காகிதங்களைக் கடந்து..

பழைய ஆயிரம் மற்றும் ஐந்நூறு ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு முடிவடைந்திருக்கும் இந்நேரத்தில் இதனை எழுதுவது பொருந்துமென நினைக்கிறேன்.

மேற்படி ரூபாய்த் தாள்கள் இரண்டும் இனி செல்லாதென (டெக்னிகலாக இது தவறு. செல்லுபடியாகும் இடங்கள் குறைக்கப்பட்டன; அவ்வளவே. படிப்படியாக அது இனி முற்றிலும் விலக்கிக்கொள்ளப்படும்) அறிவிக்கப்பட்ட தினம் என் வீட்டில் இருந்த தொகையின் மதிப்பு, வருமான வரி நோட்டீஸ் வர இயலாத அளவே.

அதை உடனே வங்கியில் செலுத்திவிட்டோம். வீட்டுச் செலவுக்காக என் மனைவி பத்தாயிரம் மட்டும் வங்கியில் இருந்து எடுத்து வந்தார். நான்கு இரண்டாயிரம் ரூபாய்த் தாள்களுடன் மிச்சத்துக்கு நூறு ரூபாய்த் தாள்கள். நான் அதைத் தொடவில்லை. என்னிடம் எண்ணூறு ரூபாய்க்கு நூறு ரூபாய்த் தாள்கள் இருந்தன. அதை வைத்து சமாளித்துவிடலாம் என்று முடிவு செய்தேன்.

என் செலவுகளாவன:

1. வாகன எரிபொருள்
2. வெளியே போனால் ஓட்டல் உணவு
3. (ப்ரோபயாடிக், ஆர்கானிக்) மாவா
4. ஏதாவது கேட்ஜட் கண்ணில் பட்டுக் கவர்ந்தால் உடனே வாங்கிவிடுவது
5. புத்தகங்கள்

என்ன யோசித்தாலும் வேறு ஏதும் தோன்றவில்லை.

இதில் கடந்த மூன்று மாதங்களாக மாவா கிடைப்பதில் ஏகப்பட்ட கெடுபிடி, சிக்கல். சேட்டுகள் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டுவிட்டதில் கலைச்சேவையே கெட்டுப் போகுமளவுக்கு நிலவரம் கலவரம்.

சரி பார்த்துக்கொள்ளலாம் என்று சும்மா இருந்தேன். ஒரு மாதம் ஓடியே விட்டது. சற்றுமுன் என் பர்ஸைப் பரிசோதித்தேன். நான் வைத்திருந்த எண்ணூறில் ஐந்நூறு மிச்சம் இருக்கிறது. செலவான சொற்பமும் கலைச்சேவை சார்ந்த செலவுதான் 😉

எனது பெரும்பான்மையான செலவுகள் கடனட்டை மூலமே நிகழ்வதை உணர்ந்தேன். வெளியே காப்பி, டீ அருந்தும் வழக்கம் விட்டொழிந்தபடியால் அந்தச் சிறு செலவுமில்லை. அச்சுப்புத்தகங்கள் வாங்கும் வழக்கம் குறைந்துகொண்டே வருவதை உணர்கிறேன். கிண்டிலில் ஒரே அமுக்கில் நான் கேட்கும் புத்தகம் என் சாதனத்தில் வந்து அமர்ந்துவிடுகிறது. பெட்ரோல் பங்க்கில் என்றைக்குமே நான் காசுக்கு எரிபொருள் நிரப்பியதில்லை. எப்போதும் அட்டைதான். அமேசான் வரவுக்குப் பிறகு அற்பத் தேவைகளையும் அங்கேயே பூர்த்தி செய்துகொள்ள முடிந்துவிடுகிறது.

மின்கட்டணம், இணையக் கட்டணம், தொலைபேசிக் கட்டணங்கள், அலுவலக வாடகை, டாட்டா ஸ்கை கட்டணம், கடனட்டை கட்டணம், மளிகைச் செலவுகள் சகலமும் வங்கி மூலம் மட்டுமே.

இயல்பாக இந்த வழக்கங்கள் என்னிடம் உருவாகியிருப்பதால் சென்ற மாதம் ஒருநாள்கூட நான் வங்கி வரிசையில் போய் நிற்க நேரவில்லை.

ஆனால் அங்கே அவதிப்பட்ட பலரைக் கண்டு வருத்தப்பட்டேன். நண்பர்கள் பலர் தத்தம் அனுபவங்களைச் சொல்லிப் புலம்பியபோது சங்கடமாக இருந்தது.

இது ஒரு கட்டம். புலம்பிக்கொண்டாவது கடந்துதான் தீரவேண்டும். சாத்தியமுள்ளவர்களாவது தமது செலவுகளைக் கூடியவரை அட்டை மற்றும் இணையம் சார்ந்து அமைத்துக்கொண்டுவிட்டால் இனி வரும் நாள்களில் இத்தனை அவதி இராது.

தனிப்பட்ட முறையில் பேசிப் பார்க்கும்போது சாதாரண மக்கள் தங்கள் அவதிகளை மீறி, கருப்புப் பண ஒழிப்பின் அவசியத்தை உணர்ந்தே இருப்பதாகத் தோன்றுகிறது. சிறு வியாபாரிகள் பலமாக பாதிக்கப்பட்டிருப்பதை மறுக்க இயலாது. விரைவில் அவர்களும் கடனட்டை தேய்க்கும் கருவிகளுக்கு மாறிவிடுவார்கள்.

பணம் என்பது வெறும் எண்களாக அறியப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.

அன்று ஊழலும் கருப்புப் பணமும் இருக்காது என்று நினைத்துக்கொள்ள, கொஞ்சம் சந்தோஷமாகத்தான் இருக்கிறது.

Share

Add comment

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!