இன்று சர்வதேச புத்தக தினம். இந்நாளில் ஐந்து புத்தகங்களை எண்ணிக்கொள்கிறேன்.
1. ஜனனி – லாசரா
எனக்கு அன்பளிப்பாகக் கிடைத்த முதல் புத்தகம். லாசராவின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான கவிஞர் நா.சீ வரதராஜன் எனக்கு இதைக் கொடுத்து, படிக்கச் சொன்னார். முப்பத்து ஐந்து வருடங்களுக்கு முன்னால் எனக்கு ஜனனியின் அருமை புரியவில்லை. அந்தப் பிரதியின் முக்கியத்துவமும் தெரியாது [முதல் பதிப்பின் இரண்டாவது பிரதி அது.] படித்துவிட்டு லாசராவுக்கு ஒரு கடிதம் எழுதினேன். உங்கள் கதை ஒன்றுகூடப் புரியவில்லை என்று அதில் குற்றம் சாட்டியிருந்தேன். ‘புரியாவிட்டால் என்ன? படித்தாயல்லவா? போதும். இன்னொரு முறை அது உன்னைப் படிக்க வைக்கும்.’ என்று பதில் எழுதினார். ‘அப்போதும் புரியாவிட்டால்?’ என்று மீண்டும் எழுதினேன். ‘மூன்றாம் முறையும் படிக்க வைக்கும்’ என்று மறு பதில் வந்தது. எனக்கு இரண்டாம் வாசிப்பிலேயே கதவு திறக்க ஆரம்பித்துவிட்டது. இன்றுவரை அந்த போதையில் இருந்து மீளவில்லை.
2. மரப்பசு – தி. ஜானகிராமன்
நான் முதல் முதலில் திருடிய புத்தகம். குரோம்பேட்டையில் அந்நாளில் லீலா லெண்டிங் லைப்ரரி என்றொரு நூலகம் இருந்தது. அங்குதான் இதனைக் கண்டெடுத்தேன். திருப்பிக் கொடுக்க மனமின்றி, தொலைந்துவிட்டதாகச் சொல்லிவிட்டேன். இன்று பெயர் மறந்துவிட்ட அந்த நூலகரிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்கிறேன்.
3. நானும் இந்த நூற்றாண்டும் – கவிஞர் வாலி
இந்தப் புத்தகம் வெளியான நாள் முதல் குறைந்தது மூன்றாண்டுக் காலம் இதைக் கடைகளில் பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்தேன். வாங்கிப் படிக்க வேண்டுமென்ற ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. காரணம், நூறு ரூபாய்க்கு மேல் விலையுள்ள புத்தகங்களை வாங்குமளவு அன்றெனக்கு சக்தி இல்லை. காய்தே மில்லத்தில் நடந்த ஒரு சென்னை புத்தகக் காட்சியின்போது கடையிலேயே நின்று இந்தப் புத்தகத்தை எடுத்துச் சில பக்கங்கள் படித்தேன். மறுநாள் மீண்டும் சென்று எடுத்துப் படித்தேன். இப்படியே முழுப் புத்தகத்தையும் கண்காட்சி நடந்த பத்து நாள்களிள் படித்து முடித்தேன். எனக்கே எனக்கென்று ஒரு பிரதியை வாங்கிக்கொள்ள எனக்கு இது வெளியாகி நான்கு வருடங்களாயின. இப்போது என்னிடம் உள்ளது இரண்டாவது பிரதி. [முதலில் வாங்கியதை யாரோ எடுத்துப் போய்விட்டார்கள்]
4. ஒற்றன் – அசோகமித்திரன்
நான் மிக அதிக முறை படித்த புத்தகம். இன்றும் எனக்கு இதுவே எழுத்திலக்கண நூல்.
5. ஸ்ரீமத் பகவத் கீதை – ஜெயதயால் கோயந்தகா
இதைக் காட்டிலும் ஓர் எளிய உரை கீதைக்கு இல்லை என்பது என் அபிப்பிராயம். எப்போதும் நண்பர்களுக்கு நான் பரிசளிப்பது இந்தப் புத்தகத்தைத்தான். கைவசம் என்றும் இருபது பிரதிகளாவது வைத்திருப்பேன்.