கணை ஏவு காலம்: இரண்டு மாத வாழ்க்கை

அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் – இஸ்ரேல் போர் தொடங்கியது. பத்தாம் தேதி முதல் இந்து தமிழ் திசையில் கணை ஏவு காலம் எழுதத் தொடங்கினேன். ஆரம்பிப்பதற்கு முன்னரே இது போரைக் குறித்த கட்டுரைகளல்ல என்று தெளிவாகச் சொல்லிவிட்டுத்தான் ஆரம்பித்தேன். இறைத்தூதர் மோசஸ் காலத்துக் கதைகளில் தொடங்கி யாசிர் அர்ஃபாத்தின் மறைவுக் காலம் வரை நீண்டு நிறைந்த நிலமெல்லாம் ரத்தத்தின் இரண்டாவது பாகத்தைத்தான் இப்போது எழுதியிருக்கிறேன்.

இது இரண்டாயிரமாவது ஆண்டிலிருந்து இந்தப் போருக்கு முந்தைய காலக்கட்டம் வரை நீள்வது. ஒப்பீட்டளவில் சிறியதொரு காலக்கட்டம் ஆனாலும் இன்று இது முக்கியம் என்று இந்து தமிழ் திசையின் ஆசிரியர் அசோகன் சொன்னார். அந்தக் கணத்தில் பணியாற்ற ஆரம்பித்து நேற்றிரவு கணை ஏவு காலத்தின் இறுதி அத்தியாயத்தை எழுதி நிறைவு செய்தேன்.

இந்த இரண்டு மாதங்களில் இதைத் தவிர வேறு எதையும் சிந்திக்கவில்லை. எட்டு மணி நேரப் படிப்பு, இரண்டு மணி நேர எழுத்து, நான்கு முதல் ஐந்து மணி நேர எடிட்டிங். நாள்கள் நகர்ந்து கடந்ததே தெரியாமல் போனது.

இந்நாள்களில் சமூக ஊடகங்களில் புழங்குவதை அறவே தவிர்த்தேன். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாக்ராம் எதுவும் இல்லை. மெட்ராஸ் பேப்பர் பணிகளை பால கணேஷ் உதவியுடன் மொத்தமாக நஸீமா பார்த்துக்கொண்டார். வாரம் ஒரு நாள் இறுதி எடிட்டிங் பணிகளை மட்டும் அதற்குச் செய்தேன். இதர பொழுதெல்லாம் இதனோடே கழிந்தது.

நடுவே ஒன்றிரண்டு தினங்கள் மெட்ராஸ் பேப்பர் புத்தக வேலைகளின் பொருட்டு ஜீரோ டிகிரி அலுவலகத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. அந்நாள்களில் செய்ய வேண்டியதை முதல் நாளே சேர்த்து முடித்துவிட்டுத்தான் சென்றேன். ஆண்டிறுதிகளில் எப்படியாவது இப்படியொரு பதற்றம் தொற்றிக்கொண்டுவிடுகிறது. ஆனால் இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

ஏனெனில் தினசரித் தொடர் என்பது எழுத எளிதானதல்ல. தினசரிப் பத்திரிகையில் எழுதினாலுமே எல்லா எழுத்தாளர்களும் வாரம் ஓர் அத்தியாயம் என்றுதான் பேசிக்கொள்வார்கள். தினமும் ஓர் அத்தியாயம் என்று தலை குப்புறக் குதிப்பவன் நான் மட்டும்தான். இது எனக்கு அந்த வகையில் நான்காவது அனுபவம். கரணம் பிசகினால் மரணம் நிச்சயம். தரவுகளின் தேர்வு, தொகுப்பு, அவற்றின் நம்பகத்தன்மை மீதான ஆய்வுகள்; அனைத்துக்கும் மேலாக இன்னொன்றும் உள்ளது.

இன்றைய தேதியில் உலகின் தீர்க்க முடியாத மாபெரும் பிரச்னை இஸ்ரேல்-பாலஸ்தீன். அம்மண்ணின் அரசியல் வெளியில் இருப்போர் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதல்ல. போதாக் குறைக்கு நமக்குச் செய்திகளின் வடிவில் வழங்கப்படும் (உண்மை போன்ற தோற்றமளிக்கும்) கதைகள் உண்டாக்கும் தாக்கத்தைத் தகர்த்து, உண்மையைச் சொல்லியாக வேண்டும். அது பாமரரும் புரிந்துகொள்ளும்படியாக இருக்க வேண்டும்.

இத்தொடரின் மொழியை வசப்படுத்துவதற்காக மட்டும் முதல் மூன்று அத்தியாயங்களை ஆறேழு விதமாக எழுதிப் பார்த்தேன். அடர்த்தியும் எளிமையும் கூடி வர வேண்டுமென்று நினைத்தேன். நடந்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.

நிலமெல்லாம் ரத்தம் எழுதும்போது சொற்களின் எண்ணிக்கை சார்ந்து நான் கவனம் செலுத்தவேயில்லை. எண்ணூறு சொற்கள், ஆயிரம் சொற்கள், அதற்கும் மேலே என்று ஒவ்வொரு அத்தியாயமும் தன் தேவையைத் தானே தீர்மானித்துக்கொண்டது. வாசகர்களுக்கும் அன்று அது ஒரு பிரச்னையாக இருக்கவில்லை.

ஆனால் இன்று ஐந்நூறு சொற்கள் என்பது ஒரு நீண்ட கட்டுரையாகக் கருதப்படக்கூடிய காலமாகிவிட்டது. குறுகத் தரிப்பது ஒன்றே வாசக ஆர்வத்தைத் தக்கவைக்கும் ஒரே வழி. புனைவென்றால் இதையெல்லாம் சிந்திக்கக் கூட மாட்டேன். இது புனைவல்ல. ஒரு சமகால சரித்திரம் – அதுவும் தவறான பிரசாரங்களால் திசை மாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் சரித்திரத்தைப் பூச்சுகள் இல்லாமல், கூடுதல் குறைவில்லாமல், எந்தச் சார்பும் இன்றி உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்லும்போது ஆகக் கூடிய பரந்த வாசகர் வட்டத்துக்கு அது போய்ச் சேர வேண்டும் என்பது எனக்கு மிகவும் முக்கியம்.

ஒவ்வோர் அத்தியாயமும் எழுதி முடிக்கும்போது ஆயிரத்தைந்நூறில் இருந்து இரண்டாயிரம் சொற்கள் வரை வந்தன. கருத்து சிதையாமல் அதை அப்படியே ஐந்நூறுக்கும் குறைவான சொற்களுக்குள் பொருத்தியபோது நான் எதிர்பார்த்ததினும் எழுத்து வேகம் பல மடங்கு கூடுவது போலத் தோன்றியது. இதுவும் மகிழ்ச்சியளித்தது.

தினமும் இந்து தமிழ் திசையில் இதனைத் தொடர்ந்து படித்து வரும் முகமறியாத வாசகர்கள் அனுப்பும் மின்னஞ்சல்களே என்னைச் செலுத்தும் கருவியாக இருந்தன. அனைவரின் அன்புக்கும் நன்றி. முன்பே சொன்னதுதான். நான் யூதனோ கிறித்தவனோ முசல்மானோ அல்லன். பாலஸ்தீன் விவகாரத்தில் எந்தச் சார்பும் எடுக்க வேண்டிய அவசியம் எனக்கு எப்போதும் இல்லை. எனக்கு எது உண்மை, எது சரி என்று பட்டதோ அதைத்தான் அன்றும் எழுதினேன், இன்றும் எழுதியிருக்கிறேன்.

இன்று ஐம்பதாவது அத்தியாயம் வெளியாகியிருக்கிறது. அறுபது வரை நீண்டு நிறையும். விரைவில் புத்தகமாகவும் வரும். படித்துவிட்டுச் சொல்லுங்கள்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter