ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 3

அந்தக் குடும்பத்தின் தலைவரான கிழவர் ஐ.சி.எஃப் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது தந்தையார் பிரிட்டிஷார் காலத்தில் தபால் / தந்தி துறையில் பணியாற்றியவர். அவருக்கும் முந்தைய தலைமுறைக்காரர் அயர்லாந்தில் இருந்து இங்கே ஊழியம் பார்க்க வந்த குடிமகன். முதல் தலைமுறைக்காரர் செகந்திராபாத்தில் வசித்து வந்த ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளப் போக, அந்த ஆங்கிலோ இந்தியக் குடும்பம் அப்போது பிறந்தது. பல காலம் செகந்திராபாத்திலேயே வசித்துவிட்டு ஐம்பதுகளில் தமிழகத்துக்குக் குடி பெயர்ந்திருக்கிறார்கள். ஒன்றிரண்டு வருடங்கள் திருத்தணியிலும் பிறகு திருச்சி பொன்மலையிலும் இருந்துவிட்டு, சென்னைக்கு வந்தார்கள்.

அவருக்கு ஏழு பெண்கள், நான்கு பிள்ளைகள். மூத்த மகனுக்கு அப்போதே அறுபத்தைந்து வயது இருக்கும். கடைசி இரண்டு பேருக்கு மட்டும்தான் அப்போது திருமணம் ஆகியிருக்கவில்லை. மற்ற அனைவரும் மனைவி மக்களோடுதான் இருந்தார்கள். அதுவும் ஒரே வீட்டில். உத்தேசமாக, எண்பதுக்கு உட்பட்ட அனைத்து வயதுகளுக்கும் அந்த வீட்டில் மாதிரி உண்டு என்று எப்போதும் எனக்குத் தோன்றும். அத்தனைப் பேர் ஒன்றாக வசிப்பதும் வார இறுதி மாலை வேளைகளில் வீட்டுக்கு வெளியே உள்ள மரத்தடி நிழலில் கூடிக் களிப்பதும் அந்தப் பக்கம் போகிற வருகிற பேட்டைவாசிகள் அனைவருக்கும் பொழுதுபோக்கு. எப்போதும் யாருடனும் பேச்சுக் கொடுக்காமல் அவர்கள் உலகத்தில் தனித்தே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள், அந்தச் சமயம் மட்டும் வெளியே யாராவது நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டால், உள்ளே அழைப்பார்கள். அந்தக் கிழவர்தான் பெரும்பாலும் அழைப்பார். ஆனால் அவர் ஆங்கிலத்தில் மட்டுமே அழைப்பார் என்பதால் உள்ளே செல்ல அனைவருமே தயங்குவார்கள். குரோம்பேட்டையில் அப்போது ஆங்கிலம் தெரிந்தவர்கள் யாரும் இல்லை.

அந்த வீட்டில் சிலருக்குத் தமிழ் தெரியும். மிகவும் கொச்சையாகப் பேசுவார்கள். பெரும்பாலும் ரேஷன் கடைகளிலும் பெட்டிக்கடைகளிலும் அந்தத் தமிழைப் பிரயோகிப்பார்கள். அவர்கள் வளர்த்துக்கொண்டிருந்த ஒரு நாயைத் திட்டும்போது நாயே என்பார்கள். மற்றபடி ஆங்கிலம்தான்.

எனக்குத் தெரிந்து அந்தப் பெரியவரின் வாரிசுகள் யாரும் நல்ல உத்தியோகத்தில் இல்லை. மெக்கானிக்காக ஒருவன் இருந்தான். இன்னொரு பிள்ளை தோல் கம்பெனி டிரைவராக இருந்தான். அவரது மூத்த மகன் மட்டும் ஆலந்தூரில் ஒரு பல சரக்குக் கடை வைத்திருந்ததாகவும் பிறகு நஷ்டமடைந்து மூடிவிட்டதாகவும் சொன்னார்கள். கஷ்ட ஜீவனமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் வெளியே தெரிந்ததில்லை. அந்த வீட்டுப் பெண் ஒருத்தி மளிகைக் கடையில் தினத்தந்தி பேப்பரில் சுற்றி பண்டிலாக சார்மினார் சிகரெட் பாக்கெட்டுகள் வாங்கிப் போவதைப் பார்த்திருக்கிறேன். குடும்பமாகப் புகைப்பதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். அவர்கள் குடும்பமாகக் குடிக்கவும் கூடியவர்கள் என்பதைக் கண்டபோது திகைத்துவிட்டேன்.

ஆனால் சாராயம்தான். மேற்கத்திய மதுவகைகள் ஏதும் கிடையாது. ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் அந்த வீட்டின் ஆண் வாரிசு ஒருவர் ஐந்து லிட்டர் கேனை எடுத்துக்கொண்டு திருநீர்மலை சாலை நோக்கிச் செல்வார். (நாங்கள் அந்த கேனில் ரேஷன் மண்ணெண்ணெய் வாங்குவோம்.) அவர் வாங்கிக்கொண்டு வருவதற்குள் அந்த வீட்டுக்கு வெளியே உள்ள பெரிய மாமரத்தின் அடியில் நாற்காலிகள் போடப்பட்டு நடுவே வட்ட வடிவில் ஒரு சிறு மேசை கொண்டு வந்து வைக்கப்பட்டிருக்கும். ஒரு குட்டைப் பாவாடைப் பெண் அந்த வட்ட மேசையின்மீது பூ வேலைப்பாடுகள் செய்த அழகிய விரிப்பொன்றைப் போடுவாள். இன்னொருத்தி சிகரெட் பாக்கெட்டுகளையும் தீப்பெட்டிகளையும் கொண்டு வந்து வைப்பாள். முழங்கால் வரை கவுன் அணிந்த அந்தக் குடும்பத்தின் மருமகள்கள் கொறிப்பதற்கும் உண்பதற்குமாகப் பதார்த்தங்கள் தயார் செய்து கொண்டு வருவார்கள். இருட்டத் தொடங்கியதும் வீட்டுக்குள் விளக்குகளை அணைத்துவிட்டு ஒரே ஒரு நாற்பது வாட்ஸ் விளக்கை மட்டும் வாசலில் எரியவிட்டு, குடிக்கத் தொடங்குவார்கள். சில சமயம் டேப் ரெக்கார்டரில் மேற்கத்திய இசையை ஒலிக்கவிட்டு நடனமும் ஆடுவார்கள். ஒரு ஆங்கிலோ இந்தியக் குடும்பத்தில் பிறக்காமல் போய்விட்டோமே என்று நான் ஏங்காத நாள் இல்லை.

பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு அந்நாளைய குல வழக்கப்படி டைப் ரைட்டிங் வகுப்புக்குப் போய் வரத் தொடங்கியபோது அந்த ஆங்கிலோ இந்தியக் குடும்பத்தின் கடைசி வாரிசு நான் படித்த இன்ஸ்டிட்யூட்டில் நடத்துனராகப் பணியாற்ற வந்தான். என்னை அவனுக்குத் தெரியும். பார்த்திருக்கிறான். எங்கே அவன் ஆங்கிலத்தில் பேசிவிடப் போகிறானோ என்று பயந்து, அவசர அவசரமாக என் பெயர் ராகவன் என்று தமிழில் சொன்னேன். ‘தெரியும் மச்சி. தேவா சொல்லிக்கிரான். நீ அவங்கப்பன் சைடு ரிலேடிவ்தான?’

அந்த அழைப்பும் நகர நாட்டார் கொச்சையும் ஒரு மாதிரி இருந்தது. அப்படியான பிரயோகம் என்மீது அப்போதுதான் முதன்முதலில் நிகழ்த்தப்பட்டது. அதனாலென்ன. அவனுக்கு என்னைத் தெரிந்திருக்கிறது.

அவன் பெயர் மெரிக். சார் என்று அழைத்தபோது தன்னைப் பெயர் சொல்லியே கூப்பிடலாம் என்று சொன்னான். என்னிடம் மட்டுமின்றி, இன்ஸ்டிட்யூட்டில் அனைவரிடமும் அதைத்தான் சொன்னான். ஆனால் பத்தாம் வகுப்பு முடித்திருந்தவர்களான நாங்கள் யாரும் ஒரு போதகரைப் பெயர் சொல்லி அழைக்கத் தயாராக இல்லை. அவன் டைப் ரைட்டிங் மட்டுமல்லாமல் ஷார்ட் ஹேண்டும் அறிந்திருந்தான். இரண்டு வகுப்புகளையும் அவன் லாகவமாக சமாளித்ததைக் கண்டு அவன்மீது எனக்கு மதிப்பு உண்டாகியிருந்தது. வகுப்பு இடைவேளைகளில் வெளியே சென்று சிகரெட் பிடித்துவிட்டு வருவான். அந்த சார்மினார் நாற்றம்தான் குமட்டல் எடுக்கச் செய்யும். மற்றபடி அவன் ஒரு அப்பழுக்கில்லாத போதகர். நானும் அவனை சார் என்றுதான் அழைத்தேன். தினசரி மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை நடக்கும் இறுதி அணியில் நான் இருந்தேன். வகுப்பு முடிந்து வீட்டுக்குப் போகும்போது சில சமயம் மெரிக் என்னுடன் வருவான். அவன் சைக்கிள் வைத்திருந்தான். அதைத் தள்ளிக்கொண்டு என்னோடு பேசியபடி வருவானே தவிர, என்னை ஏற்றிக்கொண்டு ஒரு நாளும் போனதில்லை.

சில நாள் பொதுவாகப் பேசிப் பழகிய பின்பு ஒருநாள் அவன் வீட்டு வார இறுதிக் கொண்டாட்டங்களைக் குறித்துக் கேட்டேன். நினைவு தெரிந்த நாளாக நடப்பதுதான் என்று சொன்னான்.

‘அது எப்படி அப்பா, அம்மா, அண்ணன், தங்கைகள் எல்லாரும் ஒண்ணா குடிக்கறிங்க?’

‘தப்பில்ல மச்சி. எல்லாரும் டிரிங்க் அடிப்போம். எல்லாரும் அடிப்போன்றது எல்லாருக்கும் தெரியும். அப்றம் சேந்து அடிச்சா என்னா?’

‘இல்ல.. உங்க அக்கா, தங்கச்சிங்கல்லாம் கூட..’

‘நாங்க அதுலல்லாம் ராங் சைட் எடுக்கமாட்டோம்’ என்று சொன்னான். ஆங்கிலேயர்கள் விடைபெற்றுச் சென்று ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஆங்கிலேயராக வாழ்வது எத்தனை சிரமம் என்று மெரிக்குடன் பேசியபோது புரிந்தது. ‘எல்லாரும் எங்கள வேடிக்கை பாக்கறாங்க மச்சி. நீகூட நாங்க குடிக்கசொல்ல நின்னு பாப்ப. எல்லாரும் இன்னா அவுத்துப் போட்டா ஆடுறோம்? நீ ஒள்ச்சி செய்யிறத நாங்க ஓப்பனா செய்யிறோம். அதாங்கண்டி மேட்ரு.’ என்று சொன்னான்.

மெரிக்கின் தந்தை பணியில் இருந்த காலத்தில் நிறைய சம்பாதித்திருக்கிறார். குரோம்பேட்டை, குலசேகரபுரமாக இருந்தபோதே இடம் வாங்கி வீடு கட்டிக்கொண்டு வந்த குடும்பம் அது. அவர்கள் வீடு மிகப் பெரியது. எப்படியும் மூன்று கிரவுண்டு நிலமாக இருக்கும். மார்பளவு உயரமுள்ள காம்பவுண்ட் சுவருக்கு உள்ளே மாமரம், எலுமிச்சை மரம், நான்கைந்து தென்னை மரங்கள், ஏராளமான பூச்செடிகள், கீரைப் பாத்திகள் இருக்கும். நடுவே முன்புறம் ஓடு சரிக்கப்பட்ட வீட்டின் ஹால் மிகப் பெரிது. ஹாலைத் தவிர வேறு அறைகள் எதுவும் வெளியில் இருந்து தெரியாது. யாரும் உள்ளே போய்ப் பார்த்ததும் இல்லை.

மெரிக்கின் வீட்டார் அனைவரும் காதலித்தே திருமணம் முடித்திருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவன் இல்லை என்று சொன்னான். எல்லா திருமணங்களுமே அவனது தந்தை பார்த்து வைத்ததுதான். ‘எங்க கம்யூனிடில பொண்ணு கிடிக்கிறதும் கஸ்டம், புள்ள கிடிக்கிறதும் கஸ்டம் மச்சி.’

‘வேற கம்யூனிடில பாக்கலாமே?’

‘எவங்கட்டுவான்? உங்கூட்ல எனக்கு பொண்ணு குடுப்பியா? நாங்கலாம் உங்களுக்கு ஜூவுல குந்தினவங்கொ. சும்மா பாத்துட்டுதான் போவிங்கொ.’

பின்னொரு நாள் மெரிக்கின் வீட்டில் யாரோ இறந்தார்கள். நாள்பட்ட புற்றுநோய் காரணம் என்று ஊர்க்காரர்கள் பேசிக்கொண்டார்கள். கறுப்பு நிற வேன் ஒன்று வந்தது. பிணத்தை அதில் ஏற்றி அடக்கம் செய்ய எடுத்துச் சென்றார்கள். பிணத்தை ஒரு வேனில் ஏற்றி எடுத்துச் சென்ற காட்சியை நான் கண்டது முதல் முதலில் அப்போதுதான். சிறிது சங்கடமாக இருந்தது. மெரிக் கண்ணில் படவில்லை. இறந்தவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. அன்று மாலை திருநீர்மலைக்கு சாராயம் வாங்க மெரிக் போனான் என்று வழியில் பார்த்த ஒருவன் சொன்னான். ஆறரை, ஆறே முக்கால் மணி இருக்கும். அவசர அவசரமாக அவர்கள் வீட்டுப் பக்கம் போனேன். வீடு இருட்டாக இருந்தது. வாசல் விளக்கு போடப்படவில்லை. மரத்தடியில் யாரும் இல்லை. உள்ளேயே குடித்துக்கொண்டிருக்க வேண்டும்.

கொண்டாட முடியாதவற்றை அவர்கள் வெளிப்படையாகச் செய்ததேயில்லை.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!