ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 7

எண்பதுகளின் இறுதி ஆண்டுகளைப் பைங்கிளிப் பத்திரிகைகளின் பொற்காலம் என்று சொல்லலாம். திரைச் சித்ரா, பருவகாலம், மருதம் போன்ற புகழ்பெற்ற பத்திரிகைகள் தவிர குறைந்தது முப்பது பெயர் பிரபலமில்லாத, அல்லது பெயரேகூட வேண்டியிருக்காத பத்திரிகைகள் அப்போது சென்னையில் இருந்து வெளியாகிக்கொண்டிருந்தன. எல்லாமே மட்கிய தாள்களில் கறுப்பு வெள்ளையில் மட்டுமே அச்சிடப்பட்ட பத்திரிகைகள். சில பத்திரிகைகள் பிளாஸ்டிக் கவருக்குள் போடப்பட்டு கடைகளுக்கு வரும். சில பத்திரிகைகள் அப்படியே வரும். எப்படி வந்தாலும் வெளிவந்த ஓரிரு தினங்களுக்குள் அவை விற்றுவிடும்.

இந்தப் பத்திரிகைகளின் பதிப்பாளர்கள் பெரும்பாலும் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் குடியிருந்தார்கள். எப்படி புத்தகப் பதிப்பாளர்கள் பாண்டி பஜாரில் இருந்தார்களோ, திரைப்பட வினியோகஸ்தர்கள் மீரான் சாகிப் தெருவில் இருந்தார்களோ, அப்படி.

அந்நாளில் எல்டாம்ஸ் சாலையில் எனக்கு ஒரு நண்பன் இருந்தான். அவன் ஒரு வடிவமைப்பு ஓவியன். கம்ப்யூட்டர் வடிவமைப்பு புழக்கத்துக்கு வராத காலத்தில் அச்சிட்ட தாள்களை அட்டையில் வெட்டி ஒட்டி, கையால் தலைப்புகள் எழுதி, பிலிம் எடுக்கத் தோதாக வடிவமைத்துத் தரும் பணியைச் செய்துகொண்டிருந்தான். அவன் மூலமாகத்தான் எனக்கு சுதந்திரம், தாய் போன்ற பத்திரிகைகளில் அன்று எழுத வாய்ப்புக் கிடைத்தது. அவன் மூலமாகத்தான் இந்தப் பைங்கிளிப் பதிப்பாளர்களின் அறிமுகமும் கிடைத்தது.

‘இந்தப் பத்திரிகைக்கெல்லாமாடா லே அவுட் பண்ணுவ?’ என்று நம்ப முடியாமல் கேட்பேன்.

‘எதுக்கு பண்ணா என்ன? ஒரு இஷ்யு முடிச்சா ரெண்டாயிரம் ரூபா. கசக்குதா?’ என்பான். தவிர, அந்தப் பத்திரிகைகளின் பதிப்பாளர்கள் பெரிய அளவில் கலை நயம் எதிர்பார்க்க மாட்டார்கள். ஒவ்வொரு ஒன்று விட்ட பக்கத்திலும் வலப்புறம் ஒரு பெண்ணின் படத்தை முக்கால் பக்க அளவுக்கு வைத்துவிட்டால் போதும். அது கவர்ச்சிப் படமாக இருக்க வேண்டும். எந்தெந்தப் பக்கங்களுக்கு என்னென்ன படம் என்றும் அந்தப் பதிப்பாளரே தீர்மானித்து, புகைப்படங்களின் பின்னால் பக்க எண் போட்டுக் கொடுத்துவிடுவார்.

வேறு வேறு கதை கட்டுரைகளை வடிவமைக்கும் சிரமம் இல்லை. ஒரே கதைதான். எண்பது பக்கங்களுக்கும் அதுவேதான் வரும். நடுவே ஒன்றிரண்டு பக்கங்கள் மாற்றி ஒட்டி, அச்சாகிவிட்டாலும் எந்த வாசகரும் கடிதம் எழுத மாட்டார்கள்.

‘இதெல்லாம் பெரிசில்லடா. இந்த உலகத்துல லே அவுட் ஆர்ட்டிஸ்ட ஏமாத்தாம வேல முடிச்ச கையோட கூலி தர்ற ஒரே ஜாதி இவனுகதான். முப்பதாயிரம், நாப்பதாயிரம் விக்குற பத்திரிகையெல்லாம்கூட அடுத்த மாசம் வாங்கிக்கறிங்களான்னு தலைய சொறிஞ்சிக்கிட்டு நிப்பானுக பன்னாடப் பசங்க’ என்பான்.

அதை நானே பார்த்திருக்கிறேன். திருவள்ளுவர் சாலையில் ஏழெட்டு எருமை மாடுகள் எப்போதும் கூடி நிற்கும் ஒரு ஸ்டோர் வீட்டின் மாடியில் உள்ள அவனது பத்துக்குப் பத்து அறையில் இரவு ஏழு மணிக்குப் பிறகு வேலை களை கட்டத் தொடங்கும். சிகரெட் புகையும் சிக்கன் பிரியாணி வாசனையும் அறையை நிறைக்கும். மேற்சொன்ன பைங்கிளிப் பதிப்பாளர்கள் ஒவ்வொருவராக அப்போதுதான் வரத் தொடங்குவார்கள். நள்ளிரவு தாண்டி இரண்டு மூன்று மணிவரைகூட இடைவிடாமல் வேலை நடக்கும். பல நாள் என் நண்பன் காலை ஆறு, ஏழு மணி வரை குனிந்த தலை நிமிராமல் வேலை பார்ப்பான். முடித்துவிட்டு, ‘எடுத்துக்கங்க சார்’ என்று அவன் சொன்னதும் அரைக் கணம் கூடத் தாமதிக்காமல் பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டுத்தான் ஒட்டிய அச்சுத் தாள்களை எடுத்துக் கொள்வார்கள்.

அப்போது நான் ஒரு பக்திப் பத்திரிகையில் தாற்காலிகமாகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். மாதப் பத்திரிகைதான். ராசி பலன், பஞ்சாங்கக் குறிப்புகள், சங்கராச்சாரியார் அருள்வாக்கு, சிவ புராண அத்தியாயங்கள் என்று எல்லாமே ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்டதை மறு பிரசுரம் செய்யும் பத்திரிகை அது. மாதத்தில் இரண்டு நாள் எடிட்டோரியல் வேலை இருக்கும். ஒரு நாள் வடிவமைப்புக்காக எல்டாம்ஸ் சாலைக்குப் பக்கங்களை எடுத்துக்கொண்டு வருவேன். ஒரு மருத்துவரின் க்ளினிக்கில் டோக்கன் வாங்கிக்கொண்டு காத்திருக்கும் நோயாளிகளைப் போல அவனது அறையில் பதிப்பாளர்கள் தமது வேலையை முடித்துக்கொண்டு கிளம்பக் காத்திருப்பார்கள். ‘டேய் ஒனக்கு அவசரம் இல்லியே? நீ உக்காரு’ என்று என்னைப் பார்த்துச் சொல்வான். நான் தரையில் குவிந்துகிடக்கும் பத்திரிகைக் குவியலின் மீதே படுத்துக்கொண்டு அவன் ஒட்டி ஒட்டிப் போடும் அச்சுத் தாள்களைப் படித்துக்கொண்டிருப்பேன்.

அந்நாள்களில் சில நுறு பைங்கிளி நாவல்களையாவது அவனது அறையில் இருந்தபோது வாசித்திருப்பேன். எனக்குத் தீராத வியப்பு என்னவெனில், பதிப்பாளர்களாகவும் ஆசிரியர்களாகவும் இருக்கும் அந்தந்த பைங்கிளி உரிமையாளர்களே அவரவர் பத்திரிகையின் எழுத்தாளர்களாகவும் இருந்தது. மனச்சாட்சிக்கு விரோதமின்றிச் சொல்வேன். இன்று எழுதும் யாரை விடவும் அவர்களுக்கு மொழி வளம் அதிகம். கற்பனை வளம் அதிகம். கதை சொல்லும் திறமை அதிகம். ஒரு எளிய கிளுகிளுப்புக் கதையில் இருபது முப்பது திருப்பங்களையாவது எப்படியேனும் வைத்துவிடுவார்கள். சித்தியுடன் உறவு, டீச்சருடன் உறவு, எதிர்வீட்டு அக்காவுடன் உறவு, பாத்ரூமில் உறவு, சமையலறையில் உறவு, தோட்டத்தில் உறவு, கிணற்றுக்குள் உறவு, துள்ளிக்கொண்டு வெளியே பாயும் முயல் குட்டிகள், பருத்த பிருஷ்ட பாகங்கள், தடித்த வடை போன்ற தொடைகள் போன்ற கூறியது கூறல் அனைத்துக் கதைகளிலும் இருக்கும் என்றாலும், அதை மீறி கொடுக்கும் காசுக்குக் குறை வைக்காமல் ஏதோ ஒன்றைத் திணித்துத் தந்துவிடுவார்கள்.

நண்பனின் அறையில் சுமார் ஓராண்டுக் காலம் என்னை அடிக்கடி பார்த்த பழக்கத்தில் அந்தப் பதிப்பாளர்களில் சிலரும் எனக்கு நண்பர்களானார்கள். ‘சார் நம்ம புக்கு இந்த இஷ்யு படிச்சிங்களா? நல்லாருந்துச்சிங்களா?’ என்று அக்கறையுடன் விசாரிப்பார்கள். பதிலே சொல்ல முடியாத கேள்வி அது. ஒரு கதை நன்றாக இருந்ததா இல்லையா என்பதைப் பொதுவாக மனம்தான் மதிப்பிட வேண்டும். ஆனால் இந்தக் கதைகளை ஓர் உடலுறுப்பு அல்லவா மதிப்பிட்டு அறிவிக்க வேண்டும்? ஒரு ஏகாந்த மனநிலை, சிறிதளவு கள்ளத்தனம், யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம், அனைத்தைக் காட்டிலும் முக்கியமாக, உறங்கி எழுந்தால் பிழைப்பு என்ன என்கிற கவலை இல்லாத தற்கணம். இவை அனைத்தும் அந்தக் கதைகளை ரசித்துப் படிக்க அவசியத் தேவை என்று நினைக்கிறேன்.

துரதிருஷ்டவசமாக அன்று எனக்கு இவற்றில் எதுவுமே இல்லாதிருந்தது. வாழ்வு குறித்த நிச்சயமின்மை ஒவ்வொரு வினாடியும் அச்சுறுத்திக்கொண்டிருந்தது. நண்பன், தாய் பொறுப்பாசிரியராக இருந்த ரகுநாத்தை அறிமுகப்படுத்தி, அந்தப் பத்திரிகையில் எழுத வாய்ப்பு வாங்கித் தந்திருந்தான். ஒரு பக்கம் பிரசுரமானால் முப்பது ரூபாய் சன்மானம். ஓர் இதழில் அதிக பட்சம் ஐந்து பக்கங்கள் வரை எழுதலாம். அது ஒரே கட்டுரையானாலும் சரி; ஐந்து கட்டுரைகளானாலும் சரி. எழுதக் கிடைத்த வாய்ப்பைவிட, வாரம் தோறும் அங்கே எனக்குக் கிடைத்த அதிகபட்சத் தொகையான நூற்றைம்பது ரூபாயை விட, பல முக்கியமான படைப்பாளிகளைத் தாய் அலுவலகத்தில் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பைப் பெரிய கௌரவமாக நினைத்தேன். இன்று வரை என்னுடன் நட்பிலும் தொடர்பிலும் இருக்கும் பல எழுத்தாளர்கள் அன்றைக்குத் தாயில் அறிமுகமானவர்கள்தாம்.

இந்த விவரமெல்லாம் அந்தப் பைங்கிளி பதிப்பாளர்களுக்குத் தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை நான் வடிவமைப்பாளரின் நண்பன். எழுதக் கூடிய இளைஞன்.

ஒருநாள் ஒருவர் என்னிடம் கேட்டார். ‘ஏன் சார், தாய்ல உங்களுக்கு எவ்ள தர்றாங்க?’

சொன்னேன்.

‘முப்பதா? வேஸ்டு சார். நமக்கு எழுதறிங்களா சொல்லுங்க. ஒரு கதைக்கு ஐந்நூறு ரூபா தரேன்.’

அது அன்று நான் அறிந்த ஓர் எண் மட்டுமே. பணமாக, மொத்தமாகக் கண்டதே இல்லை. அவர் கேட்கும் ரகத்திலான கதை ஒன்றை எழுதிக் கடாச எனக்கு ஒன்றரை மணி நேரம் போதும். அவர் படித்துக் கூடப் பார்க்காமல் பிரசுரிப்பார் என்பதை அறிவேன். தவிர அந்தப் பத்திரிகையில் பெயர் வராது. எழுத்தாளர் யார் என்று யாரும் கேட்கப் போவதில்லை.

‘கண்ண மூடிக்கிட்டு நாலு கதை எழுதித் தந்துருங்க சார். ரெண்டாயிரம் பல்க்கா குடுத்துடுறேன். எனக்கும் நாலு மாசம் எளுதற வேல மிச்சம். என்ன சொல்றிங்க?’

என்ன சொல்ல? ஒரு புன்னகையில் அந்த உரையாடலை முடித்துவிட்டு எழுந்து போய்விட்டேன்.

அந்த ஆண்டுதான் பர்மா பஜாரில் பல்லாயிரக் கணக்கான செக்ஸ் விடியோ கேசட்டுகள் உலகெங்கிலும் இருந்து வந்து குவியத் தொடங்கின. அவை உடனே புரசைவாக்கம் நிலவறை எலக்டிரானிக் கடைகளுக்கும் ரங்கநாதன் தெரு சத்யா பஜாருக்கும் வந்து, நகரம் முழுவதும் சீராக வினியோகிக்கப்பட்டன. சென்னை நகரத்து இளைஞர்கள் பைங்கிளிப் பத்திரிகைகளை மொத்தமாகக் கைவிட்டு விடியோக்களில் மூழ்க ஆரம்பித்தார்கள். ஒரு சில மாதங்களிலேயே இந்த மாற்றத்தைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. எல்டாம்ஸ் சாலை பதிப்பாளர்கள் தவித்துப் போனார்கள். விலைக் குறைப்பு, நடுவே வண்ணப்படங்கள் உள்ள பக்கங்கள், அதிகப் பக்கங்களில் கூடுதலாக ஒரு கதை என்று என்னென்னவோ முயற்சி செய்தார்கள். எதுவும் எடுபடவில்லை. எனக்குத் தெரிந்த சுமார் முப்பது பத்திரிகைகளில் பெரும்பாலானவை அடுத்த ஆண்டுக்குள் நிறுத்தப்பட்டுவிட்டன. அந்தப் பதிப்பாளர்கள் சிறிது காலம் குடித்துவிட்டுப் புலம்பிக்கொண்டிருந்தார்கள். பிறகு சோதிடப் பத்திரிகை நடத்தப் போய்விட்டார்கள்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி