பொலிக! பொலிக! 98

ஊர் திரண்டுவிட்டது. மன்னன் விஷ்ணுவர்த்தன் தனது முழுப் பரிவாரங்களுடன் முன்னால் வந்து நின்றான். இங்கே உடையவர். அங்கே அவர் நியமித்த சிம்மாசனாதிபதிகள். தவிரவும் கோயில் கைங்கர்யத்துக்கெனப் பிரத்தியேகமாக அவர் அமர்த்தியிருந்த ஐம்பத்தி இரண்டு பேர் கொண்ட நிர்வாகக் குழு. சீடர்களும் பக்தர்களும் முண்டியடித்தார்கள்.

ராமானுஜர் அமைதியாகப் பேச ஆரம்பித்தார். ‘மனிதர்களில் வேற்றுமை பார்ப்பதே மகாபாவம். இதில் பக்தர்களுக்குள் பிரிவினை ஏது? மண் கண்ட உயிர்கள் அனைத்தும் பரமாத்மாவின் படைப்பு. இவன் மேல் அவன் கீழ் என்பது வாழும் விதத்தால் மட்டுமே வருவது. செல்லப் பிள்ளையின் அருளாட்சி நடைபெறவிருக்கிற இத்தலத்தில் எந்நாளும் சாதிப் பிரிவினை வரக்கூடாது. கோயில் அனைவருக்கும் சொந்தம். அனைவருக்கும் கோயிலுக்குச் செல்ல உரிமை உண்டு. கைங்கர்யங்களில் பங்குண்டு!’

நாங்கள் தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லி ஒதுங்கி நிற்கப் பார்த்த கிராமத்து மக்கள் மெய் சிலிர்த்து நின்றார்கள். ‘ஐயா நீங்கள் யார்? இப்படிக் கடலளவு பரந்த மனம் இவ்வுலகில் வேறு யாருக்கு உண்டு? காலகாலமாகத் தீண்டத்தகாதவர் என்று சொல்லியே ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் நாங்கள். பிறர் சொன்ன வார்த்தைகள் காதில் நுழைந்து, புத்தியில் ஏறி அமர்ந்து அங்கேயே படிந்து தலைமுறை தலைமுறையாக எங்களை நாங்களே தாழ்த்திக் கருதப் பழகிப் போனோமே! அது தவறென்று இப்போதல்லவா புரிகிறது!’

‘மனத்தில் பக்தி. நடவடிக்கைகளில் ஒழுக்கம். நெஞ்சில் நேர்மை, உண்மை. துயரில் அவதிப்படும் யாரைக் கண்டாலும் ஓடோடிச் சென்று உதவுகிற சுபாவம். இவ்வளவுதான் வேண்டியது. இவை இருந்தால் நீ ஒரு வைணவன். வைணவனுக்கு இடமில்லை என்று எந்தப் பெருமான் சொல்லுவான்? வாருங்கள் கோயிலுக்கு!’

சொல்லிவிட்டு கம்பீரமாக அவர் முன்னால் நடக்க, அவர் பின்னால் திருக்குலத்தார் அத்தனை பேரும் வரிசையாக வணங்கியபடியே உள்ளே போனார்கள். உடையவரின் பரிவாரங்கள் அவர்களுக்குப் பின்னால் சென்றார்கள். அவர்களுக்கும் பின்னால் அரசன் போனான்.

அதற்குமுன் எக்காலத்திலும் எந்த தேசத்திலும் நடவாத அதிசயம் அன்று திருநாராயணபுரத்தில் நடந்தது. யாரைத் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைத்திருந்தார்களோ, அவர்கள் முதல் முதலில் ஆலயப் பிரவேசம் செய்தார்கள். வானம் இடிந்து விழவில்லை. வையம் புரண்டு கவிழவில்லை. காற்று வீசுவது நிற்கவில்லை. ஒளி மங்கிப் போகவில்லை. ஆலயக் கதவுகள் அகன்று திறந்தன. ‘வாரீர் என் பரம பக்தர்களே!’ என்று திருநாராயணன் அவர்களை ஏந்திக்கொண்டான்.

‘சுவாமி! இன்று புத்தி தெளிந்தோம். இனி பிரிவினை பேசமாட்டோம். பாகவத இலக்கணம் புரியவைத்த தாங்கள் இத்தலத்திலேயே தங்கியிருந்து என்றென்றும் எங்களைக் காக்க வேண்டும்!’ என்று கரம் குவித்தான் விஷ்ணுவர்த்தன்.

சட்டென்று ஒரு குரல் கலைத்தது. ‘பாகவத இலக்கணம் புரிந்தது இருக்கட்டும். என் மணாளனைக் கொள்ளையடித்துக் கொண்டு வந்து இங்கு வைத்தது எந்த விதத்தில் பாகவத தருமம்?’

சபை அதிர்ந்தது. அங்கே ஒரு பெண் நின்றிருந்தாள். பெண்ணல்ல, சிறுமி. முக்காடிட்டு முகம் மறைத்த முஸ்லிம் சிறுமி. அவள் பின்னால் டெல்லி சுல்தானின் வீரர்கள் சிலர் வேல் தாங்கி நின்றிருந்தார்கள்.

‘என்ன பிரச்னை குழந்தாய்?’ என்றார் ராமானுஜர்.

‘நீங்கள் எடுத்து வந்த விக்கிரகம் என்னுடையது. நான் இல்லாத சமயத்தில் என் தந்தையை ஏமாற்றிக் கவர்ந்து வந்துவிட்டீர்கள். என்னால் அவனை விட்டுப் பிரிய முடியாது ஐயா. தயவுசெய்து கொடுத்துவிடுங்கள்!’ என்று கண்ணீருடன் பேசினாள் அந்தச் சிறுமி.

சுல்தானின் வீரர்கள் விவரம் சொன்னார்கள். அவள் சுல்தானின் ஒரே மகள். அரண்மனையில் உள்ள அத்தனை விக்கிரகங்களுள் அந்தக் குறிப்பிட்ட விக்கிரகம்தான் அவளைக் கவர்ந்தது. நாளும் பொழுதும் அதை வைத்துக்கொண்டு அதனோடே பேசிக்கொண்டிருப்பாள். தான் உண்ணும்போது அதற்கும் உணவு ஊட்டுவாள். உறங்கும்போது அருகே கிடத்திக்கொள்வாள். தான் குளிக்குமுன் அதற்கு அபிஷேகம் செய்வாள். ஆடை அலங்காரங்கள் செய்து அழகு பார்ப்பாள். அவளுக்கு அது சிலையல்ல. விக்கிரகமல்ல. உயிரும் உணர்வும் உள்ள ஒரு மனிதன். உள்ளம் கவர்ந்த கள்வன்.

ராமானுஜர் வியந்து போனார். ‘சிறுமியே, இது இந்தக் கோயிலின் உற்சவ மூர்த்தி. யுத்தத்துக்கு வந்தபோது உன் தந்தையோ அவரது முன்னோர் யாரோ இங்கிருந்து இந்த விக்கிரகத்தைக் கவர்ந்து சென்றிருக்கிறார்கள். நீ புரிந்துகொள்ள வேண்டும்.’

‘எனக்கு அதெல்லாம் தெரியாது. இவன் என் காதலன். என்னை மணந்துகொள்வதாகச் சொல்லியிருக்கிறான். இவன் இருக்கும் இடத்தில்தான் நான் இருப்பேன். என்னோடு இவனை அனுப்பிவைக்க உங்களுக்கு விருப்பமில்லாவிட்டால், இங்கேயே நானும் இருந்துவிடுவேன்!’ என்றாள் தீர்மானமாக.

கூட்டம் குழம்பிப் போனது. இப்படியொரு சிக்கல் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. டெல்லி சுல்தானின் மகள் விக்கிரகத்தைத் தர மறுக்கிறாள். ஏதோ ஒரு நல்ல மனநிலையில் கொடுத்தனுப்பிவிட்ட சுல்தான், இப்போது மகளையே அனுப்பி, திருப்பிக் கேட்டிருக்கிறான். மாட்டேன் என்று சொன்னால் கவர்ந்து செல்ல அவனுக்கு கணப் பொழுது போதும். முடியாது என்று மறுத்தால் யுத்தம் வரும். என்ன செய்வது?

உடையவர் யோசித்தார். ‘சிறுமியே, உன் தந்தை உள்பட அரண்மனையில் அனைவருக்கும் என்ன நடந்ததென்று தெரியும். நான் இந்த விக்கிரகத்தைக் கேட்டது உண்மை. ஆனால் என் செல்லப் பிள்ளையான இவன், தானே தவழ்ந்து வந்துதான் என்னிடம் சேர்ந்துகொண்டான். அப்படியானால் அவன் விருப்பம் என்னவென்று புரியவில்லையா?’

‘ஓஹோ. அவனே வந்து உங்கள் மடிமீது ஏறிக்கொண்டான். அவ்வளவுதானே? இதோ நானே அவனிடம் செல்கிறேன். என்னை இறக்கிவிட்டுவிடுவானா? அதையும் பார்க்கிறேன்!’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று சன்னிதியை நோக்கி விரைந்தாள்.

சில வினாடிகள்தாம். என்ன நடக்கிறது என்பது முழுதும் புத்தியில் தெளிவாகும் முன்னர், சன்னிதிக்குள் நுழைந்த சிறுமி, செல்லப் பிள்ளையை இறுகக் கட்டிக்கொண்டாள். ‘டேய், நீ என் சொந்தம். இவர்கள் யார் நம்மைப் பிரிப்பதற்கு? எடுத்துச் சொல்லு உன் ராமானுஜருக்கு!’ என்று ஆவேசமாகக் கூறியபடியே விக்கிரகத்தின்மீது தன் பிடியை இறுக்கினாள்.

அடுத்த வினாடி அவள் விக்கிரகத்துக்குள் ஒடுங்கிக் கரைந்து காணாமல் போனாள்!

உடையவர் கரம் கூப்பினார். ‘இது அவன் சித்தம். சொன்னேனல்லவா? பக்தி நெஞ்சுக்கு பேதமில்லை. சுல்தான் மகளானால் என்ன? அவள் நம் பெருமானின் நாயகி. இனி பீபி நாச்சியாராக அவளும் இங்கு கோயில் கொள்ளுவாள்!’

(தொடரும்)

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!