ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 5

ஒரு கேல்குலேட்டர் வாங்குவதற்காக முதல் முதலில் என் தந்தை என்னை பர்மா பஜாருக்கு அழைத்துச் சென்றார். அப்போது எனக்குப் பன்னிரண்டு வயது. சென்னை நகருக்குள் அப்படியொரு பளபளப்பான இடம் இருக்கிறது என்று எனக்கு அதற்குமுன் தெரியாது. நாங்கள் சென்றது இருட்டத் தொடங்கிய மாலை நேரம் என்பதால் கடை விளக்குகளின் வெளிச்சத்தில் பிராந்தியம் இன்னுமே பளபளப்பாகத் தெரிந்தது.

கடற்கரை ரயில் நிலையத்துக்கு வெளிப்புறம் நடைபாதை ஓரம் களைப்பாறும் ஒரு மலைப்பாம்பு போல வளைந்து நீண்டு கிடந்தது பஜார். ஆறடி, ஏழடி சதுரங்களுக்கு ஒரு பெட்டி. ஒவ்வொரு பெட்டியும் ஒரு கடை. ஒவ்வொரு கடை வாசலிலும் ஏராளமான மனிதர்கள் நின்று பேசிக்கொண்டே இருந்தார்கள். ஏராளமான மனிதர்கள் நடந்து போய்க்கொண்டே இருந்தார்கள். ஏராளமானவர்கள் ஏராளமான பொருள்களை வாங்கிக்கொண்டே இருந்தார்கள். எல்லாம் வெளிநாட்டுச் சரக்கு. டேப் ரெக்கார்டர்கள், கைக்கடிகாரங்கள், வாசனை திரவியப் போத்தல்கள், ஹீரோ பேனாக்கள், வழுக்கும் சட்டைத் துணிகள், டெலிவிஷன் பெட்டிகள், டார்ச் லைட்டுகள், அறுபது நிமிடம், தொண்ணூறு நிமிடம் பதிவு செய்யக்கூடிய ஒலி நாடாக்கள், குளிர்க் கண்ணாடிகள் இன்னும் என்னென்னவோ.

வாழ்வில் அதுவரை நான் பார்த்தேயிராத எவ்வளவோ பொருள்களை அன்று முதல் முதலாகப் பார்த்தேன். ஒரு கால்குலேட்டர் வாங்குவதினும் அந்த பஜாரை எனக்கு அறிமுகப்படுத்துவதே என் தந்தையின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். எந்தக் கடையின் முன்பும் நிற்காமல் அந்த முழு நீள அங்காடிச் சாலையில் என் கையைப் பிடித்துக்கொண்டு மெதுவாக நடந்துகொண்டே இருந்தார். எனக்குமே எதையும் வாங்குவதைக் காட்டிலும் வேடிக்கை பார்த்தபடி நடப்பது பிடித்திருந்தது. அப்படியே அந்த கால்குலேட்டரை வாங்க மறந்து திரும்பிவிட்டாலும் பரவாயில்லை என்று நினைத்தேன். ஏனென்றால் நான் ஆசைப்பட்டேன் என்று ஒரு கால்குலேட்டர் வாங்கிக் கொடுத்துவிட்ட காரணத்தாலேயே தினசரி நூற்றுக் கணக்கான கணக்குகளைப் போட்டுப் பழக வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கலாம்.

அது பர்மா அகதிகள் மறுவாழ்வுக்காக அரசாங்கம் அமைத்துக்கொடுத்த கடை வீதி என்று என் தந்தை சொன்னார். அதே போன்றதொரு பெரிய கடை வீதி கந்தசாமி கோயிலைச் சுற்றி உள்ள இடத்தில் இருந்ததாகத் தனது தந்தையார் தனக்குச் சொன்னதையும் நினைவுகூர்ந்தார். அதன் பெயர் குஜிலி பஜார். எனக்கு பர்மா பஜார் என்ற பெயரைக் காட்டிலும் குஜிலி பஜார் என்ற பெயர் பிடித்தது. அந்தப் பெயரின் அர்த்தம் கேட்டேன். ஆனால் நான் கேட்டது அவர் காதில் விழவில்லை. பொதுவாகத் தலைமை ஆசிரியர்களுக்குக் குறிப்பாகச் சில விஷயங்கள் காதில் விழாது. அவர் தொடர்ந்து பர்மா பஜாரைப் பற்றி எனக்குச் சொல்லத் தொடங்கினார். சட்டபூர்வமாகவும் சட்ட விரோதமாகவும் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் விற்பனையாகும் இடம் என்று அவர் சொன்னது அப்போது எனக்குச் சரியாகப் புரியவில்லை. அதைக் குறித்து மேற்கொண்டு கேட்டுத் தெரிந்துகொள்ளவும் இல்லை. குஜிலி பஜாருக்கு அர்த்தம் சொல்லும்போது இதைத் திரும்பக் கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தேன். அன்று என் கவனமெல்லாம் பஜாரில் ஓடி ஆடி வேலை பார்த்துக்கொண்டிருந்த என் வயதுச் சிறுவர்களின்மீதே இருந்தது.

என்னால் அந்த நாளை மறக்கவே முடியாது. நான் வளர்ந்த சூழலில் அதுவரை வேலை பார்க்கும் சிறுவர்களைப் பார்த்ததேயில்லை. வேலை பார்த்துச் சம்பாதிப்பது அப்பாக்களின் கடமை என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். நான் ஒரு அப்பா ஆகும்போதும் என் தந்தையைப் போல பேண்ட் சட்டை அணிந்து ஓரிடத்தில் மின் விசிறிக்கு அடியில் அமர்ந்து ஏதாவது வேலை பார்ப்பேன் என்றுதான் நினைத்தேன். ஆனால் பர்மா பஜாரில் நான் கண்ட காட்சி என்னை நிலைகுலையச் செய்தது. ஒவ்வொரு கடைக்காரரிடமும் ஒரு பையன் வேலைக்கு இருந்தான். வருபவர்கள் என்ன கேட்டாலும் அவன் உடனே ஒரு ஸ்டூலின்மீது ஏறி மேலிருந்து ஏதோ ஒரு அட்டைப் பெட்டியை எடுத்து, தோளில் கிடக்கும் சிறிய துண்டினால் தூசு தட்டி மேசைமீது வைப்பான். கடைக்காரர் அந்தப் பெட்டியை எடுத்துப் பார்த்து விலை சொல்லுவார். கடைக்காரர்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது வந்துவிட்டால் அந்தப் பையன்கள் உடனே டீ வாங்கி வர ஓடினார்கள். மூன்று சக்கர வாகனங்களில் பெரிய பெரிய அட்டைப் பெட்டிகளில் சரக்கு வந்து இறங்கும்போது கடைச் சிறுவர்களே அதைத் தூக்கி வந்து உள்ளே வைத்தார்கள். நடைபாதைக் குப்பைகளை அவர்களே அகற்றினார்கள். அந்தப் பக்கமாகப் போய்க்கொண்டிருந்த யாரோ ஒரு பெண்மணி திடீரென்று வாந்தி எடுத்துவிட்டுப் போக, ஒரு கடைப்பையன் உடனே ஓடிச் சென்று அதைத் தண்ணீர் ஊற்றிக் கழுவித் தள்ளிய காட்சி இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. முதலாளி சொல்வதற்காக அவன் காத்திருக்கவில்லை.

இது ஒன்றிரண்டு கடைகளில் கண்டதல்ல. அநேகமாக அன்றைக்கு பர்மா பஜாரில் அத்தனைக் கடையிலும் வேலை பார்க்கும் சிறுவன் ஒருவனைக் கண்டேன். பத்து வயது முதல் பதினாறு வயதுக்குட்பட்ட பையன்கள். ‘அவங்கள்ளாம் ஸ்கூலுக்குப் போகமாட்டாங்களாப்பா?’ என்று என் தந்தையிடம் கேட்டேன். ‘நியாயமா போகணும். சிலபேர் வீடுகள்ள சமாளிக்க முடியாத அளவுக்குக் கஷ்டம் வந்தா இப்படி வேலைக்கு அனுப்பிடுவாங்க’ என்று சொன்னார்.

இன்றைக்கு உள்ளதைப் போலக் கல்வி பெரும் முதலீடு கோரும் துறையாக அப்போது இல்லை. இன்றளவு தனியார் பள்ளிக்கூடங்களும் அப்போது கிடையாது. நான் அரசுப் பள்ளிகளில், அரசுக் கல்லூரியில் மட்டும்தான் படித்தேன். இலவசப் படிப்பும் இலவச மதிய உணவும் கிடைக்கிற பள்ளிக்கூடங்கள். என் உடன் படித்த பல மாணவர்கள் மிக மோசமான பொருளாதாரப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். கூலி வேலை செய்யும் பெற்றோரின் பிள்ளைகள். விவசாயிகளின் பிள்ளைகள். பள்ளி நாள்களில் என் மிக நெருங்கிய நண்பனாக இருந்த ஞானப்பிரகாசத்தின் தாயார் வீட்டில் முறுக்கு, பக்கோடா, ஓமப்பொடி செய்து பொட்டலம் போட்டு விற்று வாழ்ந்ததை அறிவேன். ஒரு பொட்டலம் நாலணா.

அன்று இரவு வீடு திரும்பி நெடுநேரம் உறக்கம் வரவில்லை. வீட்டுக் கஷ்டத்தைப் பகிர்ந்துகொள்ளும் சிறுவர்களோடு திரும்பத் திரும்ப என்னை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே இருந்தேன். மிகவும் குற்ற உணர்ச்சியாக, அவமானமாக இருந்தது. எனக்கு வீட்டில் கஷ்டம் என்று ஏதும் இருந்ததில்லை. படிப்பது ஒன்றுதான் என் பணி என்று இருந்தது. அதையும் நான் சரியாகச் செய்யாதிருந்தேன். அந்தத் துயரம் அனைத்திலும் பெரிதாக இருந்தது. ஓர் அரசுப் பள்ளி ஆசிரியரின் வருமானத்தில் வாழ்ந்த குடும்பம்தான். வீட்டில் கஷ்டம் இல்லாமல் இருந்திருக்காது. ஆனால் எனக்கு அது தெரியாமல் பார்த்துக்கொண்டார்கள் என்பதை முதல்முதலில் அப்போது உணர்ந்தேன். மறுநாளே எங்காவது ஓரிடத்தில் பகுதி நேரமாக வேலைக்குச் சேர்ந்துவிட வேண்டும் என்றும் வீட்டுக்குத் தெரியாமல் அதனைத் தொடர வேண்டும் என்றும் வரும் காசைச் சேமித்துவைத்து எதிர்பாராத ஏதாவது ஒரு கஷ்ட நேரத்தில் அப்பாவிடம் கொடுத்து அவரை வியப்படையச் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

மறுநாள் நான் அதைச் செய்யவில்லை. மேற்படி சம்பவம் நடந்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஒரு சமயம் செய்து பார்க்கச் சந்தர்ப்பம் வாய்த்தது. கல்லூரிப் படிப்பில் நிறைய அரியர்ஸ் வைத்துவிட்டு எதிர்காலம் என்ன ஆகும் என்று தெரியாத அச்சத்தில் இருந்த நேரம். அமைந்தகரையில் நட்டு, போல்ட்டுகள் உற்பத்தி செய்யும் கம்பெனி ஒன்றில் தினக்கூலி வேலைக்கு நண்பன் ஒருவன் என்னை அழைத்துச் சென்றான். இயந்திரம் உற்பத்தி செய்து கொட்டும் நட்டுகளை பாண்டுகளில் அள்ளி எடுத்துச் சென்று ஓரிடத்தில் சேகரித்து வைக்கும் பணி. என்னால் சுமை தூக்க முடியவில்லை. தோள்பட்டை வலி கொன்று எடுத்துவிட்டது. அன்று ஒருநாள் அங்கு நின்றதற்கும் நடந்ததற்குமே மூச்சடைத்தது. வேலை பார்த்ததற்குக் கிடைத்த நாற்பது ரூபாய்க் கூலியில் மசால் வடையும் பரோட்டாவும் வாங்கித் தின்றுவிட்டு மறுநாள் முதல் அதை மறந்துவிட்டேன்.

உடல் உழைப்புக்கு வக்கற்றவனாயிருப்பதை நினைத்துப் பார்த்தால் சிறிது வெட்கமாகத்தான் இருக்கிறது. என் பெற்றோர் எனக்குச் சிறிது கஷ்டம் காட்டியிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி