ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 6

சரியான வேலை ஒன்று அமைந்திருக்கவில்லை. பல இலக்கியமல்லாத சிற்றிதழ்களில் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் சம்பளம் கிடைக்குமா என்று சந்தேகமாக இருந்தது. அப்போதெல்லாம் தினத்தந்தியின் வரி விளம்பரப் பகுதியில் நிறைய பத்திரிகை வேலை விளம்பரங்கள் வரும். கண்ணாடி, மூக்குத்தி, செம்பரிதி, புது விடியல் என்று என்னென்னவோ பெயர்களில் வெளியாகிக்கொண்டிருந்த பத்திரிகைகள். அவற்றில் எது ஒன்றையும் நான் பார்த்ததுகூடக் கிடையாது. ஆனால் விளம்பரத்தில் சென்னை முகவரி இருந்துவிட்டால் உடனே ஒரு விண்ணப்பக் கடிதம் எழுதி அனுப்பிவிடுவேன். சிலபேர் நேரில் வரச் சொல்லி கார்டு போடுவார்கள். போய்ப் பார்த்தால் அந்த இடத்தின் சூழ்நிலையே பிடிக்காமல் போய்விடும். அவை பெரும்பாலும் நொடித்துப் போன பழம்பெரும் தனி மனிதர்களின் இறுதிக் கால முயற்சியாக இருக்கும். பாழடைந்த ஓட்டு வீட்டின் முன்னறையில் புராதனமான மேசை நாற்காலிகளுக்கும் ஒட்டடை மற்றும் காகிதக் குப்பைகளுக்கும் இடையே யாரோ ஒரு நபர் அமர்ந்திருப்பார். அன்பாகப் பேசுவார். அவரே எழுந்து சென்று குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்து தருவார். இண்டர்வியூவெல்லாம் இல்லாமல் நேரடியாக வேலைக்கு எடுத்துக்கொள்ளத் தயாராக இருப்பார். இதழ் தயாரிப்புப் பணிகளுடன் விற்பனைப் பணியையும் சேர்த்துப் பார்க்கச் சொல்லுவார். ஒவ்வொரு இதழ் வெளிவரும்போதும் குறைந்தது நூறு பிரதிகள் என் மூலமாக விற்பனையானால் எனக்கு முன்னூறு ரூபாய் சம்பளம் என்று சொல்வார். பல இடங்களில் எனக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கிறது. எனக்கு விற்பனையெல்லாம் வராது என்று சொல்வேன். ஓ, அப்படியா? சரி பார்க்கலாம் என்று சொல்லி அன்போடு அனுப்பி வைத்துவிடுவார்கள்.

1987-89 காலக்கட்டத்தில் குறைந்தது ஐம்பது இடங்களில் இப்படி ஏறி இறங்கியிருக்கிறேன். அந்த மொத்த முயற்சியின் நிகர லாபம் என்று பார்த்தால் என்னைப் போலவே எழுத்து ஆர்வமுடன் திரிந்துகொண்டிருந்த என் வயதொத்த நான்கைந்து பேரின் நட்பு கிடைத்ததுதான். அப்படிக் கிடைத்த நண்பர் ஒருவர் சொன்னதன் பேரில் பூச்சரம் என்றொரு பத்திரிகை அலுவலகத்துக்கு ஒருநாள் சென்றேன்.

அந்த அலுவலகம் போரூருக்கும் வளசரவாக்கத்துக்கும் இடைப்பட்ட பிராந்தியத்தில் மிகவும் உள்ளடங்கிய ஒரு காலனியில் இருந்தது. சாலை இல்லை. மிக நீண்ட மண் பாதை ஒன்று எப்போதோ அங்கு இருந்திருக்க வேண்டும். மழைக்காலம் முடிந்திருந்ததால் முற்றிலும் நாசமாகி கால் வைக்கும் இடமெல்லாம் புதை குழியாகவே இருந்தது. பேண்ட்டெல்லாம் சேறு. கழுவிக்கொள்ள எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை மழை பெய்து திட்டுத் திட்டாகத் தேங்கியிருந்ததே தவிர ஒரு குழாயோ கிணற்றடியோ தென்படவில்லை. ஒரு பத்திரிகை ஆசிரியரை எப்படி இப்படிச் சென்று சந்திப்பது என்று கவலையாக இருந்தது. வழியில் ஏதாவது வீட்டில் நின்று நிலைமையைச் சுட்டிக்காட்டி உதவி கேட்கலாம் என்றால் குறிப்பிட்ட காலனியை அடையும்வரை வீடுகளே கண்ணில் தென்படவில்லை. முள் புதர்களின் இடையே சில நாய்கள் மட்டும் சுற்றிக்கொண்டிருந்தன. வேறு வழியின்றி அப்படியேதான் போய்ச் சேர்ந்தேன்.

அது ஒரு புறம்போக்குக் குடியிருப்புப் பகுதி போலத் தோன்றியது. நிறைய காலி இடங்களுக்கு நடுவே சில வீடுகள் இருந்தன. பெண்கள், உள்ளே பாத்திரம் துலக்கி வீதியில் வீசிக் கொட்டிக்கொண்டிருந்தார்கள். அதைப் பொருட்படுத்தாமல் ஒரு தையல் கலைஞர் அதே வீதியில் ஒரு ஓரமாகத் தையல் மெஷின் எதிரே ஸ்டூல் போட்டு அமர்ந்து தைத்துக்கொண்டிருந்தார். அவரிடம் பூச்சரம் பத்திரிகை அலுவலகம் எங்கே இருக்கிறது என்று விசாரித்தேன்.

‘புக்கா?’ என்று அவர் திருப்பிக் கேட்டார். சிறிது யோசித்துவிட்டு ஆமாம் என்று சொன்னேன்.

‘இங்க கடையெல்லாம் இல்ல தம்பி. வடபழனி போனா கிடைக்கும்’ என்று சொன்னார்.

‘இல்லிங்க. கடை இல்லை. பத்திரிகை ஆபீஸ்.’

‘இங்க ஆபீசெல்லாம் இல்ல தம்பி.’ என்றவர் அந்த வழியே போன ஒரு பெண்மணியை நிறுத்தி, ‘அக்கா, இங்க அச்சாபீஸ் எதும் இருக்குது?’ என்று கேட்டார். நான் அந்தப் பெண்ணிடம் பூச்சரம் என்றொரு பத்திரிகை வருவதையும் அதன் நிர்வாக அலுவலகம் அந்தப் பிராந்தியத்தில்தான் எங்கோ இருக்கிறது என்றும் சொன்னேன்.

‘தெர்லப்பா. அந்த மஞ்ச சுண்ணாம்பு வீட்டாண்ட போய்க் கேட்டுப்பாரு. அந்தூட்டு ஐயாதான் புக்கு படிப்பாரு’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

மஞ்சள் சுண்ணாம்பு அடித்த வீடு சிறிதாக இருந்தது. வெளியில் நின்று பார்த்தபோது ஒரு ஹால் தெரிந்தது. ஹாலை அடுத்து உடனே பின்புற வீதி தெரிந்தது. வேறு வழியில்லை. பாத்திரம் கழுவினால் வீதியில்தான் கொட்டியாக வேண்டும். சிறிது ஒதுங்கி நின்றுகொண்டு ‘சார்’ என்று அழைத்தேன். ஒரு நபர் வெளியே வந்தார். எரிந்து முடித்த ஒரு தீக்குச்சியைப் போல ஒடுங்கி, நொறுங்கி இருந்தார். லுங்கியை முழங்காலுக்கு மேல் உயர்த்திக் கட்டியிருந்தார். மேல் சட்டை அணியாமல் ஒரு துண்டு மட்டும் போட்டிருந்தார். முகச் சவரம் செய்துகொண்டிருக்க வேண்டும். மூக்குக்கும் மேல் உதட்டுக்கும் நடுவே சிறிது சோப்பு நுரை இருந்தது.

‘பூச்சரம் பத்திரிகை ஆபீஸ் இங்க எங்க இருக்குன்னு தெரியுமா?’

‘இதுதான். வாங்க’ என்றார். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அதுவரை நான் சந்திக்கச் சென்ற பத்திரிகை அதிபர்கள், வீட்டோடு இருந்து இதழ்ப்பணி ஆற்றிக்கொண்டிருந்தவர்கள்தான் என்றாலும் அதற்கென்று ஒரு சிறிய அறையையாவது ஒதுக்கி வைத்திருந்தார்கள். இந்த மனிதர் ஒரு ஹாலும் ஒரு கிச்சனும் மட்டும் இருந்த சிறிய இல்லத்தில் குடும்பமும் நடத்திக்கொண்டு பத்திரிகையும் நடத்துகிறாரா!

மிகவும் அழுக்கான அந்த ஹாலில் ஒரு சிறிய டிவி பெட்டி இருந்தது. சுவர் ஓரம் நான்கு புறங்களிலும் கயிறு கட்டித் துணி உலர்த்தியிருந்தது. தரையில் இரண்டு தகரப் பெட்டிகள் ஒன்றன்மீது ஒன்றாக வைக்கப்பட்டு, அவற்றின்மீது ஒரு சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியும் ஷேவிங் பிரஷ்ஷும் இரும்பு ரேசரும் இருந்தன. ஒரு மடக்கு நாற்காலி இருந்தது. அதன்மீது அன்றைய தினகரன் செய்தித் தாள் இருந்தது. அடுக்களையில் சில பாத்திரங்களும் அவரது மனைவியும் இருந்தார்கள். அவர் என்னை ஒருமுறை திரும்பிப் பார்த்தார் என்று நினைவு. ஆனால் வெளியே வரவில்லை.

பூச்சரம் ஆசிரியர் என்னைப் பற்றி விசாரித்தார். என் ஆர்வங்களைச் சொல்லி, பூச்சரத்தில் வேலை இருப்பதாக நண்பர் சொன்னதையும் தெரிவித்தேன்.

‘யாரு உங்க நண்பர்?’ என்று அவர் கேட்டார்.

‘ரத்னவேலுன்னு பேர் சார். உங்களை சந்திச்சிருக்கறதா சொன்னாரு.’

அவருக்கு நினைவில்லை. ஆனால் பூச்சரத்தில் வேலை இருப்பது உண்மைதான் என்று சொன்னார்.

‘சொல்லுங்க சார். நான் கதை எழுதுவேன். கவிதை எழுதுவேன். கட்டுரை எழுதுவேன். பாக்கறிங்களா?’

அவர் அதையெல்லாம் பார்க்க விரும்பவில்லை. ‘இருக்கட்டும் தம்பி. இப்பம் என்ன சிக்கல்னா நம்ம பத்திரிகை டைட்டில இன்னொருத்தன் எடுத்துக்கிட்டான். அவன்கிட்ட சண்டை போட்டுக்கிட்டிருக்கேன். டைட்டில் கிடைச்சதும் ஆரம்பிச்சிடலாம்’ என்று சொன்னார்.

எனக்கு அது புரியவில்லை. இவர் பத்திரிகை பெயரை இன்னொருவர் எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?

‘அது எப்டின்னா, நாம ரிஜிஸ்தர் பண்ணாம சிற்றிதழா நடத்திக்கிட்டிருந்தம். பயபுள்ள அவன் டைட்டில பதிவு பண்ணி வாங்கி வெச்சிக்கிட்டான். இப்ப நம்முத நடத்தக்கூடாதுன்னு சொல்லி நிப்பாட்டியிருக்கான்.’

‘இது எப்ப நடந்திச்சி சார்?’

‘அது இருக்கும் தம்பி ஒரு ஆறு வருசம். போராடிக்கிட்டிருக்கேன். அவனும் நடத்த மாட்டேங்குறான். என்னையும் நடத்த விடமாட்டேங்குறான். ஒரே பேஜார்.’

‘ஆறு வருஷம் முன்ன பூச்சரம் வந்ததா சார்?’

‘அட தெரியாதா? எட்டு இதழ் வந்திருக்கு தம்பி.’

எடுத்துக் காட்டுவார் என்று நினைத்தேன். கைவசம் பிரதி இல்லை போலிருக்கிறது. என் கவலை அதுவல்ல. ஆறு வருடங்களாக நின்று போயிருக்கும் ஒரு பத்திரிகையில் எனக்கு என்ன வேலை இருக்கும்?

‘அம்பத்தூர்ல எம்புள்ள வீட்ல நெறைய பளைய புஸ்தகங்க வெச்சிருக்கிறேன் தம்பி. அது தவிர பேப்பர் கட்டிங்ஸ் ஒரு இருவது கிலோ அளவுக்கு இருக்கும். எல்லாத்தையும் காலவரிசைப்படுத்தி தொகுக்கணும். பூச்சரம் சார்பா ஒரு ஆவணக் காப்பகம் அமைக்கணுன்னு ரொம்ப நாளா யோசனை. எப்பிடியும் இந்த வருசத்துக்குள்ள டைட்டில வாங்கி பத்திரிகைய கொண்டாந்துடுவேன். அப்ப கண்டெண்டுக்கு அலையாம சுளுவா எடுத்துக்கலாம் பாரு. நான் மட்டும் பத்திரிகை கொண்டாந்துட்டா லைப்ரரி ஆர்டர் கன்ஃபர்ம். நூலகத்துறைல என் சகலைதான் இயக்குநருக்கு பி.ஏவா இருக்காரு.’

நான் கிளம்பும்போது அவரது மனைவி அடுக்களையில் இருந்து வெளியே வந்தார். ‘காப்பி கொண்டாரட்டுமா தம்பி?’ என்று கேட்டார். மரியாதையுடன் மறுத்துவிட்டு பாத்ரூம் எங்கே என்று கேட்டேன். வீட்டின் பின்புறம் மூன்றடி தள்ளி இருந்த ஒரு ஆஸ்பெஸ்டாஸ் சரிவை அவர் காட்டினார். அதுவரை நினைவில் உறுத்திக்கொண்டே இருந்த பேண்ட்டில் படிந்த சேறை நன்றாகத் தண்ணீர் விட்டுக் கழுவிக்கொண்டு விடைபெற்றுக் கிளம்பினேன்.

பூச்சரம் ஆசிரியர் நான் சேறு படிந்த பேண்ட்டுடன் வந்ததையும் கவனிக்கவில்லை. அதைக் கழுவிக்கொண்டு புறப்பட்டதையும் கவனிக்கவில்லை.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி