நன்றி

ரொம்ப வருஷங்களுக்கு முன்னால் வாரமலரில் ஒரு தொடர்கதை எழுதினேன். அது ஒரு க்ரைம் த்ரில்லர். அதன்பிறகு இப்போதுதான் மறு நுழைவு. இந்த முறையும் க்ரைம் த்ரில்லர்தான். ஆனாலும் இது கதையல்ல. கதையைவிட சுவாரசியம் கொண்ட அரசியல்.

தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை நான் பெரும்பாலும் மௌனப் பார்வையாளனாக மட்டுமே இருந்து வந்திருக்கிறேன். பத்திரிகையாளனாக இருந்த காலத்தில் பேட்டிகள், கட்டுரைகள் எழுதியதுண்டு என்றாலும் விமரிசன நோக்கில் அதிகம் எழுதியதில்லை. சுவாரசியங்களுக்குப் பஞ்சமில்லை என்றாலும் நினைக்கும்தோறும் ஒரு சிறு அலுப்பும் சலிப்பும் எப்போதும் ஏற்படுத்துவது என்பதால் கூடியவரை இந்தப் பக்கம் ஒதுங்கியதில்லை.

என்னை இழுத்து வந்து நடுவில் நிறுத்தியது தினமலர்தான். 2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினம் தொடங்கி சரியாக நாற்பத்தி ஐந்து நாள்களுக்கு இந்தப் பத்தியை தினமலர் தேர்தல் களம் பகுதியில் எழுதினேன்.

எனக்குக் கட்சி சார்புகள் கிடையாது. நான் ஒரு நடுவாந்திர ஜென்மம். நான் சந்திக்கிற, உரையாடுகிற, எப்போதாவது விவாதம் புரிகிற நண்பர்களும் அநேகமாக என்னைப் போலவே இருப்பவர்கள். ஒரு சராசரித் தமிழ் மனம் அரசியல்வாதிகளை எப்படி எடை போடுகிறது, அவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறது, எதிலெல்லாம் ஏமாறுகிறது, ஒவ்வொரு முறையும் ஏன் தோற்றுப் போகிறது என்கிற வினாவை முன்வைத்துத்தான் இந்தப் பத்தியை வடிவமைத்தேன்.

இது வெளியான தினங்களில் தினசரி எனக்கு வந்துகொண்டிருந்த மின்னஞ்சல்களில் பெரும்பாலும் இந்த வரி இருக்கும். ‘என் மனநிலையை அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள்.’

நான் சாமானியன். உங்களுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. நீங்கள் சாப்பிடுகிற அதே குழம்பு ரசத்தைத்தான் நானும் சாப்பிடுகிறேன். நீங்கள் டீ குடிக்கிற கடையில்தான் நானும் டீ குடிக்கிறேன். உங்களைப் போலத்தான் சுவாசிக்கிறேன். உங்களைப் போல் யோசிக்காமல் வேறெப்படி யோசிப்பேன்?

ஆனால் திமுக தொடங்கி அதிமுக வரை; பாஜக தொடங்கி நாம் தமிழர் வரை அத்தனை கட்சிகளையும் கிண்டலடித்துத் தள்ளி விட்டீர்களே, நல்லதென்று சுட்டிக்காட்ட ஒன்றுகூடவா இல்லை என்கிற கேள்வியும் அடிக்கடி வந்தது. நல்லதைச் சுட்டுவதல்ல நமது பணி. தேர்ந்தெடுப்போர் நெஞ்சம் அறியாததா? அல்லதை அடிக்கோடிட்டுக் காட்டுவதுதான் ஆகப்பெரிய திருப்பணி.

தினமலர் அளித்த பூரண சுதந்தரத்தை இக்கணம் நினைவுகூர்கிறேன். எந்தக் குறுக்கீடுமின்றி என் மனத்தில் பட்டதை எழுத முடிந்தது. தினமலர் ஆசிரியருக்கும் ஆசிரியர் குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

அடிப்படையில் நான் ஓர் ஒழுங்கீனவாதி. என்னைச் சமாளிப்பது, ஒரு வேலையில் பொருந்தவைப்பது ரொம்பக் கஷ்டம். பணிச்சுமை காரணமாகக் கடந்த ஓராண்டுக்கு மேலாக எந்தப் பத்திரிகையிலும் எழுதாதிருந்தேன். இதில் என் மனைவிக்கு ரொம்ப வருத்தம். தினமலர் இதனை எழுதக் கேட்டபோது, செய்தே தீரவேண்டும் என்று குச்சி வைத்துக் குத்தாத குறையாக என்னை இதில் திசை திருப்பி, எழுத வைத்தது அவர்தான்.

நெஞ்சைத் தொட்ட ஒவ்வொரு கட்டுரைக்கும் மறக்காமல் போன் செய்து பாராட்டிய நண்பர் இந்திரா சௌந்தர்ராஜன், தினமும் இக்கட்டுரைகளை வாசித்துக் கருத்து சொன்ன இணைய நண்பர்கள், விமரிசித்தும் திட்டியும் பாராட்டியும் கடிதமெழுதிக் கிளுகிளுப்பூட்டிய தினமலர் வாசகர்கள் அத்தனை பேருக்கும் சொல்லித்தீராத நன்றிகளை இங்கே எழுதி வைக்கிறேன்.

தமிழகத்தில் காமராஜர் ஆண்ட காலத்தைப் பொற்காலம் என்று பொதுவாகச் சொல்லுவார்கள். அதற்காக அடுத்து வந்த ஆட்சிக்காலமெல்லாம் களப்பிரர் காலம் என்று அர்த்தமல்ல. இன்னொரு பொற்கால ஆட்சி உருவாக வாக்காளர்கள் எப்படி யோசித்து என்ன செய்யலாம் என்று இந்தக் கட்டுரைகளில் சுட்டிக்காட்ட நினைத்தேன். அதைத்தான் செய்திருக்கிறேன். 2021 பொதுத் தேர்தல் சமயத்தில் நீங்கள் இதனை எடுத்துப் படித்தாலும் கருத்தளவில் பொருந்தும் என்பதே இத்தொகுப்புக்கான ஒரே அர்த்தம்.

(பொன்னான வாக்கு நூலுக்கான முன்னுரை)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி