அஞ்சலி: பாலகுமாரன்

பாலகுமாரன் இறந்துவிட்டார் என்று என் மனைவியிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தபோது தொலைபேசி சிக்னலும் கிட்டாத ஓர் அறைக்குள் கதை விவாதத்தில் இருந்தேன். வருத்தமாக இருந்தது. அவரை நினைவுகூர பல நல்ல சம்பவங்கள் எனக்குண்டு. ஆனாலும் கடைசிக் காலத்தில் அவர் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ளும்படியாக ஒரு காரியம் செய்தேன். அதுதான் முதலில் நினைவுக்கு வருகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் ஃபேஸ்புக்கில் ஒரு குறுவரி எழுதினேன். ‘எனக்கு ரசிகர் மன்றங்கள் வேண்டாம்; வேண்டுமானால் வண்ணமயமானதொரு சத்சங்கம் அமையுங்கள்.’

அவர் கொதித்துப் போய்விட்டார். ஏராளமான பெண்கள் நிறைந்த அவரது வாராந்திர பூஜை போட்டோக்கள், சத்சங்க செய்திகளில் எல்லாம் ஐயனே ஐயனே என்று பக்திப் பரவசத்தோடு எழுதப்படும் கமெண்டுகள் நூற்றுக்கணக்கில் வரும். எனக்கு அது ஓர் எழுத்தாளரின் பக்கமாக என்றுமே தோன்றியதில்லை. ஒரு குட்டி சாமியாரின் ரசிகக் குஞ்சுகள் கொட்டமடிக்கும் பக்கமாகத்தான் இப்போதும் எண்ண முடிகிறது. சந்தேகமின்றி அவர் ஒரு பெரும் தலைமுறையை பாதித்தார். நாவல்களால் பாதித்ததோடு நிறுத்தியிருக்கலாம். ஆன்மிகம் என்னும் பேஜாரான பேட்டையில் அவர் ஒரு தாதாவாக நினைத்துவிட்டதில்தான் சிக்கல். அதை மனத்தில் கொண்டுதான் நான் அந்த வரியை எழுதினேன். இந்தப் பரதேசி இப்படியொரு இடி தருவான் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். என்னைச் சாடி அவரும் ஒரு பத்தி பதிலுக்கு எழுதினார். என் மனைவிக்கு ரொம்பக் கோபம். ‘வயசான மனுஷன். அவரை ஏன் இப்படி சீண்டிவிட்டு வேடிக்கை பாக்கற?’ என்று என்னைக் கடிந்துகொண்டாள்.

உண்மையில் அவர் என்னிடம் அதை எதிர்பார்த்திருக்க மாட்டார். எனது கதையல்லாத எழுத்துகளின்மீது அவருக்கு மிகப்பெரிய மரியாதையும் பிரமிப்பும் இருந்தது. அவரே அதைப் பலமுறை என்னிடம் சொல்லியும் இருக்கிறார். 9/11 புத்தகம் வெளியாகி ஒரு சில மாதங்களில் அவர் அதைப் படித்தார். அன்றிரவு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக என்னிடம் அந்நூலைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார். நான் எந்தெந்த சோர்ஸ்களில் இருந்து தகவல் திரட்டுகிறேன் என்று நுணுக்கமாகக் கேட்டுக் குறித்துக்கொண்டார். எட்வர்ட் சயீதுடனான ஒரு மின்னஞ்சல் உரையாடலை நான் அவருக்கு வாசித்துக் காட்டியிருக்கிறேன். ‘உன் இங்கிலீஷ் டப்பா’ என்று சொன்னார்.

அதிலென்ன சந்தேகம்? டப்பா இங்கிலீஷ்தான். ஆனால் சயீதுக்கு நான் எழுதியது புரிந்து பதிலும் அனுப்பியிருக்கிறாரே. அதைவிட வேறென்ன வேண்டும் என்று கேட்டேன். அந்தப் புத்தகத்தைப் பற்றி அவர் எழுதிக்கொண்டிருந்த மாத நாவல் ஒன்றிலும் அடுத்த மாதக் கேள்வி பதில் பகுதியில் குறிப்பிட்டு மிகவும் சிலாகித்து எழுதினார்.

ஆனாலும் திரும்பத் திரும்ப எப்போது அவருடன் தொலைபேசியில் பேச நேர்ந்தாலும் ஆன்மிகத்தில்தான் வந்து நிற்பார். அவர் அந்த எல்லைக்கு வந்ததுமே நான் எட்டுக்கால் பாய்ச்சலில் ஓடிவிடுவேன். என் ஆன்மிகம் எந்நாளும் அவருடையதுடன் ஒத்துப் போகாது. இப்போது எண்ணிப் பார்க்கிறேன். இந்நாள்களில் என்றாவது ஒருமுறையேனும் அவரை நான் நேரில் சென்று பார்த்திருக்கலாம். குறிப்பாக அடிக்கடி சுவாசப் பிரச்னை குறித்தும் காவேரி நர்சிங் ஹோமுக்குச் சென்று வந்தது குறித்தும் அவர் எழுதியபோதெல்லாம் இந்த எண்ணம் வரும். ஏனோ இறுதிவரை முடியாமலேயே போய்விட்டது.

வாசிக்க ஆரம்பித்த காலத்தில் சுஜாதாவைக் காட்டிலும் என்னை அதிகம் கவர்ந்தவர் பாலகுமாரன்தான். இரும்பு குதிரைகளும் மெர்க்குரிப் பூக்களும் தொடராக எழுதப்பட்டாலும் நாவல் வகையைச் சார்ந்தவை. உடையார் உள்பட அவரது வேறெந்தப் படைப்பும் நாவல் இல்லை என்றாலும் எனக்கு அந்த இரண்டு மட்டுமே போதும்.

அவரது ஆன்மா எம்பெருமான் திருவடி நிழலில் இளைப்பாறப் பிரார்த்திக்கிறேன்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter