தரமணி மத்திய தொழில்நுட்பக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எனக்கும், எனக்கு நண்பர்களாக இருந்த சக மக்குப் பையன்களுக்கும் பொதுவாக ஒரு கவலை இருந்தது. எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதே அது. இந்தக் கவலை பெரும்பாலும் செமஸ்டர் பரீட்சைகள் நெருங்கும்போது சிறிது தீவிரமாக வரும். அதுவரை வாழ்ந்து முடித்த அவல வாழ்வை மொத்தமாக மறந்துவிட்டு, இனியேனும் உருப்படியாக என்ன செய்யலாம் என்று சிந்திப்பதற்காக நாங்கள் அடிக்கடி ப்ளூ டயமண்ட் திரையரங்கத்துக்குச் செல்வது வழக்கம்.
1964 முதல் 1994ம் ஆண்டு வரை சென்னையின் முக்கியமான அடையாளங்களுள் ஒன்றாக விளங்கிய சஃபையர் திரையரங்க வளாகத்தில்தான் (இந்தியாவின் முதல் 70 எம்.எம். திரை) ப்ளூ டயமண்ட் அரங்கமும் இருந்தது. இந்த அரங்கத்தில் கேள்விப்பட்டிராத ஆங்கிலப் படங்களைத்தான் எப்போதும் திரையிடுவார்கள். போஸ்டர்களில் A என்று போட்டிருப்பார்கள். ஆனால் படம் பெரும்பாலும் ஆசாரமானதாகவே இருக்கும். பெரிய கூட்டம் வராது. அநேகமாக ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு பேர் அல்லது மூன்று பேர் மட்டும்தான் இருப்பார்கள். காலை ஒரு டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே போய்விட்டால் இரவுக் காட்சி வரை அது செல்லுபடியாகும். ஒரே படத்தைத் திரும்பத் திரும்பப் பார்க்கலாம். அல்லது குளிர் சாதன வசதியைப் பயன்படுத்திக்கொண்டு இருக்கையில் சரிந்து படுத்துத் தூங்கலாம். நண்பர்களோடு செல்பவர்கள் தொந்தரவின்றி நாள் முழுவதும் பேசிக் களிக்கவும் எந்தத் தடையும் இல்லை.
ப்ளூ டயமண்ட் திரையரங்கத்தின் இன்னொரு சிறப்பு, அங்கு செய்யப்பட்டிருந்த ‘சோபா சீட்’ வசதி.
இரண்டு நாற்காலிகளை இணைத்துப் போடப்பட்ட அளவுக்குத்தான் அந்த இருக்கை இருக்கும் என்றாலும் இடைவெளி இன்றி இருவர் ஒன்றாக அமர்ந்து படம் பார்க்க அன்றைய தேதியில் மாநிலத்தில் வேறு எந்தத் திரையரங்கிலும் வசதி கிடையாது. இதனால் ப்ளூ டயமண்ட் திரையரங்கம் காதலர்களின் சொர்க்கமாக விளங்கியது. விடிந்து எழுந்து குளித்து, உடுத்தி, அவசரமாகச் சிற்றுண்டி முடித்துவிட்டு, அரக்கப் பரக்க பஸ் பிடித்து டி.எம்.எஸ்ஸில் இறங்கி ஓட்டமும் நடையுமாக வந்து சேருவார்கள். ஜோடிகளின் ஆண் தரப்பு சிறிது முன்னதாகவே வந்திருந்து டிக்கெட் வாங்கி வைத்திருப்பார்கள். அடுத்த ஐந்து வினாடிகளுக்குள் அரங்கத்தினுள் நுழைந்துவிடாவிட்டால் போலிஸ் தடியடிக்குச் சிக்க வேண்டிவருமோ என்று தோன்றுகிற வேகத்தில் உள்ளே ஓடி இருளில் மறைவார்கள்.
அப்போதெல்லாம் காதலிப்பவர்களைப் பார்த்துக்கொண்டிருப்பது சுய இரக்கத்தை அதிகரித்து, துயரத்தின் போதையில் நெடு நேரம் ஊறித் திளைக்க ஒரு வழி. பொதுவாக ப்ளூ டயமண்ட் திரையரங்கில் திரைப்படங்கள் அனாதைப் பிள்ளைகளைப் போலத்தான் கதறிக்கொண்டிருக்கும். பார்வையாளர்கள் அதைப் பொருட்படுத்தவே மாட்டார்கள். அவரவர் ஒரு வாழ்நாளில் பேசி முடிக்க வேண்டிய அனைத்தையும் அன்று ஒரு நாளில் பேசித் தீர்த்துவிடும் முடிவுடன் வந்தாற்போலத்தான் தோன்றும். அப்படிப் பேசிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்துக்கொண்டே இருப்பேன். காதலிக்கும் பெண்கள் சில சமயம் குமுறிக் குமுறி அழுவார்கள். அருகே அமர்ந்திருக்கும் காதலன் அவளுக்கு ஆறுதல் சொல்வான். ஒரு கையை அவளது மறு தோளில் போட்டு அரவணைத்துக்கொள்வான். அவளும் அதற்காகக் காத்திருப்பவள் போல அவன் தோளில் சாய்ந்து மீண்டும் அழுவாள். நடுவே ஓரிரு முறை காதலனாக இருப்பவன் வெளியே சென்று பாப்கார்ன் அல்லது காப்பி வாங்கி வந்து அவளுக்குத் தருவான். அவள் சாப்பிட்டுவிட்டு மீண்டும் அழுவாள். ஆனால் வெளியே போகும்போது எப்படியோ இருவரும் சிரித்தபடிதான் போவார்கள். நானும் என் நண்பர்களும் மட்டும் உள்ளே வந்தபோது எப்படிக் கவலையுடன் இருந்தோமோ, அதே போலத்தான் வீட்டுக்குப் போகும்போதும் இருப்போம்.
எல்லா காதலிகளும் இப்படி இருப்பதில்லை. நாள் முழுவதும் ரகசியக் குரலில் கிசுகிசுத்துக்கொண்டும் சீண்டிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருப்பவர்களும் வருவார்கள். என்னைப் போன்ற ஒண்டிகள் படத்தைப் பார்க்காமல் அவர்களையே பார்த்துக்கொண்டிருப்பது அவர்களுக்குத் தெரியும். இருந்தாலும் பொருட்படுத்த மாட்டார்கள். இருளில் முகம் தெரியாது என்கிற நம்பிக்கையோ, அப்படியே தெரிந்தாலும் நாம் தெரிந்தவர்களாக இருக்க மாட்டோம் என்கிற நம்பிக்கையோ அவர்களுக்கு வலுவாக இருக்கும். அப்படித் தெரிந்தவர்களாகவே இருந்தால் மட்டும் என்ன? தனக்கொரு திருட்டுத்தனம் என்றால் எதிராளிக்கு வேறொரு திருட்டுத்தனம். சக திருடர்கள் அப்படியெல்லாம் அவசரப்பட்டுக் காட்டிக்கொடுத்துவிட மாட்டார்கள்.
ஒருநாள் ப்ளூ டயமண்ட் திரையரங்கில் ‘உமா’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்த உமாபதி அவர்களைச் சந்தித்தேன். முன்னதாக, திருவல்லிக்கேணியில் நடைபெற்ற ஒரு விழாவில் அவரைப் பார்த்திருந்ததால் உடனே அடையாளம் தெரிந்துவிட்டது. பத்திரிகை ஆசிரியர் என்று தெரியுமே தவிர, அவர்தான் ப்ளூ டயமண்டில் இருந்து சிறிது தொலைவில் இருந்த ஆனந்த் திரையரங்கத்துக்கு உரிமையாளர் என்பது அப்போது எனக்குத் தெரியாது. யாரோ ஒரு நண்பருடன் அவர் படம் பார்க்க வந்திருந்தார். வெளிச்சத்தில் கண்டதைவிட, இருட்டில் மிகவும் உயரமாகத் தெரிந்தார். அவர் உட்கார்ந்திருந்ததே நிற்பது போலத்தான் இருந்தது. வெள்ளை ஜிப்பாவும் வேட்டியும் அணிந்திருந்தார்.
ப்ளூ டயமண்டில் அன்று திரையிடப்பட்டிருந்த படம் ‘எமரால்ட் ஃபாரஸ்ட்’. படம் தொடங்கி இருபது நிமிடங்களுக்குப் பிறகுதான் அவர் அங்கு வந்தார். ஐந்து பத்து நிமிடங்கள் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவர், பிறகு உடன் வந்த நண்பருடன் தீவிரமாக ஏதோ விவாதிக்கத் தொடங்கிவிட்டார். எனக்கு மிகவும் பரபரப்பாகிவிட்டது. செமஸ்டர் கவலையில்தான் நான் திரையரங்கத்துக்கு வந்திருக்கிறேன் என்பது மறந்துவிட்டது. எப்படியாவது அவருடன் அறிமுகம் செய்துகொண்டுவிட வேண்டும் என்று நினைத்தேன்.
அரங்கத்தைவிட்டு வெளியே வந்து, அங்குள்ள சிறுதீனிக் கடைக்காரரிடம் ஒரு பேப்பரும் பேனாவும் வாங்கி அவசர அவசரமாக ஒரு கவிதை எழுதினேன். அது என்ன கவிதை என்பது இப்போது நினைவில்லை. ஆனால் அப்போது மறக்காமல் என் பெயர், முகவரியை அதில் குறிப்பிட்டேன். அது நினைவிருக்கிறது. எழுதியதை ஏழெட்டு முறை படித்துப் பார்த்தேன். அவசரத்தில் எழுதினாலும் கவிதை நன்றாக வந்திருந்தது போலவே தோன்றியது. இடைவேளையில் உமாபதி வெளியே வந்தபோது பாய்ந்து சென்று அவர்முன் நின்று வணக்கம் சொன்னேன்.
‘யாரு தம்பி?’
என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கவிதையை எடுத்து நீட்டினேன்.
‘அடடே. கவிதையெல்லாம் எழுதுவிங்களா?’
படிக்கப் போவது போலப் பிரித்து வைத்துக்கொண்டாரே தவிர படிக்கவில்லை. தாளின் நான்கு முனைகளையும் நீவிவிட்டு, அழகாக மடித்து ஜிப்பா பாக்கெட்டில் வைத்துக்கொண்டார். பிறகு, ‘என்ன பண்ணுறிங்க?’ என்று கேட்டார்.
‘மெக்கானிக்கல் இஞ்சினியரிங் சார்’ என்று சொன்னேன். டிப்ளமோ கோர்ஸ் என்பதைச் சொல்லவில்லை.
‘அருமை அருமை. படம் பாருங்க. இது நல்ல படம். நான் ரெண்டு தடவை பார்த்துட்டேன்’ என்றார். அவர் சொன்னதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு இரண்டாம் பாதி எமரால்ட் ஃபாரஸ்டை மிகவும் கவனமாகப் பார்த்தேன். அந்தளவு கவனத்தை ஃப்ளூயிட் மெக்கானிக்ஸ் வகுப்பிலும் ப்ரொடக்ஷன் எஞ்சினியரிங் வகுப்பிலும் செலுத்தியிருந்தால் எண்பது சதமான மதிப்பெண் உறுதி என்று தோன்றியது.
படம் முடிந்ததும் அதைக் குறித்து உமாபதி அவர்களிடம் என்னென்ன பேசவேண்டும் என்றெல்லாம் மனத்துக்குள் ஒத்திகை பார்த்து வைத்திருந்தேன். ஆனால் துரதிருஷ்டவசமாக, நான் கவனிக்காத சமயத்தில் அவர் பாதியிலேயே எழுந்து வெளியே போய்விட்டிருந்தார்.
பின்னொரு நாள் ஆனந்த் திரையரங்க வளாகத்தில் இருந்த உமா பத்திரிகை அலுவலகத்தில் அவரை நேரில் சந்தித்தேன். அப்போது செமஸ்டர் தேர்வுகள் முடிந்திருந்தன. எப்படியும் தோல்வி உறுதி என்று தெரியும். ஏதாவது ஒரு பத்திரிகையில் வேலை தேடிக்கொண்டு என் கல்வித் தோல்வியை வீட்டில் சொல்லலாம் என்று நினைத்து, பல பத்திரிகை அலுவலகங்களுடன் துவந்த யுத்தம் செய்துகொண்டிருந்தேன்.
உமாபதி என்னை அன்போடு அழைத்துப் பேசினார். ப்ளூ டயமண்ட் திரையரங்கத்தில் அவரைச் சந்தித்ததை நினைவூட்டினேன்.
‘அப்படியா தம்பி? நாம பாத்திருக்கமா?’ என்றார்.
நின்ற வாக்கில் மூன்று நிமிடங்களில் நான் எழுதிக் கொடுத்த கவிதையை நினைவூட்டினேன். இது அவருக்குச் சிறிது நினைவிருந்தது.
‘அடட, ஆமால்ல? படிச்சனே. நல்லாருந்ததே? பப்ளிஷ் பண்ணலான்னு நினைச்சி எடுத்து வெச்சேன். எங்க வெச்சேன்னு தெரியல தம்பி’ என்று சொன்னார்.
அவரது அறையில் பல நூற்றுக் கணக்கான தாள்கள் ஓரத்தில் துளையிடப்பட்டு ட்வைன் நூலால் கட்டப்பட்டு ஒரு ஓரமாகக் குவிக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். அனைத்தும் கதைகள், கவிதைகளாகத்தான் இருந்திருக்க வேண்டும். தேடினால் என்னுடையதும் அதில் இருக்கலாம். ஆனால் தொலைவது விதியாக இருக்குமானால் அதை அப்படியே விட்டுவிடுவதுதான் சரி. நூற்றுக்கணக்கான தாள்களின் குவியலில் என்னுடையதும் கலந்திருக்கலாம் என்று அவருக்கும் தோன்றலாம். நான் சென்ற பின்பு தேடிப் பார்க்கவும் செய்யலாம். அப்போதும் அது கிடைக்காமல்தான் போகும் என்று தோன்றியது.
ஆனால் அவர் தேடியிருக்க நேரம் கிடைத்திருக்காது என்று விரைவிலேயே தெரிந்துவிட்டது. சில நாள்களிலேயே அவர் அக்னி நட்சத்திரம் படத்தில் நடிப்பதாகச் செய்தி வந்தது. உமா பத்திரிகையும் பிறகு வந்ததாகத் தெரியவில்லை.
சஃபையர், ப்ளூ டயமண்ட், எமரால்ட் தியேட்டர்களுமே அப்படித்தான் கண்ணெதிரே இருந்து, காணாமல் போயின. அந்த இடத்தில் அதிமுக அலுவலகம் வரப் போகிறது என்றார்கள். பிறகு பேய் நடமாட்டம் இருப்பதால் திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது என்றார்கள். அண்ணா சாலையில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இரவும் பகலும் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். யாரையும் அந்தப் பேய் இதுவரை துன்புறுத்தியதாகத் தெரியவில்லை.
உமாபதி அக்னி நட்சத்திரத்தில் நடிக்கப் போனபோதே எனக்கும் தாயில் எழுத வாய்ப்புக் கிடைத்து, பக்கத்துக்கு முப்பது ரூபாய் உத்தரவாதமானது. ப்ளூ டயமண்ட் காதலர்களுக்குத்தான் குறைந்த செலவில் நாள் முழுதும் குளிர் சாதன வசதியுடன் காதலிக்க அப்படி ஒரு சௌகரியமான இடம் கிடைக்காமலே போய்விட்டது.