ருசியியல் – 14

சென்ற வாரக் கட்டுரையின் கடைசி வரியில் இரண்டு திருப்பதி லட்டுகளைப் பிடித்து உட்கார வைத்திருந்தேன். அதைச் சாப்பிட்டு முடித்த பிறகுதான் உண்டதெல்லாம் போதும் என்ற ஞானம் உதித்ததைச் சொன்னேன். திருப்பதி பெருமாள் கேட்டதெல்லாம் தருவார் என்பார்கள். திருப்பதி லட்டு கேட்காத ஒன்றைத் தரும் என்று அன்றுதான் எனக்குப் புரிந்தது. ஞானம் கிடக்கட்டும். அந்த லட்டைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்.

இந்தப் பூவுலகத்தில் கிடைக்கிற அத்தனை சுவைகளையும் ஒரு தட்டில் வைத்து எதிர்ப்புறம் ஒரு திருப்பதி லட்டை வைத்தால் நான் இரண்டாவதைத்தான் எடுப்பேன். இத்தனைக்கும் லட்டு என்பது எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத வஸ்து. சமூகத்தில் யாருக்குமே ருசியான லட்டு பிடிக்கத் தெரியவில்லை என்பது என் அபிப்பிராயம். அதுவும் கல்யாண வீட்டு லட்டு என்பது ஒரு காலக்கொடுமை. எண்ணெயில்தான் பொரிக்கிறானா, க்ரூடாயிலைக் கொண்டு கொட்டுகிறானா என்று எப்போதும் சந்தேகாஸ்பதத்தோடே அணுகவேண்டியிருக்கும். நிஜ லட்டின் ருசியானது மிகச் சில இடங்களில் மட்டுமே தரிசனம் கொடுக்கும். பெரும்பாலும் சேட்டுக் கடைகளில்.

அடிப்படையில் லட்டின் பிறப்பிடம் குஜராத் என்பது இதற்கொரு காரணமாக இருக்கலாம். அங்கே அதனை மோத்திசூர் லாடு என்பார்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டு குஜராத்திய இலக்கியங்களில் ஆதி லட்டு பற்றிய குறிப்புகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். கடலை மாவு, சர்க்கரைக் கரைசல் (கம்பிப்பாகு முக்கியம்), நெய், திராட்சை, ஏலம், முந்திரி. அவ்வளவுதான். எளிய ஃபார்முலாதான் என்றாலும் செய்முறை அத்தனை எளிதல்ல.

இந்தக் கம்பிப்பாகு என்பது ஒரு பேஜார். கொஞ்சம் முன்னப்போனால் ஒட்டாது. அரை வினாடி தாமதித்துவிட்டாலும் லட்டின்மீது ஓர் உப்பளம் ஏறி உட்கார்ந்துவிடும். லட்டில் சர்க்கரை படிவதென்பது பார்க்கக் கண்ணராவியான சங்கதி. அதைத் தின்று தீர்ப்பது அதைவிட ஆபாசம். (இதே ஆபாசம் பாதுஷாவிலும் அடிக்கடி நிகழும்)

ஒரு முறை பெங்களூருக்குச் சென்றிருந்தபோது எம்டிஆரில் சாப்பிட்டேன். அங்கிருந்த மாஸ்டர் ஒருத்தர்தான் அந்தப் பதத்தைப் பற்றிச் சொன்னார். சர்க்கரையைக் காய்ச்சும்போது மெல்லிய மெரூன் நிறத்துக்கும் முழுத் தங்க நிறத்துக்கும் நடுவே ஒரு பாதரச நிறம் சில வினாடிகளுக்கு வரும். அந்த நிறம் தென்பட்டதும் அடுப்பை அணைத்துவிட வேண்டும். லட்டுப் பாகுப் பதம் என்பது அதுதான். இந்தப் பதத்தின் சூத்திரதாரிகள் திருப்பதியில் இருக்கிறார்கள் என்பதும் அவர் சொன்னதுதான்.

உண்மையில் லட்டு கண்டுபிடிக்கப்பட்டு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் திருப்பதி லட்டு என்ற இனமே உருவானது. சரியாகச் சொல்லுவதென்றால் பதினெட்டாம் நூற்றாண்டு. அதற்கு முன்னால் வண்டிச் சக்கரம் மாதிரி பிரம்மாண்டமான வடைகளும் வெண் மற்றும் சர்க்கரைப் பொங்கலும்தான் திருப்பதி பிரசாதம். இப்போதும் உண்டென்றாலும் லட்டு பிறந்த பிறகு வடை, பொங்கல் வகையறாக்களின் மவுசு அங்கே குறைந்துவிட்டது.

திருப்பதியில் லட்டு பிடிப்பதற்கென தனியாக ஒரு சமையல்கூடம் இருக்கிறது. பொட்டு என்று அதற்குப் பேர். சம்மந்தமில்லாத யாரையும் அங்கே உள்ளே விடமாட்டார்கள். முன்னொரு காலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் இந்த லட்டு பிடிக்கும் ஜோலி பார்த்தார்கள். இப்போது அதெல்லாம் கிடையாது. தினசரி ஏழாயிரம் கிலோ கடலை மாவு, பத்தாயிரம் கிலோ சர்க்கரை, எழுநூறு கிலோ முந்திரி, நாநூறு லிட்டர் நெய் என்று புழங்குகிற பேட்டைக்கு எத்தனை பேர் இருந்தால் கட்டுப்படியாகும் என்று யோசிக்க ஆரம்பித்தால் லட்டை மறந்துவிடுவோம்.

நமக்கு நபர்களா முக்கியம்? அந்த லட்டு எப்படி அத்தனை ருசிக்கிறது என்று தெரிந்துகொள்ள ஒரு காலத்தில் ரொம்ப மெனக்கெட்டிருக்கிறேன். பெரும் போராட்டத்துக்குப் பிறகுதான் பதில் கிடைத்தது.

குஜராத்திக்காரர்கள் உள்பட லட்டு செய்வோர் அத்தனை பேரும் பொதுவாக பூந்தியை எண்ணெயில் பொரித்தெடுத்து சர்க்கரைப் பாகில் போடுவார்கள். திருப்பதிக்காரர்கள் கொஞ்சம் வேறு மாதிரி. அவர்கள் பூந்தி பொரிப்பதற்கே நெய்யைத்தான் உபயோகிக்கிறார்கள். தவிர ஒரு ஈடு பூந்தி எடுத்தாகிவிட்டால் மறுகணமே அடுப்பில் காயும் நெய்யை எடுத்துக் கீழே கொட்டிவிடுவார்கள். நெய்யாகப்பட்டது கொஞ்சம் கிறுக்குத்தனம் கொண்ட வஸ்து. கொஞ்சம் காய்ந்ததுமே அதன் வாசனை மாறத் தொடங்கிவிடும். வாசனை மாறிய நெய் என்பது பொய்யே அன்றி வேறில்லை.

திருப்பதியிலேயே தாயார் சன்னிதி லட்டுக்கும் மலை மீதிருக்கும் பெருமாள் கோயில் லட்டுக்கும் வித்தியாசம் உண்டு. எல்லாம் சேர்மான சதவீத மாறுபாடுகளால்தான்.

ஆச்சா? இப்போது விஷயத்துக்கு வருகிறேன். எனக்கு மிகச் சிறு வயதுகளில் இருந்தே திருப்பதி லட்டென்றால் ரொம்ப இஷ்டம். இதற்குக் காரணம் என் அப்பா.

எனக்கு நினைவு தெரிந்த நாளாக என் அப்பா ஒரு சர்க்கரை நோயாளி. என்னை மாதிரி உத்தம புத்திரர்கள் அவருக்கு மூன்று பேர் உண்டு. மூன்று உத்தமன்களை ஒழுங்காக வளர்க்கத் தான் முதலில் நன்றாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்து, அவர் சர்க்கரை சாப்பிடுவதை விட்டார்.

விட்டார் என்றால், முழுமையாக விட்டார். எப்பேர்ப்பட்ட மேனகை ஊர்வசியும் அவரைச் சலனப்படுத்திவிட முடியாது. காப்பிக்குச் சேர்க்கிற சர்க்கரை முதல் பொங்கல் பண்டிகைக்குச் செய்கிற அக்கார அடிசில் வரை எதையும் தொட்டுக்கூடப் பார்க்க மாட்டார். எனக்குத் தெரிந்து சுமார் நாற்பது வருடங்களாக இனிப்பு என்பதை எண்ணிக்கூடப் பார்க்காத ஒரு ஜென்மம் உண்டென்றால் இந்த உலகில் அது அவர் மட்டுமாகத்தான் இருப்பார்.

அப்பேர்ப்பட்ட பராக்கிரமசாலிக்கு ஒரே ஒரு பலவீனம் உண்டு. யாராவது திருப்பதி லட்டு என்று சொல்லிக் கொடுத்தால் மட்டும் ஒரு சிட்டிகை விண்டு வாயில் போட்டுக்கொள்வார். ஒரு சிட்டிகையில் என்ன கிடைத்துவிடும்? பிரசாதம் என்று புருடா விட முடியாது. ஏனென்றால் மற்ற கோயில் பிரசாதங்களையெல்லாம் அவர் சீந்தக்கூட மாட்டார். திருப்பதி லட்டென்றால் மட்டும் ஒரு சிறு விள்ளல்.

இதற்கு என்ன காரணம் என்று பலமுறை யோசித்துப் பார்த்திருக்கிறேன். அதன் ருசியைத் தவிர இன்னொன்று தோன்றியதில்லை. பிரச்னை என்னவென்றால் அவரால் அந்த ஒரு சிறு விள்ளலில் அந்த ருசியின் பூரணத்தைப் பெற்றுவிட முடிந்தது. எனக்கு ஒன்று இரண்டு மூன்று என்று லைன் கட்டி வைத்து முழுக்கத் தின்று தீர்த்தாலும் அரைத் திருப்திதான் வரும். தனிப்பட்ட முறையில் இது எனக்குப் பெரிய தோல்வி என்று தோன்றும். பன்னெடுங்காலம் போராடிப் பார்த்தும் என்னால் அந்த ஒரு துளி உலகை வெல்ல முடியவில்லை.

ஒவ்வொரு முறை திருப்பதி லட்டு உண்ணும்போதும் எனக்கு இந்த ஞாபகம் வந்துவிடும். சட்டென்று சுதாரித்துக்கொண்டு, ‘இன்றைக்கு ஒரு விள்ளலோடு நிறுத்திக்கொள்ளப் போகிறேன்’ என்று எனக்குள் சொல்லிக்கொள்வேன். ஆனால் ஒருநாளும் முடிந்ததில்லை. அது நப்பாசை அல்ல. பகாசுரத்தனமும் அல்ல. உணவின் ருசியை ஒரு வேட்டை நாய்போல் அணுகும் விதத்தின் பிரச்னை என்று தோன்றியது.

நீங்கள் அணில் சாப்பிடும்போது பார்த்திருக்கிறீர்களா? யாரோ கொள்ளையடித்துப் போய்விடுவார்கள் என்ற அச்சத்துடனேயேதான் அது சாப்பிடும். உண்பதில் அதன் வேகமும் தீவிரமும் வேறு எந்த உயிரினத்துக்கும் கிடையாது. ஆனால் ருசிகரம் என்பது தியானத்தில் கூடுவது. பண்டத்தில் பாதி, மனத்தில் பாதியாக இரு தளங்களில் நிற்பது. இதைப் புரிந்துகொண்டதால்தான் என் அப்பாவால் ஒரு விள்ளல் லட்டில் பரமாத்மாவையே தரிசித்துவிட முடிந்திருக்கிறது.

அது விளங்கியபோதுதான் என்னால் அனைத்தையும் விட்டொழிக்க முடிந்தது.

(ருசிக்கலாம்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter