கொத்தனாரின் நோட்டுசு

என் நண்பர் இலவசக் கொத்தனாரின் இலக்கணப் புத்தகம் வெளியாவதில் எனக்குப் பிரத்தியேக மகிழ்ச்சி. இப்படி ஒரு புத்தகம் வரவேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசைப்பட்டவன் நான். அந்த ஆசாமியைப் பிடித்து தமிழ் பேப்பரில் எழுத வைத்தபோது முதலில் பலபேர் சந்தேகப்பட்டார்கள். இலக்கணமெல்லாம் யார் படிப்பார்கள் என்றார்கள். நல்லவேளை, ஏன் படிக்கவேண்டும் என்று யாரும் கேட்கவில்லை.

Tamil Elankkana Kaiyedu 1 copyகொத்தனாரின் புத்தகத்துக்குச் சில சிறப்புகள் உண்டு. முதலாவது யாரையும் இது பயமுறுத்தாது. இலக்கணத்தை இத்தனை எளிமையாகக்கூட சொல்லித்தர முடியுமா என்று வியப்பேற்படுத்தும். படிக்க ஆரம்பித்துவிட்டால் இன்னும் கொஞ்சம் வராதா என்று ஏங்க வைக்கும். ஒரு காலத்தில் நன்னன் செய்த காரியம்தான். கொத்தனார் அதை இன்னும் எளிமையாக்கி, தோளில் கைபோட்டுப் பேசுகிற தோழமை வாத்தியார் அவதாரம் எடுத்திருக்கிறார்.

இணையத்திலும் சரி, வெளியிலும் சரி. தமிழன் சலிக்காமல் கைமா பண்ணுகிற வஸ்து, தமிழிலக்கணம். எத்தனை விதமாக போதித்தாலும் சரக்கை உள்ளே ஏற்றிக்கொள்ளாமல் கவனமாகத் தப்பு செய்வதில் தமிழனுக்கு நிகர் யாருமில்லை. ட்விட்டரில் நண்பர்கள் செய்யும் பல தமிழ்ப் பிழைகளை அவ்வப்போது கொத்தனார் திருத்திக்கொண்டே இருப்பார். ஆர்வத்தில் சில சமயம் நானும் இந்தத் திருப்பணியில் [என்றால், தண்ட காரியம் என்று பொருள்]  ஈடுபட்டுவிடுவதுண்டு. ஆனால் பெரும்பாலும் அலுத்து சலித்து, தோற்றுத் திரும்புவதே வழக்கம். என்ன சொன்னாலும் கேட்காத விடாக்கண்டர்களால் நிறைந்தது வியனுலகு.

பிரச்னை இல்லை. கொத்தனாரின் இந்தக் கட்டுரைகள் இப்போது புத்தகமாக வருவதன் லாபம், இது பல பள்ளி மாணவர்களுக்குப் போய்ச் சேரும். அடுத்தத் தலைமுறையாவது அவசியம் உருப்படும்.

புத்தகக் கண்காட்சியில் லைன் கட்டி மாணவர்களை வழிநடத்திவரும் ஆசிரியப் பெருமக்களே, இந்தப் புத்தகத்தை உங்கள் மாணவர்களுக்கு வாங்கிப் படிக்க சிபாரிசு செய்யுங்கள். அதற்கு முன்னால் நீங்கள் ஒருதரம் வாங்கிப் படியுங்கள். ஒரு கணக்கப் பிள்ளை [லைன் மாறிட்டியாய்யா?]  எத்தனை எளிதாகத் தமிழிலக்கணம் சொல்லித்தருகிறார் என்று பாருங்கள்.

கோட்டு சூட் போட்ட கோமகனுக்கும் குமரித் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்று உதாசீனம் செய்யாதீர்கள். கோட்டு கோபியை ஏற்ற தமிழ்ச் சமூகம், இந்த கோட்டு கொத்தனாரையும் ஆதரித்து ஆவன செய்வதே தமிழிலக்கணம் தழைக்க வழி.

பிகு:- தவறின்றித் தமிழ் எழுத/ பேசக் கற்றுத்தருகிற இந்தப் புத்தகத்தின் பின்னட்டை வாசகங்களில் ஐந்து தவறுகள் இருக்கின்றன. என்னை நினைத்துக்கொண்டு மருதன் தலையில் ஓங்கி ஒரு குட்டு குட்டிக்கொள்ள வேண்டுகிறேன். அடுத்தப் பதிப்பில் அவற்றைச் சரி செய்யவும்.

கிழக்கு வெளியிட்டிருக்கும் இந்நூலை ஆன்லைனில் வாங்க இங்கே போகவும்.

Share

6 comments

  • //இந்த கோட்டு கொத்தனாரையும் ஆதரித்து ஆவன செய்வதே தமிழிலக்கணம் தழைக்க வழி//

    அப்படியே ஆகட்டும் 🙂

    அட்டைப்படத்தில் கோட் சூட் போட்ட கொத்தனாரும் அழகாகவே இருக்கின்றார்! #விமர்சனம்-1

  • பாரா, நீங்கள் கழுத்தில் கத்தியை வைத்து எழுத சொல்லியிராவிட்டால் இதனைச் செய்திருக்க மாட்டேன். அந்த விதத்தில் உங்களுக்குத்தான் எல்லா விமர்சனமும் சேரணும்.

    ஆயில்யா, உனக்கு கோட்டு சூட்டு மாட்டி விட்ட படம் என் கையில் சிக்காமலா போகும்.

  • அட்டைப்படத்தில் மோனிகாவின் படம் அருமையோ அருமை.நிச்சயம் புத்தக கண்காட்சியில் இந்த நூல் நன்றாக விற்கப்போகிறது….

  • இந்த புத்தக அறிமுகம் அதன் நோக்கம் சார்ந்து எனக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது. இது போன்ற முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டும், இந்த நூல் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற ஆவலுடன் இதை என் வலைபக்கத்தில் மீள்பதிவு செய்துள்ளேன். நன்றி!

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி