பொலிக! பொலிக! 99

பிரம்மனின் முதல் நான்கு படைப்புகளுள் ஒருவரான சனத்குமாரர் பூமிக்கு வந்தபோது கால் பதித்த இடம் அது. கிருத யுகத்தில் அந்த மலையடிவாரத்தில் அவர் நாராயணனைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் அம்மலைக்கு அன்று நாராயணாத்ரி என்று பெயர். திரேதா யுகத்தில் நான்கு வேதபுருஷர்களையும் நான்கு சீடர்களாக வரித்துக்கொண்டு அங்கே வந்து வாசம் செய்தார் தத்தாத்ரேயர். மாபெரும் யோகி. அவர் அமர்ந்த இடத்தின் அருகிருந்த நீர்நிலை என்பதாலேயே அது வேத புஷ்கரணி என்று அழைக்கப்படலாயிற்று. மலையும் வேதாத்ரி என அப்போது வழங்கப்பட்டது. துவாபர யுகத்தில் மாடு மேய்த்துக்கொண்டு கண்ணனே அங்கு வந்தான். சனத்குமாரர் பிரதிஷ்டை செய்த நாராயண மூர்த்தியை அவனே வணங்கி ஆராதித்துவிட்டுப் போனான். யாதவ குலக்கொழுந்தின் வருகை அந்த மலையை யாதவாத்ரி ஆக்கியது. ஏதோ ஒரு மலையடிவாரம், எப்படியோ அங்கு திருமண் கிடைக்கிறது என்று கிளம்பி வரவில்லை. அனைத்தும் பெருமானால் திட்டமிடப்படுகிறது. நாம் யார்? சொன்னதைச் செய்யும் வேலையாள் என்பதைத் தவிர?

ராமானுஜர் திருநாராயணபுரத்தின் பூர்வ கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார். துக்கமும் ஆனந்தமும் ஒருசேரத் தாக்கியிருந்த நிலையில், பேசச் சொல்லின்றிக் கேட்டுக்கொண்டிருந்தார் டெல்லி சுல்தான்.

‘சுல்தானே, உன் மகள் உன்னைவிட்டுப் பிரிந்த துக்கம் சிறிது காலம் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்த உலகில் யாருக்குமே கிடைக்காத புருஷோத்தமன் அவளுக்குக் கணவனாகக் கிடைத்திருக்கிறான். நீ பரமாத்மாவுக்கு மாமனாராகியிருப்பவன். அதை எண்ணிப் பார்!’ என்றார் ராமானுஜர்.

‘புரிகிறது ஐயா. அவளது தெய்வீகக் காதலை நான் அறிவேன். ஆனால் குழந்தைதானே, வளர்ந்தால் சரியாகிவிடுவாள் என்று நினைத்தேன். அவளது காதல் பெருமான் உள்ளம்வரை சென்று தைத்திருக்கிறது என்பது பெருமையாகவும் நம்பமுடியாததாகவும் இருக்கிறது.’

‘இது நம்பமுடியாததல்ல மன்னா. எங்கள் ஊரிலும் ஒருத்தி இருந்தாள். கோதை என்று பெயர். பரிசுத்தமான அவளது பிரேம பக்தியே அவளை நாராயணனின் நெஞ்சக்கமலத்தில் கொண்டு சேர்த்தது.’

‘அப்படியா!’ என்றான் சுல்தான்.

‘இன்னொன்று தெரியுமா உங்களுக்கு? அந்தக் கோதை எங்கள் உடையவரின் தங்கை!’ என்றார் முதலியாண்டான். திடுக்கிட்டு உடையவரைப் பார்த்த சுல்தான் கண்ணில் மாளாத வியப்பு.

‘ஆச்சரியப்படாதீர்கள் சுல்தானே. தங்கைதான். ஆனால் இவருக்கு ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவள்.’

‘புரியவில்லையே ஐயா?’

‘சொல்கிறேன். வில்லிபுத்தூரில் பிறந்து அரங்கப் பெருமான் மீது மாளாத காதல் கொண்ட ஆண்டாள் அரங்கனோடு இரண்டறக் கலந்து போனவள். அவளுக்கு ஒரு ஆசை இருந்தது. பெருமானுக்கு நூறு அண்டாக்கள் நிறைய அமுது செய்து சமர்ப்பிக்கும் ஆசை. சிறுமியால் அன்று அதெல்லாம் எப்படி முடியும்? அந்த ஆசை நிறைவேறும் முன்னரே அவள் அரங்கனோடு இணைந்துவிட்டாள். சில வருடங்களுக்கு முன்னர் எங்கள் உடையவர் திருமாலிருஞ்சோலைக்க யாத்திரை சென்றபோது கோதையின் கனவை நிறைவேற்றி வைத்தார். நூறு தடாய் நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் என்று அவள் பாடியதைச் செய்து முடித்தவர் இவர்!’

‘அப்படியா?’

‘அதோடு முடியவில்லை. தன் விருப்பத்தை ஒரு தமையன் ஸ்தானத்தில் இருந்து நிறைவேற்றிய உடையவர், வில்லிபுத்தூரில் தனது சந்நிதிக்கு வந்தபோது, கருவறைக்குள் இருந்து எழுந்து வந்து அண்ணா என்று அவள் அழைத்ததை நாங்கள் அத்தனை பேரும் கண்ணாரக் கண்டோம் மன்னா!’

கரம் குவித்துக் கண்ணீர் உகுத்தான் சுல்தான். ஊர் திரும்பும் முன்னர் திருநாராயணபுரத்துப் பெருமாளுக்குப் பொன்னும் மணியும் அள்ளிக் கொடுத்துவிட்டுப் போனான். ‘என் மருமகன் கோயில் கொண்டிருக்கும் தலம் இது. என்றும் இந்நகரம் திருவிழாக்கோலம் கொண்டிருக்க வேண்டும்!’

அப்படித்தான் இருந்தது நகரம். எப்போதும் உற்சவம். எப்போதும் பெருமகிழ்ச்சி. எங்கு நோக்கினும் வேதபாராயணம். பாரதம் முழுவதிலும் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிய ஆரம்பித்தார்கள். நடந்த சம்பவங்கள் எட்டாத இடமில்லை என்றாயிற்று.

இப்போது திருவரங்கத்தில் இருந்தவர்களுக்கும் தகவல் எட்டி, உடையவர் மேல்கோட்டையில் இருக்கிற விவரம் தெரிந்துபோனது. உடனே கிளம்பி வந்து அவரைச் சந்தித்தவர்களிடம் ராமானுஜர் ஊர் நிலவரம் விசாரித்தார்.

‘எப்படி இருக்கிறது அரங்கமாநகர்? என் கூரேசர் எப்படி இருக்கிறார்?’

‘சுவாமி, மனத்தை திடப்படுத்திக்கொள்ளுங்கள். நடக்கக்கூடாததெல்லாம் நடந்துவிட்டது அங்கே.’

‘என்ன சொல்கிறீர்கள்?’

‘ஆம் சுவாமி. சோழன் கொடுமை பொறுக்காமல் கூரேசர் தமது கண்களைத் தாமே பறித்துக்கொண்டார். சோழன் பெரிய நம்பியின் கண்களைப் பிடுங்கி எறிந்துவிட்டான். வலி பொறுக்காத அம்முதியவர் கங்கை கொண்ட சோழபுரத்துக்கு அருகே காட்டில் உள்ள திருமேனியார் கோயிலில் தன் உயிரை விட்டார்.’

‘பெருமானே! மகாபூரணரான பெரிய நம்பி பரமபதம் அடைந்துவிட்டாரா!’ மூர்ச்சையாகிப் போனார் ராமானுஜர். அவரைத் தெளிய வைத்து, ஆசுவாசப்படுத்தி நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னார்கள்.

சோழனின் சபையில் இருந்து ஒரு பணிப்பெண்ணின் உதவியுடன் அத்துழாய் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்றது. திருமேனியார் கோயிலைத்தாண்டி பெரிய நம்பியால் பயணம் செய்ய முடியாமல் போனது. அங்கேயே கூரத்தாழ்வான் மடியில் தலை வைத்துக் கண்மூடியது.

பேச்சற்றுப் போனார்கள் ராமானுஜரும் சீடர்களும்.

‘அது மட்டுமல்ல சுவாமி. தங்களது ஆசாரியர்களான திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டான், திருக்கச்சி நம்பி, அரையர் போன்றோரும் எம்பெருமான் திருவடி சேர்ந்துவிட்டார்கள். இதையெல்லாம் தங்களுக்கு எப்படித் தெரிவிப்பது என்று தெரியாமல் ஆண்டுக்கணக்காகத் தவித்துக்கொண்டிருந்தோம். தங்கள் இருப்பிடம் எங்களுக்கு இப்போதுதான் தெரியவந்தது.’

உடையவர் ஒன்றும் பேசவில்லை. மகாத்மாக்களான தமது ஆசாரியர்களுக்குத் தாம் செய்ய வேண்டிய கிரியைகளைச் செய்து முடித்தார். ‘துயரங்களில் துவள்வது வைணவன் லட்சணமல்ல. வாழ்ந்த காலத்தில் மகத்தான பணிகளை நிறைவேற்றியவர்கள் அவர்கள். எம்பெருமான் அவர்களைத் தன் பக்கத்தில் இருத்திக்கொள்ள விரும்பியதில் வியப்பென்ன?’

‘ஆனால் கூரேசர் என்ன ஆனார்? அதைச் சொல்லவில்லையே?’ என்று பதைப்புடன் கேட்டார் முதலியாண்டான்.

‘அவர் இப்போது திருவரங்கத்தில் இல்லை சுவாமி. உடையவர் இல்லாத இடத்தில் எனக்கு வேலையில்லை என்று சொல்லிவிட்டு, திருமாலிருஞ்சோலைக்குக் குடிபோய்விட்டார்.’

ராமானுஜர் உடனே தமது சீடர்களுள் ஒருவரான சிறியாண்டானை அழைத்தார். ‘உடனே மாலிருஞ்சோலைக்குக் கிளம்புங்கள். கூரேசர் எப்படி இருக்கிறார் என்று நேரில் சென்று பார்த்து வந்து தகவல் சொல்லுங்கள். நான் அவரைச் சந்தித்தாக வேண்டும்.’

சிறியாண்டான், மாலிருஞ்சோலையை அடைந்த நேரம், சோழ மன்னன் குலோத்துங்கன் இறந்துவிட்ட செய்தி அங்கு வந்து சேர்ந்தது.

(தொடரும்)

Share