இனிப்பில் வாழ்தல்

எனக்கு இனிப்புப் பலகாரங்கள் மிகவும் பிடிக்கும். ஒரு பேப்பரில் ஸ்வீட் என்று எழுதிக் காட்டினால்கூட எடுத்து மென்றுவிடுவேன் என்று என் மனைவி சொல்வார். அவ்வளவெல்லாம் மோசமில்லை என்று ஒவ்வொரு முறையும் சொல்லத் தோன்றும். உண்மைகளை மறுக்கலாமே தவிர அழிக்க முடியாது அல்லவா?

எனக்குத் தெரிந்து எங்கள் குடும்பத்தில் வேறு யாரும் அப்படிக் கிடையாது. எல்லோரும் சாப்பிடுகிற அளவுதான் சாப்பிடுவார்கள். எனக்கு ஏன் ஸ்வீட் வெறி பிடித்தது என்று தெரியவில்லை. குறிப்பாக இது ரொம்பப் பிடிக்கும், அது சுமாராகப் பிடிக்கும் என்றெல்லாம் இல்லை. இனிப்பாக இருக்கும் எதுவும் மிகவும் பிடிக்கும்.

முன்னொரு காலத்தில் சனிக்கிழமை தோறும் மதிய வேளை உணவைத் தவிர்த்துவிட்டு ஸ்வீட் மட்டும் சாப்பிடும் வழக்கத்தைத் திருட்டுத்தனமாக வைத்திருந்தேன். பெரும்பாலும் பாண்டிபஜார் கிருஷ்ணா ஸ்வீட்ஸுக்குச் செல்வேன். கால் கிலோ மைசூர்பாவும் ஒரு காப்பியும். அல்லது கால் கிலோ ஜாங்கிரியும் ஒரு காப்பியும். எல்டாம்ஸ் ரோடு முனையில் ஒரு இனிப்புக்கடை உண்டு. அங்கே பால் ஸ்வீட்கள் நன்றாக இருக்கும். புரசைவாக்கத்தில் ஒரு சேட்டுக் கடையில் கிடைக்கும் ஜிலேபி, மேற்கு மாம்பலம் வெங்கட் ரமணா போளி ஸ்டாலில் கிடைக்கும் தேங்காய் போளி, அசோக் நகர் குப்தா பவன் பாசந்தி, மித்தாய் மந்திர் மலாய் லஸ்ஸி… இவையெல்லாம் போக எங்கே சோன்பப்டி வண்டியைப் பார்த்தாலும் நிறுத்தி நான்கு கையளவுக்குத் தின்னாமல் கடந்ததில்லை. சாக்லெட்டுகள் விஷயத்திலும் இப்படித்தான். ஒரு துண்டு, இரண்டு துண்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு டப்பா, இரண்டு டப்பா என்பதுதான் சரியான ஆரம்பமாக இருக்கும்.

சிறு வயதில் எப்போதாவது குடும்பத்துடன் திருப்பதிக்குச் செல்வோம். அப்போதெல்லாம் லட்டுக்கு ரேஷன் கிடையாது. கேட்ட அளவுக்குக் கிடைக்கும். அப்போது எங்கள் வீட்டில் மொத்தம் ஐந்து பேர். அப்பா சர்க்கரை நோயாளி என்பதால் அவர் இனிப்பு சாப்பிட மாட்டார். திருப்பதி லட்டு என்றால் மட்டும் சாஸ்திரத்துக்கு ஒரு துண்டு உண்பார். மற்ற அனைவருக்குமாக இரண்டு லட்டுகளையும் என் ஒருவனுக்குத் தனியாக ஒரு முழு லட்டுவையும் வாங்கி வருவார். கோயில் வாசலிலேயே உட்கார்ந்து அந்த முழு லட்டையும் தின்று முடித்துவிட்டுத்தான் எழுவேன். யாராவது இன்னும் தின்று முடிக்காதிருந்தால் அதையும் வாங்கித் தின்பேன்.

புதிய இடங்கள், வெளியூர் எங்காவது செல்ல நேரும்போதெல்லாம் முதலில் விசாரிப்பது அந்த ஊரில் என்ன இனிப்பு விசேடம் என்பதைத்தான். ஒரு முறை கொல்கத்தா சென்றிருந்தபோது இரவு உணவுக்கு பதிலாகக் குட்டிப் பானைகளில் மிஷ்டி தோய் வாங்கி வாங்கிக் குடித்திருக்கிறேன். கடைக்காரர் பயந்துபோய்ப் பார்க்கும் அளவுக்கு நடந்துகொண்டேன் என்று அப்போது என்னுடன் வந்த நண்பர் சொன்னார்.

இனிப்பு அதிகம் உண்போருக்குப் பொதுவாக இரண்டு விஷயங்கள் நடக்கும். ஒன்று, சர்க்கரை வியாதி. இன்னொன்று எடை ஏறுவது. அதிர்ஷ்டவசமாக எனக்குச் சர்க்கரை நோய் இதுவரை தாக்கவில்லை என்பதால் இரண்டாவது மட்டும் வஞ்சனையின்றி நடக்கிறது. நடுவே சில ஆண்டுகள் பேலியோ டயட் இருக்க முடிவு செய்தபோது ஒரே நாளில் இனிப்பை வாழ்விலிருந்து ரத்து செய்தேன். அது என்னால் முடியும். எது ஒன்றும் வேண்டுமென்றால் வேண்டும்; வேண்டாமென்றால் அறவே வேண்டாம். ஆனால் எது வேண்டும் எது வேண்டாம் என்று இன்னொருவர் சொல்ல முடியாது. எனக்கே தோன்றினால்தான் உண்டு.

எப்படி பேலியோ இருக்கலாம் என்று முடிவு செய்தேனோ, அதே போலத்தான் இன்னொரு நாள் அது போதும் என்றும் முடிவு செய்தேன். அதற்கு மறுநாளே மூன்ற குலோப்ஜாமூன்கள் போட்டு ஐஸ் கிரீம் சாப்பிட்டு விரதம் முடித்தேன்.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என் மனைவிக்கு இது சார்ந்த ஒரு கவலை வரும். HbA1c எடுக்கச் சொல்லி நச்சரிக்க ஆரம்பிப்பார். மேலும் ஒன்றிரண்டு மாதங்களைக் கடத்திவிட்டுச் சென்று பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்துவிட்டு வருவேன். எப்படியும் எண்ணிக்கை ஏறியிருக்கும்; இனி இவனுக்கு ஸ்வீட் ரேஷன் போடலாம் என்று எண்ணிக்கொண்டிருப்பார். ஆனால் அது என்றுமே ஏறியதில்லை.

கீதம் பட்டர் ஸ்காச் மில்க் ஷேக்

இரண்டு நாள்களுக்கு முன்னர் கால் கிலோ பாதுஷா வாங்கி வந்தேன். மறுநாள் காலை நான் டெஸ்டுக்குக் கொடுத்தே தீரவேண்டும் என்று மிரட்டி அனுப்பி வைத்தார். நேற்றுக் காலை பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்துவிட்டு வந்தேன். மதியம் வாட்சப்பில் ரிசல்ட் வந்தது. என்றும் மாறாத அதே 5.5. தீபாவளிக் கொண்டாட்டம் என்பது இம்முறை அந்தப் புள்ளியில் தொடங்கியது.

நேற்று ஜீரோ டிகிரி ராம்ஜி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாவும் அதிரசங்களும் தந்தார். ஆனந்த விகடனில் இருந்து ஓர் இனிப்புப் பெட்டி வந்தது. இன்று மதியம் திருசூலம் கீதம் ரெஸ்டரண்டில் ஒரு ப்ளேட்டரும் பட்டர் ஸ்காச் மில்க் ஷேக்கும் அருந்தி மங்களகரமாகப் பண்டிகையைத் தொடங்கினேன். ஸ்வீட் காரம் காப்பியிலிருந்து லட்டு, ஜாங்கிரி உள்ளிட்ட நானாவித இனிப்பு வகைகள் வந்து இறங்கியிருக்கின்றன. அடுத்த இரண்டு மூன்று தினங்கள் எனக்கு வேறு நினைவே இருக்காது.

இனிப்பு, ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல என்பது மட்டுமல்ல. எந்தெந்த விதங்களில் அது உடம்பை பாதிக்கும் என்று மிக நன்றாகத் தெரிந்தவனால்தான் இப்படி நேர்ந்துகொண்டாற்போல இனிப்பு உண்ண முடியும் போலிருக்கிறது.

நாளைக்கே HbA1c 8,9, 10 என்று எகிறி அடிக்குமானால் அக்கணமே இனிப்பு குறித்த நினைவை அடியோடு துறக்க முடியும் என்பதுதான் என் பலம். அது முடியுமானால் யாரும் எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter