சிரித்துத் தொலைக்காதே!

இன்றைய தினத்தை இரண்டு விருது அறிவிப்புகள் அலங்கரிக்கின்றன. சாகித்ய அகடமி விருது கவிஞர் புவியரசுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கலைஞர் பொற்கிழி விருதுகள் ச.வே. சுப்பிரமணியன், ஈரோடு தமிழன்பன், கு. சின்னப்ப பாரதி, ஆறு. அழகப்பன் ஆகியோருக்கு.

எந்த விருது அறிவிப்பும் எல்லோருக்கும் திருப்தியளிக்காதுதான். ஆனால் சமீப காலத்தில் இது விருது பெறுவோரைத் தவிர வேறு யாருக்கும் திருப்தியளிக்காத நிலையை எய்தியிருக்கிறது. எனவே வாழ்த்துக்கான ஒரு சந்தர்ப்பம் வருத்தங்களுடன் வீணாகிவிடுகிறது. இதனாலேயே, பெரிய விருது, சிறிய விருது, மதிப்புக்குரிய விருது, சாதாரண விருது என்ற பாகுபாடுகள் அநாவசியமாகிவிடுகின்றன. எதுவானாலும் அதிருப்தி. எதுவானால் என்ன?

தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் எதிலும் இத்தனை மோசமானதொரு சூழல் நிலவுவதாகத் தெரியவில்லை. எல்லா இடங்களிலும் லாபிகள் இருக்குமென்றாலும் படைப்புத் துறையில் அது இத்தனைத் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு வருடமும் சாகித்ய அகடமி, ஞானபீட விருதுகள் அறிவிக்கப்படும்போது அண்டை மாநிலங்களில் என் எழுத்தாளர் – பத்திரிகையாளர் நண்பர் வட்டத்தில் மென்மையாக அது பற்றி விசாரிப்பேன். விருது பெறுவோரின் தகுதி பற்றிப் பெரும்பாலும் தவறான அபிப்பிராயங்கள் எனக்கு வந்ததில்லை. குறிப்பிட்ட படைப்பாளிக்கு அளிக்கப்பட்டிருக்கும் விருது குறித்த பெருமிதத்தையே என் நண்பர்கள் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

எனக்கும் அவ்விதமான ஆசை உண்டு. நாலு பேருக்கு போன் செய்து, இன்னாருக்கு சாகித்ய அகடமி கிடைத்திருக்கிறது, அவருக்கு அந்த விருது, இவருக்கு இந்த விருது என்று பெருமையுடன் அறிவிக்க விருப்பமே. துரதிருஷ்டவசமாக அது எப்போதேனும் நேர்வதாக மட்டுமே உள்ளது. கட்டக்கடைசியாக மீரானுக்கு அகடமி விருது வழங்கப்பட்டபோது அம்மாதிரி பலருக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னேன் என்று நினைவு. அதன்பிறகு இல்லை.

விருது கமிட்டிகளுக்கும் கல்வியாளர்களுக்குமான உறவு அநாதியானது. அவ்வண்ணமே கல்வியாளர்களுக்கும் நவீன இலக்கியத்துக்குமான உறவும். சுட்டுப் போட்டாலும் அவர்கள் பாரதிதாசனைத் தாண்டி வருவதில்லை. அப்படியே வர நேர்ந்தாலும் கலைஞரிடம் வந்து மோதி விழுந்துவிடுகிறார்கள். அவரைத்தாண்டி யாரும் இலக்கியம் படைத்துவிட முடியாது என்பதில் அவர்களுக்கு எள்ளளவும் ஐயமிருப்பதில்லை.

தனி நபர்களைக் குறை சொல்லிப் பயனில்லை. இது கருவின் குற்றம். பண்டிதர்களையும் படைப்பிலக்கியவாதிகளையும் பிரித்துணரத் தெரியாதவர்களிடம்தான் பொதுவாக இம்மாதிரியான விருதுகளுக்கான பரிந்துரைகள் கோரப்படுகின்றன. அதைமீறி ஏதேனும் அற்புதம் நிகழும்போது அரசியல் நுழைந்துவிடும். அதையும் தாண்ட முடியுமானால் லாபிகள். இதற்காக வருத்தப்படுவதிலோ, கோபப்படுவதிலோ அர்த்தமில்லை.

நாம் செய்யக்கூடியது, இனி அகடமி விருதுகள் அறிவிக்கப்படும் தினத்தில் செய்தித்தாள் வாசிக்காதிருப்பதும் செய்திகளைக் கேளாமல் / பாராமல் இருப்பதும்தான். அதுவே உடல்நலனுக்கும் மன நலனுக்கும் உகந்தது.

அப்புறம் இந்தப் பொற்கிழி விருதுகள் – வேண்டாம். விருது பெற்ற அனைவருக்கும் நமது மனமார்ந்த வாழ்த்துகள் உரித்தாகுக. ஆனால், மாபெரும் படைப்பாளியும் புத்தகக் கண்காட்சியின் புரவலருமான நல்லி குப்புசாமி செட்டியாருக்கு இந்தாண்டாவது கிடைக்குமென்று நினைத்திருந்தேன்.

அந்த நினைப்பில் மண் விழுந்ததைத்தான் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

* இது தொடர்பாக ஜெயமோகன் எழுதியிருக்கும் பத்தி

* பத்ரி அளித்துள்ள தகவல்

Share

6 comments

 • கடந்த சில பல வருடங்களாக எல்லா விருதுகளின் நிலையுமே இப்படி தான் இருக்கிறது. திரைப்பட விருதுகள் தொடங்கி எல்லாவற்றிலும் இது தான் நிலை. ஆனானப்பட்ட நோபல் பரிசுக்கே இது தான் நிலைமைன்னு வேணா நாம சந்தோஷப்பட்டுக்கலாம்.
  நல்லி குப்புசாமி – மாபெரும் படைப்பாளி?

 • //மாபெரும் படைப்பாளியும் புத்தகக் கண்காட்சியின் புரவலருமான நல்லி குப்புசாமி செட்டியாருக்கு இந்தாண்டாவது கிடைக்குமென்று நினைத்திருந்தேன்//
  மாபெரும் புரவலர் என்பதை மட்டும் உண்மையாக ஏற்றுக் கொள்கிறேன். மாபெரும் படைப்பாளி???

 • விருது பெற்ற அனைவருக்கும் நமது மனமார்ந்த வாழ்த்துகள் . 

  ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் – பல வண்மைகள் செய்வோம்

  Vazhka பா. ராகவன் . Vazhthukkal

 • லஷ்மி ஹோல்ஸ்ட்ராம் என்ற மொழிபெயர்ப்பாளருக்கு ஒரு பரிசு கிடைத்தவுடன் வானத்திற்கும் பூமிக்கும் குதித்து வசை பாடினார் ஜெயமோகன்.தகுதியுள்ளவருக்கு எது கிடைத்தாலும் குறுங்குழு மனப்பான்மையைத் தாண்டி அதை பாராட்டும் பண்பு இங்கு எத்தனை எழுத்தாளர்களுக்கு உண்டு.இப்படி குதிக்கும் எல்லோரும் ஒராண்டு அடக்கி வாசித்தார்கள்- அந்த ஆண்டு ஒர் அதிகாரிக்கு  சாகித்ய அகாதமி பரிசு வழங்கப்பட்ட போது. அதை விமர்சித்தது நானறிந்தவரையில் ஞாநி ஒருவரே. இலக்கியவாதிகளின் அரசியல், அரசியல்வாதிகளின் அரசியலை விட கேவலமானது.  இது இனி மோசமாகவே ஆவதற்கு அனைத்து அறிகுறிகளும் தெரிகின்றன. புவியரசு தகுதியற்றவர் என்றே வைத்துக் கொள்வோம். தகுதியானவர்கள் யார் யார் என்று இலக்கியவாதிகளிடம் கேளுங்கள்.அப்போது தெரியும் அவர்களது அரசியல்.

 • தமிழில் படைப்பாளிகளே கிடையாது. சொந்தச்சரக்கில் யாரும் எழுதுவதில்லை என மறுபடி, மறுபடி தமிழை இழிவு செய்து கொண்டிருக்கிற சாகித்ய அகாடமி. வாழ்க. சாகித்ய அகாடமி விருது ‘வாங்கிய‘ புவியரசுவிற்கு வாழ்த்துகள்.
   
  – பொன்.வாசுதேவன்

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter