நடப்பது என்பது எனக்கு என்றுமே நடக்கிற காரியமாக இருந்ததில்லை. அடிப்படையில் நான் ஒரு ப்யூரிஃபைட் சோம்பேறி. சைக்கிள் இருந்த காலத்தில் சைக்கிள், டூ வீலர் காலத்தில் டூ வீலர், கார்காலத்தில் கார். அது கந்தஹாருக்குப் போவதானாலும் சரி; கருவேப்பிலை வாங்கப் போவதானாலும் சரி.
இந்த ‘போவது’ என்பதே எப்போதாவது நடப்பதுதான். பெரும்பாலும் இருந்த இடத்தில் எனக்குத் தேவையானதை வரவழைத்துக்கொள்வதற்கு ‘ஸ்மார்ட் ஒர்க்’ என்று பேரளித்து மகிழ்ந்துகொண்டிருந்தேன்.
உடம்பை அசைக்காதிருப்பதற்கு ஒரு மனிதனுக்குக் கோடி காரணங்கள் சொல்லக் கிடைக்கும். நான் எப்போதும் சொல்வது: எனக்கு வேலை இருக்கிறது.
உட்கார்ந்து மணிக்கணக்கில் எழுதுவதில் எனக்குப் பிரச்னை இல்லை. என் பத்து விரல் நுனிகளும் ஒரு நாளைக்குக் குறைந்தது பதினெட்டு மணிநேரம் உழைக்கும். அதில் கலோரி செலவானால்தான் உண்டு. மற்றபடி இந்தத் தேர் அசையாது.
சுமார் எட்டு அல்லது ஒன்பது வருடங்களுக்கு முன்பு கிழக்கில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது ஒரு சமயம் எனக்கு டயட் இருக்கும் மூட் வந்தது. தோதாக அப்போது எனக்கு மூன்று சகாக்கள் சிக்கினார்கள். நாகராஜன், ச.ந. கண்ணன், வைதேகி. இவர்கள் என் டயட் பார்ட்னர்கள். அரிசி சாப்பாட்டைக் குறைத்து, காய்கறி கீரை போன்றவற்றை அதிகரித்து, சைனாவிலிருந்து (ஆம். சைனா.) ஊலாங் என்ற கருப்புத் தேயிலைத் தூளைக் கிலோ கணக்கில் வரவழைத்துப் பங்குபோட்டுக் குடித்து அந்த டயட் திருவிழாவைக் கொண்டாடத் தொடங்கினோம்.
இதில் நடக்கலாம் என்று ஆரம்பித்தது ச.ந. கண்ணன். நாங்கள் இருவரும் போட் க்ளப் சாலை, மெரினா கடற்கரை எனப் பல இடங்களில் நடந்து பழகினோம். எடைக் குறைப்பு வெறி அதிகமாக இருந்தபடியால் நடை அப்போது சிரமமாக இல்லை. தவிரவும் கண்ணன் எப்போதும் உற்சாகமாக இருப்பவன். அவனோடு பேசிக்கொண்டு நடந்தால் இடுப்பு வலி தெரியாது. எனவே நடந்தேன்.
அதே சமயம் குரோம்பேட்டையில் ஹில்டன் நீச்சல் குளம் திறந்தார்கள். சட்டென்று நான் நீச்சலுக்கு மாறினேன். நடையைவிட நீச்சல் சுலபம் என்று தோன்றியதால்தான் அப்படிச் செய்தேன். தவிரவும் நீச்சலில் அதிகக் கலோரி எரிப்பு சாத்தியமானது.
என்ன சிக்கலென்றால் நான் அப்போது எடுத்த டயட்டில் எப்போதும் பசி இருந்தபடியே இருக்கும். நாம் குறைவாகச் சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் மெலிதான திகிலை அளித்துக்கொண்டே இருக்கும்.
சுமார் ஓராண்டுக காலம் படாதபாடுபட்டு பதினாறு கிலோ அப்போது குறைத்தேன். (92 கிலோவில் இருந்து 76)
எந்தப் பரதேசி கண்ணு போட்டானோ, ஒரு ஜனவரி மாத இரவு வள்ளுவர் கோட்டம் எதிரே ஸ்கூட்டரில் வந்துகொண்டிருந்தபோது விபத்தானது. வலது கால் உடைந்துவிட்டது. பெரிதாகக் கட்டுப் போட்டுக்கொண்டு வீட்டில் கிடந்தேன்.
அப்போது டயட் போனது. நடை போனது. ஏற்கெனவே குரோம்பேட்டையில் இருந்து கோடம்பாக்கத்துக்குக் குடிபெயர்ந்திருந்ததால், நீச்சலும் போனது. பழையபடி போண்டா பஜ்ஜி பால்கோவா ரசகுல்லா வகையறாக்களில் எடைக்குறைப்பு சாத்தியமா என்று தேட ஆரம்பித்துவிட்டேன்.
அதன்பின் டயட் என்று ஏனோ நினைக்கவே தோன்றவில்லை. அப்படியே விட்டுவிட்டு, காலக்கிரமத்தில் குறைத்த எழுபத்தியாறை நூறுக்கு நகர்த்தி அதற்கும் மேலே கையைப் பிடித்து அழைத்துப் போகத் தொடங்கினேன்.
அது 110க்கு வந்தது எப்போது என்று எனக்குத் தெரியாது. எடையெல்லாம் பார்க்கிற வழக்கத்தை விட்டொழித்துப் பலகாலம் ஆகிவிட்டது. வடையைப் பார்ப்பேன். அடையைப் பார்ப்பேன். பலகாரக் கடையில் விற்கும் பலதையும் பார்ப்பேன். பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி என்று தாயுமானவர் பரம்பொருளைச் சொன்னால் எனக்குப் பலகாரங்களே பரம்பொருளாகத் தெரிந்தன.
அதெல்லாம் கெட்ட கனவுக்காலம்.
விஷயத்துக்கு இப்போது வருகிறேன். மீண்டும் நான் நடக்கிறேன். ஆரம்பத்தில் மிகுந்த சிரமமாக இருந்தது. தெரு முனை வரை (498 அடிகள்) நடந்தாலே நாக்குத் தள்ளிவிடும். அங்கே இரண்டு நிமிடங்கள் நின்று ஓய்வெடுத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிவிடுவேன். இப்படிப் பத்து நாள்கள் போயின.
அதன்பின் என் தெருவைத் தாண்டி பக்கத்துத் தெரு வரை நடந்து போய்த் திரும்ப ஆரம்பித்தேன். இதுவே பீமபுஷ்டி லேகியம் சாப்பிட்ட தெம்பைக் கொடுத்தது (1130 அடிகள்). பிறகு இதை மெல்ல மெல்ல உயர்த்தத் தொடங்கினேன். இரண்டாயிரம் அடிகள். இரண்டாயிரத்தி ஐந்நூறு. மூவாயிரம். நாலாயிரம்.
நாலாயிரத்தில் சுமார் ஒரு மாத காலம் ஓட்டினேன். அதற்குமேல் நடக்க முடியும் என்று தோன்றினாலும், திரும்பி வர கஷ்டமாக இருக்குமோ என்கிற பயத்தாலேயே தள்ளிப் போட்டுக்கொண்டிருந்தேன். ஒருநாள் என் வீட்டில் இருந்து பாலாஜி பவன் வரை (அங்குதான் எடை பார்க்கும் இயந்திரம் உண்டு.) எப்படியோ நடந்து சென்று எடை பார்த்துவிட்டேன். நான் குறையத் தொடங்கிவிட்டதை அந்த இயந்திரம் உறுதி செய்தது. அதே இயந்திரம்தான் முன்னதாக என்னை 110 கிலோ என்று சுட்டிக்காட்டி ஏளனம் செய்தது. வீட்டுக்கு வந்து ஸ்டெப்ஸ் கணக்குப் பார்த்தபோது கிட்டத்தட்ட 5500 தப்படிகள்.
ஒரு மாதிரி கிறுகிறுத்துப் போய்விட்டேன். பரவாயில்லை; நமக்கு நடக்க முடிகிறது என்று தெம்பு வந்தது அதன்பிறகுதான்.
குரோம்பேட்டை, சானடோரியம், கோடம்பாக்கம் என்று மூன்று க்ஷேத்திரங்களில் எங்காவது ஓரிடத்தில் இப்போது தினசரி ஒரு மணி நேரம் நடக்கிறேன். தோராயமாக தினசரி பத்தாயிரம் தப்படிகள் கணக்குத் தேறிவிடுகிறது. ஒரு சில நாள்கள் முடிவதில்லைதான். ஆனாலும் அடுத்த நாள் கணக்குத் தீர்த்துவிடுகிறேன்.
இது ப்ரிஸ்க் வாக் இல்லை. சாதாரண நடை. கடைக்குப் போகிற வேகத்தில் நடப்பது. என் இப்போதைய உணவு முறை, நடையில் வருகிற இயல்பான களைப்பை இல்லாமல் செய்துவிடுவதால் இது எளிதாக இருக்கிறது. பழைய பின் இடுப்பு வலி இப்போது அறவே இல்லை. நடக்க ஆரம்பித்த பிறகுதான் எனது ரத்தக்கொதிப்பின் அளவு சீராகி வருவதை உணரத் தொடங்கினேன். சரியான உணவும் மிதமான நடையும் தவிர ஆரோக்கியத்துக்கு வேறு எளிய உபாயமில்லை என்பது புரிந்தது. உடல் இயக்கம் ஒழுங்காகும்போது உளத்தெளிவும் சேர்த்து சித்திக்கிறது. பதற்றங்கள், பயங்கள் வருவதில்லை. செயலில் மிகுந்த நிதானம் கூடுகிறது. இதனை தியானத்துக்கு ஒன்றுவிட்ட சித்தப்பா மகன் என்று சொல்வேன். என் அனுபவம் அப்படிக் கூறவைக்கிறது.
ஒரு நல்ல பார்ட்னரைப் பிடியுங்கள். மனைவி அல்லது கணவராகவே இருந்தால் அருமை. பேசிக்கொண்டே நடக்கலாம். ஒரு நாளில் ஒரு மணி நேரம் பேச முடிந்துவிட்டால் குடும்ப சுனாமிகள் அடங்கிவிடும். பெண்களுக்குக் காலை நேரம் நடைப்பயிற்சி செய்வதில் நிறையச் சிக்கல்கள் உண்டு. அவர்கள் குழந்தைகளைக் கிளப்பவேண்டும். சமைக்க வேண்டும். அடுப்பில் இட்லி குக்கர் நேரத்தில் கேஸ் தீர்ந்துவிடும். சிலிண்டர் உருட்டி வந்து மாற்ற வேண்டும். கஷ்டம்தான். அவர்களோடு மாலையில் முயற்சி செய்யலாம். காலை விட்ட கணக்கை அப்போது முடிக்கலாம்.
எனக்கு ஒரு புரொபசர் சிக்கியிருக்கிறார். வேதியல் புரொபசர். அவரோடு நடக்கும்போது கவனமாக அறிவியல் நீங்கலான விஷயங்களை மட்டுமே பேசுகிறேன். நான் அறிவியல் பேச ஆரம்பித்து, அது அவர் தலைக்குள் ஏறினால் அவருக்கு வேலை போய்விடும் அபாயம் இருக்கிறது என்பதே காரணம்.
ஆளே இல்லையா? காற்றைப் போல், கடவுள்போல் இருக்கவே இருக்கிறது இளையராஜாவின் இசை. ஒரு ஹெட்போன் மாட்டிக்கொண்டால் தீர்ந்தது. முழு ஒரு மணி நேர நடைக்குப் பிறகு உடலுக்கு சிறகு முளைத்த மாதிரி ஓர் உணர்வு உண்டாகிறது. நம் எடை என்னவாக இருந்தாலும் லேசாகிவிட்டதுபோலத் தோன்றுவது வேறு எதில் சாத்தியம்?
இன்று எனக்கு ஓய்வுநாள். பதிமூன்றாயிரம் அடிகள் இலக்கு வைத்தேன். ஆனால் சாத்தியமானது 12921தான். எண்பது குறைச்சல். அதனாலென்ன? அடுத்த ஓய்வு நாளில் 14000 அடிகள் இலக்கு வைத்து 13921ஐக் கண்டிப்பாகத் தொடுவேன்.
மனமிருந்தால் மார்க்கபந்து.