கதை

குறுஞ்செய்தி

வேறெதுவும் இல்லை. வெறும் குட் மார்னிங். தினமும் வருகிறது இக்குறுஞ்செய்தி. ஒரு நாள் தவறாமல் பல மாதங்களாக வருகிறது. பதில் எதிர்பார்ப்பதில்லை. குட் மார்னிங் சொல்வது தவிர வேறெதுவும் பேசுவதில்லை. நீங்கள் யார், எதற்காக எனக்கு தினமும் குட் மார்னிங் அனுப்புகிறீர்கள் என்று கேட்டாலும் பதில் வருவதில்லை. அவனுக்கு சில சமயம் சலிப்பாக இருக்கும். சில சமயம் கோபம் வரும். குறிப்பிட்ட எண்ணை ட்ரூ காலரில் போட்டுப் பார்த்தும் பயனில்லை. you know me என்ற பெயரில்தான் அந்த எண் பதிவாகியிருந்தது. பல நூறு பேருக்கு தினமும் குட் மார்னிங் சொல்வதற்காகவே ஒருவர் ஓர் எண் வாங்கி வைத்திருப்பாரா? மாதம் குறைந்தது அதற்கு நூறு ரூபாயாவது கட்ட வேண்டியிருக்கும். செலவு செய்தாவது அடையாளம் மறைத்துக்கொண்டு குட் மார்னிங் சொல்ல வேண்டும் என்று எதனால் ஒருவருக்குத் தோன்றும்?

தனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லிப் பார்த்தான். யாருக்கும் அதில் சுவாரசியம் இருக்கவில்லை. பிடிக்கவில்லை என்றால் ப்ளாக் செய்துவிடு என்று சொன்னார்கள். பிடிப்பதும் பிடிக்காமல் போவதும் பிரச்னை இல்லை. தனக்குக் காலை வணக்கம் சொல்வதை ஒரு கடமையாகச் செய்யும் மனநிலை கொண்டவர் யாராக இருக்கலாம் என்று அவன் அறிய விரும்பினான்.

அவனைப் பொறுத்தவரை அவன் எவ்வித முக்கியத்துவமும் இல்லாத நபர். உறவுகள் அற்றவன். நண்பர்களும் கிடையாது. ஒரு முழுமையான தனி மனிதனாக நெடுங்காலமாக வாழ்ந்துகொண்டிருந்தான். யாருமில்லாதது முதலில் சிறிது காலம் உறுத்தலாக இருந்தது. பிறகு பழகிவிட்டது. தனக்கென யாரையும் வைத்துக்கொள்ளாமல், தேவைப்படும்போது கிடைப்பவர்களிடம் பேசி, வேண்டியதைக் கேட்டுப் பெற்று வாழப் பழகியிருந்தான். பெரும்பாலும் தனித்தே இருந்ததால் அவன் வாழ்வில் உரையாடல் என்பதே அருகியிருந்தது. அவனுடன் வாட்சப்பில் பேசுவோர் யாருமில்லை. அவனே எதற்கு அந்தச் செயலியை வைத்திருக்கிறோம் என்று எண்ணத் தொடங்கியபோதுதான் அந்த குட் மார்னிங் குறுஞ்செய்தி வரத் தொடங்கியது. பிறகு ஒவ்வொரு நாளும் அந்தச் செய்தியைப் பார்ப்பதற்காக மட்டும் அந்தச் செயலியைப் பயன்படுத்த ஆரம்பித்தான். ஆர்வம் மிகும் போதெல்லாம் நீங்கள் யார் என்னும் வினாவை அனுப்புவான். ஆனால் பதில் வராது.

ஒருநாள் சும்மா இருந்தபோது தனக்கு அந்தக் குறிப்பிட்ட எண்ணில் இருந்து வந்த குட் மார்னிங் குறுஞ்செய்திகளை எண்ணினான். நாநூறுக்கும் மேற்பட்ட ஒரு வரிகள். அது ஒரு ‘பல்க் மெசேஜா’க இருக்கும் என்று அவன் எண்ண விரும்பவில்லை. இந்த உலகத்தில் தன்னைப் பொருட்படுத்த யாரோ ஒரு முகமிலி இருக்கிறார் என்று நினைத்துக்கொள்ளவே விரும்பினான். எப்படியாவது அவரைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டான். அது ஒரு பெண்ணாக இருந்துவிடும் பட்சத்தில் அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்தான். சந்தேகமில்லை.

அன்றிரவு குறிப்பிட்ட எண்ணுக்கு அவன் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான். ‘உங்கள் காலை வணக்கக் குறுஞ்செய்திகளை நாளை முதல் அனுப்பாதீர்கள். இன்றிரவு நான் தற்கொலை செய்துகொள்ளவிருக்கிறேன்.’

விடிந்ததும் அவசரமாக அலைபேசியை எடுத்துப் பார்த்தான். Good morning & Bon Voyage என்று இருந்தது.

வேறு வழியின்றித் தற்கொலை செய்துகொண்டான்.

Share

14 Comments

 • கதையை படித்தவுடன் சிரிப்பு வந்தாலும் பின்னர் ஙே என்று விழித்தேன்.

 • முகம் தெரியாத அந்த ஒருவருக்கு இத்தனை committed ah இருக்கணுமா என்ன. இது ஒருவித மனநிலை போல.

 • Bon voyage- இனிய பயணம் தொடரட்டும்.

  பாரா’வின் குறுங்கதை பயணம் தொடரட்டும்…

 • குறுஞ்செய்தி அனுப்பியவருக்கு இவரது இறப்பு ஒருநாள் தாமதமாக தெரியும்,அடுத்தநாள் குட்மார்னிங் செய்தி புளுடிக் இல்லாமல்போவதால்

 • அருமை!!! எப்படி உங்களால மட்டும் இப்படி எழுத முடியாது?!!
  ஒரு குட் மார்னிங் சொன்னது தப்பா சார்??

 • தற்கொலை செய்யாமல் இன்னும் ஒரு நாள் இருந்து குட் மார்னிங் மெசேஜ் வருதான்னு பார்த்திருக்கலாம். வந்தால் அவர் இன்னும் இறக்கவில்லை என்பதை தெரிந்தவர் என்று கண்டு கொள்ளலாம்

 • சொன்னா அனுபவிக்கனும்

  ஆராயக்கூடாது

  • எல்லா மரணமும் வாழ்வை incomplete ஆகத்தானே விட்டுச் செல்கிறது?

 • தூக்கில் தொங்குவது போல் செல்ஃபி புகைப்படம் அனுப்பிவிட்டு அடுத்தநாள் காலை குட் மார்னிங் குறுஞ்செய்தி வருகிறதா என பார்த்திருக்கலாம்.

 • சொன்னால் உங்களுக்கு பிடிக்காது. ஆனாலும் சொல்லணும்னு குறுகுறுன்னு இருக்குது.

  முராகாமி சிறுகதை மாதிரி இருக்குது . நாவல்-னு சொல்லல .

  வேற லெவல் .

  நன்றி
  சிவா

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி