ற வரைக்கும் போஸ்ட் பண்ணாம காத்திருந்தீர்களா-ன்னு கேக்க நெனச்ச சமயத்துல, சரியா வந்த பி.கு!!!

  • மறந்தும் இருந்துவிடாதீர்கள் என்றிருப்பது ஒட்டு கேட்டு வருபவர்களின் தொல்லையை தவிர்க்க வீட்டில் இருக்காதீர்கள் என்பதற்கா அல்லது நீங்கள் சொல்லிய // தேர்தல் தினத்தன்று நான் என் தொகுதியைவிட்டுப் பல காதம் தள்ளியிருந்தபடியால் இம்முறை வாக்களிக்க இயலாமல் போய்விட்டது// என்பதை கடைப்பிடிக்கவா?

  • இங்கும் நிறைய விசயங்கள் கண் எதிரே நடந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கின்றேன். சிரிப்பும் வேதனையும் ஆச்சரியமும்.

    அதிகமான வேலைப்பளூ. ஒவ்வொரு முறையும் நேரம் கிடைக்கும் என்ன எழுதியிருக்கீங்க என்று பார்த்து விட்டு செல்வேன்.

    ச்சும்மா விடலைங்க மாதிரி எழுதுகின்றேன் என்கிற நோக்கில் பார்க்கும் உங்கள் இந்த வலை எழுத்துக்களில் இந்த கட்டுரை கண்ணீரில் மிதக்கும் தேசம் என்ற கட்டுரைக்குப் பிறகு நாலைந்து முறை படிக்க வேண்டும் என்று தோன்றியது.

  • சென்னை சிங்காரச் சென்னை ஆக வேண்டாம்.
    சுத்தமான சென்னை ஆனாலே போதும்.

    புது புது மருத்துவகங்கள் கட்டுவது இருக்கட்டும்.
    தெருவில் மலைபோல் இருக்கும் நாற்றமெடுக்கும் குப்பை மேடுகளை
    அப்புறப்படுத்தினாலே சென்னையில் பாதி வியாதிகள் வராது.

    தேர்தல் முடிவுகள் தெரிந்த உடனேயே, புதிய மேயர் சென்னையை தூய்மைப் படுத்துவோம் என்று சொல்லியிருக்கிறார். மக்கள், குறிப்பாக, புற நகர்ப்பகுதிகளிலே வசிப்பவர்கள், சென்னையுடன் புதிதாகச்
    சேர்ந்த பகுதிகளிலே வசிப்பவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் முதலிலே அதுதான்.

    குப்பைகளை, சாக்கடை கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துவதிலே
    குடி தண்ணீர் குழாய்கள் சுத்தப்படுத்துவதிலே
    போர்க்கால அடிப்படையிலே கவனம் செலுத்துங்கள்.

    மக்களின் முதல் எதிர்பார்ப்பு இது ஒன்றே.

    சுப்பு ரத்தினம்.

  • சூப்பர் ஸடார் சார் நீங்க…. ஏன்ன அவரும் இந்த முறை ஓட்டு போடலை.

  • இந்த கொடுமையெல்லாம் பார்க்கும் போது தலைவர் சொன்னதை நினைத்து பாத்து மனச தேத்திக்க வேண்டியதான்
    “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா….”a

  • இது தினமும் வர்ற இம்சை இல்லை 5 வருஷத்துக்கு ஒரு தடவை வர்றது தானே. எனக்கு ஞாபகம் இருக்கு 20 வருஷத்துக்கு முன்னடி எங்க கிராமத்துல வேட்பாளர் வந்தா ஊரே அவரை பாக்கும் அவரும் எல்லாரையும் பாத்து கும்பிட்டுகிட்டே போவார். இப்போ வேட்பாளர் வந்தால் சின்ன பிள்ளை கூட அவரை திரும்பி பாக்க மாட்டேங்குது. அப்படி இருக்கு அரசியல் லட்சணம். பேசாம தேர்தல் நேரத்துல வெளியூர் போயிடுறது தான் நல்லது.

  • சூட்டிங்கா ! சொல்ல….வே இல்ல !
    ரவுண்டு கட்டி அடிக்கறீங்க ரைட்டர்.சிறப்பு.

  • neengal yen thirai vimrchanam ezhuthuvathillai pa ra?
    na thinamum vanthu selkiren..ne varuvatharkaga nan ezhudha mudiuma enru ketka vendam thalaiku(sujatha) aduthu enakku pidithavar neenga enpadhal.

  • ன் நிச்சயமாக அவரை மறக்கமாட்டேன். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் நிற்கும் வார்டில் எனக்கு ஓட்டு கிடையாது!//////////////////// ha ha ha ha ha ha

  • // ரொம்ப நாளாகிவிட்டது. என்னுடைய இணையத்தளத்தில் இந்த வாரம் என்னவாவது எழுதலாமென்றிருக்கிறேன்.//

    த.வெ.சுந்தரம் பற்றி எழுதலாம்; எழுத்தோடு நிற்காமல் இலவச டிக்கெட் கொடுத்தனுப்பலாம்; அல்லது குறைந்தபட்சம் ப்ரிவியூக்காவது கூப்பிடலாம்; அங்கு அஞ்சலி வந்தால் பார்க்கலாம் :).

    பிரதி உபகாரமா….

    எந்த தியேட்டரில் கடவுட் வைக்க வேண்டும் என்று சொல்லிவிடுங்கள். ஜமாய்ச்சிடுவோம்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி