ருசியியல் – 09

தங்கத் தமிழகத்தில் பக்தி இயக்கம் பெருகி வேரூன்றியதில் கோயில்களின் பங்கைவிட, கோயில் பிரசாதங்களின் பங்கு அதிகம் என்பது என் அபிப்பிராயம். பின்னாள்களில் ஈவெரா பிராண்ட் நாத்திகம், இடதுசாரி பிராண்ட் நாத்திகம், இலக்கிய பிராண்ட் நாத்திகம் எனப் பலவிதமான நாத்திக நாகரிகங்கள் வளரத் தொடங்கியபோது, கோயிலுக்குப் போக விரும்பாதவர்களும் பிரசாதம் கிடைத்தால் ஒரு கை பார்க்கத் தவறுவதில்லை.

இதில் ஒன்றும் பிழையில்லை என்று வையுங்கள். தூண், துரும்பு வகையறாக்களில் எல்லாம் வேலை மெனக்கெட்டுப் போய் உட்கார்ந்துகொள்பவன் ஒரு புளியோதரையிலும் சர்க்கரைப் பொங்கலிலும் மட்டும் இருந்துவிட மாட்டானா என்ன?

வெளிப்படையாகச் சொல்வதில் வெட்கமே இல்லை. எனக்குப் பெருமாளைப் பிடிக்கும். பிரசாதங்களை ரொம்பப் பிடிக்கும்.

பிரசாதம் என்று நான் சொல்லுவது பிரபல கோயில்களின் பிரத்தியேக அடையாளங்களையல்ல. உதாரணத்துக்கு, திருப்பதி என்றால் நீங்கள் லட்டைச் சொல்லுவீர்கள். பழனி என்றால் பஞ்சாமிர்தம். அதுவல்ல நான் சொல்லுவது. இந்தப் பிரபலப் பிரசாதங்களுக்கு அப்பால் ஒவ்வொரு கோயிலிலும் வேறு சில ரகங்கள் அபார சுவையோடு தளிகையாகும். திருப்பதியில் எனக்கு லட்டைவிட கோயில் தோசை ரொம்பப் பிடிக்கும். பர்கரில் பாதியளவுக்கு கனத்திருக்கும் தோசை. அதை நெய் விட்டு வார்ப்பார்களா, அல்லது நெய்யில் குளிப்பாட்டி வார்ப்பார்களா என்று தெரியாது. மிளகு சீரகமெல்லாம் போட்டு ஜோராக இருக்கும். ஆறினால் நன்றாயிராது; தொட்டுக்கொள்ள சட்னி வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. மந்தார இலையில் சுற்றி எடுத்துக்கொண்டு கிளம்பிவிடலாம். இரண்டு மூன்று நாள் வைத்திருந்து சாப்பிட்டாலும் ருசி பங்கம் கிடையாது.

இங்கே, சிங்கப்பெருமாள் கோயில் புளியோதரையும் அந்த ரகம்தான். நல்லெண்ணெய், மிளகு. இந்த இரண்டும்தான் இந்தப் புளியோதரையின் ஆதார சுருதி. ஒரு வாய் மென்று உள்ளே தள்ளினால் அடி நாக்கில் இழுக்கும் பாருங்கள் ஒரு சுகமான காரம்! அதை ஒரு வாரத்துக்குச் சேமித்து வைத்து அவ்வப்போது கூப்பிட்டுச் சீராட்ட முடியும்.

திருவாரூருக்குப் பக்கத்தில் திருக்கண்ணபுரம் என்று ஒரு திவ்யதேசம் இருக்கிறது. சௌரிராஜப் பெருமாள் அங்கே பிரபலஸ்தர். அவருக்கு முனியதரன் பொங்கல் என்று ஒன்றை நட்ட நடு ராத்திரி அமுது செய்விப்பார்கள். யாரோ முனியதரன் என்கிற குறுநில மன்னர்பிரான் ஆரம்பித்து வைத்த வழக்கம். இன்றைக்கு வரைக்கும் கோயிலில் பெருமாளுக்கு இந்த நடு ராத்திரி டின்னர் உண்டு. முனியதரன் படைத்ததென்னவோ வெறும் அரிசி, பருப்பு, உப்பு சேர்த்த மொக்கைப் பொங்கல்தான். பரிமாண வளர்ச்சியில் இன்று இப்பொங்கல் அமிர்த ஜாதியில் சேர்ந்துவிட்டது.

மிகச் சிறு வயதில் இந்த ஊர் உற்சவத்துக்கு ஒரு சமயம் போயிருக்கிறேன். நள்ளிரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது யாரோ எழுப்பும் சத்தம் கேட்டது. கொதிக்கக் கொதிக்க உள்ளங்கையில் பிரசாதத்தை வைத்துக்கொண்டு அப்பா நின்றிருந்தார். சூடு பொறுக்காமல் சர்வர் சுந்தரம்போல் அவர் பொங்கல் பந்தை பேலன்ஸ் செய்யத் தவித்து என் வாயில் சேர்த்த காட்சி இப்போதும் நினைவில் உள்ளது. வாழ்நாளில் அப்படியொரு பொங்கலை நான் உண்டதே இல்லை. அது வெறும் நெய்யும் பாலும் பருப்பும் சேர்வதால் வருகிற ருசியல்ல. வேறு ஏதோ ஒரு சூட்சுமம் இருக்கிறது. பெரும் தங்கமலை ரகசியம்.

இந்தப் பிரசாத வகையறாக்களில் நவீனத்துவத்தைப் புகுத்தியவர்கள் என்று ஹரே கிருஷ்ணா இயக்கத்தவர்களைச் சொல்லுவேன். பெங்களூரில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு ஒருமுறை சென்றிருந்தபோது அங்கு நான் கண்டது பிரசாத ஸ்டால் அல்ல. பிரசாத ஹால். பந்தி பரிமாறுகிற மாதிரி வரிசையாக டேபிள் போட்டு நூற்றுக்கணக்கான பிரசாத வெரைட்டி காட்டி மிரட்டிவிட்டார்கள். சகஸ்ர சமோசா. கைவல்ய கட்லெட். தெய்வீக ரசகுல்லா. பக்தி பர்கர். பரவச பீட்ஸா. மதுர மசாலா தோசை.

ஆன்மிக ஆம்லெட் மட்டும்தான் இல்லை.

யோசித்துப் பார்த்தால் பக்தியே ஒரு ருசிதான். எங்கோ தொலைதூரத்தில் இருந்து பித்துக்குளி முருகதாஸின் ஒலித்தட்டுக் குரல் கேட்டால், அடுத்தக் கணம் எனக்குக் கண் நிறைந்துவிடும். பண்டிட் ஜஸ்ராஜின் மதுராஷ்டகம் கேட்டிருக்கிறீர்களா? கிருஷ்ணனே இறங்கி வந்து பால்சாதம் ஊட்டிவிடுவது போல இருக்கும். ரசனை, மனநிலை சார்ந்தது. அனுபவிப்பது என்று முடிவு செய்துவிட்டால் ஆழம் பார்த்துவிட வேண்டும்.

ஒரு சமயம் சிங்கப்பூர் போயிருந்தபோது, ‘கோகுல்’ என்றொரு ஓட்டலுக்குச் சென்றிருந்தேன். அது ஹரே கிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நடத்துகிற ஓட்டல். மெனு கார்டில் மட்டன், சிக்கன் என்றெல்லாம் இருந்ததைக் கண்டதும் திகிலாகிவிட்டது.

என்ன அக்கிரமம் இது! கிருஷ்ணர் சிங்கப்பூர் போனபோது கட்சி மாறிவிட்டாரா என்ன?

ஹரே கிருஷ்ணா என்று அந்தராத்மாவில் அலறிக்கொண்டு எழுந்தபோது, உடனிருந்த என் நண்பர் பத்ரி ஆசுவாசப்படுத்தினார். அது சும்மா ஒரு எஃபெக்டுக்காகச் சேர்ப்பதுதானாம். டோஃபு துண்டுகளைச் சேர்த்துக் கிளறி நான் வெஜ் கடிக்கிற உணர்வைக் கொடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது. பன்னாட்டுப் பயணிகள் வந்து போகிற பிரதேசம். பெயரளவில் அசைவம் சேர்ப்பதில் பாவமொன்றுமில்லை என்று நினைத்திருக்கிறார்கள்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்! கொஞ்சம் ஆசுவாசமடைந்த பிறகு ரொஜாக் என்றொரு ஐட்டத்தை ஆர்டர் செய்து, சாப்பிட்டுப் பார்த்தேன். பழங்கள், பாலாடைக்கட்டி, டோஃபு, வெல்லம், சீரகம் என்று கையில் கிடைத்த எல்லாவற்றையும் சேர்த்துக்கொட்டிக் கிளறி, தக்காளி சூப் மாதிரி எதிலோ ஒரு முக்கு முக்கி எடுத்து வந்து வைத்தார்கள். அசட்டுத் தித்திப்பும் அநியாயப் புளிப்புமாக இருந்த அந்தப் பதார்த்தம் ஒரு கட்டத்தில் எனக்குப் பிடித்துவிடும்போல் இருந்தது.

இன்னொன்று கேட்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, நண்பராகப்பட்டவர் வினோதமான ஒரு பேரைக் கொண்ட (மீ கொரெய்ங் என்று ஞாபகம்) ஏதோ ஒரு மலாய் உணவுக்காகக் காத்திருந்தார். முன்னதாக மெனு கார்டில் அதன் சேர்மானங்களையெல்லாம் ஊன்றிப் படித்து நாலைந்து பேரிடம் விசாரித்த பிறகுதான் அதை உண்ணத் தயாராகியிருந்தார். கோர நாஸ்திக சிகாமணியான அவரை பகவான் கிருஷ்ணர் தமது உணவகம் வரைக்கும் வரவழைத்துவிட்டதை எண்ணி நான் புன்னகை செய்துகொண்டிருந்தபோது அவர் ஆணையிட்ட உணவு வகை மேசைக்கு வந்து சேர்ந்தது.

நண்பர் சாப்பிட ஆரம்பித்தார்.

‘நன்றாக இருக்கிறதா?’ என்று கேட்டேன். முதல் வாய் உண்டபோது சிரித்தபடி தலையசைத்தார். இரண்டாவது, மூன்றாவது, நான்காவது கவளம் உள்ளே போனபோது மீண்டும் கேட்டேன், ‘பிடித்திருக்கிறதா?’

மீண்டும் அவர் தலையசைத்தார். ஆனால் ஏதோ சரியில்லாத மாதிரி தோன்றியது. ஒரு கட்டத்தில் வேகவேகமாகச் சாப்பிட ஆரம்பித்தார்.

அந்த உணவகத்தில் மிக மெல்லிய ஒலியளவில் கிருஷ்ண பஜன் ஒலித்துக்கொண்டிருந்தது. அதன் தாள கதிக்கு ஏற்ப அவர் உண்டுகொண்டிருந்த மாதிரி தோன்றியது. சட்டென்று ஏதோ ஒரு கணத்தில் அவர் பிளேட்டை விடுத்து, என்னை நிமிர்ந்து பார்த்தார். அவர் கண்ணில் இருந்து கரகரவென நீர் வழிந்துகொண்டிருந்தது.

ஆ! எப்பேர்ப்பட்ட அற்புதத் தருணம் அது! தமது பள்ளி நாள் தொடங்கி, கடவுள் இல்லை என்று சொல்லி வளர்ந்த பிள்ளை அவர். தென் தமிழ் தேசத்தில் இருந்து எங்கோ மூவாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அழைத்து வந்து அவரை இப்படிக் கிருஷ்ண பக்தியில் கரைய வைத்த பெருமானின் லீலா வினோதம்தான் எப்பேர்ப்பட்டது!

நான் புல்லரித்து நின்றபோது நண்பர் சொன்னார், ‘செம காரம்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter