ஒன்றுமில்லாமை

உறுத்தலை இன்னும் நீட்டித்துக்கொள்ள வேண்டாம் என்று நினைத்தான். எதையும் மாற்றாமல் மறைக்காமல் சொல்லிவிட முடிவு செய்து மனைவியை அழைத்தான்.

‘உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். நீ ஒருவேளை அதிர்ச்சியடையலாம்.’

‘என்ன?’

‘இதற்காக நான் வருத்தப்படப் போவதில்லை. மன்னிப்பும் கேட்கமாட்டேன். ஆனாலும் உன் வருத்தத்தை நான் புரிந்துகொள்வேன்.’

‘சரி, சொல்.’

‘நான் மதம் மாறப் போகிறேன்.’

‘என்ன?’

‘ஆம். இது அவசரமாக எடுத்த முடிவல்ல. சில மாதங்களாக இதனைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். நிறைய படிக்கிறேன்.’

‘கவனித்தேன்.’

‘எனக்கு ஏதோ ஒன்று குறைகிறது. இந்த மாற்றம் அதை நிவர்த்தி செய்யும். ஆனால் என் தனிப்பட்ட முடிவு உன்னை பாதிக்குமானால் நிச்சயமாக அது பற்றிய கவலை எனக்கு இருக்கும்.’

‘எப்படி பாதிக்கும் என்று நினைக்கிறாய்?’

‘தெரியவில்லை. வழிபாடு. பழக்க வழக்கங்கள். நடவடிக்கைகள்…’

‘என் கணவனாகத் தொடர்வாய் அல்லவா?’

‘ஆம்.’

‘குடும்பம் நடத்த உன் பங்குத் தொகையைத் தந்துவிடுவாயல்லவா?’

‘ஆம். அதெல்லாம் அப்படியேதான்.’

‘என்னையும் மாறக் கட்டாயப்படுத்துவாயா?’

‘இல்லை.’

சில வினாடிகள் யோசித்தாள். பிறகு நெருங்கி வந்து, ‘நாம் குழந்தை பெற்றுக்கொள்ள இந்த வருடம் முடிவு செய்திருக்கிறோம். அதில் மாற்றம் இருக்காது அல்லவா?’

‘இருக்காது.’

‘குழந்தை பிறந்தால் பெயரிடும் வாய்ப்பு என்னுடையது என்று ஏற்கெனவே பேசியிருக்கிறோம். மாற மாட்டாய் அல்லவா?’

‘இல்லை.’

‘பள்ளியில் சேர்க்கும்போது உன் மத அடையாளத்தை அதற்குத் தருவாயா?’

‘இல்லை.’

‘ஆக நீ மட்டும் மாறிக்கொள்கிறாய்.’

‘ஆம்.’

‘நம் காதல் அப்படியேதான் இருக்கும்.’

‘சந்தேகமில்லை.’

‘சரி, ஒரு முத்தம் கொடு.’

நெருங்கி, அணைத்து முத்தமிட்டான். ‘உனக்கு அதிர்ச்சியாக இல்லையா?’ என்று கேட்டான்.

‘இல்லை. நம் திருமணத்துக்குப் பிறகு நீ ஏழு கம்பெனிகளுக்கு வேலை மாறியிருக்கிறாய். அப்போதெல்லாமும் நான் அதிர்ச்சி அடையவில்லை’ என்று சொன்னாள்.

Share

19 comments

  • இருவருக்கு இடையே கொடுக்கப்படும் அழகான அந்தரங்க இடைவெளி. இப்படிப்பட்ட மாற்றங்களால் மத துவேஷம் குறையலாம்

  • ஒன்றுமில்லாமை..பார்த்துப் பழகியதால்..

  • சூப்பர் sir. இந்த அவசரமான உலகிற்கும் உணர்வுகளற்ற உறவுகளுக்கும் பழகி மனம் மறத்து போன ஒரு மனைவியின் மனநிலை.

    அதிர்ச்சி அடைய ஒன்றும் இல்லை!!

  • அவள் அதனோடு வாழப் பழகிக் கொண்டாள்

  • அட்டகாசம்.. இப்படியிருந்தால் பிரச்சனை இல்லையே, வலுக்கட்டாயமாக என்னையும் உள்ளே இழுத்தால் தான் பிரச்சினையே.

  • குடும்பம் ஒரு பார்ட்னெர்ஷிப் கம்பெனி என்றான பின், யார் எந்த மதத்தில் இருந்தால் என்ன, lifestyle- இல் மாற்றம் வராத வரை கம்பெனி ஓடும்..
    நிகழ்காலம் என்னும் புதத்தை ஒரு சிறு போதலில் அடைத்து விட்டிர்கள்….

  • எளிய மக்களின்
    வாழ்க்கை ஒப்பந்தம்

    சிக்கலில்லாதது

  • நேத்து மதம் மாறியது சானல் மாத்தியதைப்போல டக்குடக்குனு மாறிட்ருந்தாங்க.. அந்த சிரிப்பே அடங்காத நிலையில இங்க வந்தா கொஞ்சம் slow ஆகி வேலை மாத்தறதுக்கு ஈகுவலா வந்துருக்காங்க.. எப்படி கடைசியில முடிப்பீங்கங்கற ஆர்வத்தை தூண்டியிருச்சு கதை…

  • எல்லோரும் இதுபோல் இருந்துவிட்டால் மதக்கலவரமே வராது,இறுதியில் மதமே தேவைப்படாது

  • நீங்களும் உங்கள் மனைவியிடம் சொல்லி விடுங்கள்… ஒன்றுமில்லாமைதானே

  • இது போன்ற positive ரக கதை அதிகம் எதிர்பார்க்கிறேன் பாரா சார்.. (தாழ்மையான இல்லதரசியின் வேண்டுகோள்)
    குறுஞ்செய்தி மனதை சோர்வாக்கும் ரகம்.. (மேலே எழுத்து பிழை /பொருள் பிழை இருந்தால் மன்னிக்கவும்)

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி