எனது பர்மா குறிப்புகள்

சமீபத்தில் நான் மிகவும் ரசித்துப் படித்த புத்தகம், செ. முஹம்மது யூனுஸ் என்பவரின் நினைவுக் குறிப்புகளாகத் தொகுக்கப்பட்டிருக்கும் ‘எனது பர்மா குறிப்புகள்’. பொதுவாக இம்மாதிரியான தலைப்புகள் உள்ள புத்தகங்களை நான் எடுக்கமாட்டேன். என்ன காரணம் என்று தெரியாது. என் பல புத்தகத் தேர்வுகளைத் தலைப்புகள் தீர்மானித்து வந்திருக்கின்றன. இதன் காரணம் பற்றியே ஜேஜே சில குறிப்புகளை, அதைப் பார்த்த நாள் தொடங்கிப் பலகாலம் கழித்தே வாசித்தேன். இது ஒரு பலவீனம்தான். ஆனால் இதுதான் நான்.

இந்தப் புத்தகத்தை எனக்கு இந்திரா பார்த்தசாரதி இரு நாள்கள் முன்னர் கொடுத்தார். பர்மாவில் பலகாலம் வசித்துவிட்டு, ஹாங்காங்குக்கு இடம்பெயர்ந்து சென்ற ஒரு வியாபாரப் பிரமுகரின் அனுபவங்களை விவரிப்பதுபோல் ஆரம்பிக்கிறது. தன்மையில் எழுதப்பட்டிருப்பதால் ஆரம்பத்தில் அப்படித் தோன்றுகிறது. ஆனால் ஒரு சில பக்கங்கள் நகர்வதற்குள்ளாக, இது ஒரு தனி நபரின் அனுபவங்கள் என்னும் தளத்திலிருந்து நகர்ந்து ஒரு தேசத்தின் கதையாக, ஒரு காலக்கட்டத்தின் சித்திரிப்பாக, பர்மாவில் வசிக்கும் தமிழர்களைப் பற்றிய இன வரைவியல் பிரதியாக மாறிவிடுகிறது. இன்னும் நன்றாக எழுதப்பட்டிருக்கலாம் என்று இறுதிவரை தோன்றிக்கொண்டே இருந்தாலும், நிச்சயமாக ஒரு  முக்கியமான புத்தகம் என்பதில் சந்தேகமில்லை.

பாகிஸ்தானைப் போல் பர்மா நமக்கு அண்டை நாடுதான். ஆனால் பாகிஸ்தான் அளவுக்கு நமக்கு அறிமுகமான தேசமல்ல. பர்மாவின் பெயரை அத்தேசத்தின் ராணுவ ஆட்சியாளர்கள் மியான்மர் என்று மாற்றி அறிவித்ததை நாளிதழ்கள்மூலம் அறிவோம். ஆனால் மியான்மர் என்பதுதான் மூலம், அது பாமர் என்று பேச்சு வழக்கில் உருமாறி, பர்மாவானதெல்லாம் நமக்குத் தெரியாது. இந்தப் புத்தகத்திலும் இந்த மாதிரி விவரங்களெல்லாம் கிடையாது. ஆனால், இன்றைய ராணுவ ஆட்சிக்காலத்துக்கு முந்தைய தலைமுறை பர்மா எப்படியெல்லாம் இருந்தது என்பதை மிக எளிமையான சில உதாரணங்களில் விளக்கிவிடுகிறார் ஆசிரியர்.

பர்மாவுக்கு இடம்பெயர்ந்த சீனர்களைப் பற்றி இப்படிச் சொல்கிறார்:

சீனர்கள் பர்மாவுக்கு வரும்போது ஒரு காவடியைப் போட்டுக்கொண்டு வருவார்கள். காவடியின் இரண்டு பக்கமும் கூடைகள் இருக்கும். அந்தக் கூடைகளுக்குள் மூங்கில் சீப்பு இருக்கும். கோழி இறகுக்குச் சாயம் அடித்துக் கட்டப்பட்ட மூங்கில் கழிகள் இருக்கும், தூசி துடைப்பதற்கானது. இவற்றைத் தூக்கிக்கொண்டு பர்மாவுக்குள் நுழைவார்கள். கொஞ்சநாளில் அவர்களது உடைகளை மாற்றிவிட்டுப் பர்மீய உடைகளைப் போட்டுக்கொள்வார்கள். சில நாட்களிலேயே பர்மீய மொழி பேசக் கற்றுக்கொள்வார்கள். பிறகு பர்மீயரோடு பர்மீயராகவே கலந்து விடுவார்கள்… கொஞ்ச நாட்களுக்குப் பிறகு பார்த்தால், எங்காவது காய்கறித் தோட்டம் போடுவார்கள், பணக்காரர்களாகிவிடுவார்கள். வாத்துகளை வளர்ப்பார்கள், பெரும் பணக்காரர்களாகி விடுவார்கள். பன்றிகளை வளர்ப்பார்கள், பின்பு அவர்கள் மேல் மட்டம்தான், கீழே கிடையாது. பர்மீயர்கள் அவர்களிடம் கைகட்டி வட்டிக்குப் பணம் வாங்குவார்கள்…

சீனர்களுக்கு நிர்ப்பந்தம் ஏதும் கிடையாது. அவர்கள் தாமாக பர்மாவுக்கு இடம்பெயர்ந்தவர்கள். இந்தியர்களைப் பொறுத்தவரை, அவர்கள் பிரிட்டிஷாரால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள். பர்மா சீனர்களை அவர்களது தொழில்மூலம் அறிமுகப்படுத்தும் ஆசிரியர், அங்குள்ள தமிழர்களைக் கோயில்களின்மூலம் அறிமுகப்படுத்துகிறார். செட்டியார்களும் அவர்கள் கட்டிய கோயில்களும். அப்புறம், பத்திரிகைகள். வெங்களத்தூர் சாமிநாத சர்மா நடத்திய பத்திரிகைக்கும் ஏ.கே. செட்டியார் நடத்திய பத்திரிகைக்கும் என்ன வித்தியாசம்? சாமிநாத சர்மாவின் பத்திரிகையில் வரலாற்றுச் செய்திகள் அதிகம் இருக்கும். பத்திரிகையோடுகூட சிறு சிறு புத்தக வெளியீடுகளையும் அவர் செய்வார். ஆனால் படிக்க ஆள் இருக்காது. ஏ.கே. செட்டியாரின் பத்திரிகையில் கப்பலில் சரக்கு ஏற்றும் நேரம், நதிப் போக்குவரத்தில் கப்பல்கள் புறப்படும், வந்து சேரும் விவரங்கள், ரயில் கால அட்டவணை, வங்கி வட்டி, நடப்பு வட்டி போன்ற தகவல்கள் மட்டும் இருக்கும். ஆனால், செட்டியார்கள் எல்லோரும் சந்தா கட்டியிருப்பார்கள்.

பர்மா, சொல்லிவைத்து மழை பொழியும் பூமி. விவசாயிகள் தேதி சொல்லி விதைப்புக்கும் அறுவடைக்கும் முன்கூட்டியே தயாராகிவிடுவார்கள் என்கிறார் ஆசிரியர். வளமைக்குப் பஞ்சமில்லாத மண். பிழைப்புக்காகப் புலம் பெயர்ந்த இந்தியர்கள், மெல்ல மெல்ல அனைத்துத் துறைகளிலும் முன்னேறி, உறுதியான பொருளாதார பலத்தைப் பெற்ற வேளை, பர்மியர்களுக்கு இந்தியர்களுடனான பகை தோன்ற ஆரம்பித்தது. உலகப்போருக்குச் சற்று முன்னதாகத் தொடங்கிய இந்தப் பகைக் காண்டத்துக்கு முன்னர் பர்மாவில் மக்கள் எத்தனை அன்பாக, ஒற்றுமையாக, பாசம் பொங்கப் பொங்க வாழ்ந்தார்கள் என்று ஆசிரியர் நினைவுகூரும் விதம் மிகவும் ரசமாக இருக்கிறது.

‘நமது பிள்ளைகளுக்குக் கண் வலிக்கிறது, முலைப்பால் வேண்டும் என்றால், பர்மீயத் தாய்மார்கள் பிள்ளைகளை மடியில் போட்டுக்கொண்டு கண்ணிலேயே நேரடியாகப் பாலைப் பீய்ச்சுவார்கள்.’

என்கிறார். ஆனால் அதே பர்மியர்கள்தாம் இரண்டாம் உலகப்போர் சமயம் ஜப்பான் பர்மாவைக் கைப்பற்றுவதற்குச் சற்று முன்னதாக இந்தியர்களைத் தேடித் தேடிக் கொன்று குவித்தவர்களும்கூட. ஒரு வகையில் ஜப்பானிய ராணுவம் பர்மாவுக்கு வந்தபிறகுதான் இந்தக் கொலைவெறிக் கூத்து சற்று குறைய ஆரம்பித்தது.

பிரிட்டிஷ் காலனியாக இருப்பதிலிருந்து தப்பிக்க நினைத்து, குறுகிய காலமேயானாலும் ஜப்பானியக் காலனியாகிப் போன பர்மாவின் அவலத்தை இந்நூல் மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. எழுத்துப் போக்கில் தற்செயலாக வந்து விழுந்துவிட்ட ஒரு சில வரிகள் ஆச்சரியகரமான மனச்சித்திரங்களை வாசிப்பவர்களுக்கு உண்டாக்குகின்றன. உதாரணமாக, ஜப்பானிய ராணுவத்தினர் ரங்கூன் வீதிகளில் முழு நிர்வாணமாகக் குளிக்கிற காட்சி.

‘அது அவர்களுக்கு வழக்கம்போலும். இதெல்லாம் பர்மீயர்களுக்கு அருவருப்பு ஏற்படுத்தியது…’

அப்புறம் சுபாஷ் சந்திர போஸ். எல்லா கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த நினைவுகூர் ஆசிரியர்களைப் போலவே இந்நூலாசிரியரும் சுபாஷ் சந்திர போஸைச் சந்தித்திருக்கிறார். அவரது சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறார், மொழிபெயர்த்திருக்கிறார், அவருக்காக உழைத்திருக்கிறார். சுபாஷைப் பற்றிய இவருடைய மதிப்பீடு சற்று வேறு விதமானது. அவர் ஜப்பானியர்களின் உதவியைக் கோரிப் பெறவில்லை; ஓர் அவசரத்துக்கு ஜப்பானைச் சிலகாலம் தனது களமாக்கிக்கொண்டாரே தவிர, ஜப்பான் உதவியுடன் இந்தியாவுக்குப் படை திரட்டிக்கொண்டு வரும் உத்தேசம் அவருக்கு இல்லை என்று சொல்கிறார். திட்டமிட்ட காலத்துக்கு மிகவும் பிந்தியே நேதாஜியின் படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதை இதற்கு ஆதாரமாக முன்வைக்கும் ஆசிரியர், நேதாஜியை ஜப்பானிய தற்கொலைப்படையைச் சேர்ந்த விமானிகளே தனியே அழைத்துச் சென்று மோதிக் கொன்றுவிட்டார்கள் என்றும் தனது ஊகத்தை முன்வைக்கிறார்.

தெளிவில்லாத மரணங்கள் எப்போதும் நூற்றுக்கணக்கான ஊகங்களுக்கும் கற்பனைகளுக்கும் இடமளித்துக்கொண்டேதான் இருக்கும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி முதல்,  இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான பர்மாவைப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் மிகவும் உதவிகரமாக இருக்கும். ஒரு தனி மனிதரின் அனுபவங்களாகத் தேங்கிவிடாமல், அதே சமயம் விரிவான சரித்திர நூலாக சாதாரண வாசகர்களை அச்சுறுத்தாமல், ஒரு தேசத்தின் குணாதிசயங்களை அதன் பல்வேறுதரப்பட்ட மக்களின் குணாதிசயங்களைச் சுட்டிக்காட்டுவதன்மூலம் புரியவைக்கிற முயற்சியில் இது வெற்றிகண்டிருக்கிறது.

ஒரு விஷயத்தைச் சொல்லி முடித்துவிடலாம். இன்றுவரை பர்மாவின் விடுதலைக்குப் போராடிக்கொண்டிருப்பவர் ஆன் சாங் சூகி. அவரது  தந்தைதான் அன்று பர்மாவை ஜப்பானியர்கள் ஆக்கிரமிக்க வழிவகுத்துக் கொடுத்தவர்!

எனது பர்மா குறிப்புகள் | செ. முஹம்மது யூனூஸ் | தொகுப்பு – மு. இராமநாதன் | வெளியீடு: காலச்சுவடு | விலை ரூ. 165.00

O

பர்மாவை மேலும் அறிய இந்தப் புத்தகத்தையும் வாசிக்கலாம்.

Share

4 comments

 • ***** இந்தப் புத்தகத்தை எனக்கு இந்திரா பார்த்தசாரதி
  இரு நாள்கள் முன்னர் கொடுத்தார்.****

  நல்லதாய் போயிற்று.இல்லையெனில் நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள்.
  பொருளின் தரத்தை விட வடிவமைப்பே இங்கே முக்கியத்துவம்
  பெரும் காலமிது.

  சிங்கப்பூர்,மலேசியா போல் அல்லாது பர்மாவுடனான தமிழர்களின் தொடர்பு
  ஏன் இப்போது இல்லாது போனது? இன்றளவும் தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவில் இருக்க செய்கிறார்கள் தானே? பொருளாதார நிலை மட்டுமே காரணமா?

 • ஹெப்சிபா ஜேசுதாஸனின் நாவல் ‘மாநீ’ கூட உலகப் போர் காலகட்ட பர்மாவைப் பேசும்.

  லீ-க்வான்-யூ தன் சுயசரிதையில் சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பான் போர்வீரர்கள் பற்றி சொல்லும்போது, தங்களுடன் அழைத்து வந்த பாலியல் தொழிலாளர்களிடம் செல்பவர்களின் க்யூ தெருவெங்கும் வழிந்தோடினாலும் ஒழுங்குடன் நின்றிருப்பதைக் கண்டதாகக் கூறுவார்.

 • பாரா சார், இந்த சில்வர்ஸ்டார் ஸ்டாலோன் நடித்த ராம்போ(Rambo) 4 2008 இல் வந்த படத்தில் காட்டுவது போல ராணுவ ஆட்சி கொடூரங்கள் பர்மாவில் உண்டா ? பர்மாவில் நடப்பது மக்களாட்சியா ராணுவ ஆட்சியா ?

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter