பூனைக்கதை – ஹரன் பிரசன்னா மதிப்புரை

பா.ராகவனின் நூல் ஒன்றுக்கு விமர்சனம் எழுதுவது என்பது ஒரு சங்கடம்தான். ஏனென்றால் மிக மரியாதைக்குரிய நண்பர்களில் ஒருவர் அவர். எனவே வெளிப்படையாக எழுதுவது என்பதில் எனக்குக் கொஞ்சம் சிக்கல்கள் உண்டு. இதன் மற்றொரு பக்கம் சுவாரஸ்யமானது. அவரிடம் நேரில் பேசும்போது அவரது புத்தகங்களைப் பற்றிய என் வெளிப்படையான கருத்துகளை வைத்துள்ளேன். பாராவின் மிக முக்கியப் பண்பு, எந்த ஒரு சிறு நெருடலும் இன்றி, அவற்றை என் கருத்துகள் என்ற அளவில் ஏற்றுக்கொள்பவர். இன்று நேற்றல்ல, நான் பாராவை முதன்முதலில் சந்தித்த தினம்தொட்டு, கிழக்கில் அவருடன் ஒன்றாகப் பணிபுரிந்த காலங்களிலும், அவர் கிழக்கைவிட்டு விலகி திரைப்படம் தொலைக்காட்சி என்று திசைமாறியபோதும் இதேபோலப் பழகியிருக்கிறார். அது அவரது இயல்பு. இந்த நாவலை எனக்கு சமர்ப்பித்திருக்கிறார். கொஞ்சம்கூட எதிர்பாராதது இது. இது அவரது பெருந்தன்மை என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை. நான் இந்தப் பெருந்தன்மைக்கு அருகதையுடையவன் அல்ல என்பது எனக்குத் தெரியும். அந்தப் பெருந்தன்மைக்கு இன்னொரு நன்றி.

மெகா சிரீயல்களில் பக்கம்பக்கமாக வசனம், புத்தகங்களில் லிட்டர் லிட்டராக ரத்தம் என்று சென்றுகொண்டிருந்த பாராவின் வாழ்வில், சென்ற புத்தகக் கண்காட்சியின்போது எப்போதும்போல் பேசிக்கொண்டிருந்த எதோ ஒரு சமயத்தில் நாவல் எழுதவேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. உண்மையில் இது துரதிர்ஷ்டவசமானது என்றே நான் நினைத்தேன் என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறேன். புவியிலோரிடம் மட்டுமே நான் வாசித்த பாராவின் ஒரே நாவல். பாராவின் அபுனைவு எழுத்துகள் எனக்கானது அல்ல என்றொரு எண்ணம் எனக்கு உண்டு. இதை முன்வைத்துத்தான் ப்ளாக்கர் வரலாற்றுக் காலங்களில், எல்லோரையும் விமர்சிக்கும் நான் (ஹரன்பிரசன்னா!) ஏன் பாராவை விமர்சிப்பது இல்லை என்ற கேள்விகளெல்லாம் எழுப்பப்பட்டன. இக்கேள்விக்கான அப்போதைய ஒரே பதில், நான் வாசித்ததில்லை என்பதுதான். நான் வாசித்த அவரது முதல் அபுனைவு நூல், ஆர் எஸ் எஸ். அடுத்தது பொலிக பொலிக. இப்போது புனைவில் பூனைக்கதை. ஆர் எஸ் எஸ் விமர்சனத்துக்குட்பட்டுப் பிடித்திருந்தது. புவியிலோரிடம் அதன் தைரியமான கான்செஸ்ப்ட் காரணமாக என் பார்வையில், என் சாய்வில், முக்கியமான நூல். பொலிக பொலிக – பிரமிக்க வைக்கும் வேகம் கொண்ட, ஒருவகையில் ஒரு மாதிரிநூல்.

இந்த முன்குறிப்புகள் அவசியமானவை என்பதால் இதை இத்தனை தூரம் சொல்லவேண்டியதாகிவிட்டது. இனி பூனைக்கதை குறித்து.

அபுனைவில் இருந்து பாரா நாவலுக்கு வருவதன் பயம், நாவலை வாசித்த சில பக்கங்களில் இல்லாமல் போனது. ஆகப்பெரிய கற்பனை ஒன்றை, வரலாற்றின் முன்னொரு காலத்தில் நிகழும் அதீத கற்பனையை, மாய யதார்த்தம் (முற்றிலும் மாய யதார்த்தம் அல்ல) போன்ற ஒரு பூனையால் நிகழ்காலத்தோடு இணைக்கிறார். மிக நுணுக்கமான ஒற்றுமைகள் பின்னி வருகின்றன. நாம் அந்த நுணுக்கங்களைத் தேடிச் செல்லவேண்டும். தேடிச் சென்றால் இரண்டு களங்களுக்குரிய ஒற்றுமைகள் மெல்ல மெல்ல விரியும். இல்லாவிட்டாலும், இரண்டு பெரும் உலகங்கள் நம் முன் இரண்டு பேருருவத்துடன் உரையாடவே செய்யும்.

வெளிப்பாட்டுத் தன்மையில் இலகுவான நாவல், அதீதக் கற்பனையின் உள்ளே சில சிக்கலான விஷயங்களைப் பேசுகிறது. ஆறு கலைஞர்களின் முன்வாழ்க்கையில் அந்தக் காலத்தின் வர்ணாசிரம ஜாதிய அடுக்களின் வெளிப்பாடுகள் மேலோட்டமாகத் தெரிகின்றன. அதன் விளைவுகள் அப்பட்டமாக. அதீதக் கற்பனைக்குத் தரப்படவேண்டிய ஆதாரத்தை பாரா பாபரின் நாட்குறிப்பிலிருந்தும் ராமானுஜரின் விஜயத்திலிருந்தும் எடுத்துக்கொள்கிறார். இப்படியாக ஒரு கற்பனை, சில நிஜங்களின் மீது கட்டியெழுப்பப்படுகிறது.

கற்பனையின் மீது அமர்த்தப்பட்ட நிஜம் இன்னொரு கற்பனையால் முழுக்க ஆட்கொள்ளப்பட்டு இன்றைய யதார்த்த உலகில் வெளிப்படுகிறது. அந்த உலகம், இதுவரை அதிகம் நாவல்களில் பேசப்படாத மெகா சீரியல் தயாரிப்பின் உலகம். ஒரு திரைப்படம் உருவாக்குவதற்கு நிகரான, அதைவிட அதிகமான வலியும் சவாலும் துரோகம் அரசியலும் நிறைந்த உலகம் இது என்பதை பாரா மிக அழகாகச் சொல்கிறார். கற்பனை உலகின் வசன பாணி எல்லாம் மாறிப்போய் யதார்த்த உலகில் வேறொரு வசன பாணியை நாவல் கைக்கொள்கிறது. ஒருவகையில் அசோகமித்திரனின் திரைப்படங்கள் குறித்த நாவல்களில் காணக்கிடைக்கும் பாணி. திரைப்பட உருவாக்கத்துக்கும் மெகா சீரியல் உருவாக்கத்துக்கும் உள்ள வேறுபாடுகள் புலப்பட்டாலும் விளைவைப் பொருத்தவரை இரண்டு உலகங்களும் ஒரே மாதிரியானவையே. மெகா சீரியல்களை பெரும்பாலானவர்கள் திரைப்படத்தை நோக்கிய ஒரு பயணமாகவோ அல்லது திரைப்படத் தோல்விகளின் தொடர்ச்சியாகவே பார்க்கிறார்கள். எனவேதான் திரைப்படத் துறையின் அதன் குணத்தின் முன்னொட்டும் பின்னொட்டுமாகவே தொலைக்காட்சி உலகமும் இருக்கிறது.

தொலைக்காட்சித் தொடர்கள் தொடர்பான அத்தியாயங்களின் வேகம் பிரமிப்பைத் தருகிறது. நடிகையின் ஆவி பேசும் வசனமும், பூனைக்கு சார் சொல்லும் கதாபாத்திரத்தின் இயல்பும் நடிகர்களின் அவல வாழ்க்கையைச் சொல்லாமல் சொல்கின்றன.

நாவலைப் படித்துமுடிக்கும்போது ஒட்டுமொத்தாக ஒரு பிரமிப்பு நிச்சயம் ஏற்படுகிறது. சந்தேகமே இன்றி பாரா இதுவரை எழுதிய புனைவுகளில் சிறந்தது இந்த நாவல்தான். அபுனைவு மொழியிலிருந்து கிட்டத்தட்ட பாரா முழுவதும் விலகிவந்து இந்த நாவலை உருவாக்கி உள்ளது, என் பார்வையில் பெரிய சாதனை. (கிட்டத்தட்ட என்ற வார்த்தை முக்கியம், ஏனென்றால் அங்கங்கே சில வார்த்தைகளில் பாராவுக்குள் இருக்கும் அபுனைவு_வெறி_மிருகம் விழித்துக்கொள்கிறது.)

நாவலில் ஒரு வாசகனாக நான் செரிக்க கஷ்டப்பட்ட சில இடங்களைச் சொல்லவேண்டும். ஒன்று, மிகத் தட்டையான அதன் தலைப்பு. உண்மையில் நாவலுக்குள்ளே இருக்கும் கற்பனையின் விளையாட்டை இந்நாவலின் தலைப்பு சரியாகப் பிரதிபலிக்கவில்லை. அதற்குக் காரணம், பாராவின் இயல்பு என்றே நினைக்கிறேன். அல்லது நாவலின் உள்ளடக்கமே முக்கியம், தலைப்பு அல்ல என்ற தலைப்பு குறித்த அலட்சியமா? அதீதமான வலியைக்கூட பகடி மூலம் கடக்க நினைக்கும் ஓர் இயல்பாகக்கூட இருக்கலாம். (இன்னொரு உதாரணம், ஓர் உபதலைப்பின் பெயர் மலச்சிக்கலில் இருந்து விடுதலை!) அது நாவலின் தலைப்பிலும் வந்துவிட்டது போன்ற ஒரு தோற்றம். இரண்டாவது, பூனை என்பது பல வகைகளில் மாய யதார்த்த உருவமாகி இரண்டு வேறுபட்ட உலகங்களுக்குள்ளும் அந்த அந்த காலத்துக்கான யதார்த்தத் தேவைகளுக்குள் பயணமாகிறது என்றாலும், ஒரு கட்டத்தில் அது அதீதமாகிவிடுகிறது. எங்கெல்லாம் தேவை என்பது சவாலாகிறதோ அங்கெல்லாம் பூனையைக் கொண்டு கடக்க முற்படுவது போல. இதில் ஒரு எழுத்தாளனுக்கு சுதந்திரம் இருக்கிறது என்பது உண்மைதான். அதேபோல் ஒரு வாசகனின் சுதந்திரத்தில் குறுக்கிடும் அளவுக்கு அது இருப்பது நியாயமா என்றும் தோன்றுகிறது. இன்னொரு முக்கியமான (என்) பிரச்சினை, லாஜிக் இல்லாத ஒன்றின் மேல் கட்டி எழுப்பப்படும் எல்லாவற்றுக்கும் லாஜிக் இருக்கவேண்டும் என்ற நியாயம் சில இடங்களில் மீறப்பட்டிருப்பது. குறிப்பாக எலியின் திடீர் மாயத்தன்மை. உண்மையில் இந்நாவலில் உள்ள ஒரே பெரிய சறுக்கல். இங்கே பூனை, எலி என்றெல்லாம் சொல்வதை வைத்து எதோ விளையாட்டு என்று எண்ணிவிடக்கூடாது. அவை வேறொரு உலகத்தில் நிகழ்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

நாவலின் மொழிநடையில் பெரிய அளவுக்கு ஈர்ப்பு இருக்கிறது என்றாலும், அங்கங்கே தென்படும் அபுனைவு அல்லது பாராவுக்கே உரிய அதீத எளிமைப்படுத்தல் என் போன்ற வாசகனை விலக்குகிறது. அதாவது வாசகனை இப்படித்தான் யோசிக்க வைக்கவேண்டும் என்கிற போக்கு, இப்படித்தான் இந்த வேகத்தில் படிக்க வைக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு.

மற்றபடி, பூனைக்கதை நாவல் மிக முக்கியமான நாவல். பாராவின் நாவல்களிலும் சரி, ஒட்டுமொத்த நாவல்களிலும் சரி, பூனைக்கதை நிச்சயம் ஒரு நல்ல முயற்சி. பாராவுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துகள்.

இந்த நாவலை அசோகமித்திரனுக்கு சமர்ப்பணம் செய்திருக்கவேண்டும் என்பது எளிய கருத்து.

— ஹரன் பிரசன்னா

LikeShow more reactions

Comment

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading