இந்தப் புத்தகத்தை நான் எழுதி இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால் இன்றுவரை இதை என்னவாக வகைப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. சில கதைகளைப் பற்றிய கட்டுரைகள் என்று சொல்வது அநியாயமாக இருக்கும். ஒரு காலக்கட்டத்தில் நான் விரும்பி வாசித்துக்கொண்டிருந்த புத்தகங்களைப் பற்றி, வாசித்து முடித்த உடனேயே சில வரிகள் எழுதும் வழக்கம் இருந்தது. அதைச் சற்று விரித்து எழுதலாம் என்று யோசனை சொன்னவர் கல்கி ஆசிரியர் சீதா ரவி. அதுதான் இது.
நான் இதைத்தான் படிப்பேன், இதையெல்லாம் தொடமாட்டேன் என்ற கொள்கை ஏதும் இல்லாதவன். கையில் கிடைப்பதைப் படிக்க ஆரம்பிப்பேன். முழுக்க முடிக்கிறேனா இல்லையா என்பது குறிப்பிட்ட புத்தகம் என்னை எவ்வளவு ஈர்க்கிறது என்பதில் உள்ளது. நான்கு பக்கங்கள் வரை விமரிசனமின்றிப் படித்துவிடுவேன். என்னை மறந்து ஐந்தாவது பக்கத்துக்குப் போய்விட்டேன் என்றால் முடித்துவிடுவேன். அந்தப் பக்கத்தைக் கடக்காதிருந்தேன் என்றால் எந்நாளும் அப்புத்தகத்தை நான் படித்து முடிக்க மாட்டேன் என்று பொருள். இலக்கியத்தில் என் சொந்த ரசனை ஒன்றே எனது அளவுகோல். அடுத்தவர் அபிப்பிராயங்களைக் கருத்தில் கொள்ளுவதே கிடையாது. இது சரியா தவறா என்பதல்ல. எனக்கு இப்படி இருப்பதுதான் சௌகரியமாக இருக்கிறது.
பின் கதைச் சுருக்கம், கல்கியில் தொடராக வெளிவந்தபோதே ஏராளமான வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. பிறகு புத்தகமானபோதும் நல்ல வரவேற்பு இருந்தது. தமிழ்ச் சூழலில் ஒரு புத்தகம் பத்திருபது வருடங்கள் தாக்குப் பிடித்துப் பதிப்பில் இருப்பது பெரிய காரியம். ஏதோ ஒரு கட்டத்தில் பின் கதைச் சுருக்கமும் பதிப்பின்றிப் போய்விட்டது. இதற்கும் ஒரு நிரந்தரத்துவம் அளிக்கலாம் என்ற எண்ணத்தில்தான் மின்நூல் ஆக்கியிருக்கிறேன்.
இது நான் வாசித்து பிரமித்த சில புத்தகங்களையும் ஆசிரியர்களையும் பற்றிய எனது மனப்பதிவுகள் மட்டுமே. விமரிசனமோ, மதிப்புரையோ, கருத்துரையோ அல்ல. இலக்கியத்துக்கு நான் ஏதாவது நல்லது செய்வதென்றால் அது விமரிசனம் எழுதாதிருப்பதுதான் என்று எண்ணியிருக்கிறேன். இறுதிவரை அதைக் காப்பேன் என்றுதான் நினைக்கிறேன்.
அச்சில் தேடி இது கிடைக்கவில்லை என்று தொடர்ந்து எனக்கு மின்னஞ்சல்கள் எழுதி வந்த வாசக அன்பர்களுக்கு, இனி இது நிரந்தரமாக மின்வெளியில் இருக்கும்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.