ஒரு பறவையின் மரணத்தை அவன் கண்டதில்லை. அநேகமாக யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். முதல் முறையாக அப்படி ஓர் அனுபவம் தனக்கு வாய்க்குமோ என்று நினைத்தான்.
வீட்டு வாசலில் அந்தக் காகம் அமர்ந்திருந்தது. நெருங்கி அருகே சென்றபோதும் அசையாமல் அப்படியே இருந்தது. இது சிறிது வியப்பாக இருந்தது. அதன் கண்களைச் சுற்றி சாம்பல் நிறத்தில் ஏதோ ஒட்டிக்கொண்டிருந்தாற்போல இருந்தது. காகத்தின் கழுத்துப் பகுதி இயல்பாகவே சாம்பல் நிறமாகத்தான் இருக்கும். ஆனால் கண்களைச் சுற்றிய சாம்பல் நிற வட்டத்தை அவன் அதற்குமுன் பார்த்ததில்லை. இன்னும் சிறிது நெருங்கிப் பார்க்கலாம் என்று ஓரடி எடுத்து வைத்தான். அது அசையவில்லை. மேலும் நெருங்கினான். இப்போது அது நகர்ந்து போகவோ, பறந்துவிடவோ விரும்பியதை உணர முடிந்தது. ஆனால் அதனால் அசையக்கூட முடியவில்லை. ஹ்ர்ர்க் என்றொரு மெல்லிய ஒலி கேட்டது. காகத்தின் பெருமூச்சு அப்படித்தான் இருக்குமா என்று தெரியவில்லை. ஒரு மனிதன் இவ்வளவு நெருக்கத்தில் வந்தும் பறந்துவிடாத ஒரு காகத்தை அவன் அப்போதுதான் கண்டான். நெடுநேரம் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான். அதற்கு உடல் நலமில்லை என்று தோன்றியது. ஆனால் தான் செய்யக்கூடியது ஒன்றுமில்லை, எடுத்து ஓரமாக விடுவதைத் தவிர.
அப்படிச் செய்யப் போனபோது அது மீண்டும் ஹ்ர்ர்க் என்று குரல் கொடுத்தது.
‘அச்சப்படாதே. நான் உனக்கு உதவி செய்ய விரும்புகிறேன். ஏதாவது வண்டி வேகமாக வந்தால் நீ நசுங்கிவிடுவாய். அப்படி ஓரமாக எடுத்து வைக்கிறேன்’ என்று சொல்லிவிட்டுத் தூக்கப் பார்த்தான். அது உடலைச் சிலிர்த்துக்கொண்டது. அவனுக்கும் கரங்கள் நடுங்கின. போட்டுவிடாமல் எப்படியோ எடுத்து ஓரமாக விட்டான். அப்போதும் அது பறக்க முயற்சி செய்யவில்லை. பார்க்கப் பரிதாபமாக இருந்தது. இறுதிக் கணங்கள் இப்படித்தான். ஒரு தாவலில் கடந்துவிட முடிந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும்.
அன்று மாலை அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது மறக்காமல் பார்த்தான். இப்போதும் அந்தக் காகம் அவன் எடுத்து விட்ட ஓரத்திலேயேதான் நின்றிருந்தது. வேறு யாராவது அதைப் பார்த்திருப்பார்களா, அதன் உடல் நலமின்மை குறித்து சிந்தித்திருப்பார்களா என்று தெரியவில்லை. ப்ளூ க்ராஸுக்கு போன் செய்யலாமா என்று நினைத்தான். உடனே, அடக்கம் செய்ய அவர்கள்தான் வரவேண்டும் என்பதில்லை என்றும் தோன்றியது. அருகே இருந்த பெட்டிக் கடைக்குச் சென்று இரண்டு பிஸ்கட்டுகளை வாங்கி வந்து நொறுக்கி அதன் அருகே போட்டான். சாப்பிடு என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் போனான்.
மறுநாள் காலை நிகழ்ந்துவிட்டது. எல்லோரையும்விட அந்தக் காகம் உரத்தக் குரலில் கரைந்துகொண்டிருந்தது.
மரணம் தான் பல உண்மையான செய்திகளைச் சொல்லிக் கொண்டே இருக்கிறது. வாழ்வில் சில சந்தர்ப்பங்கள் என்றாலும் நாம் உண்மையில் வாழ சந்தர்ப்பம் கிடைத்து விடுகிறது.
பா.ரா டச்.
மரணத்தில் ஒரு ஜனனம்
posted a video in para “s facebook page ,dedicated to all crows ,share their lunch regularly with me.
கதை படிச்சதும் ஒரு விசயம் ஞாபகம் வந்தது. சில நாட்களுக்கு முன்ன வீட்டுப் பக்கத்தில் ஒரு குட்டி ஆந்தையை காகக் கூட்டம் சுத்தி சுத்தி கொத்தறதை கண்டும் எதும் செய்ய முடியாம குற்றவுணர்வில் அதை பார்க்கறதை தவிர்த்தேன். நம்ம மனிதாபிமானங்கள் குற்றவுணர்வு கொள்ளும் வசதியான எல்லையிலேயே குறுகி போயிடுது 🙁
படிக்கவே பயங்கரமாக இருக்கிறது.
Iranthathu avan
அருமை!! மீண்டும் அந்த காகம் உரக்க கரைய தொடங்கியது என்பதை படித்த போது மனதும் கரைய தொடங்கியது.
எதிர் பாரா முடிவு,யாருக்கு எப்போது என்பதை இறைவனே அறிவான்
சாலையின் ஓரத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிட்டுக்குருவி ஜோடி ஒன்று, சாலையை கடக்கையில் தாழ்வாக பறந்து சென்று. சாலையின் வந்த ஸ்கூட்டரில் அடிப்பட்டு விழுந்தது நினைவுக்கு வருகிறது.
நிச்சயமற்ற தன்மை, எப்போதும் போல நடப்பது நடந்து கொண்டுதான் இருக்கும்.
வீட்டுப்புறா முட்டையிட்டு குஞ்சு பொரித்து வளர்ந்த பிறகு ஒன்று இறந்ததை கண்கூடாக பார்த்தேன் ஏன் என்று தெரியவில்லை
விஸ்வநாதன்
அது நிகழ்ந்து விட்டது. கனத்த மனதை பட்டாம்பூச்சியாக்கி அங்க அப்டியே ஒரு புதிய தொடக்கம். அருமை ங்க.
ஒரு விநாடிப் பொழுது கூட முந்தவும் முடியாது
பிந்தவும் முடியாது
—குர்ஆன்
ஐயோ! எத்தனை சத்தியம்!
எனக்கு இவ்வாறு நடந்துள்ளது.
அது ஓர் பணிக்கால அதிகாலை, நானும் என்னுடைய அண்ணனும் வயலுக்கு சென்றுக்கொண்டிருந்தபோது ஒரு மிகப்பெரிய கழுகு ஒன்று புதரில் விழுந்து கிடந்தது. அதுவரை பருந்தை அவ்வளவு அருகில் பார்த்ததில்லை. பார்க்கவே பயங்கரமாக இருந்தது ஆனால் பயமில்லை எங்களுக்கு.
நான் ஒருபுறம் இறக்கையையும் அண்ணன் மறுபுறமும் பிடித்து தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு ஓடினோம். சிலபல ஓட்டங்களுக்கு பிறகு அதற்கு நினைவுவந்து பறந்துவிட்டது.
ஒரு உயிர்..
ஒரு மனிதம்…..
நன்னாயிருக்கு. கையை பிடிச்சு கூட்டிண்டு வந்து சட்டுன்னு விட்டா மாதிரி, கடைசியில் அது நிகழ்ந்தது ன்னா?????
அருமை..ஐயா
அப்படி ஒரு நிகழ்வை நாம் கண்டுவிட்டபிறகு நம் இயலாமையை எண்ணி நமக்குள் ஒரு மனப்போராட்டம் நிகழுமேஅதை விவரிக்கவே முடியாது. ஆனாலும் என்ன செய்வது அது நிகழ்ந்தே தீரும்.
வாழ்வின் நிலையாமையையும், இருக்கும் வரை அனைத்து உயிர்களையும் மதிக்கக் கற்றுக் கொடுக்கும் மிகச்சிறிய கதை! உங்கள் நடை அருமை!
Iranthathu avan
என்றும் மனதில் நிற்கும் கதை
Final touch