ருசியியல் – 10

மனுஷகுமாரனாகப் பிறந்த காலம் முதல் என்னால் இன்றுவரை முடியாத காரியம் ஒன்றுண்டு. மேலே சிந்திக்கொள்ளாமல் சாப்பிடுவது.

கையால் எடுத்துச் சாப்பிடுவது, ஸ்பூனால் அலேக்காகத் தூக்கி உள்ளே தள்ளுவது, அண்ணாந்து பார்த்து கொடகொடவென தொண்டைக்குழிக்குள் கொட்டிக்கொள்வது, ஸ்டிரா போட்டு உறிஞ்சுவது, கலயத்தை வாய்க்குள்ளேயே திணித்து பாயிண்ட் டு பாயிண்ட் அடிப்பது உள்ளிட்ட நானாவித உபாயங்களிலும் பல்லாண்டுகாலப் பயிற்சியும் முயற்சியும் செய்து பார்த்துவிட்டேன். ம்ஹும். கறை படாத கரங்கள் இருந்து என்ன பிரயோசனம்? கறை படியாத சட்டை இன்றுவரை எனக்கு வாய்த்ததில்லை.

உண்பது ஒரு கலை. உதட்டில்கூட சுவடு தெரியாமல் உண்கிறவர்கள் சிலரைப் பார்த்திருக்கிறேன். சீனத் திரைப்படங்களில் நீள நீள நாக்குப்பூச்சி நூடுல்ஸை இரட்டைக் குச்சியால் அள்ளி உண்ணும் சப்பை மூக்கு தேவதைகளை எண்ணிப் பெருமூச்சு விட்டிருக்கிறேன். ஜேம்ஸ் பாண்ட் படங்களில் கதாநாயகராகப்பட்டவர் எத்தனை நளினமாக மது அருந்துவார்! என் நண்பர் பார்த்தசாரதி டிபன் பாக்ஸில் இருந்து சாப்பாட்டை எடுத்துச் சாப்பிடும் அழகைப் பார்ப்பதே ஒரு ஒடிசி நடனம் பார்ப்பது போலிருக்கும்.

எனக்கு இதையெல்லாம் ரசிக்கவும் வியக்கவும் முடியுமே தவிர, ஒருநாளும் செய்து பார்க்க முடிந்ததில்லை. சாப்பிட உட்கார்ந்தால் தட்டு பரமாத்மா, நான் ஜீவாத்மா. விசிஷ்டாத்வைத சித்தாந்தப் பிரகாரம் பரமாத்மாவைச் சென்றடைவது ஒன்றே நமது இலக்கு. கண்ணை மூடிக்கொண்டு கபளீகரம் செய்ய ஆரம்பித்துவிட்டால் ஜட உலகம் மறந்துவிடும். பரிமாறுகிறவர்களும் மறைந்து, பலகாரங்கள் மட்டுமே சிந்தனையை ஆக்கிரமிக்கும். சிந்தனை தப்பில்லை. அது அவ்வப்போது சிந்திவிடுவதுதான் பெரும் சிக்கல்.

இது ஏதோ திரவ வகையறாக்களுக்கு மட்டும் பொருந்துவது என்று எண்ணிவிடாதீர்கள். சாம்பார் சாதம், ரசம் சாதமும் சிந்தும். சனியன், தரையில் சிந்தினால் துடைத்து எடுத்துவிடலாம் என்றால் அவையும் சட்டையில் மட்டுமே சிந்தும். இந்த வம்பே வேண்டாம் என்று புளியோதரை, எலுமிச்சை சாதம் எனத் தடம் மாற்றிப் பயணம் மேற்கொண்டாலும் சட்டைப் பையில் நாலு பருக்கை அவசியம் இருக்கும்.

நுங்கம்பாக்கத்தில் ராஜ்பவன் உணவகத்தின் வாசலில் ஒரு ஐஸ் க்ரீம் கடை உண்டு. எனக்கு அந்தக் கடையில் கோன் ஐஸ் சாப்பிடுவது என்றால் ரொம்ப இஷ்டம். மதிய உணவுக்கு அந்தப் பக்கம் போக நேர்ந்தால் கண்டிப்பாக ஐஸ் க்ரீம் சாப்பிடாமல் திரும்பியதில்லை. அப்போதெல்லாம் பெரும்பாலும் பார்த்தசாரதியுடன்தான் போவேன்.

ஒரு ஐஸ் க்ரீமைத் தின்று முடிக்க மிஞ்சிப் போனால் ஐந்து நிமிடம் ஆகுமா? அந்த ஐந்து நிமிட அவகாசத்தில் என் கரம் சிரம் புறமெல்லாம் அந்தச் சிறிய கோன் ஐஸ் வண்ணம் தீட்டிவிடும். வாழ்நாளில் ஒருமுறை கூட கோனை உடைக்காமல் நான் கோன் ஐஸ் ருசித்ததில்லை. ஆனால் அந்த துஷ்டப் பண்டமானது பார்த்தசாரதியை மட்டும் ஒன்றும் செய்யாது. ஒரு குழந்தையைக் கையாளும் தாயின் லாகவத்தில் அவர் கோன் ஐஸைக் கையாள்வார். கையை ஆட்டி ஆட்டிப் பேசினாலும் ஒரு சொட்டுகூட அவருக்குச் சிந்தாது. உண்ட சுவடே இல்லாத உதட்டை கர்ச்சிப்பால்வேறு ஒற்றிக்கொள்வார். பார்க்கப் பார்க்கப் பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எரியும். என்ன செய்ய? என்னைத் தின்னத் தெரிந்தவனாகவும் அவரை உண்ண அறிந்தவராகவும் படைத்த பரதேசியைத்தான் நொந்துகொள்ள வேண்டும்.

ஒரு சமயம் திருச்சி தென்னூரில் ஏதோ ஒரு கூட்டத்தில் பேசக் கூப்பிட்டிருந்தார்கள். கூட்டம் மாலைதான். பகல் பொழுது முழுக்க என் வசம் இருந்தது. சும்மா ஊரைச் சுற்றலாம் என்று புறப்பட்டு மதியம் வரைக்கும் சுற்றிக்கொண்டே இருந்தேன்.

பசி வந்த நேரம் கண்ணில் ஒரு கடை தென்பட்டது. ‘ஶ்ரீமுனீஸ்வரன் துணை கம்மங்கூழ்’ என்ற சாக்பீஸ் போர்டுடன் சாலையின் ஒரு ஓரமாக நின்றிருந்த தள்ளுவண்டி.

அட, ஒருவேளை கூழ் குடித்துப் பார்த்தால்தான் என்ன? கம்பங்கூழ் ஆரோக்கியமானது. கம்பங்கூழ் குளிர்ச்சி தரக்கூடியது. கம்பில் இரும்புச் சத்து அதிகம். தவிரவும் பிறந்த கணம் முதல் சென்னைவாசியாகவே வாழ்ந்து தீர்ப்பவனுக்கு இம்மாதிரித் தருணங்களெல்லாம் எந்த விதமான கிளுகிளுப்பைத் தரும் என்று லேசில் விவரித்துவிட முடியாது.

ஒரு ஆட்டம் ஆடிப் பார்த்துவிடுவோம் என்று முடிவு செய்து எடுத்த எடுப்பில் இரண்டு சொம்பு கூழ் வாங்கினேன்.

முதல் வாய் ருசித்தபோது ஒரு மாதிரி இருந்தது. பழக்கமின்மையால் எழுந்த தயக்கம். இரண்டாவது வாய் குடித்தபோது அதன் வாசனை கொஞ்சம் பிடித்த மாதிரி தென்பட்டது. கடகடவென்று ஒரு சொம்புக் கூழையும் குடித்து விட்டு வைத்தபோது அபாரம் என்று என்னையறியாமல் உரக்கச் சொன்னேன்.

‘நல்லாருக்குங்களா? அதான் வேணும். நம்முது மெசின்ல குடுத்து அரைக்கற கம்பு இல்லிங்க. உரல்ல போட்டு இடிக்கற சரக்கு. வெறகு அடுப்பு, ஈயப்பானைதான் சமைக்கறதுக்கு பயன்படுத்தறது. அப்பத்தான் மணம் சரியா சேரும்’ என்றார் கடைக்காரர்.

காய்ச்சுகிறபோது உப்பு. காய்ச்சி இறக்கியதும் சிறு வெங்காயம். ஆறியபின் கெட்டி மோர். இவ்வளவுதான் கம்பங்கூழுக்கு. விசேடம் அதுவல்ல. கூழுக்குத் தொட்டுக்கொள்ள நாலைந்து விதமான பதார்த்தங்களை அந்தக் கடைக்காரர் கொடுத்தார். அதில் ஒன்று புளிச்சாறில் ஊறவைத்த பச்சை மிளகாய்.

இதைச் சற்று விளக்கவேண்டும். மிகவும் குறைவாக நீர் சேர்த்து, புளியை கெட்டியாகக் கரைத்துக் கொதிக்க வைத்துவிட வேண்டியது. அது உருண்டு திரண்டு பசை போல் வந்ததும் பச்சை மிளகாயின் விதைகளை அகற்றி (தேவைப்பட்டால் கொஞ்சம் சேர்க்கலாம்) நீளநீளத் துண்டுகளாக அந்தக் கொதியில் போட்டு அப்படியே ஊற விடுவது. கொஞ்சம் மஞ்சள் தூள். சற்றே உப்பு. வேறு எதுவும் அதில் கிடையாது. ஆனால் எப்பேர்ப்பட்ட ருசி தெரியுமா!

அந்தக் கம்பங்கூழும் புளி மிளகாயும் என் காலம் உள்ளவரை நினைவைவிட்டுப் போகாது. காரணம் அதன் ருசி மட்டுமல்ல.

காணாதது கண்டாற்போல அன்றைக்கு மூன்று சொம்பு கம்பங்கூழை வாங்கிக் குடித்து மூச்சு விட்ட பிறகு பூவுலகுக்குத் திரும்பி வந்தேன். பார்த்தால் என் சட்டையெல்லாம் கூழ். சட்டைப் பையில் சொருகியிருந்த பேனாவின் மூடிக்குள் வரை ஊடுருவியிருந்தது அக்கூழ்மாவதாரம்.

திடுக்கிட்டுவிட்டேன். அடக்கடவுளே! விழாவுக்கு இந்தச் சட்டையுடன் எப்படிப் போய் நிற்பது? மாற்றுச் சட்டை ஏதும் கைவசம் இல்லை.

‘தொடச்சி விட்டுருங்க தம்பி. போயிரும்’ என்றார் கடைக்கார நல்லவர்.

வேறு வழி? கூழ் பட்டுப் பாழ்பட்ட இடங்களையெல்லாம் நீர்விட்டுத் துடைத்தேன். அதற்குப் பேசாமல் குளித்திருக்கலாம். முழுச் சட்டையும் நனைந்து கசங்கிவிட்டது.

சரி போ, சட்டையில் என்ன இருக்கிறது? தவிரவும் எழுத்தாளனாகப்பட்டவன் எப்போதும் ஒரு ஏடாகூடம்தான் என்பதை இச்சமூகம் இந்நாள்களில் நன்கறிந்திருக்கும் என்று என்னை நானே தேற்றிக்கொண்டு மாலை வரை அதே சட்டையில் சுற்றிவிட்டு விழாவுக்குப் போய்ச் சேர்ந்தேன்.

நடந்த விழா முக்கியமல்ல. முடிந்த பிறகு புகைப்படக்காரர் சொன்னார். ‘காலர்ல எதோ கறை பட்டிருக்கு சார்.’

அது அந்தப் புளி மிளகாய்ப் பசையின் கறை.

கொண்டையை மறைக்கத் தெரியாதவனெல்லாம் இப்படித்தான் கால் நூற்றாண்டுக்குப் பிறகு கட்டுரை எழுதிக்கொண்டிருப்பான்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி