ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 9

அடையாறு துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனைக்கு எதிரே முதல் முதலாக ஒரு தொழுநோயாளியைக் கண்டேன். அப்போது எனக்கு ஐந்து வயது இருக்கலாம். அந்த நபரின் தோற்றம் அன்று எனக்கு அளித்த அதிர்ச்சி இன்னும் நினைவிருக்கிறது. புதைத்துச் சிதைந்து போன ஒரு பிரேதம் எழுந்து நடமாடத் தொடங்கியது போலிருந்தது. மறக்கவே முடியாது. (இதன் தலைகீழ் உண்மையாக யதியில் பெண்ணின் பிணத்தைத் தோண்டி எடுக்கும் காட்சி ஒன்றை விரிவாக எழுதியிருப்பேன். அதை எழுதும்போது எனக்கு அடையாறில் கண்ட மனிதர்தான் நினைவில் இருந்தார்.) அதன்பின் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டம் வரை எங்கே சென்றாலும் யாராவது ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தொழுநோயாளிகள் கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தார்கள்.

அது என் பிரமைதான். நகரத்தில் உலவும் நபர்களில் நூறில் ஒருவர் தொழுநோயாளி என்றொரு எண்ணம் மனத்தில் அழுத்தமாகப் பதிந்தது. ஆனால், அன்று அவர்கள் அதிகம் என்பதில் சந்தேகமில்லை. மருத்துவமனைகள், சிகிச்சைகள் இருந்தன என்றாலும் நகரெங்கும் அவர்கள் நடமாட்டம் இருந்தது. கடைகளில், உணவகங்களில், பூங்கா, திரையரங்கம் போன்ற பொது இடங்களில் – மெரினா கடற்கரையில்கூடத் தொழுநோயாளிகள் தென்பட்டால் ‘ஏய், போ.. போ’ என்று மக்கள் விரட்டுவதைப் பார்த்திருக்கிறேன். சில டீக்கடைகளில் மட்டும்தான் அவர்கள் டீ வாங்கிக் குடிக்க முடியும். அதுவும், குவளையை அவர்களே கொண்டு வரவேண்டும். கடைக்காரர் இரண்டடி உயரத்தில் இருந்து தேநீரை ஊற்றுவார். அதை வாங்கிக் குடித்துவிட்டு, காசை அவர் ஒரு ஓரமாக வைத்துவிட்டுப் போவார். அதன்பின் கடைக்காரர் அந்தக் காசின்மீது ஒரு கிளாஸ் தண்ணீரை வீசிக் கொட்டிவிட்டு எடுத்து உள்ளே வைத்துக்கொள்வார்.

கேளம்பாக்கத்தில் இருந்தபோது வாரம் ஒருமுறை குடும்பத்துடன் சைதாப்பேட்டைக்குச் செல்வோம். இரு தரப்பு உறவினர்களும் அங்கேதான் அப்போது வசித்து வந்தார்கள். பெரும்பாலும் சனிக்கிழமை அதிகாலை பஸ் பிடித்து ஏழு, ஏழரை மணி வாக்கில் தாடண்ட நகர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடக்கத் தொடங்கினால் பதினைந்து நிமிடங்களில் பாட்டி வீடுகள் வந்துவிடும். பெருமாள் கோயில் தெருவில் ஒரு பாட்டி. ராமானுஜம் பிள்ளைத் தெருவில் ஒரு பாட்டி. என் தந்தை நியாயஸ்தர். ஒரு வாரம் அவரது அம்மா வீட்டுக்கு முதலில் அழைத்துச் சென்றார் என்றால் மறுவாரம் அம்மா வழிப் பாட்டி வீட்டுக்கு முதலில் செல்வோம். பாட்டி வீடு என்பது ஒரு மையக் கேந்திரம் மட்டும்தான். மாமாக்கள், சித்திகள், அத்தைகள், பெரியப்பாக்கள் அனைவருமே அங்கேதான் அருகருகே குடியிருந்தார்கள். ஒவ்வொரு வாரமும் இரு தரப்பு உறவினர்கள் அனைவரையும் சந்தித்துவிட்டு ஞாயிறு இரவு மீண்டும் கேளம்பாக்கத்துக்குத் திரும்பிவிடுவது வழக்கம். அந்நாளில் எனக்குச் சுற்றுலா, பொழுதுபோக்கு, கேளிக்கை, ஓய்வு அனைத்தும் அந்த வாராந்திர சைதாப்பேட்டை பயணங்கள் மட்டும்தான். உறவுக்காரர்கள் எப்போதாவது எங்காவது வெளியே அழைத்துச் சென்றால் உண்டு. என் தந்தை அழைத்துச் செல்லும் ஒரே இடம் சைதாப்பேட்டையாக மட்டுமே இருந்தது.

அப்படி ஒருநாள் காலை சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் இறங்கி பாட்டி வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ரசாக் மார்க்கெட்டுக்கு அருகே ஒரு தொழுநோயாளி எதிரே வந்தார். பொதுவாகத் தொலைவில் அவர்களைப் பார்த்துவிட்டாலே என் தந்தை சிறிது பதற்றமாகி என் கையைப் பிடித்துக்கொண்டுவிடுவார். ஏனோ அன்று அப்படிச் செய்யாமல் தயங்கி நின்றார். நான் அவர் முகத்தைப் பார்த்தேன். ஒரு சங்கடம் தெரிந்தது. இதெல்லாம் சில வினாடிகளுக்குள் நிகழ்ந்துவிட்டது. அதற்குள் அந்தத் தொழுநோயாளி எங்களுக்கு மிக அருகே வந்துவிட்டார். நன்கு அறிமுகமான நபரைப் போல அப்பாவைப் பார்த்து ஈ என்று பற்கள் தெரியச் சிரித்தார். அப்பா சட்டென்று பாக்கெட்டில் இருந்து ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்து, ‘போய் டிபன் சாப்டு. குடிச்சி அழிச்சிடாத’ என்று சொல்லிவிட்டு ‘போலாம்’ என்று எங்களைப் பார்த்துச் சொன்னார்.

எனக்கு அது நம்ப முடியாத அதிர்ச்சி. பிச்சை கேட்போருக்கு என் தந்தை பத்து காசுக்கு மேல் போட்டு நான் கண்டதில்லை. அதுவேகூட எப்போதாவது நிகழ்வதுதான். பெரும்பாலும் சில்ற இல்லப்பா என்று சொல்லியபடியே அவர்களைக் கடந்துவிடுவது அவர் வழக்கம். அவர் கஞ்சர் இல்லை. வெளியே கிளம்பும்போது என்னென்ன செலவு இருக்கும் என்று எண்ணி எழுதி வைத்துக்கொண்டு அதற்கு மட்டுமே பணம் கொண்டு செல்லும் வழக்கம் உள்ளவர். அதிகப்படியாக ஐந்து காசு செலவிடக்கூட யோசிப்பார். தவிர, பெரிய குடும்பம், பெரிய பொறுப்புகள், சிறிய சம்பளம் என்று அவருக்கான நியாயங்கள் பணத்தைவிட அதிகமாக அவரிடம் எப்போதும் இருக்கும்.

அப்படிப்பட்ட மனிதர், ஒரு தொழுநோயாளியின் அருகே நின்றதும், அவருடன் பேசியதும், அவருக்கு ஐந்து ரூபாய் கொடுத்ததும் எனக்கு நம்ப முடியாததாக இருந்தது. அந்த நோயாளியின் வயதை யூகிக்க முடியவில்லை. ஒரே பார்வையில் முதியவர் போலவும், இளைஞனைப் போலவும் தென்பட்டார். கைகளில் பல விரல்கள் அழுகி உதிர்ந்திருந்ததைக் கண்டேன். மூக்கின் மையத்தில் சீழ் வடிந்துகொண்டிருந்தது. நெற்றியிலும் நோய் பாதிப்பு தெரிந்தது. ஒரு கண் லேசாக மூடியே இருந்தது. ஒரு காலை அழுக்குத் துணியில் சுற்றி, மறு காலில் மட்டும் ஒரு ரப்பர் செருப்பு போட்டிருந்தார். கிழிந்த ஆடையும் வாரப்படாத தலையும் வீதிப் புழுதி அப்பிய எண்ணெய்ப் பசை முகமுமாகத் தோற்றமளித்த அந்த நபர் யார் என்று கேட்டேன்.

அவர் எனக்குத் தந்தை வழியில் ஓர் உறவுக்காரர்.

இந்தச் சம்பவம் நடந்தபோது எனக்குப் பதினொரு வயது. அன்று நான் அடைந்த அதிர்ச்சியை விவரிக்கவே முடியாது. ஏனென்றால் அப்படி ஒரு உறவினர் எனக்கு இருக்கிறார் என்கிற விவரமே அன்றுதான் தெரியும். ‘என்ன ஆச்சுப்பா அவருக்கு?’ என்று கேட்டேன்.

தொழுநோய் என்று தெரிந்ததும் மருத்துவமனையில் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். ஆனால் அங்கு இருக்க விரும்பாமல் அவர் ஓடி வந்திருக்கிறார். திரும்பத் திரும்ப மருத்துவமனைக்குக் கொண்டு விடுவதும், மீண்டும் மீண்டும் அவர் அங்கிருந்து தப்பித்து ஓடி வந்ததும் தொடர்ந்து நடந்திருக்கிறது. ‘வியாதியோடவே இருந்துடுறேனே. அந்த ஆஸ்பத்திரிக் கொடுமைய சகிக்க முடியலை’ என்று சொன்னாராம்.

வியாதியுடன் அவரால் வீட்டில் இருக்க முடியாமல் போனது. பெற்றோர் காலமாகியிருக்க, திருமணமாகிச் சென்னைக்குக் குடிவந்த அக்காவுடனேயே அவரும் வந்திருக்கிறார். அக்காவின் கணவர், ஆதரவற்ற தனது மைத்துனரைத் தன் வீட்டிலேயே வைத்துக் காப்பாற்றிக்கொண்டிருந்திருக்கிறார். நன்றிக்கடனாக இந்த மனிதர் வேறென்ன செய்ய முடியும்? தன் மூலம் யாருக்கும் அந்த நோய் பரவிவிட வேண்டாம் என்று அவரே ஒருநாள் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். மூன்று பெண் குழந்தைகளையும் ஒரு ஆண் குழந்தையையும் வைத்துக்கொண்டு தம்பியைப் போகாதே என்று சொல்லவும் முடியாமல் தனக்குள் புழுங்கிப் புழுங்கி அவரது அக்கா ஆஸ்துமா நோயாளி ஆகிப் போனாள்.

வீட்டை விட்டுப் போனவருக்கு சக தொழு நோயாளிகள் அடைக்கலம் அளித்திருக்கிறார்கள். ஒரு சமூகமாக அவர்கள் அலைந்து திரிவதும் பிச்சை எடுத்து வாழ்வதுமாக வாழ்க்கை திசை மாற்றிச் செலுத்தி விரைவில் கொண்டு சேர்த்துவிட்டது.

மிகப் பல வருடங்களுக்குப் பிறகு லிவிங் ஸ்மைல் வித்யாவின் வாழ்வனுபவங்களை அவரிடம் கேட்டு எழுதியபோது (நான் வித்யா, கிழக்கு பதிப்பகம்) எனக்கு அந்த உறவினர்தான் நினைவுக்கு வந்தார். வீட்டைவிட்டு வெளியேறிய பின்பு புதியதொரு உலகும் உறவும் சேரத் தொடங்கிய கட்டத்தை வித்யா விவரித்தபோது ஒன்று புரிந்தது. வசித்தல் எளிது. வாழ்கிறோமா என்பதுதான் விதி விடுக்கும் சவால். பிரச்னை வேறு வேறுதான். ஆனால் சமூக நிராகரிப்பு பொதுவானது. கொடூரம் என்று பார்த்தால் ஒரு தொழுநோயாளிக்கு நேர்ந்திருக்கக்கூடியவற்றைவிட மூன்றாம் பாலினத்தவருக்கு அதிக சிக்கல்கள் உண்டாகியிருக்கும். வித்யாவால் போராடி மேலே வர முடிந்தது. என்னுடைய அந்த உறவுக்காரருக்கு அது முடியாமல் போய்விட்டது.

பின்பொரு சமயம் சென்னையில் தொழுநோயாளிகள் மூலமாகத்தான் கஞ்சா விற்பனை நடக்கிறது என்று என் நண்பரும் எழுத்தாளருமான ம.வே. சிவகுமார் சொன்னார். ரிசர்வ் பேங்க் சுரங்கப்பாதை அருகிலும் எழும்பூருக்கும் சேத்துப்பட்டுக்கும் இடைப்பட்ட இருப்புப்பாதை வழியில் நிற்கும் கூட்ஸ் வண்டிகளின் அருகிலும் மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவுக்கு வெளியிலும் வியாபாரம் நடப்பதை அவர் நேரிலும் காட்டியிருக்கிறார். (இறவானில் இக்காட்சி வரும்.) உறவற்றுப் போனவர்களுக்கு உயிர் பிழைக்க இருந்த ஒரே வழி அதுதான் என்று சிவகுமார் சொன்னார். வேறு யார் எந்த வேலையைத் தருவார்கள்? அல்லது வேறு எந்த வேலையை அவர்களால் அமர்ந்த இடத்தில் செய்ய முடியும்? துயரம்தான்.

இன்றுமேகூடச் சென்னையின் சில இடங்களில் திடீரென்று தொழுநோயாளிகள் தென்படுகிறார்கள். பெரும்பாலும் செண்ட்ரல் ரயில் நிலையத்தைச் சுற்றிய பகுதிகளிலும் கோடம்பாக்கம் மேம்பாலத்துக்குக் கீழேயும் பார்க்கிறேன். எழுபதுகளில் பிறந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள். ஆனால் முன்னளவு இல்லை. முதியவர்கள் இல்லை. வராதிருக்கத் தடுப்பூசிகள், வந்துவிட்டால் குணப்படுத்த மல்டி டிரக் தெரப்பிகள் எனப்பல வந்துவிட்டன.

எல்லா கிருமிகளையும் காலம்தோறும் முறியடித்துக்கொண்டேதான் வந்திருக்கிறது மனித குலம். ஆனால் எல்லா வெற்றிகளும் குறைந்தபட்சக் களப்பலிகளையாவது கேட்காதிருப்பதில்லை.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!