ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 4

பன்றிகள். நாய்கள். மாடுகள். இம்மூன்று ஜீவராசிகளும் இந்நகரத்தின் பங்குதாரர்களுள் ஒரு சாரார். இவை மேயாத எந்தப் பகுதியையும் நகரில் நான் எக்காலத்திலும் கண்டதில்லை. நாய்கள், மாடுகளைவிட, சிறு வயது முதலே நான் நிறையப் பன்றிகளைப் பார்த்து வளர்ந்தவன். உண்மையைச் சொன்னால், உலகின் மிக அழகிய உயிரினம் பன்றிதான் என்று எனக்குத் தோன்றும். குழந்தையைக் கொஞ்சும் தாயின் முகத்தை உற்றுக் கவனியுங்கள். அந்த உதடுகளும் மூக்கும் மிக இயல்பாகப் பன்றியின் முகத்தை நகல் செய்யும். பேரழகை மட்டும்தான் பெண்கள் நகல் செய்ய விரும்புவார்கள்.

கூவம் ஒரு மகாநதியாக இருந்து சாக்கடையான பிறகு சென்னையில் பன்றிகளின் பெருக்கம் அதிகரித்திருக்க வேண்டும். அடையாறும் கூவமும் சகோதர ஒப்பந்தம் செய்துகொண்டு நதிக்கரை நாகரிகம் வளர்க்கத் தொடங்கிய பின்பு பன்றிகளே அதன் நடமாடும் சரித்திர சாட்சிகளாக நிலைத்திருக்கின்றன.

சையத் கான் என்னும் குதிரை வியாபாரி முன்னொரு காலத்தில் அடையாறின் குறுக்கே ஒரு நடைப்பாலம் கட்டினார். அவரது ஞாபகார்த்தமாக அந்தப் பாலம் புறப்படும் இடத்தைச் சுற்றிய பிராந்தியத்துக்கு சையத் கான் பேட்டை என்று பெயரிட்டு, பிறகு சைதாப்பேட்டை என்று அழைக்கத் தொடங்கினார்கள். சைதாப்பேட்டைக்கும் கிண்டிக்கும் இடையே அடையாற்றின்மீது இன்றும் ஒரு நடைப்பாலம் இருக்கிறது. சிறு வயது முதல் பார்த்துக்கொண்டிருக்கிறேன். சைதாப்பேட்டைக்குப் போகும்போதெல்லாம் ஓரிரு மணி நேரங்களாவது அந்தப் பாலத்தின் மீது நடந்து திரியாதிருந்ததில்லை. பாலம் எனக்கு அவ்வளவு பிடித்ததற்குக் காரணம் நதியல்ல. ஏனெனில் அது நதியாக இருந்து நான் பார்த்தது மிகச் சில சமயங்களில் மட்டுமே. பெரும்பாலும் பல சிறிய நீர்த் தேக்கங்களைக் கொண்ட ஒரு பரந்த வெளியாகவே இருக்கும். பன்றிகள் கூட்டம் கூட்டமாக அங்கே மேயும். திடீரென ஆவேசம் கொண்டு ஒன்றையொன்று மோதித் தாக்கும். அது ஒரு ரசமான காட்சி.

அந்த நடைப்பாலத்துக்கு அப்பால் நூறு மீட்டர் தொலைவில் ரயில் பாலம் ஒன்று இருக்கிறதல்லவா? அதனடியில்தான் சைதாப்பேட்டையின் அபீத் காலனிவாசிகள் அந்நாளில் மலஜலம் கழிக்க வருவார்கள். பெண்கள் அதிகாலை வேளைகளிலும் முதிய ஆண்கள் விடியற்காலை வேளைகளிலும், இளவட்டங்கள் எப்போது வேண்டுமானாலும். ஒரு மகாநதியைத் திறந்த வெளிக் கழிப்பிடமாக்கிக்கொள்ளும் பாக்கியம் அவர்களுக்கு இருந்தது. பெருமழைக் காலம் தவிர வேறு எப்போதும் தண்ணீர் வரத்துக்கு வாய்ப்பே இல்லாத நதித்தடம் என்பதால் கேட்பாரில்லை. மேலே ரயில் போகும்போது அவர்கள் பாலத்துக்கு அடியில் எழுந்து நிற்பார்கள். ரயில் கடந்து போன பிற்பாடு மீண்டும் உட்கார்ந்து வேலையைப் பார்ப்பார்கள். இது, அந்தப் பிராந்தியத்தின் ஏகபோக உரிமையாளர்களாகத் தங்களை நினைத்துக்கொண்டிருக்கும் பன்றிகளுக்குப் பொறுக்காது. சொல்லி வைத்த மாதிரி அவர்கள் எழுந்து நிற்கும்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு, காரியத்தில் அமரும்போது போலியாகச் சண்டையிட்டுக்கொண்டு மூர்க்கமாகப் பாய்ந்தோடி வரத் தொடங்கும். ஒன்றிரண்டல்ல. பெரிய ஆகிருதி கொண்ட பத்துப் பன்னிரண்டு பன்றிகள் ஏக காலத்தில் முட்டி மோதிக்கொண்டு ஓடி வந்தால் அப்பாவி சனம் என்ன செய்யும்? அலறிக்கொண்டு அவர்கள் எழுந்து ஓடுவார்கள். திடீரென்று அந்தப் பக்கம் போகிற புதியவர்களுக்குப் பன்றிகளும் மனிதர்களும் ஓடிப் பிடித்து விளையாடுவது போலத் தோன்றும்.

ஆனால் குரோம்பேட்டைப் பன்றிகள் சைதாப்பேட்டை பன்றிகளைப் போல மூர்க்கத்தனம் கொண்டவை அல்ல. அவையும் வேலிக்காத்தான் புதர்களுக்கு இடையே கூட்டம் கூட்டமாகத்தான் வரும். உணவு தேடி அலையும். சாக்கடைகளைக் கண்டால் இறங்கிப் படுத்துக்கொள்ளும். பிறகு வெளியே வந்து புழுதியில் புரண்டு துடைத்துக்கொண்டு மேலும் நடக்கும். ஊர்க்காவல் படை வீரர்களைப் போல நாளெல்லாம் பொழுதெல்லாம் பேட்டையைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டே இருக்கும். மனிதர்களுக்கு எந்தச் சங்கடமும் தராத பன்றிகள் அவை. உண்மையில் குரோம்பேட்டை என்பது அப்போது பன்றிகளின் பாதுகாப்பில் உள்ள பிராந்தியமாகத்தான் எனக்குத் தோன்றியது.

பேட்டையின் கல்விக் காவலர் ஜெகத் ரட்சகன் வெகுஜன வசதி கருதி ஒரு வசிப்பிடம் அமைக்கிறார், வேண்டியவர்கள் வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று ஓர் அறிவிப்பு வந்தபோது என் அம்மாவும் மனைவியும்தான் முதல் ஆளாகப் போய் வரிசையில் நின்றார்கள். சகாய விலைக்கு முக்கால் கிரவுண்டுக்குச் சிறிது கூடுதலாகவோ குறைவாகவோ ஓரிடத்தைக் கட்டம் கட்டிப் பட்டா செய்துகொண்டு வந்தார்கள். அந்த இடத்தைப் பார்க்கப் போனபோது ஒரே கவலையாகிவிட்டது.

ஒரு வாயகன்ற பெருங்குட்டையை வேலிக்காத்தான் புதர்கள் மறைத்துப் புதைத்திருந்தன. புதர்களைப் பன்றிகள் காவல் காத்தன. ஒன்றிரண்டல்ல. குறைந்தது ஒரு நூறு பன்றிகள். சாக்கடைக் குட்டையை மறைத்து வளர்ந்திருந்த முட்புதர்களுக்கு இடையே அவை ராணுவ வீரர்களைப் போல அணி வகுத்துச் செல்வதைக் கண்டு திகிலாகிவிட்டது. ஐயோ இங்கே எப்படி வீடு கட்டுவது என்று இடம் வாங்கியவர்கள் கவலை கொண்டார்கள். ஆனால் கண்மூடித் திறக்கும் நேரத்தில் எல்லாம் மாய மந்திரம் போல நடந்தேறியது. புதர்கள் வெட்டி அழிக்கப்பட்டன. சாக்கடைகள் மூடப்பட்டன. குட்டையையே மண் மேடாக்கிவிட்டார்கள் விற்பன்னர்கள். அது என் கண் முன்னால் நிகழ்ந்த அதிசயம்தான். குரோம்பேட்டையின் அதி பிரம்மாண்ட பங்களாக்கள் அனைத்தும் அங்கேதான் உள்ளன. ஒரு குட்டை இருந்த இடம் என்று சொன்னால், நேரில் பார்த்தவர்கள்கூட நம்புவது சிரமம். நம்ப வைக்க ஒரே வழி, பழைய பன்றிகளின் புதிய தலைமுறை இப்போதும் அங்கு மேய்ந்துகொண்டிருப்பதைக் காட்டுவதுதான்.

பழைய பல்லாவரத்துப் பன்றிகள், அஸ்தினாபுரத்துப் பன்றிகள், புது மாம்பலத்துப் பன்றிகள் (இவற்றின் தற்காலத் தலைமுறையை இப்போதும் தி நகர் பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் பார்க்கலாம்), திருவல்லிக்கேணி பன்றிகள், எல்டாம்ஸ் சாலைப் பன்றிகள் என்று பிராந்தியவாரியாகப் பன்றிகளின் பரிணாம வளர்ச்சியைக் கண்டுவந்திருக்கிறேன். நாற்பது வருடங்களுக்கு முன்பு சென்னை நகரப் பன்றிகள் அடர் கறுப்பு நிறத்தில் மட்டுமே இருக்கும். உருவமும் நல்ல புஷ்டியாக, ஆஜானுபாகுவாக இருக்கும். கால மாற்றத்தில் பன்றிகளின் நிறம் மெல்ல மெல்ல உதிர்ந்து இன்று காணக்கிடைக்கும் பன்றிகள் யாவும் வெளிர் சாம்பல் நிறத்தை அடைந்துவிட்டன. முகம் சுருங்கி, வயிறு உள்ளடங்கி எலும்பும் தோலுமாகவே சுற்றிக்கொண்டிருக்கின்றன. அழகை ரசிக்கும்படியான பன்றி ஒன்று இன்று சென்னையில் இல்லவேயில்லை என்பது ஒரு விலங்கியல் சோகம்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter