பிரியாணி

அதிகாலை மூன்றரை மணிக்குத் தொலைபேசியில் அழைத்து விவரம் சொன்னார்கள். உடனே கிளம்பி ஸ்டேஷனுக்கு வரவும். மதியம் ஒரு மணி வரை ஏர்போர்ட் ட்யூட்டி. பெரியசாமி கண் எரிச்சலுடன் குளித்து, யூனிஃபார்ம் அணிந்து புறப்படத் தயாரானபோது மணிமேகலை அவருக்குக் காப்பி கொடுத்தாள்.

‘ஒரு மணிக்கு வீட்டுக்கு வந்திடுவிங்க இல்ல?’

‘ஆமா.’

விடைபெற்று வெளியே வந்து அவர் சைக்கிளை எடுத்தபோது சொன்னாள். ‘ரொம்ப நாளாச்சி. பிரியாணி வாங்கிட்டு வாங்களேன். பிள்ளைங்க ஆசையா சாப்டும்.’

‘சரி. ஆனா வர லேட்டானா சிக்கல் ஆயிருமே?’

‘அதெல்லாம் பரவாயில்லை’ என்று சொன்னாள். ‘ரொம்ப பசிக்குதுன்னிச்சிங்கன்னா நைட்டு வெச்ச ரசமும் கொஞ்சம் சோறும் இருக்குது. சமாளிச்சிக்குவேன்.’

விடிவதற்குச் சற்று முன்னதாகப் பெரியசாமி ஏர்போர்ட் கார்கோ அருகே வந்து குழுவில் சேர்ந்துகொண்டார். ஐம்பதடிக்கு ஒருவர் வீதம் இடம் பிரித்து இன்ஸ்பெக்டர் கலையச் சொன்னதும் பெரியசாமி மீண்டும் சைக்கிளை எடுத்துக்கொண்டு கத்திப்பாரா மேம்பாலம் தொடங்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார். தேர்தல் காலம். தினமும் தலைநகரில் இருந்து யாராவது வந்துகொண்டுதான் இருப்பார்கள். இங்கிருந்து யாராவது போய்க்கொண்டுதான் இருப்பார்கள்.

ஆனால் அன்றைக்கு அவருக்கு நேர்ந்த அனுபவம் வினோதமாக இருந்தது. யார் வருகிறார்கள் என்று இன்ஸ்பெக்டர் சொல்லவில்லை. மிக முக்கியமான பிரமுகர் ஒருவர் வந்து போகும் வரை டூட்டியில் இருந்தாக வேண்டும் என்று மட்டும்தான் சொன்னார். வருபவர் அரை நாளிலேயே திரும்பிச் செல்கிறார் என்றால் நிச்சயமாக அது அரசியல்வாதியாக இருக்க முடியாது என்று பெரியசாமி நினைத்தார். விவரங்கள் தானாக வந்தால்தான் உண்டு. இதையெல்லாம் கேட்க முடியாது.

கத்திப்பாரா மேம்பாலத்தின் மீது கிண்டிக்குச் செல்லும் திருப்பத்தின் தொடக்கத்தில் பெரியசாமி நின்றுகொண்டிருந்தார். பதினொரு மணிக்குப் பிறகு மெல்ல உலாவத் தொடங்கினார். நடுவே இரண்டு முறை மணிமேகலைக்கு போன் செய்து பேசினார். மூத்தவன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடப் போகிறேன் என்று சொன்னான். ‘பாத்து பத்திரமா அடிகிடி பட்டுக்காம ஆடுப்பா’ என்று சொல்லிவிட்டு, சின்னவள் பிறந்த நாள் வருகிறது; துணி எடுக்க வேண்டும் என்று மணிமேகலையிடம் நினைவுபடுத்தினார். பன்னிரண்டு மணி ஆனபோது அவருக்கு மிகவும் சோர்வாக இருந்தது. எடுத்து வந்திருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டிருந்தது. ஐம்பதடி தள்ளி நின்றிருந்த சக கான்ஸ்டபிளிடம் தண்ணீர் கேட்டுக் குடித்துவிட்டு மீண்டும் தன் இடத்துக்கு வந்து நின்றுகொண்டார்.

வருகிற பிரமுகர் எத்தனை மணிக்கு வருவார் என்று இன்ஸ்பெக்டர் சொல்லியிருக்கவில்லை. எனவே வந்தவர் இனி எப்போது திரும்புவார் என்ற எண்ணம் மட்டுமே அவருக்கு இருந்தது. இரண்டு மணி கடந்த பின்பும் தகவல் வரவில்லை. இரு புறமும் ஐம்பதடி தொலைவில் இருந்த கான்ஸ்டபிள்களுக்கும் அது தெரிந்திருக்கவில்லை. நின்றுகொண்டே இருந்தது சலிப்பாக இருந்தது. ஒவ்வொரு முறையும் இப்படி ஆகும்போதெல்லாம் வி.ஆர்.எஸ். கொடுத்துவிட்டு, வருகிற பணத்தில் ஒரு பெட்டிக்கடை வைக்கலாம் என்று நினைத்துக்கொள்வார். அதைக் குறித்து யோசிக்க அவருக்குப் பிடிக்கும்.

இரண்டே முக்காலுக்குக் கிளம்பலாம் என்று தகவல் வந்தது. ‘யாருய்யா வந்து போனாங்க? ஒண்ணுமே தெரியலியே?’ என்று சக கான்ஸ்டபிளிடம் புலம்பியபடியே பெரியசாமி சைக்கிளை எடுத்தார்.

மணிமேகலை போன் செய்தாள். ‘சாப்ட்டிங்களா எதாச்சும்?’

‘இல்ல.’

‘சரி வீட்டுக்கு வந்திடுங்க. பசங்களுக்காகக் கொஞ்சம் கொழம்பு வெச்சேன். நைட்டு வெச்ச ரசம் இருக்குது. நீங்க வர்றதுக்குள்ள ஒரு பொரியல் செஞ்சிடுறேன்’ என்று சொன்னாள்.

‘பொரியலெல்லாம் வேணா. ஊறுகா இருக்குதில்ல. அது போதும்.’ என்று சொல்லிவிட்டு சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார்.

Share

22 comments

  • நடுத்தட்டு மனைவியருக்கு இருக்கும் ஆசையை வெளிப்படுத்துவார்கள். நிறைவேறாத போது சுலபமாக கடந்து போவார்கள். ஏமாற்றங்கள் அவர்களுக்கு பழகி இருக்கும்

  • பிரியாணி தலைப்பை பார்த்து ஆசையாய் வந்தேன் ஏமாந்தது பெரியசாமி குடும்பம் மட்டுமல்ல நானும்தான்,

  • கடைநிலை ஊழியர்களின் பிரச்சனையை எதார்த்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள். பிள்ளைகளுக்கு இன்று பிரியாணி மதியம் என்று பிள்ளைகளிடம் சொல்லியிருந்தால் ஏமாற்றம் அதிகமாயிருந்திருக்கும். நல்ல வேளை

  • அருமையான கதை. புதுமைப்பித்தன் நினைவுநாளில் அவரை நினைவுபடுத்தி விட்டீர்கள். சிறப்பு.

  • நினச்சதை சாப்பிட கூட முடியாத அந்த போலிஸ் வேலை பரிதாமானது தான். கேட்டது கிடைக்கலைன்னோட கிடைச்சதை வைச்சு சந்தோஷ படும் அவர் மனைவி அவருக்கு கிடைத்த வரம்.

  • யாரோ பெயர் தெரியாத முகம் தெரியாத அந்த வழியாக எப்போது கடந்து சென்றார் என்றும் தெரியாத ஒரு முக்கியஸ்தருக்காக கால நேரம் தெரியாமல் காத்துக் கிடப்பது கொடுமை. பெரும்பாலான காவலர்களின் பொன்னான நேரத்தை எப்படி நம் ஜனநாயக அரசுகள் செலவு செய்கின்றன என்பது ஒருபுறம்.
    மறுபுறம் பிரியாணி வாங்கி வர வேண்டிய அவசியம் இல்லை. பசித்திருக்கும் கணவன் நேரத்தோடு வீடு வந்து சேர்ந்தாலே போதும் என நினைக்கும் மனைவி. நல்ல காம்பினேஷன்.
    பிரியாணிக்குச் சரியான ரய்த்தா.

  • பிரியாணி வாங்கியிருக்கலாம் பாராஜீ 🙁

  • சமூகப் பிரச்சினையை ஒரு குறுங்கதைக்குள்ள கொண்டு வந்த வித்தை… அருமை சார். ❤❤❤

  • கொஞ்சம் அன்பிருந்தால் பழைய சாதமும் ஊறுகாயும் பிரியாணிக்கு ஈடு செய்யும்!

  • பிரியானி எப்ப வேனாலும் சாப்பிடலாம் ஆனா பழைய சோறு சாப்பிட ஒரு நாள் வெயிட் பன்ன வெறும்

  • Sir, I always felt very pity about this constables standing on the road for every 50 ft in the name of security for VIP. This story is very well crafted on this. Thank you.

  • அருமை. கதை அல்ல. நிஜம். கடந்த ஆட்சியில், சேலம்-பெங்களூர் ஹைவேயில் அடிக்கடி இப்படி காவல்துறையினரைப் பார்த்திருக்கிறோம். சமயங்களில் பெண் போலீசாரும். சில நொடிகளில் கடந்தபோகப் போகிறவருக்காக, இவர்கள் மணிக்கணக்கில் நிற்பதைப் பார்க்க பாவமாக இருக்கும். அவர்களுக்கெல்லாம் இப்படி அனுசரிக்கும் துணை இருப்பார்களோ என்னவோ…

  • சமீபத்தில் வந்த பெண் கான்ஸ்டாபிள் இத்தகைய பணியிலிருக்க கூடாது என்ற உத்திரவை இக்கதை unarthukirathu

  • பிரியாணினு சொல்லிட்டு சாம்பார் சாதத்தை போட்டுட்டீங்களே சார். ஒரு வேளை பிரியாணி அண்டாவை அந்த VIP லவட்டிட்டாரோ???

  • சில கனம் கணம்மானவை தான். நம் வாழ்க்கை எதை சுற்றி இயங்குகிறது. நாம் யாருக்காக எதையும் சகித்துக் கொள்கிறோம். இந்த அம்மாக்களும் அப்பாக்களும் வந்து நிற்கும் புள்ளி எது.
    கால ஓட்டத்தில், எரியூட்டாமலே கரையும் சூடம் போல நிறைய வாழ்கை இங்கே உண்டு.
    Briyani is not a food. Its the ultimate emotion.

  • இத படிக்கவே சொகமா இருக்கு. பெரும்பாலான வீட்ல என்ன இருக்கும் பதில், ஸ்விக்கில ஆர்டர் போட்டுறேன், நீங்க வரதுக்குள்ள வந்துரும்… “ஒரு பொரியல் மட்டும் பண்ணிடறேன் “-கேட்டு பல நாள் ஆச்சு சார்…

  • பிரியாணிதானே நாளைக்கு வாங்கிக்கலாம்.. சென்னையில் பிரியாணிக்கு பஞ்சமா என்ன?

  • பசித்து உண்ணும்போது பழைய சோறும், பிரியாணியாகத்தான் தெரியும்.

  • பசித்திருக்கும் போது பழைய சோறும் பிரியாணி தான்.

  • சாதாரணமாக தெரிகிறது,ஆனால் இதன் வலி மனதை ரணப்படுத்துகிறது.
    அடித்தட்டு குடும்பங்களின் நிலை இது தான்.

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!